[மாதத்தை அடைந்தவர் என்ற தவறானா விளக்கமும் சாட்சி பெற்றுக் கொண்டவர் என்ற சரியான விளக்கமும்]

மாதத்தை அடைந்தவர் என்ற தவறானா விளக்கமும் சாட்சி பெற்றுக் கொண்டவர் என்ற சரியான விளக்கமும்

இஸ்லாமிய வரலாற்றில் அறிஞர்கள் மத்தியில் இருக்கும் சர்ச்சைகளுக்கு அவ்வறிஞர்களே பதிலும் தீர்ப்பும் கொடுத்திருக்கிறார்கள். ஆனால் அந்த அறிஞர்களின் காலத்துக்குப் பின்னால் தங்களைத் தாங்களே அறிஞர்கள் (உலமாக்கள) என்று பட்டம் சூட்டிக் கொண்ட கூட்டத்தினர் தோன்றி அல்குர்ஆன் வசனங்களுக்கும் ஹதீஸ்களின் வார்த்தைகளுக்கும் அவர்களுக்குத் தேவை போன்று விளக்கம் கொடுக்க ஆரம்பித்து விட்டார்கள். 


இவர்கள் கொடுத்த விளக்கங்களை தப்ஸீர் நூல்களிலும் காண முடியாது. ஹதீஸ் நூல்களிலும் காட்ட முடியாது. இந்தக் கூட்டங்கள் தங்களுடைய கருத்துக்களை வளர்க்கவே துடிக்கிறார்கள். 


இந்த விடயத்தைக் கல்வி ரீதியாகப் பார்க்கின்ற வேளையில் இவர்களின் கருத்தான நாட்டுக்கு நாடு பிறை பார்க்க வேண்டுமென்ற விடயத்தை வாதிட்ட அறிஞர்களே இவர்கள் காட்டிய ஆதாரங்களை தங்களின் வாதத்திற்கு ஆதாரமாகக் காட்டவில்லை. 


அது தொடர்பான ஒரு உதாரணத்தைக் கூறுவதென்றால் அல் குர்ஆனின் சூறதுல் பகரா அத்தியாயத்தின் 185 ஆவது வசனத்தில் வருகின்ற 
பமன் ஷஹித மின்குமுஷ்ஷஹ்ர பல்யஸும்ஹு “…..


உங்களில் யார் இந்த மாதத்தை சாட்சி பெறுகிறாரோ அவர் நோன்பு நோற்கட்டும் ” என்ற அல்குர்ஆன் வசனத்தை இன்று நாட்டுக்கு நாடு பிறை காண வேண்டுமென்று சொல்லுகின்ற கூட்டங்கள் தங்களின் வாதத்திற்கு ஆதாரமாகக் காட்டுகின்றார்கள்.

ஆனால் இவர்களுக்கு முன் இந்தக் குர்ஆன் வசனத்தை எந்த முஸ்லிம் அறிஞர்களும் நாட்டுக்கு நாடு பிறை பார்க்க வேண்டுமென்பதற்கு ஆதாரமாக எடுக்கவில்லை. இமாம் நவவி, இமாம் ஸுப்கி இன்னும் இவர்கள் போன்ற எந்தவொரு மத்ஹப்களைச் சேர்ந்த இமாம்கள் கூட இந்தக் குர்ஆன் வசனத்தை தங்களின் வாதத்திற்கு ஆதாரமாக எடுக்கவில்லை. 


ஏனென்றால் அந்த உலமாக்கள் அனைவரும் அல்குர்ஆனை எந்த வழிமுறையில் விளங்க வேண்டுமென்று அறிந்திருந்தார்கள். எனவேதான் அவர்கள் அல்குர்ஆன் சொல்லாத ஒன்றை அதனுள் புகுத்துவதற்குத் தயாராக இருக்கவில்லை. 


எனினும் இன்றைய காலத்தில் தர்க்கவாதத்தை தங்களின் அடிப்படையாகக் கொண்ட சில கூட்டங்கள் கல்வியின் பெயரில் குர்ஆன் வசனத்திற்கு விளக்கம் கொடுப்பதற்கு முந்திக் கொண்டார்கள். இந்தக் குர்ஆன் வசனத்திற்கு தர்க்கரீதியாக விளக்கம் கொடுத்தவர்களில் தென்னிந்தியாவைச் சேர்ந்த P. ஜெய்னுல் ஆபிதீன் என்பவர் குறிப்பிடத்தக்கவர். இவர் அல் முபீன் என்ற தனது சஞ்சிகையில் பிறைக்கு விளக்கம் கொடுப்பதற்குக் களமிறங்கினார். 
பமன் ஷஹித மின்குமுஷ்ஷஹ்ர பல்யஸும்ஹு என்ற குர்ஆன் வசனத்திற்கு இவர் விளக்கமொன்றை எழுதினார். இந்த விளக்கம் வரலாற்றிலே தர்க்கத்திற்குப் பெயர்போனவர்களான அபூ பக்கர் ராஸி, பைளாவி போன்றவர்களின் விளக்கத்தை விடவும் எல்லை மீறிய ஒரு விளக்கமாக இருந்தது. P. ஜெய்னுல் ஆபிதீன் வழிகேடெனும் விஷத்தை சற்று அதிகமாகவே அருந்தி விட்டார். அந்த வழிகேட்டையே அவருடைய ரத்த நரம்புகளில் ஓட விட்டுவிட்டார். 

இவர் கொடுத்த இந்த விளக்கம் எந்தத் தப்ஸீர் நூலிலும் காண முடியாத விளக்கமாகும். இந்த விளக்கத்தைத்தான் இன்று எமது சமூகத்திலுள்ளவர்கள்; அழகான விளக்கமென்று சுமந்து கொண்டார்கள்.மக்களைப் பொருத்தவரை இந்த விளக்கம் குர்ஆனிலிருந்து பெறப்பட்ட விளக்கமாகவும் சிறப்பான ஆதாரமாகவும் ஆகிவிட்டது. இந்த விளக்கத்தைச் சுமந்து கொண்டு இதுதான் நாட்டுக்கு நாடு பிறை பார்ப்பதற்கு ஆதாரமென்று பலர் பூமியெங்கும் பிரச்சாரம் செய்து திரிகிறார்கள். இதுதான் ஆதாரமென்று தமிழ் பேசும் உலகிற்குக் காட்டுகிறார்கள். 

இன்று அதே குர்ஆன் வசனத்தை நாட்டுக்கு நாடு பிறை காண வேண்டுமென்பதற்கு ஆதாரம் காட்டுவதற்கு இன்னுமொரு கூட்டம் வந்திருக்கிறது. அது தான் இலங்கை ஜம்மியத்துல் உலமாவும் அதன் சகாக்களும். நாங்கள் ஷாபிஈ மத்ஹபைப் பின்பற்றுகிறோமென்று இவர்கள் சொல்லிக் கொள்கிறார்கள். இவர்களை நோக்கி நாம் கேட்க விரும்புவது என்னவென்றால், நீங்கள் பின்பற்றும் மத்ஹபை வளர்த்தவரும் வழிகாட்ட வந்தவருமான இமாம் நவவி (றஹிமஸுல்லாஹ்) இந்தக் குர்ஆன் வசனத்தைத் தெரியாதவராகவா இருந்தார்? 


நீங்கள் உங்கள் மத்ஹபாக ஷாபிஈ மத்ஹபைச் சுமந்தவர்களாக இருந்தால் இந்த மத்ஹபைச் சேர்ந்த எந்த இமாமாவது தங்கள் நூல்களில் 


فَمَن شَهِدَ  


என்ற குர்ஆன் ஆயத்தை நாட்டுக்கு நாடு பிறை காண்பதற்கான ஆதாரமாக எடுத்ததாக எந்த நூலிலாவது உங்களால் காட்ட முடியுமா? உங்களால் நிச்சயமாக அது முடியாது. ஏனென்றால் அந்த அல்குர்ஆன் ஆயத்தின் விளக்கம் அதுவல்ல. எந்த இமாமும் அந்த ஆயத்துக்கு அப்படி விளக்கம் சொல்லவில்லை. 
பமன் ஷஹித மின்குமுஷ் ஷஹ்ர பல் யஸும்ஹு என்ற வார்த்தை 


யார் இந்த மாதத்தை அடைகிறாரோ அவர் நோன்பு நோற்கட்டும் என்று மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. ஆனால் இது தவறான மொழிபெயர்ப்பாகும். 


ஏனைன்றால் இந்தத் தமிழ் மொழிபெயர்ப்பை அப்படியே அறபியில் சொல்வதென்றால் "பமன் ஷஹித" என்பதற்குப் பதிலாக "பமன் தஹல" என்றுதான் சொல்ல வேண்டும். 


ஆனால் அல்லாஹுஸுப்ஹானஹு வ தஆலா 
பமன் ஷஹித மின்குமுஷ் ஷஹ்ர பல் யஸும்ஹு என்றுதான் கூறுகின்றான். 


فَمَن شَهِدَ


பமன் ஷஹித என்றால் (மாதத்தை) சாட்சி பெற்றவர் என்று பொருள்படும். பமன் தஹல என்று ஆரம்பித்தால்தான் (மாதத்தை) அடைந்தவர் அல்லது நுழைந்தவர் என்று பொருள் கொள்ள முடியும். 


 شَهِدَ


குர்ஆன் ஷஹித என்றுதான் கூறுகிறது. 


அல்லாஹுஸுப்ஹானஹு வ தஆலா அவனைப் பற்றிக் கூறும் பொழுது

அஹ்ஸனு ஹதீஸன் வஅஸ்தகு கீலா 


“செய்திகளில் மிகவும் அழகானதும் வார்த்தைகளில் மிக உண்மையானதும்” (அல்லாஹ்வின் செய்தியும் வார்த்தையுமாகும்)

எனவே அவனுடைய வார்த்தைகளும் அவன் சொல்வதும் சிறப்பானதாகும். இன்னும் அவன் சொல்பவையனைத்தும் உண்மையானதுமாகும். 


அல்லாஹு தஆலா அல் குர்ஆனிலே ஒரு வார்த்தையைப் கூறுவானாயின் அதனைக் காரணமின்றிக் கூற மாட்டான். நாம் எப்போது அல்லாஹ் கூறிய வார்த்தையை அது வந்துள்ள பிரகாரமே கூறாமல் அதற்கு இன்னுமொரு கருத்தைக் கொடுக்கிறோமோ அப்போதுதான் அந்த விடயத்தில் வழிகேடொன்று உருவாகின்றதே தவிர சொன்ன பிரகாரம் அப்படியே எடுத்துக்கொண்டால் அந்த விடயத்தில் வழிகேடொன்றை உருவாக்குதை விட்டும் தப்பி விடுவோம். 


உங்களில் யார் மாதத்தைச் சாட்சி பெற்றுக் கொள்கிறாரோ அவர் நோன்பு நோற்கட்டும் என்று குர்ஆன் கூறுவதனடிப்படையில் அந்த சாட்சியை எவ்வாறு பெற்றுக்கொள்வது என்பதனை நாம் அறிந்திருக்க வேண்டும். 

சாட்சி பெறுதல் என்பதில் கண்ணால் காண்பது, செவியால் கேட்பது ஆகிய இரண்டும் அடங்கும். இவையிரண்டும் சாட்சி பெற்றுக் கொள்ளும் வழிமுறைகளாக அமையலாம். எனவே எங்களில் யார் பிறையைக் கண்ணால் காண்கிறாரோ அல்லது தகவலைக் செவியேட்கிறாரோ அவர் நோன்பு நோற்கட்டும் என்ற குர்ஆனின் ஏவலின்படி எம்மில் எவரும் சாட்சியைப் பெறாதவராக இருக்க முடியாதென்ற அடிப்படையில் இஸ்லாமிய அறிஞர்கள் மேற்கூறப்பட்ட அல் குர்ஆன் வசனத்திற்கு விளக்கம் கொடுத்தார்கள். 


குறிப்பாக இந்த ஆயத்திற்கு இமாம் இப்னு கஸீர் (றஹிமஹுல்லாஹ்), இமாம் தபரி (றஹிமஹுல்லாஹ்), இமாம் குர்துபி (றஹிமஹுல்லாஹ்) ஆகியோர் விளக்கம் கொடுத்திருக்கிறார்கள். அந்த விளக்கத்தினடிப்படையில்

“உங்களில் யார் இந்த மாதத்தைச் சாட்சி பெற்றுக் கொள்கிறாரோ அவர் நோன்பு நோற்கட்டும்”


என்பதன் விளக்கம் நோயாளியையும் பிரயாணியையும் தவிர மற்றவர்கள் நோன்பு நோற்கட்டும் என்பதாகும். இந்த ஆயத்தின் தொடரில் நோன்பு நோற்பதிலிருந்து சலுகையளிக்கப்பட்டவர்களான நோயாளிகளையும் பிரயாணிகளையும் பற்றி அல்லாஹ் கூறுகின்றான்.

………எவரேனும் நோயாளியாகவோ அல்லது பிரயாணத்திலோ இருந்தால் மற்ற நாட்களில் (விடுபட்ட நோன்பினை ) எண்ணி (நோற்று) விடவும்…… 


எனவே உலமாக்கள் தொடர்ந்து வரும் வசனத்தையும் ஆராய்ந்து அதன் சரியான விளக்கத்தை எமக்கு எடுத்து விளக்குகிறார்கள். 
அல்லாஹு ஸுப்ஹானஹுவ தஆலா சாட்சி பெற்றவர்களை நோன்பு நோற்குமாறு கூறிவிட்டு தொடர்ந்து கூறுகையில் நோயாளிகளுக்கும் பிரயாணிகளுக்கும் ஒரு சட்டத்தைக் குறிப்பிடுகின்றான். அச்சட்டத்தின் படி இவ்விரு தரப்பாருக்கும் நோன்பு நோற்பதிலிருந்து விதிவிலக்கு இருக்கிறது. இது இறைவனின் சட்டமாகும்.

நாட்டுக்கு நாடு பிறையென்று சொல்பவர்கள் “மாதத்தை அடைந்தவர் நோன்பு நோற்கட்டும்” என்ற மொழிபெயர்ப்பைக் காட்டி அடைந்தவர் நோன்பு நோற்கட்டும் என்று அல்லாஹ் சொல்வதன் காரணம் மாதத்தை அடையாதவர்களும் இருப்பார்கள் என்பதற்காக தான் என விளக்கம் கொடுக்கிறார்கள். 


இவர்கள் சொல்வதன் அடிப்படையில் ஒரு நாட்டில் பிறை காணப்பட்டால் அந்நாட்டிலுள்ள நோயாளிகளும் பிரயாணிகளும் மாதத்தை அடைந்துதானிருக்கிறார்கள். மாதத்தை அடைந்தவர்களென்ற ரீதியில் அல்லாஹ்வின் ஏவலினடிப்படையில் அந்நாட்டிலுள்ள நோயாளியும் பிரயாணியும் நோன்பு நோற்க வேண்டியிருக்கும். 


ஆனால் குர்ஆன் அவ்வாறு சொல்லவில்லை. 


அது فَمَن شَهِدَ  பமன் ஷஹித என்றுதான் சொல்கிறது.

 شَهِدَ 


என்பதற்கு அடைவது எனப் பொருள் கொள்ள முடியாது. 


 شَهِدَ


என்றால் சாட்சி பெறுவது என்றுதான் பொருளாகும். எனவே அல் குர்ஆன் கூறுவதன் அடிப்படையில் இஸ்லாமிய உம்மத்தில் யாரெல்லாம் கண்ணால் கண்டு அல்லது தகவலைச் செவிமடுத்து சாட்சி பெற்றுக்கொள்கிறார்களோ அவர்களுக்கு நோன்பு நோற்பது கடமையாவதுடன் அவர்களிலுள்ள நோயாளிகளுக்கும் பிரயாணிகளுக்கும் இதிலிருந்து விதிவிலக்களிக்கப்படுவதுடன் விடுபட்ட நோன்புகளுக்குப் பகரமாக வேறு நாட்களில் நோற்றுக் கொள்ள வேண்டுமென்று தனது ஷரீஅத்தின் சட்டத்தினை அல்லாஹு ஸுப்ஹானஹுவ தஆலா கற்றுத் தருகின்றான். 


இதனைத்தான் அல்குர்ஆனுக்கு விளக்கவுரை கூறும் அறிஞர்கள் எமக்கு சிறப்பாக விளக்கி வழிகாட்டுகிறார்கள். ஆனால் தர்க்கவாதத்தின் அடிப்படையில் குர்ஆன் வசனங்களுக்கு விளக்கம் கொடுக்க வந்தவர்கள் கூறினார்கள் :

உங்களில் யார் இந்த மாதத்தை அடைகிறாரோ அவர் நோன்பு நோற்கட்டும்” 


என்ற வசனத்தில் வருகின்ற உங்களில் யார் அடைகிறாரோ என்ற வாசகத்தின் அடிப்படையில் பார்க்கும் பொழுது மாதத்தை அடையாதவர்களும் இருக்கிறார்கள் என்றுதானே அர்த்தம் எனக் கூறி மாதத்தை அடையாதவர் நோன்பு நோற்கத் தேவையில்லையென்று தீர்ப்பளித்து விட்டார்கள். 


ஸுப்ஹானல்லாஹ் ! இதை விடவும் வழிகேடானதொரு தர்க்கமும் வாதமும் இருக்க முடியாது. அல்லாஹு ஸுப்ஹானஹுவ தஆலா முஸ்லிம்களை நோக்கி சாட்சி பெற்றுக் கொள்கிறவர் நோன்பு நோற்கட்டும் என்று ஏவியதனடிப்படையில் சாட்சி பெற்றுக் கொள்ளாதவனின் கடமை சாட்சியைப் பெறும் வழிமுறையைத் தேடுவதாகும். 


இதனைச் செய்யாமல் எனக்கு அறிவித்தல் வரவில்லை, நான் கண்ணால் காணவில்லையென்று சாட்டுகளைக் கூறிக்கொண்டு நாம் நோன்பு நோற்கத் தேவையில்லையென்று கூறி இந்த உம்மத் பிரிந்து நிற்பதற்கு நாம் இடமளிக்க முடியுமா? அல்லது முஸ்லிம்கள் அறியாமையினால் நோன்பு கடமையான நேரத்தில் நோன்பு நோற்காதிருப்பதை தான் நாம் சரி காண முடியுமா? 

வழிகேட்டை உருவாக்கும் வீண் தர்க்கத்தினால் “ மாதத்தை அடைபவர் நோன்பு நோற்கட்டும்” என்ற வார்த்தையில் இரண்டு அர்த்தங்கள் இருப்பதாகவும் மாதத்தை அடைபவர் இருப்பது போல் அடையாதவரும் இருக்கிறார் என்று விளக்கம் சொல்கிறார்கள். 


ஆனால் அல்லாஹு ஸுப்ஹானஹுவ தஆலா விசுவாசம் கொண்ட மனிதர்களுக்கு ஒரு ஏவலாக உங்களில் சாட்சி பெற்றவர் நோன்பு நோற்கட்டும் என்று கட்டளையிடுகின்றான். சாட்சியைப் பெற்றுக் கொள்ளாதவன் அதனைத் தேடிப் பெற்றுக் கொள்வதற்கு முயற்சி செய்து அல்லாஹ்வின் ஏவலைச் செயற்படுத்தாமல் தனது தர்க்கத்தின் காரணமாக நாங்கள் மாதத்தை அடையாததினால் அல்லாஹ்வின் இந்த ஏவலைப் பின்பற்றுவது அவசியமில்லையென்று முடிவு செய்து விட்டார்கள். இது அல்லாஹ்வின் ஏவலை நிராகரிப்பதைத் தவிர வேரில்லை. 

இந்தக் குர்ஆன் ஆயத்தின் விளக்கத்தில் இந்த மாதத்தை அடையாதவரும் இருக்கிறார்கள் என்பது இருக்குமாயின் வரலாற்றில் எந்த இமாம்களெல்லாம் நாட்டுக்கு நாடு பிறை காணவேண்டுமென்று கூறினார்களோ இவர்கள் தங்களின் கருத்துக்கு ஆதாரமாக இந்தக் குர்ஆன் வசனத்தை எடுத்திருக்க வேண்டும். ஆனால் அவர்களில் யாரும் இந்தக் குர்ஆன் வசனத்தை ஆதாரமாக எடுக்கவில்லை. 


ஏனென்றால் இந்த வசனம் நாட்டுக்கு நாடு பிறை காணவேண்டுமென்று கூறும் வசனமல்ல. மாறாக இந்த வசனம் அல்லாஹ்வின் ஒரு ஏவலைப் பற்றிப் பேசுகிறது. இந்த ஏவலின் படி சாட்சி பெற்றவர் நோன்பு நோற்று ஏவலைச் செயற்படுத்துவதுதான் கடமையே தவிர இதனைப் பற்றித் தெரியாதவர் அல்லாஹ்வின் ஏவலைச் செயற்படுத்துவது கடமையாகாதென்ற அர்த்தத்தை நாம் கொடுக்க முடியாது. தெரியாத அனைவரும் தேடித் தெரிந்து கொள்வதுதான் அல்லாஹ்வின் ஏவலை ஏற்று செயற்படுத்துவதன் பூரணமான நிலையாகும். 


இதற்கு மாற்றமாக தெரியாதவர் ஏவலைச் செயற்படுத்த வேண்டியதில்லையென்று நாம் தீர்ப்பளிப்போமாயின் அதன் பொருள் நாம் அல்லாஹ்வின் மார்க்கத்தின் ஏவல்களை நிராகரிப்பதற்குச் சாட்டுகள் தேடுகிறோம் என்பதேயாகும். அந்தக் குர்ஆன் வசனத்திலிருந்து பெறப்பட்ட தவறான விளக்கம் அல்லாஹ்வின் ஏவலை நிராகரிப்பதன் பால் இட்டுச் செல்கின்றதென்பதை நாம் உணர வேண்டும். 

இன்று எமது சமூகத்தில் இந்த விளக்கத்தைப் பரவலாக எடுத்துப் பின்பற்றுகிறார்கள். இன்று இவர்கள் கூறும் இந்த விளக்கத்திற்கு முன் சென்ற உலமாக்கள் யாரும் மறுப்பாக எதனையும் சொல்லவில்லையே என்று ஒரு கேள்வியை இவர்கள் எழுப்புகிறார்கள். 


அதன் பதில் என்னவென்றால், முன் சென்ற இஸ்லாமிய அறிஞர்களைப் பொருத்தவரை ஏதேனும் வழிகேடான விளக்கம் வந்தால் மட்டுமே மறுப்பை முன்வைப்பார்கள். ஒவ்வொரு காலத்திலும் வாழ்ந்த அறிஞர்கள் அவர்கள் வாழுகின்ற காலப்பகுதியில் ஏதேனும் வழிகேடான கருத்துகள் வெளிவருகையில் அவ்வழிகேடுகளுக்கு மறுப்பாக பதில் கொடுத்து அதனைத் திருத்தாமல் செல்லவில்லை. 


ஆனால் அன்று தோன்றாத ஒரு புது விளக்கம் இன்று புதிதாக முளைக்கின்ற போது, இன்று வாழுகின்றவர்கள்தான் அதற்கு பதிலளிக்க வேண்டும். இன்று உருவாகிய புதிய கருத்துகளுக்கும் விளக்கங்களுக்கும் முன் சென்ற உலமாக்களிடம் பதில் கிடைக்குமா எனத் தேட முடியாது. அன்று இந்த விளக்கம் தோன்றாததால் அதற்கு பதில் அன்று கிடைக்கவில்லை.


Allaah knows the best

Taken from a lecture of  Shaykh Yahya silmy Hafidhahullaah, Transcribed by Bro Riyas Negambo