[சத்தியவாதியை அடையாளம் காணுவதும் சத்தியம் அடையாளம் காணுவதும்]

சத்தியவாதியை அடையாளம் காணுவதும் சத்தியம் அடையாளம் காணுவதும் 


பல நூற்றாண்டு காலங்களுக்கும் வரலாறுகளுக்கும் பின் பிறந்திருக்கும்  மக்கள் , எப்படி சத்தியத்தை விளங்கி பின்பற்றுவது என்பதை அறியாமல் , அசத்தியங்களையும், வழிகேடுகளையும், கெட்ட விடயங்களையும் சத்தியம் என்று கருதி, நினைத்து பின்பற்றிக் கொண்டிருக்கிறார்கள். 


இன்னும், தான் சத்தியம் என்று கருதியதன் பக்கம் ஏனையோரையும் அழைத்துக் கொண்டும் இருக்கிறார்கள். அத்தோடு தான் இருப்பது சத்தியமான பாதை என்பதை நிருபிக்க , ஏனைய கொள்கை கோட்பாடுகளை தனது புத்தியினால், தர்க்கத்தினால், குதர்க்கங்களினால் , விவாதங்களினால் சவால் விட்டு , இன்னும் பேச்சுத் திறனால் , தனது புத்தியால் பிழை என நிரூபிக்க முயலுகின்றனர். 

இவ்வாறு மனித சமுதாயம் , தனிப்பாதைகளை தானாகவே அமைத்து சத்தியத்தை தேடவும், நிருபிக்கவும் முற்பட்டு விட்டனர். இதே வழிமுறையை முஸ்லிம் சமுதாயமும் , அல்குர் ஆனையும் , சுன்னாவையும் கையில் வைத்துக் கொண்டு பிரயோகித்து தடுமாறுகிறது.

இந்த வழிமுறையில் சிக்குண்டு இஸ்லாமிய மார்க்கத்தை பல வாராக பிரித்து கூறு போட்டு அலைகிறது. தனது புத்தியால், தர்க்கத்தால், விவாதத்தால், தான் சரியென்று கருதி பெற்றுக் கொண்டதை, அல்குர் ஆன், சுன்னாவின் கொள்கையென்று கூறி , அதுதான் சத்தியமான பாதை, நேரானா பதை என்று எண்ணி சந்தோஷமும் கொள்கின்றனர். இது உண்மையில் , இந்த உம்மத்தின் ஒரு பரிதாபமான நிலையாகும். 


ஏனெனில், அல்லாஹ் சுபஹானஹுதாலா, நேரான பாதையை, சத்தியமான மார்கத்தை இறக்கி, அதனை இனங்காட்டாமல், அதனை இனங் காணும் முறையை சொல்லி தராமல் தட்டழிய விட்டு விடவில்லை. 

இதற்கு மாற்றமாக , இஸ்லாம் மிக இலகுவான வழிமுறையை கற்று தந்தது மட்டுமின்றி அந்த வழிமுறையை எடுத்து நடக்கும் படி கட்டளை இடுகின்றது, இன்னும் பிரார்த்திக்கவும் சொல்லுகின்றது. 


பல வரலாற்றிற்கு பின்னர் பிறந்திருக்கும் நான், தனக்கு முன்னர் சத்தியவாதிகள் வாழ்தார்களா ? , அல்லது நான்தான் சத்தியத்தினை இனங்கண்ட முதலாவது மனிதனா ? என்று தேடிப்பார்க்க வேண்டும். 


தனக்கு முன்சென்ற சத்தியவாதிகளை இனங்கண்டால் சத்தியவாதியின் பாதையினை இனங்காண முடியும். எனவே, முதன்மையாக சத்தியத்தை சுமந்த சத்தியவாதியை இனங்கான வேண்டும். 


இதற்காகவே “ اهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيمَ ” 


- நேர்வழியினை எனக்கு காட்டித்தருவாயாக என்ற 


துவாவினை அல்லாஹ் நமக்கு கற்றுத் தந்திருக்கின்றான். எவ்வாறென்றால் 


“ صِرَاطَ الَّذِينَ أَنْعَمْتَ عَلَيْهِمْ ” – 

எவர்களுக்கு நேரான பாதை அருளாகக் கொடுக்கப்பட்டதோ அப்பாதையை எனக்கு காட்டுவாயாக என்று 

“ சத்தியவாதியையே ” அல்லாஹ் குறிப்பிட்டுக் காட்டுகின்றான். 


எனவே, சத்தியவாதியினை இனங் காணாமல் சத்தியத்தினை அடையாளம் காண முடியாது இன்னும் அடையவும் முடியாது. 

இதனையே ரசூல் சல்லால்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எனது உம்மத் எழுபத்தி மூன்றாக பிரியும் அதில் எழுபத்தி இரண்டும் வழிகேடு ஒன்று மட்டும் சுவர்க்கம் செல்லும் என்று சுவர்க்கம் நுழையும் நேரான பாதையினை எவ்வாறு இனங்காட்டினார்கள் என்றால், அந்தப் பாதையில் உள்ளவர்களை இனங்காட்டியே அப்பாதையினை இனங்காட்டினார். 


“ ما أنا عليه وأصحابي” – 

எந்தப்பாதையில் “ நானும் எனது தோழர்களும் இருக்கின்றோமோ, என்று அந்தப்பாதையில் எவர் இருப்பாரோ அவரே சத்தியவாதியாவார்.என்றார்கள். 

சத்தியவாதியியை கொண்டே சத்தியபாதை இனங்காட்டி, சத்தியத்தினையும் அசத்தியத்தினையும் இனங் காண்பதற்கு முன்னர் சத்தியவாதி யார் என்பதை  குறிப்பிடுகின்றார்கள். 


அல்லாஹ் சுபஹானஹுதாலா “சூரத்துல் அன்ஆம் 6 :153 .” ல் கூறியுள்ளான்: 

“ وَأَنَّ هَٰذَا صِرَاطِي مُسْتَقِيمًا فَاتَّبِعُوهُ ۖ وَلَا تَتَّبِعُوا السُّبُلَ ”– 


இது என்னுடைய நேரான பாதையாகும். இப்பாதையினைப் பின்பற்று, ஏனைய பாதைகளைப் பின்பற்ற வேண்டாம். 

இங்கும் என்னுடைய நேரான பாதை என்று சத்தியவாதியான நபியைக் கொண்டே இனங்காட்டப்பட்டுள்ளது. எனவே, சத்தியவாதிகளைப் புரிந்தாலேயே சத்தியத்தின் பாதையினை புரிந்து கொள்ள முடியும். 


சத்தியவாதி என்று எவருமே இல்லை. என்றாலும், நான் சத்தியத்தினை புரிந்து கொள்வேன் என்று தம்பட்டம் அடிப்பவன், சத்தியத்தை அடைய மாட்டான். அது ஷைய்த்தானின் ஓர் தந்திரமே ஆகும். 

ஏனென்றால்,. “ இவனை சத்தியவாதி ” என்று குறிப்பிட்டு இனங்காட்டினால், இவன் செல்லும் பாதையும் சத்தியமாகி, உண்மையான சத்தியமான பாதை அசத்தியமான பாதையாகவும் ஆகிவிடும். இவ்வாறு சத்தியபாதையில் செல்லாமல் தட்டிவிடுவதே ஷெய்த்தானின் முதன்மைக் குறிக்கோளாகும். அப்பொழுதுதான் தனது தேவைக்கேற்ப சத்தியத்தினை உருவாக்க முடியும். 


இதனாலேயே, சத்தியத்தை இனங் காட்ட அல்குர்ஆனிலும் அஹாதீஸிலும் சத்தியவாதியினை முதன்மையாக இனங்காட்டபட்டுள்ளது. 

“ لَّقَدْ كَانَ لَكُمْ فِي رَسُولِ اللَّهِ أُسْوَةٌ حَسَنَةٌ  ” – 


எவன் அல்லாஹ்வையும் ஆஹிராவையும் நாடுகின்றானோ அவனுக்கு, நிச்சயமாக அல்லாஹ்வின் தூதரிடத்தில் அழகான ஓர் முன்மாதிரி உள்ளது. 


எங்களுடைய முன்மாதிரிக்கு சிறப்பான ஓர் நபியினை அனுப்பியுள்ளான். மேலும் அந்நபி சத்தியவாதி என்று நிறுபித்து, அந்நபியின் வழி செல், அப்போதே நீ சத்தியத்தினை அடைந்து கொள்வாய் என்று வழிகாட்டியுள்ளானே தவிர, சத்தியத்தை மட்டும் இறக்கி அதனை நீ பெற்றுக் கொள் , நீ விருப்பியவாறு பின்பற்று என்று அல்லாஹ் கூறவில்லை. 


அல்குர்ஆனை இறக்கி அதற்கு விளக்கம் அளிப்பதற்கு ஓர் நபியினையும் அனுப்பியுள்ளான். அந்நபியின் செயற்பாடுகளை முன்மாதிரியாக அமைத்து, அவரோடு ஒரு சமூகத்தினையும் உருவாக்கியுள்ளான். இந்த சமூகம் நேரான பாதையை கொண்ட சத்தியமான சமூகம். அதனைப் பின் தொடர்ந்து செல் என்றும் இனங்காட்டியுள்ளான். 

எனவே, சத்தியபாதையினை இனங்காண்பது, சத்தியவாதியினை இனங் காண்பது ஊடாகவே சாத்தியமாகும். சத்தியவாதியினை ஏற்றுக் கொண்டால், அவனுடைய கொள்கையினையும் வழிமுறையினையும் மேலும் அவனுடைய பாதையினையும் ஏற்றுக் கொள்ளவது இலகுவானதாகும். 

ஒரு மனிதன் தனது கல்வியினை தொடங்கும் போது, எல்லா முடிவுகளையும் கண்ட பின்னர் சத்தியத்தினை பெற்றுக் கொள்ள முனைகின்றான் என்றால், கல்விகற்று முடியும் வரையிலும், வேறுபாடுகளுக்கெல்லாம் தீர்வு காணும் வரையிலும் அவன் எதிலிருப்பான் என்றால், அவன் எல்லாவற்றையும் குழப்பிக் கொண்டு , குழம்பி போய் தான் இருப்பான். 


அதுவரையிலும் அவனுடைய ஹயாத்தினதும் மவ்த்தினதும் நிலைப்பாடென்ன? அவனுடைய செயற்பாட்டின் நிலைபாடென்ன? அவனின் சார்பான நடவடிக்கைகள் என்ன? சத்தியத்தில் இருந்தானா ? அல்லது அசத்தியத்தில் இருந்தானா ? என , அவனுடைய நிலைப்பாடு பல கேள்விக் குறிகளாகவே காணப்படும். 

ஆனால், அவன் சத்தியவாதியுடன் இருந்தானென்றால் அவனுடைய பாதையின் ஆரம்பகாலம் முதல் சத்தியத்தை பின்பற்றும் தன்மையினைக் கொண்டிருப்பான். 


நம்பிக்கையுடன் நபி சள்ளல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் நேரடியாக கேட்டு, கற்று, விளங்கி ஸஹாபாக்கள் நடைமுறைப்படுத்தியவைகளை தானும் நடைமுறைப்படுத்தி, அவர்களுடைய கொள்கைகளைப் பெற்றுக் கொண்டு, அப்பாதையில் தானும் வாழ்வேன் என்று ஒரு மாணவன் தனது கல்வியினை ஆரம்பிக்கும் போதே உறுதிபூண்டிருப்பான். சத்திய உள்ளங்களைப் புரிந்து , சத்தியமான கொள்கையில் வளர்ந்து சத்தியவாதிகளுடன் சேர்ந்து கொள்வான். 


கல்வி கற்று முடிந்த பின்னர், தான் ஒரு அறிஞர் என்ற நிலையில் சத்தியம் எவ்வளவு பலமானது, ஆதாராமானது என்பதை அறிந்து கொள்வான். 

அப்படியில்லை எனில் இதற்கு முன், ஒரு மனிதன் என்ன ஆதாரத்தினைக் கொண்டு சரி பிழை காண்பான்?. அவனது புத்திக்கு புலப்படாதவையும், தெரியாத கல்வியையும் கொண்டா ? இல்லை!. 


ஆகையால்தான் பின்பற்றுவதற்கு ஓர் கூட்டம் / முன்மாதிரி அவசியமாகின்றது. கல்வி கற்க தொடங்கும் மாணவனுக்கு தொடங்குவதற்கு ஓர் வழிமுறை வேண்டும். அவனுடைய நம்பிக்கையிற்கு ஓர் அடிப்படை அவசியமாகின்றது. அவனுடைய செயற்பாடுகளுக்கு ஓர் முன்மாதிரி அவசியமாகின்றது. 


இவைகளுக்கு யாரை முன்மாதிரியாகக் கொள்வது ? தனக்கு புரிந்தவற்றை பின்பற்றினால் அல்லது தான் வாசித்து விளங்குவதைப் பின்பற்றினால், ஒவ்வொருவனும் தனக்கொரு வழியினை உருவாக்கிக் கொள்வான் அன்றி வேறில்லை. இப்படி இருக்கையில் எவ்வாறு முஸ்லிம் உம்மத் ஒற்றுமையாகி அனைவரும் சத்தியவாதி ஆக முடியும் ? . 


மாறாக, சத்தியவாதிகள் என்று ஒரு கூட்டத்தினை இனங்கண்ட பின்னர், அந்த கூட்டம் அருமை சஹாபாக்கள் தான் என்று அறிந்து , ஆதாரம் புரிந்ததோ இல்லையோ, அவர்களின் வாழ்க்கையினை முன்மாதிரியாகக் கொண்டு அவ்வழியினை பின்பற்றி , நபி சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய உபதேசங்களை எவ்வாறு ஸஹாபாக்கள் நடைமுறைப்படுத்தினார்களோ, அவ்வாறே பின்பற்றி, அவை தனக்கு அறிந்தவைகளோ அல்லது அறியாதவைகளோ ஆக இருந்தாலும் அவைகளை அருமை சஹாபாக்கள் போன்றே நடைமுறைப்படுத்தி பின்பற்ற வேண்டும் என்ற , ஓர் அளவுகோலினை கையாண்டால் , 


அப்போதுதான் நிச்சயமாக அறிந்தவனும் அறியாதவனும் சத்தியத்தில் இருப்பான். கல்வியினை தொடங்குபவனும், உலமாக்களும் சத்தியத்தில் இருப்பார்கள். 

இதற்காகவே தான் கூறப்படுகிறது கல்வியென்பது சுமக்கப்படும் ஓர் விடையமாகும். சுமப்பது என்றால், ஓர் இடத்தில் காணப்படும் ஒன்றை இன்னோர் இடத்திற்கு இடமாற்றம் செய்வதாகும். 

“ யஹ்மிலு ஹாதல் இல்ம் ” என்றே ரசூல் சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளார்கள். { கிதாபுல் ஷரியா , ஷரஹ் அஸ்ஹாபுல் ஹதீஸ் } 

கல்வியினை சுமப்பவர்கள் என்றால் அவர்கள் உருவாக்குபவர்கள் அல்லர், தன்னுடைய காலத்தில் அனைவருக்கும் எத்திவைத்து மேலும் பின்னால் வரும் காலங்களுக்கும் அதனை தொடர்ந்து முன்கொண்டு செல்வதற்கு ஒத்துழைப்பாக இருப்பவர்கள். 

இதுவே நேர்வழியில் உள்ள உலமாக்களின் பண்பாகும். அல்குர்ஆனை சுமப்பது என்றால் அல்குர்ஆன் இறங்கியது போன்று பெற்றுக் கொள்வது. 


அல்குர்ஆனை விளங்கி மனனமிட்டு பின்னால் வரும் சமூகத்திற்கும் எத்திவைப்பார்கள். அவ்வாறே ஹதீஸினையும் மனமிட்டு சுமந்து பின்னால் வரும் சமூகத்திற்கு எத்திவைப்பார்கள். இதுவே சுமந்து கொண்டு செல்வதன் வழிமுறையாகும். 


இதுவே, சத்தியத்தை உறுதியாக அறிந்து பின்பற்றும் வழிமுறையாகும்.