[நீங்கள் முடிவு செய்யும் நாள் தான் நோன்பு ஹதீதும் அதன் விளக்கமும்]

நீங்கள் முடிவு செய்யும் நாள் தான் நோன்பு ஹதீதும் அதன் விளக்கமும் 

கேள்வி : 
மக்கள் எப்போது நோன்பு என முடிவு செய்கிறார்களோ அதுதான் நோன்பு. மக்கள் எப்போது ஈதுல் பித்ர் என முடிவு செய்கிறார்களோ அதுதான் ஈதுல் பித்ர் என்ற ஆயிஷா (றழியல்லாஹு அன்ஹா) கூறுவதன் விளக்கம் என்ன ? 

பதில் : 
காரணம் என்னவென்றால் அவர்களின் காலத்தில் குலபாஉர் ராஷிதீன்களின் ஆட்சிக்காலம் என்றபடியால் குலபாஉர் ராஷிதீன்களின் கட்டுப்பாட்டில் எடுக்கப்பட்ட தீர்மானத்தை  அறிவித்ததன் பின்னால் எவரும் தனித்ததாக நாம் அந்தத் தீர்ப்பை ஏற்றுக் கொள்ள மாட்டோம் என்று கூற முடியாது. அவ்வாறு கூறக்கூடியவர்களுக்கு மறுப்பாகவே ஆயிஷா (றழியல்லாஹு அன்ஹா)வுடைய கூற்று அமைந்திருக்கிறது. 


இதுதான் அந்த அறிவிப்பிலிருந்து பெறப்படும் செய்தியே தவிர அதில் மக்களென்று குறிப்பிடப்பட்டது இன்றைய காலத்தைப் போன்று பிரிந்து நிற்கின்ற கூட்டங்களையல்ல. மாறாக ஆயிஷா (றழியல்லாஹு அன்ஹா)வுடைய வார்த்தையில் அவர் மக்களென்று குறிப்பிடுவது அன்றிருந்த இஸ்லாமிய சமூகத்திற்கு வழிகாட்டும் பொறுப்பில் இருந்த குலபாஉர் ராஷிதீன்களையாகும். அவர்கள் எப்போது நோன்பு என முடிவு செய்கிறார்களோ அதுவே நோன்பாகும். அதே போன்று அவர்கள் எப்போது பெருநாள் என்று முடிவு செய்கிறார்களோ அதுவே பெருநாளாகும். குலபாஉர் ராஷதீன்களால் எடுக்கப்படுகின்ற முடிவுகள் நிச்சயமாக குர்ஆன்இ சுன்னாவின் அடிப்படையிலேயே அமைந்திருக்கும். அதாவது பிறை தொடர்பாக சாட்சிகளின் தகவலைப் பெற்று அதனடிப்படையில் முடிவு செய்வார்கள் அல்லது மாதத்தை முப்பதாகப் பூர்த்தி செய்வார்கள். இவ்வழிமுறைக்கு முறணாக எவரும் தனித்துப் பிரிந்து போகாமல் இருப்பதற்கு வழிகாட்டுவதாகவே ஆயிஷா (றழியல்லாஹு அன்ஹா)வுடைய வார்த்தை அமைந்திருக்கிறது. 


இந்த அறிவித்தலைக் குறிப்பிட்டு இமாம் இப்னு றஜப் அல் ஹம்பலி (றஹிமஹுல்லாஹ்) கூறுவது என்னவெனில், உலகில் எந்தப் பகுதியிலாவது ஒரு முஸ்லிம் சமூகம்; பிறையைக் கண்டு தீர்மானம் எடுத்து விட்டால் அதற்கு முறணாக எவருக்கும் செயற்பட முடியாது. இதுவே ஆயிஷா (றழியல்லாஹு அன்ஹா)வுடைய வார்த்தையைக் கொண்டு இமாம் இப்னு றஜப் அல் ஹம்பலி (றஹிமஹுல்லாஹ்) கூறுகின்ற தீர்ப்பாகும்.


ஆயிஷா (றழியல்லாஹு அன்ஹா)வுடைய வார்த்தையை நபி சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்  அவர்களுடைய ஹதீஸ் இன்னும் உறுதிப்படுத்துகின்றது. நபி சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் :


நீங்கள் நோன்பைத் தீர்மானிக்கும் தினமே நோன்பின் தினமாகும். நீங்கள் ஈதுல் பித்ரைத் தீர்மானிக்கும் தினமே ஈதுல் பித்ரின் தினமாகும். நீங்கள் ஈதுல் அழ்ஹாவைத் தீர்மானிக்கும் தினமே ஈதுல் அழ்ஹாவின் தினமாகும். (திர்மிதி)


இந்த ஹதீஸ் கூறுகின்ற அடிப்படையையே ஆயிஷா (றழியல்லாஹு அன்ஹா)வும் அவரது வார்த்தையில் கூறுகின்றார். ஹதீஸில் “நீங்கள்” என்ற வார்த்தையில் குறிப்பிடப்படுவது முஸ்லிம் உம்மத்தையாகும். எனவே முஸ்லிம் சமூகத்தில் ஒரு கூட்டம் சரியான வழிமுறையில் பிறைத் தகவலைப் பெற்று நோன்பு விடயமாகவோ பெருநாள் விடயமாகவோ தீர்மானம் எடுத்து விட்டால் அதனையே அனைத்து முஸ்லிம்களும் எடுத்துச் செயற்பட வேண்டும். அதிலிருந்தும் பிரிந்து தனியாக எவரும் செயற்பட முடியாது.


Allaah knows the best
Taken from the Q & A Session of Shaykh Yahya Silmy Hafidhahullaah, Trascribed by Bro Riyas Negambo.