[பி. ஜே. யின் குழப்பங்களை தூக்கி பிடிக்கும் ஜம்மியத்துல் உலமாவும் ஷேக் யஹ்யாவின் உபதேசங்களும் வேண்டுகோள்களும்]
பி. ஜே. யின் குழப்பங்களை தூக்கி பிடிக்கும் ஜம்மியத்துல் உலமாவும் ஷேக் யஹ்யாவின் உபதேசங்களும் வேண்டுகோள்களும் 

ஆச்சரியமான விடயம் தங்களை ஜம்இய்யதுல் உலமா என்று கூறிக் கொள்ளும் ஒரு கூட்டம் நாட்டுக்கு நாடு பிறை காண வேண்டுமென்ற தங்களின் முடிவுக்கு பின்வரும் மூன்று ஆதாரங்களையே முக்கியமாக முன்வைக்கிறார்கள்.

(1) பமன் ஷஹித மின்குமுஷ்ஷஹ்ர பல்யஸும்ஹு என்ற அல் குர்ஆன் வசனம்
(2) குரைப் - இப்னு அப்பாஸ் தொடர்பான ஹதீஸ்
(3) அபூ உமைர் அல் அன்சாரி (ரழியல்லாஹு அன்ஹு) அறிவிக்கும் ஹதீஸ் 


மேற்கூறியவற்றை ஆதாரங்களாகக் காட்டித்தான் ஜம்மியத்துல் உலமாவும் அத்தனை விளக்கங்களையும் கொடுக்கிறார்கள். இவைகளைக் காட்டித்தான் P. ஜெய்னுல் ஆபிதீனும் தன் விளக்கத்தில் ஒரு குழப்பத்தைக் கொண்டு வந்தார். அதே அடிப்படையில்தான் ஜம்இய்யதுல் உலமாவும் அதன் தீர்ப்பைக் கொடுத்தது. இதனடிப்படையில் ஒரு உண்மை எமக்குத் தெளிவாகப் புரிகிறது. 


அதாவது அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவைச் சேர்ந்தவர்கள் ஒரு போதும் P. ஜெய்னுல் ஆபிதீனின் கொள்கையோடு சேர்ந்து போகின்றவர்களல்ல. ஜம்இய்யதுல் உலமாவுக்குள் இருக்கும் குழப்பங்களுக்கும் P. ஜெய்னுல் ஆபிதீனுடைய விளக்கங்களுக்கும் ஒருபோதும் ஒற்றுமையோ உடன்பாடோ கிடையாது. இவர்கள் இருசாராரது போக்கும் பாதையும் ஒன்றாக முடியாது. 


ஆனால் பிறை விடயத்தில் மட்டும் ஜம்இய்யதுல் உலமா P. ஜெய்னுல் ஆபிதீனுடைய விளக்கத்தைக் கையாள்வது ஏன்? காரணம் P. ஜெய்னுல் ஆபிதீன் என்பவர் நாட்டுக்கு நாடு பிறை காண வேண்டுமென்று சொல்லி வருபவர். 


எனவேதான் ஜம்இய்யதுல் உலமா தங்களுடன் ஒரு விதத்திலும் சேர்ந்து போகாத P.J. யின் விளக்கத்தை பிறை விடயத்தில் தங்களுக்குச் சார்பாக எடுத்துக் கொண்டார்கள். இவர்கள் நாட்டுக்கு நாடு பிறை காண வேண்டுமென்ற தங்களின் வாதத்திற்கு ஆதாரமாக இமாம் நவவி (றஹிமஹுல்லாஹ்) வுடைய விளக்கத்தையோ அல்லது தீர்ப்பையோ எடுத்துக்காட்டாததோடு முஸ்லிம் இமாம்களில் யாரெல்லாம் சர்வதேச பிறைக்கு எதிரான கருத்துக்களைக் கூறினார்களோ அவர்கள் காட்டிய ஆதாரங்களைத் தங்களுக்குச் சார்பான ஆதாரங்களாக எடுக்காமல் அவைகளைத் தவிர்ந்து கொண்டு P. ஜெய்னுல் ஆபிதீனுடைய விளக்கத்தைத் தேர்ந்தெடுத்தார்கள். 


ஏனென்றால் இவர்கள் இமாம் நவவியை ஆதாரம் காட்டினால் இமாம் நவவியின் கருத்துக்கு மறுப்பாக ஏனைய அறிஞர்கள் தங்களின் நூல்களில் கொடுத்திருக்கும் பதில்கள் இவர்களின் ஆதாரத்தை உடைத்து விடும். எனவே அந்த வழிமுறை இவர்களுக்குச் சாதகமாக அமையாது. எனவே, பி. ஜே யை தொத்திக் கொண்டார்கள் . 


மேலும், சுமார் பத்து வருடங்களுக்கு முன் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா பிறையைப் பற்றி ஒரு மாநாடு நடத்தினார்கள்.அதில் எனக்கும் கலந்து கொள்ள வாய்ப்புக் கிடைத்தது. அதில் உரையாற்றிய கபூரிய்யாவின் முஹம்மத் மௌலவி என்பவர் தனது உரையில் கூறிய விடயங்களைக் கவனித்தபோது அவருடைய வார்த்தைகள் இமாம் நவவியுடைய வார்த்தைகளாக இருந்தது. 


அவருடைய உரையின் பின் எனது முறை வந்தபோது நான் அவர் கூறிய விடயம் தொடர்பாகக் கூறும்பொழுது நீங்கள் தெரிவித்த கருத்துகளனைத்தும் இமாம் நவவி (றஹிமஹுல்லாஹ்) வுடைய வார்த்தைகளைத் தவிர வேரில்லை என்றேன். அதனை நீங்கள் தமிழில் எடுத்து வைத்திருக்கிறீர்கள் அவ்வளவுதான் என்றும் கூறினேன். 


நீங்கள் முன்வைத்த இமாம் நவவி (றஹிமஹுல்லாஹ்) வுடைய அனைத்து வாதங்களுக்கும் பதிலை இமாம் அபுல் அப்பாஸ் அஹ்மத் இப்னு அப்துல் ஹலீம் இப்னு தைமிய்யா அல் ஹர்ரானி (றஹிமஹுல்லாஹ்) வுடைய நூலில் நீங்கள் பெற்றுக் கொள்ள முடியும் என்று கூறி அவர்கள் அன்று எதனை ஆதாரமாகக் காட்டினார்களோ அதனை அன்றே மறுத்து பதிலளித்து நிரூபித்து விட்டே சென்றேன். 


நாம் எந்த ஆதாரத்தைத் தட்டினோமோ அதே ஆதாரத்தை அவர்கள் மீண்டும் எடுப்பார்களா இல்லையா என்பதை அல்லாஹ்தான் அறிந்தவன். அன்று நாம் தவறென்று நிரூபித்ததை ஏற்றுக் கொண்டதற்குச் சாட்சியாக இன்று அந்த நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டார்கள்களென்று நாம் எடுத்துக் கொண்டால், இன்று அவர்கள் ஆதாரமென்று காட்டும் P. ஜெய்னுல் ஆபிதீனுடைய மூன்று ஆதாரங்களையும் நாம் மறுத்து அந்த மறுப்புக்கான ஆதாரங்களை அதற்குத் தகுதியான நூல்களிலிருந்து எடுத்துக் காட்டி நிரூபித்தேயிருக்கிறோம். 


இன்னும், பல வருடங்களுக்கு முன்பே அல் முபீன் என்ற சஞ்சிகையில் வந்திருந்த P. J . யுடைய விளக்கத்திற்கு அப்போதே மறுப்புக் கொடுத்துவிட்டோம். அந்த மூன்று ஆதாரங்களுக்கும் ஸனத் ரீதியாகவும் அடிப்படை ரீதியாகவும் பதில் கொடுத்துவிட்டோம். 


அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா என்ற கூட்டம் சத்தியம் தேடுகின்ற கூட்டமென்றால் நான் தெரிவுத்துள்ள விடயங்களுக்கு மறுப்பை ஆதாரங்களுடன் தெரிவிக்கட்டும். அவர்கள் கூறுவது சத்தியமென்று ஆதாரங்களினடிப்படையில் நிரூபிக்கப்பட்டால் அதனை நாம் ஏற்றுக் கொள்ளத் தயாராகவே இருக்கிறோம். 


இருப்பினும் அண்மையில் (2008 ல்) ஜம்இய்யதுல் உலமா எமது ஊரில் ஏற்பாடு செய்திருந்த ஒரு நிகழ்ச்சியில் பிறை காணும் விடயத்தில் வானவியல் கல்வியைப் பயன்படுத்துவது பற்றிக் கூறப்பட்ட விடயங்களுக்கு புதிதாக நாம் பதிலளிக்கத் தேவையில்லை. அது ஏழு வருடங்களுக்கு முன்பே பதிலளிக்கப்பட்ட அம்சமாகும். அல்லாஹ்வே போதுமானவன். 


இன்று பலரும் பல கருத்துக்களைக் கூறி முஸ்லிம் சமூகத்தினுள் குழப்பங்களை விதைத்து விட்டதனால் நான் இந்த அனைத்து விடயங்களையும் கூற வேண்டிய நிலை ஏற்பட்டது. எனினும் இஸ்லாத்தில் பிறை காணுதலும் அந்நிய வழிமுறைகளும் என்ற தலைப்பு எமது ஊரில் ஜம்இய்யதுல் உலமா பிறை விடயத்தில் குழப்பத்தை ஏற்படுத்துவதற்கு முன்பே நான் பேசுவதற்கு முடிவு செய்திருந்த தலைப்பாகும். அல்லாஹ்வே  போதுமானவன். 


றமழானில் எமது இஸ்லாமிய சமூகத்துக்கு யவ்முஷ் ஷக்குடைய தினத்தில் இஸ்லாமிய வழிமுறையில் எவ்வாறு பிறை காணுதலைத் தீர்மானிக்க வேண்டுமென்று வழிகாட்டுவதும் அதில் கையாளப்படுகின்ற அந்நியர்களுடைய வழிமுறைகளை அறிந்து அதிலிருந்து எவ்வாறு தவிர்ந்து கொள்ள வேண்டுமென்று எடுத்துக் காட்டுவதுமே இந்தத் தலைப்பை நான் தெரிவு செய்ததற்கான முக்கிய காரணமாகும். 


மாறாக ஜம்இய்யதுல் உலமாவைக் கருத்தில் கொண்டு இந்தத் தலைப்பை நான் தெரிவு செய்யவில்லை. இருப்பினும் இந்தத் தலைப்பில் உள்ளடங்கும் விடயங்களில் ஜம்இய்யதுல் உலமாவுக்கும் தக்க பதில் கொடுக்கப்பட்டுள்ளது. 


எமது இஸ்லாமிய உம்மத்தில் பொது மக்களில் பலரும் இன்னும் அறிஞர்களென்று சொல்லப்படுபவர்களும் பிறை விடயத்தில் அந்நிய மார்க்கங்களின் வழிமுறைகளைக் கையாள்கிறார்கள். அவர்களுக்கு வழிகாட்டுவதற்கும் சரியான வழிமுறையைத் தெளிவுபடுத்துவதற்கும் இவற்றை எத்திவைக்கும் பாக்கியத்தை அல்லாஸு ஸுப்ஹானஹுவ தஆலா எமக்குத் தந்துவிட்டான். 


ஏனென்றால் இந்தத் தலைப்புக்குள் அமைந்துள்ள அம்சங்களில் பல கூட்டங்களுக்கும் பதில் அமைந்திருக்கிறது. நான் கொடுத்த இந்த பதில் ஜம்இய்யதுல் உலமாவுக்கு மட்டுமின்றி யாரெல்லாம் மார்க்கத்தின் எந்தவொரு விடயத்திலேனும் அந்நிய வழிமுறைகளைக் கையாள்கிறார்களோ அவர்கள் அனைவருக்கும் உரியதாகும்.


Allaah knows the best

Taken from a lecture of Shaykh Yahya Silmy Hafidhahullaah , Transcribed by Bro Riyas Negambo.