[தகவல் பெரும் எல்லை நிர்ணயங்களும் மார்க்கத்தில் இல்லாத நிபந்தனைகளும்]

தகவல் பெரும் எல்லை நிர்ணயங்களும் மார்க்கத்தில் இல்லாத நிபந்தனைகளும்

தகவலை மறுக்காது ஏற்றுக் கொள்வதென்று முடிவு செய்த பின்னர் இங்கு எழும் இன்னுமொரு கேள்வி என்னவென்றால் வருகின்ற தகவல் எந்த நாட்டிலிருந்து வர வேண்டுமென்றோ எந்தத் தூர எல்லைக்குளிருந்து வர வேண்டுமென்றோ நிபந்தனை ஏதேனும் உள்ளதா என்ற கேள்விதான் அது. 


இந்தக் கேள்விக்கு பதில் கூறுவதாயின் அதன் பதிலாவது குர்ஆனிலும் ஸுன்னாவிலும் பிறை காணப்பட வேண்டிய நாட்டின் எல்லைகள் பற்றியோ அல்லது குறிப்பிட்ட தூரங்களைப் பற்றியோ வந்திருக்கும் எந்த ஆதாரத்தையும் காண முடியாது. 


அது மட்டுமின்றி எந்த மத்ஹப்களில் நாட்டுக்கு நாடு பிறை காண வேண்டுமென்ற கருத்தைச் சொன்னார்களோ அவர்களிடம் கூட அதற்கென்று எந்த அளவுகோள்களும் கிடையாது. அந்த மத்ஹப்களைச் சேர்ந்தவர்கள் இன்னின்ன நாட்டிலிருந்து தகவல் வந்தால் ஏற்றுக் கொள்ளலாமென்றோ இன்னின்ன நாட்டிலிருந்து தகவல் வந்தால் ஏற்றுக் கொள்ள முடியாதென்றோ ஒரு குறிப்பிட்ட அளவுகோளினை எடுப்பதற்கு அவர்களால் இயலாதிருக்கிறது. 

அதன் காரணம் அவ்வாறு அவர்கள் சொல்வதற்கு குர்ஆனிலும் ஸுன்னாவிலும் எந்த ஆதாரத்தையும் அவர்களால் பெற்றுக் கொள்ள முடியாததேயாகும். இன்று நாம் வாழும் சூழலின் அடிப்படையில் ஒரு உதாரணத்தைக் கூறுவதாயின் இலங்கை நாட்டின் புத்தளம் என்ற பகுதியில் பிறை காணப்பட்டால் அந்தப் பிறையைத் தென்னிந்தியாவில் ஏற்றுக் கொள்ள மாட்டோம் என்கிறார்கள். காரணத்தைக் கேட்டால் அந்தப் பிறை இலங்கையுடைய பிறையென்று சொல்கிறார்கள். 

என்றாலும் புத்தளத்திலிருந்து தென்னிந்தியாவுக்குள்ள தூரத்தை விடவும் தென்னிந்தியாவிலிருந்து வட இந்தியாவுக்குள்ள தூரம் பல மடங்கு அதிகமாகும். இப்படியிருக்க தென்னிந்தியாவில் காணப்பட்ட பிறையை வட இந்தியாவில் ஏற்றுக் கொள்கிறார்கள். ஏனென்றால் அது ஒரே நாட்டின் பகுதிதான் என்று காரணம் சொல்கிறார்கள். 


இவர்களின் இந்த வாதம் சரியானதென்று தர்க்க ரீதியாகவும் அவர்களால் நிரூபிக்க வழியில்லை. வானவியல் ரீதியாகவும் நிரூபிக்க வழியில்லை. மார்க்க ரீதியாகவும் நிரூபிக்க அவர்களிடம் ஆதாரமில்லை. இந்தக் கருத்தை எந்த அடிப்படையிலும் அவர்களால் சரியென்று நிரூபிக்க முடியாது. 


தங்கள் நாட்டு எல்லைக்குள் மாத்திரமே தகவலை ஏற்றுக் கொள்வதென்றால் அதனை சுருக்கமாக தேசியவாதம் என்றே சொல்ல வேண்டும். இதனைத்தான் அறபியில் 


அல் கவ்மிய்யா -- القومية 


என்று சொல்லப்படுகிறது. எனவே இவர்களின் இந்த வாதங்கள் தேசியவாத்தின் பிடிவாதமான போக்கே தவிர எமது மார்க்கத்திற்குச் சம்பந்தமான விடயமல்ல. அந்தத் தேசியவாதத்தின் ஜாஹிலிய்ய மூடப் பழக்க வழக்கங்கள்தான் இன்று எமது நாட்டிலும்; எமது மார்க்கத்திலும் நுழைந்திருக்கிறதே தவிர இலங்கைக்குள் பிறை கண்டால் ஏற்றுக் கொள் என்றோ இலங்கைக்கு வெளியே பிறை கண்டால் ஏற்றுக் கொள்ளாதே என்றோ கூறுவதற்கு மார்க்கத்தில் எங்கும் ஆதாரமில்லை. 


மாலைதீவுகளில் பிறை காணப்பட்டால் அந்தப் பிறையை இலங்கையில் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். ஆனால் இலங்கையிலிருந்து மாலைதீவுக்கு அரை மணி நேரத்தில் சென்று விடக்கூடிய பிரயாண தூரம்தான் இருக்கிறது. எனவே இவர்களின் இவ்வாறான வழிமுறைகள் மார்க்கத்தின் ஆதாரங்களோடு பின்பற்றப்படும் வழிமுறைகளல்ல. 


மாறாக இந்த வழிமுறைகள் அனைத்தும் தேசியவாதத்தின் அடையாளங்களாகும். நாம் வெறுமனே தேசியவாதத்தின் தன்மைகளையும் அதன் பழக்கங்களையும் எம்மில் உருவாக்கிக்கொண்டிருக்கிறோமே தவிர இந்தப் பழக்கங்களுக்கும் எமது மார்க்கத்துக்கும் எந்தவித சம்பந்தமுமில்லை. 


இதனடிப்படையில் கவனிக்கையில் இப்னு அப்பாஸ் (ரழியல்லாஹு அன்ஹு), குரைப் (ரழியல்லாஹு அன்ஹு) தொடர்பான ஹதீஸானது தேசியவாதத்திற்குச் சம்பந்தமான அறிவித்தலல்ல. .அந்த அறிவித்தல் எமது மார்க்கத்தோடு தொடர்புடைய அறிவித்தலாகும். 

இமாம்கள் பிறை விடயத்தில் இன்று நம் சமூகத்தில் கூறுவது போன்று நாட்டுக்கு நாடு என்ற வார்த்தைப் பிரயோகத்தைப் பயன்படுத்தவில்லை. இமாம்களின் வார்த்தையில் அவர்கள் அதனை இஹ்திலாபுல் மதாலிஹ் என்றுதான் அழைக்கிறார்கள். பிறை விடயத்தில் இஹ்திலாபுல் மதாலிஹ் என்பது சூரியன் உதிக்கும் வேறுபாட்டின் அடிப்படையில் அல்லது பிரயாண தூரத்தின் எல்லையின் அடிப்படையில் பிறை காண்பதன் எல்லைகளை வகுப்பதைக் குறிக்கும். 


இதனடிப்படையில் அவரவர் தங்கள் பகுதியில் காணும் பிறையினடிப்படையில் செயற்படுவர். இதுதான் உலமாக்கள் இடத்துக்கிடம் பிறை பார்க்கப்பட வேண்டுமென்பதற்கு முன்வைக்கக்கூடிய அடிப்படையாகும். இதனைச் சரிகாணும் உலமாக்களை இஹ்திலாபுல் மதாலிஹ் என்ற கருத்தைச் சுமந்த உலமாக்களென்று நாம் சொல்லலாம். 


இவர்களின் இந்தக் கருத்தனடிப்படையில் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் சூரியன் உதிக்கும் அடிப்படையில் வேறுபாடு இருப்பதாக நாம் இதுவரை அறிந்ததில்லை. சூரியன் உதிக்கும் அடிப்படையில் வருகின்ற நேர வித்தியாசமெனும்போது அது குறைந்தது அரை நாளாவது வித்தியாசம் இருக்க வேண்டும். இதனைத்தான் வேறுபாடென்று சொல்ல முடியும். 

இஹ்திலாபுல் மதாலிஹ் என்ற அடிப்படைக்கு சார்பாக குர்ஆனிலும்
ஸு ன்னாவிலும் எந்த ஆதாரத்தையும் நாம் காண முடியவில்லை. 


நாட்டுக்கு நாடு பிறை காண வேண்டுமென்ற கருத்து குர்ஆனும் ஸுன்னாவும் கூறும் கருத்தல்ல. இந்தக் கருத்தை ஸஹாபாக்கள் தாபியீன்கள் யாரும் தெரிவிக்கவில்லை. 


அதே போன்று பின்வந்தோர்களில் அயிம்மதுல் முஸ்லிமீன்களான இமாம் அபூ ஹனீபா (றஹிமஹு ல்லாஹ்), இமாம் மாலிக் (றஹிமஹுல்லாஹ்), இமாம் ஷாபி (றஹிமஹுல்லாஹ்), இமாம் அஹ்மத் (றஹிமஹு ல்லாஹ்), போன்றவர்கள் கூட இந்தக் கருத்தைக் கூறவில்லை. 


இக்கருத்து பிற்பட்ட காலத்தில் தோன்றிய கருத்தாகும். பிற்காலத்தில் வந்த மத்ஹப்வாதிகள் அவ்வப்போது தோன்றிய கருத்துக்களைப் பிடித்துக் கொள்ள ஆரம்பித்தார்கள். அதேபோன்று இக்கருத்தை பல இமாம்கள் மறுத்துக் கூறியிருக்கிறார்கள். 

எனவேதான் இமாம் ஷாபிஈ (றஹிமஹுல்லாஹ்) சர்வதேச பிறைக்கு எதிரான கருத்தைக் கொண்டிருந்தாலும் ஷாபிஈ மத்ஹபில் சர்வதேச பிறையின் கருத்தலுள்ளவர்களையும் நாம் காண முடிகிறது. அதே போன்று அதே மத்ஹபைச் சேர்ந்தவர்களில் நாட்டுக்கு நாடு பிறை பார்க்க வேண்டுமென்று வாதிடுபவர்களையும் நாம் காணலாம். 


இதனடிப்படையில் நான் கூறுவது என்னவென்றால் இஸ்லாமிய மார்க்கத்தில் பிறை காணுதல் என்ற விடயத்தில் குர்ஆனிலும் ஸுன்னாவிலும் ஸஹாபாக்களின் நடவடிக்கையிலும் உள்ளதைத் தவிர அதற்கு வெளியே சென்றால் அங்கு வஹ்ததுல் மதாலிஹ் - இஹ்திலாபுல் மதாலிஹ் என்ற இரு கருத்தைத் தவிர வேரெந்தக் கருத்துமில்லை.


இதுதான் உலமாக்கள் இடத்துக்கிடம் பிறை பார்க்கப்பட வேண்டுமென்பதற்கு முன்வைக்கக்கூடிய அடிப்படையாகும். இமாம்கள் பிறை விடயத்தில் இன்று நம் சமூகத்தில் கூறுவது போன்று நாட்டுக்கு நாடு என்ற வார்த்தைப் பிரயோகத்தைப் பயன்படுத்தவில்லை.


நாட்டுக்கு நாடு பிறை காண வேண்டுமென்ற கருத்தும் குர்ஆனும் ஸுன்னாவும் கூறும் கருத்தல்ல. இந்தக் கருத்தை ஸஹாபாக்கள் தாபியீன்கள் யாரும் தெரிவிக்கவில்லை. 


Taken from a lecture of Shaykh Yahya Silmy Hafidhahullah , Transcribed by Bro Riyas Negambo