[நாட்டுக்கு நாடு பிறை இமாம்களின் கருத்துக்களும் அதற்கு சர்வதேச பிறை இமாம்களின் மறுப்புக்களும் தீர்ப்புக்களும்]

நாட்டுக்கு நாடு பிறை இமாம்களின் கருத்துக்களும் அதற்கு  சர்வதேச பிறை இமாம்களின் மறுப்புக்களும் தீர்ப்புக்களும்

பிறை விடயத்தில் இஸ்லாமிய உம்மத் அடிப்படையாக இரு பிரிவுகளாகப் பிரிந்துள்ளது. இவற்றில் "வஹ்ததுல் மதாலிஹ்" என்ற கருத்தைச் சுமந்த கூட்டம் எங்கு பிறை தென்பட்டாலும் அதுதான் முழு உலகிற்கும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்று கூறுகிறது. 


இதே நிலைப்பாட்டில்தான் ஸஹாபாக்களும், தாபிஈன்களும், தபஉ தாபிஈன்களும் இவர்களின் அடிச்சுவட்டில் அன்று முதல் இன்று வரை பின்தொடர்ந்து வருகின்ற பெரும்பான்மையான இமாம்களும் உலமாக்களும் இருக்கிறார்கள். 


மேலே சொன்ன "வஹ்ததுல் மதாலிஹ்" உடைய கருத்தைச் சுமந்தவர்களுக்கு எதிரான நிலைப்பாட்டில் உள்ளவர்களில் பெரும் கல்வியைச் சுமந்த உலமாக்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். இந்த உண்மையை நாம் மறுக்கவோ மறைக்கவோ முடியாது. இவ்வாறான உலமாக்கள் இந்த நிலைப்பாட்டில் இருப்பதன் காரணம் இவர்கள் மத்ஹப்களில் சிக்கியதேயாகும்.

இவ்வாறு இவர்கள் சிக்காதிருந்திருப்பின் நிச்சயமாக முரண்பட்ட கருத்துக்களைக் கூறியிருக்க மாட்டார்கள். ஏனைன்றால் இவர்களில் பலர் பெரும் கல்வியைச் சுமந்த உலமாக்களாயிருந்தவர்கள். இருப்பினும் மத்ஹப்களில் மாட்டியதால் இஹ்திலாபுல் மதாலிஹ் உடைய கருத்தைச் சுமந்த உலமாக்களாக அமைந்துவிட்டார்கள். 


இவர்கள் ஒவ்வொரு நாட்டவரும் ஒவ்வொரு திசையில் வாழ்பவர்களும் வெவ்வேறாகப் பிறையைப் பார்க்க வேண்டுமென்று கூறுகிறார்கள். அதற்குள்ளும் பல கருத்து வேறுபாடுகள் இருக்கிறன. இந்த நிலைப்பாட்டில் இருக்கும் இவர்களுக்கு மத்தியில் எந்த அடிப்படையில் பிரதேச ரீதியாகப் பிறை பார்க்க வேண்டுமென்பதில் பல கருத்துடையவர்கள் காணப்படுகிறார்கள். 


இவர்களில் சிலர் சூரியன் உதிக்கும் அடிப்படையில் பூமி எவ்வாறு பிரிக்கப்படுகிறதோ அந்த அடிப்படையில் பிரதேச ரீதியாகப் பிறை பார்க்கப்பட வேண்டும் என்று கூறுகிறார்கள். இதனை " அலா மத்லி அஷ்ஷம்ஸ் " என்று அழைக்கப்படும். இவர்களில் இன்னும் சிலர் ஒரு பிரயாணியுடைய பயண தூரத்தின் அடிப்படையில் வேறுபடும் பிரதேச எல்லையின் அடிப்படையில் பிறையைப் பார்க்க வேண்டுமென்று சொல்கிறார்கள். இதனை " அலா மஸாபதில் முஸாபிர் " என்று அழைக்கப்படும்.

இவ்வாறு "இஹ்திலாபுல் மதாலிஹ்" உடைய கருத்தைச் சேர்ந்தவர்களில் பலரும் பல விதமான காரணங்களைக் காட்டினார்களே தவிர குர்ஆனினதும் ஸுன்னாவினதும் அடிப்படையில் முஸ்லிம்கள் எவ்வாறு பிறை காண வேண்டுமென்பதை எடுத்துக் காட்டவில்லை. 


இவர்கள் கையாண்ட விடயங்களான சூரியன் உதிக்கும் அடிப்படையும் பிரயாணியின் பயண தூர அடிப்படையும் பிறை காணும் விடயத்தோடு சம்பந்தமற்றவைகளாகும். இன்னும் இவர்கள் பிரதேச ரீதியாகப் பிறை பிரித்துப் பார்க்கப்பட வேண்டுமென்பதற்கு குர்ஆனிலிருந்தும் ஸுன்னாவிலிருந்தும் ஆதாரங்களை எடுத்துக் காட்ட வில்லை. 


வரலாற்றில் இமாம்கள், உலமாக்கள் போன்றவர்கள் மத்தியில் "வஹ்ததுல் மதாலிஹ்", "இஹ்திலாபுல் மதாலிஹ்" ஆகிய இரு அடிப்படைகளில்தான் வேறுபாடு காணப்படுகின்றது. " வஹ்ததுல் மதாலிஹ் " என்ற கருத்தில் உள்ளவர்கள் எங்கு பிறை காணப்பட்டாலும் முஸ்லிம்கள் அதனை ஏற்றுக்கொண்டு பின்பற்ற வேண்டும் என்று கூறுகிறார்கள். 

இமாம் அபூ ஸகரிய்யா யஹ்யா இப்னு ஷரப் நவவி (றஹிமஹுல்லாஹ்) அவர்கள் ஷாபிஈ மத்ஹபின் பெரும் இமாம்களில் ஒருவராக இருந்தார். அஷ்அரி கொள்கையில் இருந்த இமாம் நவவி (றஹிமஹுல்லாஹ்) ஷாபிஈ மத்ஹபை வளர்த்த இமாம்களில் ஒருவராவார். 


"முஹத்தப்" என்ற நூலுக்கு விளக்கமாக எழுதப்பட்ட ஷாபிஈ மத்ஹபின் ஓர் பிக்ஹ் நூலான மஜ்மூஃ என்ற நூலில் ஒவ்வொரு நாடும் அவரவர் பிறையினையே பின்பற்ற வேண்டும் என்று கூறும் இமாம் நவவி (றஹிமஹுல்லாஹ்) அவர்கள் , ஸஹீஹ் முஸ்லிமில் வரக்கூடிய ஹதீஸ்களுக்கு விளக்கம் கூறிய பின், அவர் கூறுவதாவது:

“எங்கள் ஷாபிஈ மத்ஹபில் ஒரு வகுப்பினர் எங்கு பிறை தென்பட்டாலும் அதனை ஏற்று நடைமுறைப்படுத்த வேண்டும் என்று கூறுகிறார்கள். நானும் அதே கருத்திலேயே இருக்கிறேன்.”

இவ்வாறு பிறை விடயத்தில் தனது நிலைப்பாட்டை இமாம் நவவி (றஹிமஹுல்லாஹ்) கூறுகிறார். 

இமாம் நவவி (றஹிமஹுல்லாஹ்) ஸஹீஹ் முஸ்லிமில் வருகின்ற குரைப் - இப்னு அப்பாஸ் ஆகியோரின் பிறை தொடர்பாக வரும் ஸதீஸிற்கு தலைப்பிடும் போது " ஒவ்வொறு நாட்டவருக்கும் அவரவருடைய காணுதல் - ஏனையவர்களுடைய காணுதலை ஏற்காதிருப்பது என்று தலைப்பிடுகிறார்." 


இமாம் ஸுயூதி (றஹிமஹுலாஹ்) ,இமாம் ஸுப்கி (றஹிமஹ{ல்லாஹ்), இமாம் ஷாபிஈ (றஹிமஹ{ல்லாஹ்) போன்ற இமாம்கள் சர்வதேச பிறைக்கு எதிரான கருத்துடையவர்களென்பதை நாம் அறியாதவர்களல்ல. அதே போன்று பிற்காலத்தில் வந்த அறிஞர்களான ஸித்தீக் ஹஸன் ஹான் (றஹிமஹுல்லாஹ்), முஹம்மத் அலி ஷவ்கானி (றஹிமஹுல்லாஹ்), ஷெய்க் முஹம்மத் நாஸிருத்தீன் அல்பானீ (றஹிமஹுல்லாஹ்), ஷெய்க் அப்துர்ரஹ்மான் முபாரக்பூரி (றஹிமஹுல்லாஹ்) போன்ற உலமாக்கள் சர்வதேச பிறை பற்றிய தெளிவையும் விளக்கங்களையும் கொடுத்து நாட்டுக்கு நாடு பிறை காணுதல் சம்பந்தப்பட்ட வாதங்களுக்கு மறுப்பாக பதில் கொடுத்திருப்பதையும் நாம் மறைக்க முடியாது.

எந்த வாதங்களையெல்லாம் இமாம் நவவி (றஹிமஹுல்லாஹ்) அவரது மஜ்மூஃ என்ற நூலிலே நாட்டுக்கு நாடு பிறை காணப்பட வேண்டுமென்பதற்கு முன்வைத்தாரோ அந்த அனைத்து வாதங்களுக்கும் இமாம் அபுல் அப்பாஸ் அஹ்மத் இப்னு அப்துல் ஹலீம் இப்னு தைமிய்யா அல் ஹர்ரானி (றஹிமஹுல்லாஹ்) அவருடைய மஜ்மூஃ பதாவா என்ற நூலிலே பதில் கொடுத்திருக்கிறார்கள். 


குரைப் - இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு சம்பந்தமான ஹதீஸிலிருந்து பிக்ஹ் உலமாக்கள் என்னென்ன சர்ச்சைகளையெல்லாம் ஏற்படுத்தினார்களோ அவையனைத்துக்கும் இமாம் முஹம்மத் இப்னு அலி ஷவ்கானி (றஹிமஹுல்லாஹ்) தனது "நைலுல் அவ்தார் ஷரஹ் முன்தகில் அஹ்பார் "என்ற நூலில் பதில் கொடுத்திருக்கிறார்கள்.

அதன் பின் இமாம் முஹம்மத் இப்னு அலி ஷவ்கானி (றஹிமஹுல்லாஹ்) கொடுத்த அதே விளக்கத்தை இமாம் அப்துர்ரஹ்மான் முபாரக்பூரி (றஹிமஹுல்லாஹ்) அவர்கள் , அவருடைய "துஹ்வதுல் அஹ்வதி ஷரஹ் ஸுனன் திர்மிதி " என்ற நூலில் எழுதிவிட்டு “இதனைத் தெளிவாக விளங்கிக் கொள்ளுங்கள்” என்று இறுதியில் கூறிப்பிட்டார். 


இமாம் அப்துர்ரஹ்மான் முபாரக்பூரி (றஹிமஹுல்லாஹ்) அவர்கள் சர்வதேச பிறைக்கு ஆதாரம் காட்டுவதற்கு குறைப்-இப்னு அப்பாஸுடைய ஹதீஸிலிருந்து கிளம்பியிருந்த சர்ச்சைகளுக்கு பதில் கொடுப்பதற்கும் இமாம் முஹம்மத் இப்னு அலி ஷவ்கானி (றஹிமஹுல்லாஹ்) வுடைய வார்த்தைகளையே பயன்படுத்தினார். தனது விளக்கத்தை இமாம் ஷவ்கானியுடைய நூலிலிருந்து எடுத்து விளக்கிய பின் இறுதியில் “பல் யதஅம்மல் ” -இதனைத் தெளிவாக விளங்கிக் கொள்ளுங்கள் என்ற வார்த்தையை இமாம் அப்துர்ரஹ்மான் முபாரக்பூரி (றஹிமஹுல்லாஹ்) அவர்கள் பயன்படுத்தினார்கள். 

ஸெய்யித் ஸாபிக் எழுதிய பிக்ஹுஸ்ஸுன்னா என்ற நூலுக்கு அந்நூலிலுள்ள தவறுகளைத் திருத்தி அதற்கு மறுப்பாக ஷெய்க் முஹம்மத் நாஸிருத்தீன் அல்பானி (றஹிமஹுல்லாஹ்) அவருடைய தமாமுல் மின்னா என்ற நூலில் விளக்கும் வேளையில் பின்வருமாறு அவர் கூறுகிறார்:

“இந்த விடயங்களைத் தெளிவாக விளங்குவதற்கு இமாம் முஹம்மத் இப்னு அலி ஷவ்கானி (றஹிமஹுல்லாஹ்) எழுதிய "நைலுல் அவ்தார்" என்ற நூலிலும் இமாம் ஸித்தீக் ஹஸன் ஹான் (றஹிமஹுல்லாஹ்) எழுதிய "ரவ்ததுந் நதிய்யா" என்ற நூலிலும் ஷெய்குல் இஸ்லாம் இப்னு தைமிய்யா (றஹிமஹுல்லாஹ்) எழுதிய "மஜ்மூஃ பதாவா" என்ற நூலிலும் விளக்கத்தைப் பெற்றுக் கொள்ளலாம்” என்று வழிகாட்டுகிறார். 


மேலே சொல்லப்பட்ட விடயங்கள் சர்வதேச பிறை தொடர்பாக நூல்களின் அடிப்படையில் விளங்கக் கூடிய அம்சங்களாகும். இதனடிப்படையில் நாட்டுக்கு நாடு பிறை பார்க்கப்பட வேண்டுமென்று வாதிடுபவர்கள் மத்தியில் அதிலும் குறிப்பாக இமாம்கள் மத்தியில் மஜ்மூஃ என்ற நூல்தான் இந்தக் கருத்து தொடர்பாக வாதிடக் கூடிய தரமானதும் பிரபல்யமானதுமான நூலாகும். 


இமாம் நவவியுடைய இந்த நூலையே நாட்டுக்கு நாடு பிறை காண வேண்டுமென்று சொல்பவர்கள் ஆதாரமாக முன் வைக்கிறார்கள். இந்தக் கருத்தைச் சுமந்தவர்கள் ஆதாரமாகச் சுமந்து வாதிடக் கூடிய அனைத்து விடயங்களுக்கும் இஸ்லாமிய உலகின் அறிஞர்கள் பதில் கொடுத்திருக்கிறார்கள். சுருக்கமாகச் சொன்னால் நான் மேலே சுட்டிக் காட்டியவைகள்தான் பிறை விடயத்தில் இஸ்லாமிய அறிஞர்கள்,இமாம்கள் மத்தியில் காணப்பட்ட அடிப்படையான வேறுபாடுகளாகும். 

இஸ்லாமிய வரலாற்றில் அறிஞர்கள் மத்தியில் இருக்கும் சர்ச்சைகளுக்கு அவ்வறிஞர்களே பதிலும் தீர்ப்பும் கொடுத்திருக்கிறார்கள். ஆனால் அந்த அறிஞர்களின் காலத்துக்குப் பின்னால் தங்களைத் தாங்களே அறிஞர்கள் (உலமாக்கல்); என்று பட்டம் சூட்டிக் கொண்ட கூட்டத்தினர் தோன்றி அல்குர்ஆன் வசனங்களுக்கும் ஹதீஸ்களின் வார்த்தைகளுக்கும் அவர்களுக்குத் தேவை போன்று சுய விளக்கம் கொடுக்க ஆரம்பித்து விட்டார்கள். 


இவர்கள் கொடுத்த விளக்கங்களை தப்ஸீர் நூல்களிலும் காண முடியாது. ஹதீஸ் நூல்களிலும் காட்ட முடியாது. இந்தக் கூட்டங்கள் தங்களுடைய கருத்துக்களை வளர்க்கவே துடிக்கிறார்கள் என்பது மட்டுமே தெளிவாகின்றது.


Taken from a lecture of Shaykh Yahya Silmy Hafidhahullah , Transcribed by Bro Riyas Negambo