[பிரயாண கூட்ட ஹதீசும் , அவர்களுக்கு ஏவினார்கள் என்பதன் விளக்கமும்]

பிரயாண கூட்ட ஹதீசும் , அவர்களுக்கு ஏவினார்கள் என்பதன் விளக்கமும்


பிறை விடயத்தில் இமாம்கள் குரைப் - இப்னு அப்பாஸின் ஹதீஸை சர்வதேச பிறைக்கு எதிரான ஆதாரமாக எடுத்த போது அதனை ஏனைய இமாம்கள் அதற்கு மறுப்பைக் கொடுத்து அது தொடர்பான தெளிவையும் காட்டினார்கள். அதனைத் தொடர்ந்து இன்றைய காலத்தில் தென்னிந்தியாவைச் சேர்ந்த P. ஜெய்னுல் ஆபிதீன் பமன் ஷஹித மின்குமுஷ்ஷஹ்ர பல்யஸும்ஹு “…..


உங்களில் யார் இந்த மாதத்தை சாட்சி பெறுகிறாரோ அவர் நோன்பு நோற்கட்டும் ” என்ற வசனத்தையும் இன்னும் ஸுனன் அபூதாவூதில் பதிவாகியிருக்கும் அபூ உமைர் அல் அன்சாரி (ரழியல்லாஹு அன்ஹு) அறிவிக்கும் ஹதீஸையும் நாட்டுக்கு நாடு பிறை காண வேண்டுமென்பதற்கு ஆதாரமாகக் காட்டுகிறார். இதன் உண்மையான நிலைப்பாடு என்னவென்று நாம் பார்க்கலாம். 


அபூ உமைர் அல் அன்சாரி (ரழியல்லாஹு அன்ஹு) அறிவிக்கிறார்கள்
ஒரு பிரயாணக் கூட்டம் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்து நாங்கள் பிறை கண்டோம் என்று கூறினார்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பிலாலிடம் பிலாலே ! நோன்பைத் திறக்குமாறு மக்களுக்கு ஏவுங்கள் என்று கூறினார்கள்.

இந்த அறிப்பின் இன்னுமொரு பகுதி ஸு னன் நஸாயீயிலும் பதிவாகிருக்கிறது. அந்த அறிவிப்பு சம்பவம் நிகழ்ந்த நேரத்தையும் சொல்கிறது. அந்நேரம் அஸருக்குப் பின் என்று ஸுனன் நஸாயீயுடைய அறிவுப்பு காட்டுகிறது. 


பிரயாணக் கூட்டம் தகவல் சொன்னபோது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் நோன்பு நோற்றிருந்தார்கள். எனவே தான் தகவல் கிடைத்தவுடன் உடனே பிலாலிடம் " பஅமரன்னாச அய்யுப்திரு வஅய்யர்து பில் முஸல்லா பில் ஹத் - “ மக்களுக்கு நோன்பைத் திறக்குமாறு ஏவுங்கள் இன்னும் பெருநாள் தொழுகைக்காக நாளை முஸல்லாவுக்கு வரச் சொல்லுங்கள் " எனக் கட்டளையிட்டார்கள். 


இவ்வாறு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கட்டளையிட்டதைப் பற்றி விளக்குகையில் இமாம் ஷாபி(றஹிமஹுல்லாஹ் ) கிதாபுல் உம் என்ற நூலில் கூறுவதாவது :

றஸுலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு அஸருக்குப் பின் தகவல் வந்ததினால் தான் அடுத்த நாள் பெருநாள் தொழுகைக்கு வருமாறு கூறினார்கள். 


தகவல் சூரியன் உச்சிக்கு வருவதற்கு முன் ( ஸவாழுக்கு முன் ) வந்திருந்தால் அன்றைய தினமே தொழுதிருப்பார்கள். இவ்வாறு இமாம் அபூ அப்துல்லாஹ் முஹம்மது இத்ரீஸ் அஷ்ஷாபிஈ ( றஹிமஹுல்லாஹ் ) தனது நூலிலே தெட்டத் தெளிவாகக் கூறிவிட்டார். 

அபூ உமைர் அல் அன்ஸாரி (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் அறிவிக்கும் ஹதீஸை நாம் சற்று விரிவாக நோக்குவோம்.

அபூதாவூதின் அறிவிப்பின் படி

வஜாஅ ரகபுன் பி ஆஹிரின் நஹார்

பிரயாணக் கூட்டம் நாளின் கடைசியில் வந்தது எனப் பதிவாகியுள்ளது.
மற்றைய அறிவிப்பான நஸாயீயின் அறிவிப்பின் படி

பஃதல் அஸர் - அஸருக்குப் பின் எனப் பதிவாகியுள்ளது.

இன்று மனிதர்கள் தங்கள் அறிவீனத்தின் காரணத்தால் ஹதீஸின் அறிவித்தல்களை சரியாகக் கையாளத் தெரியாமல் எந்தளவுக்குச் சென்றுவிட்டார்களென்று கூறுவதென்றால்; அபூதாவூதின் அறிவிப்பில் வந்துள்ள ஆஹிரின் நஹார் என்ற வார்த்தைக்கு டாக்டர் ரைஸுத்தீன் என்பவர் அது நாளின் முதல் பகுதியைக் குறிக்கும் என்று விளக்கம் கொடுக்கிறார். 


ஆஹிரின் நஹார் என்பதை அவாஹிர் என்ற கருத்தில் எடுத்து விட்டார். அதற்கென்று வாதாடினார். ஸுனன் நஸயீயுடைய அறிபிப்பான பஃதல் அஸர் - அஸருக்குப் பின் என்ற அறிவித்தலைக் கொண்டு நான் அவரது வாதம் தவறானதென்று நிரூபித்தேன். 

எனவே அஸருக்குப் பின் என்பது மஃரிபை நெருங்கும் நேரமென்பதை நஸயீயுடைய அறிவிப்பு எமக்குத் தெளிவாக எடுத்துக் காட்டுகிறது. அறிவித்தல்கள் தெளிவாக வந்த பின்னரும் மனிதர்கள் தங்களின் அறிவீனத்தின் காரணமாக ஹதீஸை எவ்வாறேனும் துருவித் துருவி ஆராய்ந்து அதனைத் தங்களுக்குச் சார்பாக ஆக்கிக் கொள்கிறார்கள். 

மேற்சொன்ன ஹதீஸ் தொடர்பான சர்ச்சைக்கு சுருக்கமாக பதிலளிப்பதாயின் அபூதாவூதின் ரிவாயத் ஒரு பிரயாணக் கூட்டம் வந்ததாக பொதுவான வார்த்தையில் அறிவிக்க நஸயீயுடைய ரிவாயத்தில் மேலும் தெளிவாக அஸருக்குப் பின் என்ற வார்த்தை இடம்பெற்றிருப்பதால் பிரயாணக் கூட்டம் எந்த நேரத்தில் வந்ததென்பதை அது தெளிவாகக் காட்டிவிட்டது. 


இந்த அறிவித்தல் தொடர்பாக P. ஜெய்னுல் ஆபிதீன் சொல்கிறார்: 


பிரயாணக் கூட்டம் வந்து தகவலைச் சொன்னபோது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பஅமரஹும் - அவர்களுக்கு ஏவினார் என்ற வார்த்தை அபூதாவூதில் பதிவாகியிருக்கிறது. இங்கே அவர்களுக்கு ஏவினார் என்றால் தகவல் சொன்ன அந்தப் பிரயாணக் கூட்டத்திற்கு நோன்பைத் திறக்குமாறு ஏவினார் என்பதே அதன் பொருளாகும். இவ்வாறு P. ஜெய்னுல் ஆபிதீன் விளக்கம் கொடுக்கிறார். 


இந்த சம்பவம் நிகழ்ந்த சந்தர்ப்பத்தின் அடிப்படையில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அவர்களுக்கு ஏவினார் என்ற வார்த்தையினை மொழி ரீதியாகப் பார்த்தால்

ஆத்தமீரு யுர்ஜ இலா அவ்வலு மா யுஃனா பிஹி

இங்கு ழமிராக வரும் ஹும் என்ற வார்த்தை யாரைக் குறிக்கின்றதென்பதை ஆராய்ந்தால் அந்த அறிவிப்பில் ப அஸ்பஹ மதீனா ஸியாமன் -மதீனா ஒரு நாள் காலை நோன்பு வைத்தது என்று வந்திருக்கும் அடிப்படையில் பஅமரஹும்- அவர்களுக்கு ஏவினார் என்ற வாசகத்தில் ழமிராக வருவது மதீனாவாகும். 


எனவே அவர்களுக்கு ஏவினார் என்பதன் பொருள் மதீனாவின் மக்களுக்கு ஏவினார் என்பதாகும். மேலும் இமாம் பைஹகீயின் ரிவாயத்தில் இன்னும் தெளிவாக பஅமரன்னாஸ – மக்களுக்கு ஏவினார் என்று வந்திருக்கிறது. 


இமாம் அலீமாபாதி ( றஹிமஹுல்லாஹ் ) ஸுனன் அபூதாவூதுக்கு விளக்கமாக எழுதிய அவ்னுல் மஃபூத் ஷரஹ் ஸுனன் அபூதாவூத் என்ற நூலில் பஅமரஹும் - அவர்களுக்கு ஏவினார் என்ற வார்த்தை வருகின்ற போது அடைப்புக் குறிக்குள் மக்களுக்கு ஏவினார் என்ற வார்த்தையைக் குறிப்பிட்டுக் காட்டுகிறார். 


எனவே றஸுலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மக்களுக்கு ஏவினாரென்பது இங்கு தெளிவாகி விடுகிறது. இவ்வாறு இமாம்கள் அமரஹும்- அவர்களுக்கு ஏவினார்கள் என்ற வாசகத்திற்கு மக்களுக்கு ஏவினாரென்று தெளிவுபடுத்தியிருக்கிறார்கள். 

இது இப்படியிருக்க இதில் இன்று ஆராய்ச்சி செய்த P. ஜெய்னுல் ஆபிதீன் அமரஹும் - அவர்களுக்கு ஏவினார் என்பதன் பொருள் அந்தப் பிரயாணக் கூட்டத்துக்கு ஏவினார் என்றுதான் இருக்க வேண்டும் எனக் கூறுகிறார். 


இதன் படி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அந்தப் பிரயாணக் கூட்டத்துக்கு மட்டுமே நோன்பைத் திறக்குமாறு ஏவினாரென்ற தீர்ப்பை P. ஜெய்னுல் ஆபிதீன் கொடுக்கின்றார். 


இவர் இந்த ஹதீஸுக்குக் கொடுத்த இந்த விளக்கம் இவருக்கு முன் பூமியில் யாரும் கொடுக்காத விளக்கமாகும். நாட்டுக்கு நாடு பிறை பார்க்க வேண்டுமென்ற கருத்தில் வாதிட்ட இமாம் நவவி (றஹிமஹுல்லாஹ்) அவர்கள் கூட இந்த ஹதீஸைத் தனது வாதத்துக்கு ஆதாரமாகக் காட்டவில்லை. 


ஏனென்றால் இமாம் நவவி (றஹிமஹுல்லாஹ்) அவர்கள் ஹதீஸ்களை மடமைத் தன்மையின் முறையற்ற வழிமுறையில் கையாள்வதற்கு முயற்சி செய்யவில்லை. இமாம் நவவி (றஹிமஹுல்லாஹ்) ஒரு ஹதீஸ் அறிஞராக இருந்தார். எனவே அவர் அந்த ஹதீஸினைக் கையாளும் அடிப்படையைத் தெரிந்து அதனைக் கையாண்டார். 

இதனால்தான் இவ்வாறான சிறுபிள்ளைத் தனமான விளையாட்டை அவர் ஹதீஸ்களில் காட்டவில்லை. இமாம் நவவியுடைய தீர்ப்பில் தவறுகள் இருந்த போதும் அவர் ஒரு அறிஞரென்ற தரத்திலே ஆராய்ந்து முடிவு செய்திருந்தார். 


ஆனால் இன்று P. ஜெய்னுல் ஆபிதீன் என்பவர் தானும் ஒரு ஆராய்ச்சியைச் செய்து ஒரு தீர்ப்பைக் கொடுத்துவிட்டு தான் ஒரு புத்திசாலித்தனமான காரியத்தைச் செய்துவிட்டதாக எண்ணுகிறார். இவர்கள் தாங்களும் ஹதீஸ்களில் ஆராய்ந்து ஒரு விடயத்தைத் தேடிப் பிடிக்கிறார்கள். 


ஆனால் இவர்கள் தேடிப் பிடித்துள்ளதைப் பார்த்தால் இவர்களைப் போன்றவர்களுக்கு ஹதீஸ் என்ன சொல்கிறதென்று விளங்கிக் கொள்ளத் தெரியவில்லையென்றுதான் சொல்ல வேண்டும். இவர்களுக்கு அபூதாவூதின் அமரஹும் என்ற வார்த்தைக்கு அர்த்தம் விளங்கவில்லையென்றால் அபூதாவூதுக்கு விளக்கமாக எழுதப்பட்ட அவ்னுல் மஃபூத் ஷரஹ் ஸுனன் அபூதாவூத் என்ற நூலில் இவர்களுக்கு விளக்கம் இருக்கிறது.

அபூ உமைர் அல் அன்ஸாரி (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் அறிவிக்கும் ஹதீஸ் எமக்குக் கூறுவது என்னவென்று சுருக்கமாக நோக்கினால் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் பிரயாணக் கூட்டம் வந்து தகவலைச் சொன்னவுடன் நபியவர்கள் மக்களை நோன்பைத் திறக்குமாறும் அடுத்த நாள் பெருநாள் தொழுகைக்காக முஸல்லாவுக்கு வருமாறும் கட்டளையிட்டார்கள். 


அடுத்த நாள் மக்களைத் தொழுகைக்கு வரும்படி ஏவியதன் காரணம் தகவல் அஸருக்குப் பின் வந்ததினாலாகும். ஏனென்றால் பெருநாள் தொழுகையை சூரியன் உச்சிக்கு வருவதற்கு முன்னர் தொழ வேண்டும். எனவேதான் இமாம் ஷாபிஈ (றஹிமஹுல்லாஹ்) கூறினார்: சூரியன் உச்சிக்கு வருமுன் தகவல் வந்திருப்பின் நபியவர்கள் அன்றைய தினத்திலேயே பெருநாள் தொழுகையைத் தொழுதிருப்பார்கள். 

இவ்வாறு இமாம் ஷாபிஈ (றஹிமஹுல்லாஹ்) அவர்கள் விளக்குகிறார்கள். இந்த ஹதீஸை விளங்குவதற்குத் தகுதியானதொரு இமாமாக இமாம் ஷாபிஈ (றஹிமஹுல்லாஹ்) இருந்ததால் அவர் அதனை சரியாக ஆராய்ந்து தெளிவுபடுத்திச் சென்றார். 


எனவே இமாம் ஷாபிஈ (றஹிமஹுல்லாஹ்) பிரயாணக் கூட்டம் ஸவாலுக்கு முன் வரவில்லையென்பதை எமக்குத் தெளிவுபடுத்துகிறார். ஆனால் இந்த ஹதீஸுக்குத் தானும் ஒரு விளக்கத்தைச் சொல்லியாக வேண்டுமென முந்திக் கொண்ட Dr. ரைஸுத்தீன் "ஆஹிரின் நஹார்" என்ற வார்த்தைக்கு மறுநாள் காலையென்று அர்த்தம் சொல்கிறார். நான் இங்கு குறிப்பிட விரும்புவது என்னவெனில், இவர்கள் தங்களின் அறியாமையினால் தங்களுக்கென்று ஒரு வழிமுறையை அமைத்துக் கொண்டு குர்ஆனாலும் ஹதீஸ்களாலும் ஆதாரமென்று காட்டி அந்தக் குர்ஆனையும் ஹதீஸையும் எப்படியேனும் தாங்கள் கொடுக்கின்ற விளக்கத்துக்குச் சார்பானதாக ஆக்கிக் கொள்வதற்கு முயற்சி செய்கிறார்கள். 

இதில் கவலைக்குரிய விடயம் என்னவென்றால் இவர்களின் அனைத்து வழிகேடான விளக்கங்களுக்கும் நாம் பதிலளித்த பின்னரும் அதே தவறான கருத்துக்களையே மீண்டும் சுமந்து கொண்டு வாதிடுகிறார்கள். 


நாம் இது தொடர்பாக எதனையும் நிரூபிக்கவில்லையென்றால் ஒரு வகையில் இவர்கள் வாதிடுவதை நியாயமென்று ஏற்றுக் கொள்ள முடியும். ஆனால் இவர்களின் நிலையை எண்ணிப் பார்க்கையில் கவலைக்குரியதாக உள்ளது. 


சத்தியத்தைத் தேடுகின்ற மக்களாக இருந்தால் நிச்சயமாக பதிலளிக்கப்பட்ட பின்னர் பிடிவாதத்தின் காரணமாக தவறான ஒன்றைச் சுமப்பவர்களாக இருக்கமாட்டார்கள். அல்லது அவர்கள் தங்களுக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் மறுப்பை எதிர்த்து அதற்குப் பொருத்தமான பதிலைக் கொடுத்திருக்க வேண்டும். ஆனால் அவர்களிடமிருந்து தகுதியான எந்த பதிலும் வருவதில்லை. அவர்களுடைய விளக்கத்தைச் சுமந்து கொண்டு நாடெங்கும் சுற்றுகிறார்கள்.


Taken from a lecture of Shaykh Yahya Silmy Hafidhahullaah , Transcribed by Bro Riyas Negambo