[பிறை மற்றும் மார்க்க விடயங்களில் குளறுபடிகளும் அதற்கான காரணங்களும் தீர்வுகளும்]

பிறை மற்றும் மார்க்க விடயங்களில் குளறுபடிகளும் அதற்கான காரணங்களும் தீர்வுகளும்

நாட்டுக்கு நாடு பிறை காணுதல் என்பதற்கு ஆதாரமாக சிலர் முன்வைக்கும் அபூ உமைர் அல் அன்சாரி (ரழியல்லாஹு அன்ஹு) அறிவிக்கும் ஹதீஸுக்குக் கொடுக்கப்பட்டுள்ள தவறான விளக்கத்தையும் அது போன்ற ஏனைய தவறான விளக்கங்களையும் மறுப்பது மட்டுமின்றி அறிவிப்புகளைத் தவறாகக் கையாளுகின்ற அனைத்துக் கூட்டங்களுக்கும் மறுப்பாகவும் இன்னும் குர்ஆன் ஸுன்னாவின் ஆதாரங்களால் வழிகேட்டை உருவாக்குவதற்கு முயற்சி செய்கின்ற கூட்டங்களுக்கு ஒரு உபதேசமாகவும் ஒரு சில விடயங்களை முன்வைக்கலாமென நினைக்கின்றோம். 

முதலில் நாமனைவரும் ஒரு விடயத்தைப் புரிய வேண்டும். அதாவது அல்குர்ஆனையும் அஸ்ஸுன்னாவையும் தெட்டத் தெளிவாப் பூமியிலே புரிந்து அதனை விளங்கி தனது நடவடிக்கையில் செயற்படுத்திய ஒரு சிறப்பான மனிதர் இருப்பதாயின் அது றஸுலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களாகவே இருப்பார்கள். 


அந்த நபி கொண்டு வந்த மார்க்கத்தையும் சட்டங்களையும் ஒரு சமூகம் ஏற்று அதனைத் தங்கள் நடவடிக்கையில் நடைமுறைப்படுத்தியிருக்குமென்றால் அந்த சிறப்பான சமூகம் அல்லாஹ்வின் தூதரின் தோழர்களான ஸஹாபா றிழ்வானுல்லாஹி அலைஹிம் அஜ்மஈன் அவர்களாகத்தான் இருப்பார்கள். 


அவர்கள் மத்தியில் இந்தக் குர்ஆனையும் ஸுன்னாவையும் யாரும் விளங்காமல் பின்பற்றியவர்களாக இருக்கவில்லை. அவர்கள் இந்த மார்க்கத்துக்காக தங்களின் உயிர்களைத் தியாகம் செய்வதற்கும் தயாராக இருந்ததை நாம் காண்கிறோம். அவர்கள் தங்களின் சொத்துக்களைத் தியாகம் செய்வதற்குக் கூட பின்வாங்கவில்லை. 


அது மட்டுமின்றி அவர்கள் தலைமுறை தலைமுறையாக செய்து வந்த பரம்பரை வழக்கங்களை ஒரேயொரு வஹிக்காகக் கைவிட்டு அந்த வஹியின் பால் திரும்பி தங்களைத் திருத்திக் கொண்டார்கள். ஒரு குர்ஆன் வசனம் அவர்களின் வாழ்க்கையையே மாற்றிவிடுகிறது. ஒரு ஹதீஸுக்காக அவர்கள் தங்களை மாற்றிக் கொள்கிறார்கள். 


அந்த மாற்றங்களனைத்தும் அவர்கள் அவர்கள் உண்மையை அறியாமலும் விளங்காமலும் ஒரு போதும் நிகழவில்லை. இந்த மார்க்கத்தின் ஆதாரங்களை அந்த ஸஹாபாக்கள் அறியாதவர்களாக இருந்திருந்தால் அவர்கள் பரம்பரை வழக்கமாகச் செய்து வந்தவைகளையும் விளங்கி வைத்திருந்தவைகளையும் அவர்களின் சமூகத்தின் பழக்கங்களையும் குர்ஆனின் ஒரு வசனத்திற்காக ஹதீஸின் ஒரு வார்த்தைக்காக விட்டிருக்க முடியுமா? 


அந்த நபித்தோழர்கள் இந்தக் குர்ஆனையும் ஸுன்னாவையும் தெட்டத் தெளிவாகப் புரிந்திருந்த காரணத்தினால்தான் அவர்கள் மத்தியில் இத்தனை மாற்றங்களும் திருத்தங்களும் ஏற்பட்டன. அது மட்டுமின்றி அவர்கள் எவைகளையெல்லாம் திருத்திக் கொண்டார்களோ அவைகளில் எந்தளவு உறுதியாக இருந்தார்களென்றால் அதன் காரணமாக அவர்களின் உயிர்கள் போனாலும் சொத்துகள் அழிந்தாலும் குடும்பங்களை இழந்தாலும் தங்களின் நிலையிலிருந்து தடுமாற்றமடையவில்லை. 


அவர்கள் தங்களின் மார்க்கத்தில் நிலைகுழையாமல் உறுதியாக நின்றதன் காரணம் அந்த ஸஹாபாக்கள் குர்ஆனையும் ஸுன்னாவையும் ஒரு மடமையின் தன்மையோடு பின்பற்றவில்லை. அவர்கள் அறியாமையில்; மார்க்கத்தைப் பின்பற்றவில்லை. இந்த உம்மத்தில் தங்கள் மார்க்கத்தைத் தெட்டத் தெளிவோடு பின்பற்றிய கூட்டம் அந்த ஸஹாபாக்களின் கூட்டமாகத்தான் இருக்கும். 


அவர்களுக்குப் பின் வந்த காலத்தில் இங்கும் அங்கும் ஒரு சிலர் தெளிவோடு மார்க்கத்தைப் பின்பற்றினாலும் ஒரு முழு சமூகமாகவும் சத்தியத்தின் சாட்சியாளர்களாகவும் ஸஹாபாக்களைத் தவிர வேறு எவர்களும் இருக்கவில்லை. அந்த ஸஹாபாக்களுடைய தெளிவும் அவர்களுடைய ஈமானும் அவர்களின் உறுதித் தன்மையும் எத்தரத்தில் இருந்ததென்பதைப் புரிந்த இரட்சகனான அல்லாஹு ரப்புல் ஆலமீன் ஏழு வானத்தின் மேலிருந்து சாட்சி கூறுகின்றான்:

அல்லாஹ் அவர்களைப் பொருந்திக் கொண்டான் அவர்களும் அவனைப் பொருந்திக் கொண்டார்கள்

இவ்வாறு அந்த ஸஹாபாக்களின் உள்ளங்களைப் பற்றி அல்லாஹ் சாட்சி கூறுகிறான். இப்படியானதொரு கூட்டமாக இருந்த ஸஹாபாக்கள்தான் இந்த மார்க்கத்தைப் பின்பற்றினார்கள். 


இந்த இஸ்லாமிய உம்மத்தின் முதல் சமூகமான ஸஹாபாக்களைப் பற்றிய விடயங்களை இங்கு எடுத்துக் கொண்டதன் காரணம், இன்று எமது சமூகத்தில் பலரும் பலவாறான விளக்கங்களைக் கொடுத்து வருவதோடு அதனைக் குர்ஆனின் விளக்கமென்றும் ஹதீஸின் விளக்கமென்றும் கூறி இந்த உம்மத்தினுள் பிரிவுகளையும் குழப்பங்களையும் உருவாக்கி வருகிறார்கள். 

இந்தக் குழப்பவாதிகளுக்கு நாம் சொல்லிக் கொள்வதாவது, நீங்கள் கூறும் இந்த விளக்கங்களெல்லாம் குர்ஆனிலும் ஸுன்னாவிலும் உள்ளவைகளாக இருந்திருப்பின் அதனை அந்த ஸஹாபாக்கள் பின்பற்றாமலும் பிரச்சாரம் செய்யாமலும் இருந்திருக்க மாட்டார்கள். நிச்சயமாக அவர்கள் அதனை நடைமுறைப்படுத்தியிருப்பார்கள். 

மாறாக அவை அவர்களின் பூமியிலும் அவர்களின் காலத்திலும் நடைமுறை செய்யப்படாத விடயங்களாக இருக்குமாயின் நீங்கள் நன்கு புரிந்து கொள்ளுங்கள் அதாவது ஸஹாபாக்கள் ஒரு விடயத்தில் மௌனமாக இருந்தார்களாயின் அதன் காரணம் அவர்கள் அது பற்றி அறியாமையில் இருந்ததினாலல்ல. 

ஒரு விடயத்தில் கருத்துக் கூறும்போது அதன் எல்லையைத் தாண்டுவது மடமைத் தன்மையாகுமென்பதை தெளிவாகப் புரிந்திருந்த காரணத்தில்தான் அவர்கள் அந்த எல்லைக்கு மேல் பேசாமல் இருந்துவிட்டார்கள். 

இமாம் இப்னு குதாமா ( றஹிமஹுல்லாஹ்) லம்அதுல் இஃதிகாத் என்ற நூலில் ஸஹாபாக்களின் நிலைப்பாட்டைப் பற்றிக் கூறுகையில்


“அவர்கள் ஒரு எல்லையோடு போதுமாக்கிக் கொண்டதன் காரணம் கல்வி இல்லாததினாலல்ல. .அவர்கள் ஒரு விடயத்தில் மௌனமாக இருந்தார்களென்றால் அதன் காரணம் அந்த விடயத்தைப் பற்றி விளங்காததினாலல்ல”. 


எனவே ஸஹாபாக்கள் ஒரு விடயத்தின் அதன் எல்லையை அறிந்திருந்ததன் காரணமாகவே அந்த எல்லைக்கு மேல் எதுவும் சொல்வது அவசியமில்லையென அறிந்து அத்தோடு நின்றுகொண்டார்கள். அது பற்றி அவர்கள் அறிந்திருந்தார்கள். 


அதே போன்று அவர்கள் ஒரு விடயத்தில் மௌனமாய் இருந்ததன் காரணம் அவர்கள் அதன் எல்லையை நன்கு விளங்கி அந்த விளக்கத்தோடுதான் அவ்வாறிருந்தார்கள். அவர்கள் எக்காரணமுமின்றி ஒன்றைத் தெரிந்து கொண்டே வெளியில் சொல்லாமல் மௌனம் சாதிக்கவில்லை. தெளிவாக விளங்கியே அவ்வாறு இருந்தார்கள். 


இதுதான் ஸஹாபாக்களின் நிலைப்பாடாக இருந்தது. இவர்களைப் பின்தொடர்ந்து தான் தாபியீன்களும் நடந்தார்கள். இதே அடிப்படையில்தான் தாபியீன்களைத் தபஉ அத்பாயீன்கள் பின்பற்றினர். இதே வழிமுறையைத்தான் அனைத்து ஸலபுஸ்ஸாலிஹீன்களும் பின்பற்றி நடந்தார்கள். 


யாரெல்லாம் இவர்களின் பாதையைப் பின்பற்றினார்களோ அவர்கள் இன்றிருப்பவர்களைப் போன்று குர்ஆனிலிருந்தும் ஸுன்னாவிலிருந்தும் புதிது புதிதாக கருத்துக்களை எடுப்பதற்கு இயலாதவர்களாய் இருக்கவில்லை. என்றாலும் அவ்வாறு செய்வது அறியாமையும் மடைமையுமென்று அவர்கள் புரிந்திருந்தார்கள். அந்த ஸலபுஸ்ஸாலிஹீன்கள் எதனை ஸஹாபாக்கள் கூறவில்லையோ அதனைத் தாங்களும் கூறுவதிலிருந்து தவிர்ந்து கொண்டார்கள்.

ஷெய்க் முஹம்மது நாஸிருத்தீன் அல் அல்பானீ (றஹிமஹுல்லாஹ்) கூறினார்கள்.

நான் அல்லாஹ்விடத்தில் ஒரு வாக்குறுதி செய்து கொண்டுள்ளேன். அதாவது மார்க்க விடயத்தில் எனக்கு முன் ஒரு ஸலப் சொல்லாததை நான் சொல்லமாட்டேன்

இதனை இமாம் அல்பானீ (றஹிமஹுல்லாஹ்) சொன்னதன் காரணம் அவரால் எதனையும் சொல்ல முடியாமலோ அல்லது அவர் அறியாதவராக இருந்ததினாலோ அல்ல.

இமாம் ஷாபிஈ (றஹிமஹுல்லாஹ்) கூறினார்கள்

நான் அல்லாஹ்வின் வேதத்திலே அல்லாஹ் எதனை நாடினானோ அதனையே சொல்கிறேன். அல்லாஹ்வின் தூதருடைய விடயத்தில் அல்லாஹ்வின் தூதர் எதனை நோக்கினாரோ அதனையே நான் சொல்கிறேன.

இமாம் ஷாபிஈ (றஹிமஹுல்லாஹ்) இவ்வாறு சொன்னதன் காரணம் அறபி மொழியின் மூலம் அவருக்கு குர்ஆன் ஸுன்னாவிலிருந்து விளக்கங்களைக் கூற இயலாத காரணத்தினாலல்ல. இமாம் ஷாபிஈ (றஹிமஹுல்லாஹ்) மார்க்கமென்றால் என்னவென்று புரிந்தவராக இருந்த காரணத்தினால் அந்த மார்க்கத்தில் மேலதிகமாக எந்தக் கருத்தையும் கூறி அதனை மார்க்கமென்று காட்டவில்லை. 


எப்பொழுதெல்லாம் ஸுன்னாவின் இமாம்கள் மார்க்கத்தின் எல்லைகளை அறிந்து அதன் அடிப்படையில் தங்களின் மார்க்கத்தை அமைத்துக் கொண்டார்களோ அப்பொழுதெல்லாம் அவர்கள் இந்த மார்க்கத்தை தெளிவாக எத்திவைத்து அதிலுள்ள அசத்தியங்களை மறுத்தும் காட்டினார்கள். இதே வழிமுறையில் வந்த அனைத்து இமாம்களும் இந்த இஸ்லாமிய உம்மத்துக்காக ஸுன்னாவை உயிர்ப்பித்துத் தந்ததுடன் அதில் முளைத்த பித்அத்களை அழித்து இந்த உம்மத்தை அல்லாஹ்விடம் நெருக்கமாக்கிவிட்டுச் சென்றார்கள். 


என்றாலும் யாரெல்லாம் ஸஹாபாக்களின் வழிமுறையில் மார்க்கத்தைப் பின்பற்றவில்லையோ இன்னும் கல்வியின் விடயத்தில் ஸஹாபாக்கள் சொல்லாததைத் தாங்களும் சொல்லாது தவிர்ந்து கொள்ளவில்லையோ இப்படியானவர்கள் தான் தங்களின் சுய கருத்துக்களையும் மார்க்கத்தில் இல்லாத விளக்கங்களையும் துருவியெடுத்து இஸ்லாமிய உம்மத்தினுள் வேறுபாடுகளும் முரண்பாடுகளும் உருவாவதற்கு வழிவகுத்தார்கள். 


இவர்கள் உருவாக்கிவிட்டவைகளைத் தவிர மார்க்கத்தினுள் முரண்பாடுகளென்பது கிடையாது. அது தெளிவாகவே இருக்கிறது. காலத்துக்குக் காலம் மார்க்கத்தில் முறண்பாடுகள் உருவாக்கப்பட்டபோதெல்லாம் அது தோன்றிய காலத்தில் வாழ்ந்த அறிஞர்கள் அதனை அதன் தன்மைக்கேற்ப குர்ஆனாலும் ஸுன்னாவாலும் மொழியாலும் உஸுலாலும் பதில் கொடுக்காமலோ தெளிவுபடுத்தாமலோ விட்டுவிடவில்லை. அந்த உலமாக்கள் அன்று கொடுத்த பதில்களை இன்றும் நாம் அனைத்து மத்ஹப்களின் வாதங்களுக்கும் பதிலளிப்பதற்கு ஆதாரமாய் எடுத்துக் காட்டுகின்றோம். 


நிச்சயமாக இந்த இஸ்லாமிய உம்மத்தில் அறியாமையில் வாழும் மக்கள் இருக்கும் காலமெல்லாம் அவ்வறியாமையின் கருத்துக்களை குர்ஆனிலும் ஸுன்னாவிலும் புகுத்துபவர்கள் புகுத்திக் கொண்டுதானிருப்பார்கள். இவைகளை வளர விடாமல் தட்டிவிடுவது எமது கடமையாகும். 


அதே போன்று யாரெல்லாம் குர்ஆனையும் ஸுன்னாவையும் ஸஹாபாக்களின் வழிமுறையில் தூய்மையாகப் பெற்றுக் கொள்கிறார்களோ அவர்கள்மீதும் அது கடமையாகும். காலத்துக்குக் காலம் தோன்றும் வழிகெட்ட விளக்கங்களை அழித்து விடுவது அந்தந்தக் காலத்தில் வாழ்பவர்கள் மீது கடமையாகும். இந்த அடிப்படையில்தான் நாம் வாழும் இன்றைய காலத்தில் தோன்றியிருக்கும் வழிகெட்ட விளக்கங்களையும் கருத்துக்களையும் நாம் மறுக்கின்றோம். 


நாட்டுக்கு நாடு பிறை காண வேண்டுமென்று வாதிப்பவர்கள் அதற்கு ஆதாரமாக காட்டும்

பமன் ஷஹித மின்குமுஷ்ஷஹ்ர பல்யஸும்ஹு என்ற குர்ஆன் வசனமோ

குரைப் இப்னு அப்பாஸ் தொடர்பான ஹதீஸோ

அபூ உமைர் அல் அன்சாரி (ரழியல்லாஹு அன்ஹு) அறிவிக்கும் ஹதீஸோ

நாட்டுக்கு நாடு பிறை காணவேண்டுமென்பதற்கு சம்பந்தமான குர்ஆன் வசனமோ ஹதீஸோ அல்ல. இந்த அறிவீனக் கருத்துக்கள் இன்று தோன்றியிருக்கும் வேளையில் எமது கடமையை நாம் உணர்ந்து பதிலளித்தோம். 

அல்லாஹ்வே மிக அறிந்தவன்.


Taken from a lecture of Shaykh Yahya Silmy hafidhahullaah, Transcribed by Bro Riyas Negambo