[குறைப் -- இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு ஹதீஸ் சர்ச்சைகளும் ஸலபி விளக்கங்களும்]

குறைப் -- இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு ஹதீஸ் சர்ச்சைகளும் ஸலபி விளக்கங்களும்


Nationalismநாட்டுக்கு நாடு பிறை விடயத்தில் குரைப்-இப்னு அப்பாஸ் தொடர்பான ஹதீஸை சிலர் தங்களுக்கு ஆதாரமாகக் காட்டுகிறார்கள். இருப்பினும் பலர் இந்த ஹதீஸை ஆதாரமாக எடுப்பதில்லை. ஏனென்றால் இதனை ஆதாரமாக எடுப்பதை மறுத்து அறிஞர்களின் தெளிவான வழிகாட்டல் இருக்கிறது. இதனை அந்த அறிஞர்கள் தங்களின் நூல்களில் எழுதியே சென்றிருக்கிறார்கள். 

குறிப்பாக இமாம் ஷவ்கானி (றஹிமஹுல்லாஹ்), இமாம் அப்துர்ரஹ்மான் முபாரக்பூரி (றஹிமஹுல்லாஹ்), இமாம் ஸித்தீக் ஹஸன்கான் (றஹிமஹுல்லாஹ்) ஷெய்க் நாஸிருத்தீன் அல்பானி (றஹிமஹுல்லாஹ்) போன்ற அறிஞர்கள் அதனை எடுத்து விளக்கியிருக்கிறார்கள். 

குரைப்-இப்னு அப்பாஸ் தொடர்பான ஹதீஸ் விடயத்தில் ஏற்பட்டிருக்கும் சர்ச்சை என்னவென்று நாம் விளங்கிக் கொள்வோம். ஸஹீஹ் முஸ்லிம் என்ற நூலைத் தொகுத்த இமாம் முஸ்லிம் (றஹிமஹுல்லாஹ்) அந்நூலில் ஹதீஸ்களைச் சேர்த்தாலும் அந்த ஹதீஸ்களுக்கு தலைப்புகளை இடவில்லை. ஆதாரத்தை ஆராய்ந்து சரியான அறிவிப்பாளர் தொடரோடு அமைந்த ஹதீஸ்களைத் தனது நூலில் அவர் தொகுத்து வைத்தார் . இதுதான் இமாம் முஸ்லிம் (றஹிமஹுல்லாஹ்) தனது நூலினைக் கையாண்ட வழிமுறையாகும். 

ஆனால் ஸஹீஹ் முஸ்லிம் என்ற நூலுக்கு முதலில் தலைப்புகளையிட்டவர் இமாம் அபூ ஸகரிய்யா யஹ்யா இப்னு ஷரப் அந் நவவி (றஹிமஹுல்லாஹ்) ஆவார். இமாம் திர்மிதி, இமாம் அபூ தாவூத் போன்றவர்கள் பிறை காணுதல் தொடர்பான ஹதீஸுக்கு தங்களின் நூல்களில் லிகுல்லி பலதின் ருஃயதுஹும் - ஒவ்வொரு நாட்டவருக்கும் அவரவருடைய காணுதல் என்று தலைப்பை இட்டிருக்கிறார்கள். 

இந்த வார்த்தையை இமாம்கள் பொதுவாக தங்கள் நூல்களில் பிறை காணுதல் தொடர்பான ஹதீஸுக்கு தலைப்பாக இட்டாலும் இமாம் நவவி ஸஹீஹ் முஸ்லிமுக்குத் தலைப்பிடும் போது ( லிகுல்லி பலதின் ருஃயதுஹும் ); - ஒவ்வொரு நாட்டவருக்கும் அவரவருடைய காணுதல் என்ற வார்த்தையுடன் 
( வலா யஊத்து பிகைரிஹி ) – ஏனையவர்களுடைய காணுதலை ஏற்காதிருப்பது என்ற மேலதிக வார்த்தையையும் சேர்த்தார். 

இமாம் நவவி (றஹிமஹுல்லாஹ்) மேலதிக வார்த்தையைச் சேர்த்திருப்பினும் இமாம் திர்மிதி இமாம் அபூ தாவூத்இ இமாம் இப்னு ஹுதைமா போன்ற மேலும் பல அறிஞர்கள் தங்களின் நூல்களிலுள்ள பாடத்தின் தலைப்பாக லிகுல்லி பலதின் ருஃயதுஹும் - ஒவ்வொரு நாட்டவருக்கும் அவரவருடைய காணுதல் என்றுதான் தலைப்பினை வைத்தார்கள். 

இவ்வாறு அவர்கள் தலைப்பிடக் காரணம் என்னவெனில், ஒவ்வொரு இடத்தைச் சேர்ந்தவர்களும் ஒவ்வொரு நாட்டவரும் அவரவர் வாழும் இடங்களில் பிறை பார்ப்பது கடமை என்பதினாலாகும். 

மாறாக இன்னொருவரிடம் பொறுப்பைக் கொடுத்து விட்டு அவர்களை எதிர்பார்த்துக் கொண்டு கடமையானதொரு விடயத்தில் கவனமற்றவர்களாக இருக்க முடியாது. இந்த உண்மை குரைப் - இப்னு அப்பாஸ் தொடர்பான ஹதீஸிலிருந்து எமக்குத் தெளிவாக விளங்குகிறது. 

ஏனைன்றால் குரைப் ஷாமில் இருந்தார். எனவே அவர் ஷாமில் பிறையைப் பார்த்தார். இப்னு அப்பாஸ் மதீனாவில் இருந்தார். எனவே அவர் மதீனாவில் பிறை பார்த்தார். இதிலிருந்து தெளிவாக விளங்கக் கூடியது என்னவென்றால் யாராக இருப்பினும் எங்கிருந்த போதும் அவரவர் அவரவருடைய இடத்திலிருந்து பிறையைப் பார்ப்பதற்கு முயற்சி செய்ய வேண்டும். 

இதனடிப்படையில் இமாம்கள் ஹதீஸ்களிலுள்ள பாடங்களுக்குத் தலைப்பிடுவதன் காரணம் அந்த ஹதீஸுக்குரிய பிக்ஹ் சட்டத்தை எடுத்துக் காட்டுவதற்காகும். 

அப்வாபுல் அஹாதீஸி பிக்ஹுல் ஹதீஸ் - ஹதீஸ்களின் தலைப்புகள் அந்த ஹதீஸுக்குரிய சட்டமாகும் என்பது ஹதீஸ் கல்வியில் உலமாக்கள் கையாளும் ஓர் அடிப்படையாகும். எனவே ஒரு இமாம் ஹதீஸுக்குத் தலைப்பிடுவாராயின் அந்த ஹதீஸின் வார்த்தைகளின் கருத்தினை அடிப்படையாக வைத்தே தலைப்பிடுவார். 

எனவே குரைப்-இப்னு அப்பாஸ் ஆகியோரின் ஹதீஸில் அவரவர் இருந்த இடத்தில் அவர்கள் பிறை பார்த்ததினால்தான் (லிகுல்லி பலதின் ருஃயதுஹும்) ‘ஒவ்வொரு நாட்டவருக்கும் அவரவருடைய காணுதல்’ என்று இந்த ஹதீஸுக்குத் தலைப்பை இமாம்கள் வைத்தார்கள். ஒவ்வொருவரும் அவரவர் நாட்டில் பிறை காண வேண்டுமென்பது அனைவருக்கும் கடமையானதென்ற அடிப்படையை குரைப்-இப்னு அப்பாஸுடைய ஹதீஸ் எடுத்துக் காட்டுகின்றதே தவிர ஏனையவர்களின் பிறையை ஏற்றுக் கொள்ளக் கூடாதென்று அந்த ஹதீஸ் காட்டவில்லை. 

இந்த ஹதீஸை தங்களின் நூல்களில் சேர்த்துக் கொண்ட இமாம்கள் அனைவரும் இந்த ஹதீஸிலிருந்து எடுக்கும் அடிப்படையாவது : ஒவ்வொரு நாட்டவரும் அவரவர் நாட்டில் பிறை பார்க்க வேண்டுமென்பதேயாகும். இதில் இமாம் நவவி (றஹிமஹுல்லாஹ்) மட்டுமே ஹதீஸ்களுக்குத் தலைப்பிடும் போது தனது வார்த்தைகளை மேலதிகமாகச் சேர்த்தார். மற்றவர்கள் கண்ட பிறையை நாம் ஏற்றுக் கொள்ள மாட்டோம் என்ற தலைப்பை இமாம் நவவியைத் தவிர வேறு எந்த இமாமும் தலைப்பிடவில்லை. 

இமாம் நவவியுடைய இந்தத் தலைப்பை எடுத்துக் கொண்டுதான் இன்று பலர் எமது நாட்டின் பிறையை மட்டுமே நாங்கள் ஏற்றுக் கொள்வோம். மற்றவர்கள் கண்ட பிறையை நாம் ஏற்றுக் கொள்ள மாட்டோமென்று வாதிடுகிறார்கள். 


இதற்கு ஆதாரமாக குரைப்-இப்னு அப்பாஸ் சம்பந்தமான ஹதீஸைக் குறிப்பிடுகிறார்கள். அடுத்து நாம் அந்த ஸதீஸ் தொடர்பான விடயங்களை சற்று ஆழமாகப் பார்க்கலாம். 

குரைப் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் உம்மு பத்ழ் பின்த் ஹாரிஸ் என்பவருடைய ஒரு காரிய நிமித்தம் ஷாம் சென்றார். அவர் ஷாமில் இருந்த வேளை றமழான் மாதம் வந்தது. குரைப் அங்கேயே றமழானை ஆரம்பித்தார். மாதத்தின் கடைசியில் அவர் மதீனாவை வந்து சேர்ந்தார். 
குரைப் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களைச் சந்தித்த அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் குரைபிடம் “நீர் எப்போது பிறை கண்டீர்” என வினவினார். 

இங்கு நாம் கவனிக்க வேண்டிய ஒரு முக்கிய விடயம் என்னவெனில் பிறை கண்டது தொடர்பாக முதலில் அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள்தான் முதலில் கேள்வி கேற்கிறார்கள். இதன் காரணம் அன்று பிக்ஹில் தரமான இமாமாக அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களே இருந்தார்கள். 


எனவேதான் அவர் மதீனாவை நோக்கி வரும் பிரயாணியை நோக்கிக் கேள்வி கேட்டார். இது தொடர்பாக இமாம் அபூ ஜஅபர் அத்தஹாவி (றஹீமஹுல்லாஹ்) தனது நூலிலே தெளிவாக விளக்கியிருக்கிறார்கள். 

மதீனத்தார் ஷாமிலிருந்து வந்திருந்த பிரயாணியான குரைபிடம் 

“நீர் எப்போது பிறை கண்டீர்” என வினவினார்கள். 

ஏனென்றால் மதீனத்தாருடைய கணக்கு தவறாக இருந்திருக்கலாம் என்பதனால் அவர்கள் அவ்வாறு கேட்டார்கள். இவ்வாறு இமாம் அபூ ஜஅபர் அத்தஹாவி (றஹீமஹுல்லாஹ்) இன்னும் ஏனைய உலமாக்களும் இந்த சம்பவத்தைப் பற்றிக் கூறுகையில் விளக்குகிறார்கள். 

இப்னு அப்பாஸ் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் குரைபிடம்

 “நீர் எப்போது பிறை கண்டீர்”; என வினவினார். 

அதற்கு குரைப் “நாங்கள் ஜும்ஆவுக்கு முந்திய இரவு கண்டோம்”; 

எனப் பதிலளித்தார். மீண்டும் இப்னு அப்பாஸ் (ரழியல்லாஹு அன்ஹு) குரைபை நோக்கி 

“அதனை நீர் கண்டீரா” எனக் கேட்டார். “ஆம் நான் கண்டேன். மக்கள் நோன்பு வைத்தனர். (ஷாமின் ஆட்சியாளரான) முஆவியாவும் நோன்பு வைத்தார்” 

என குரைப் கூறினார். 


இங்கு ஷாமின் ஆட்சியாளர் என்ற ரீதியில் அதிகாரம் பெற்றிருந்த முஆவியா (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் அந்தப் பிறையை ஏற்றுக் கொண்டதோடு ஷாமில் இருந்தவர்களும் அதனை நடைமுறைப்படுத்தினர். 

இந்த சம்பாஷனையின் தொடரில் இப்னு அப்பாஸ் (ரழியல்லாஹு அன்ஹு) 

அவர்கள் “நாங்கள் சனிக்கிழமைக்கு முந்திய இரவு கண்டோம்” என்று கூறினார்.

 இந்த வார்த்தை குரைப் கண்ட பிறையை இப்னு அப்பாஸ் மறுத்தார் என்பதற்கு ஆதாரமென்று சிலர் கூறுவது தவறான கூற்றாகும். 

இங்கு இப்னு அப்பாஸ் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் நடந்ததைக் கூறினார்களே தவிர குரைப் கூறுவதை மறுப்பதற்காக அவ்வாறு கூறவில்லை. தொடர்ந்து இப்னு அப்பாஸ் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் குரைபிடம் 

“நாங்கள் தொடர்ந்து மாதத்தை முப்பதாக்கும் வரை அல்லது பிறை காணும் வரை நோன்பு வைப்போம்” 

என்று தங்களின் நிலையைக் கூறினார்கள். 

பிறை காண்பது அல்லது மாதத்தை முப்பதாகப் பூர்த்தி செய்வது என்பது பிறை காணுதலில் ஓர் இஸ்லாமிய அடிப்படையாகும் என்ற காரணத்தில் தான் இப்னு அப்பாஸ் அவ்வாறு கூறினார். இதற்கும் மேலதிகமாகக் கூறுவதாயின் இப்னு அப்பாஸ் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களே அறிவித்த ஹதீஸ் தர்மிதியில் பதிவாகியிருக்கிறது.

நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்.
பிறையைக் கண்டு நோன்பு வையுங்கள். பிறையைக் கண்டு நோன்பை விடுங்கள். மேக மூட்டமாக இருந்தால் மாதத்தை முப்பதாகப் பூரணமாக்குங்கள்.


எனவே நபி (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அவர்களின் நபிமொழியையே தனது வார்த்தையில் இப்னு அப்பாஸ் (ரழியல்லாஹு அன்ஹு) குரைபிடம் கூறினார்கள். எனவே இது இப்னு அப்பாஸ் (ரழியல்லாஹு அன்ஹு) கூறிய அவருடைய சொந்தக் கருத்தல்ல. 

மாறாக இது றஸுலுல்லாஹ் சொன்னதொரு ஹதீஸாகும். இதனைத்தான் இப்னு அப்பாஸ் (ரழியல்லாஹு அன்ஹு) சுருக்கமாகக் கூறினார்கள். இவ்வாறு இப்னு அப்பாஸ் கூறியது குரைப் சொன்னதை ஏற்றுக் கொள்ள முடியாதென்ற அர்த்தத்திலல்ல. 

மாறாக இஸ்லாமிய சட்டத்தையே குரைபுக்குச் சொல்லிக் காட்டினார். இருப்பினும் இப்னு அப்பாஸுடைய வார்த்தையைக் கேட்ட குரைப் இப்னு அப்பாஸை நோக்கி 

“உங்களுக்கு முஆவியாவின் சாட்சியம் போதாதா"

என்று கேட்டார். அதற்கு இப்னு அப்பாஸ் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் 

“இல்லை, இவ்வாறுதான் றஸுலுல்லாஹி (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) எங்களுக்கு ஏவியிருக்கிறார்கள்”; 

என்று பதில் சொன்னார். 

அதாவது முன்னால் கூறப்பட்ட நபி மொழியைக் குறித்தே இப்னு அப்பாஸ் நபியின் ஏவலெனக் குறிப்பிட்டார். றஸுலுல்லாஹி (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) கூறியதன் அடிப்படையினை நாம் நடைமுறைப்படுத்துவோம் என்பதே இப்னு அப்பாஸ் அவ்வாறு கூறியதன் அர்த்தமாகும். 

இங்கு வரும் கேள்வி என்னவென்றால் இந்த சம்பவத்தின் படி பிறைகாணுதலின் அடிப்படை எடுக்கப்பட வேண்டியது மதீனாவின் அடிப்படையிலா? அல்லது ஷாமின் அடிப்படையிலா? எதனடிப்படையில் இதற்குச் சரியான முடிவைக் காண்பது?

நாம் மதீனாவின் அடிப்படையில் எடுத்தால் ஒரு நாளின் பின்புதான் பெருநாளை எடுக்க வேண்டும். அவ்வாறு ஒரு நாளின் பின் பெருநாளை எடுத்திருந்தால் அந்த நாள் குரைபுக்கு அது முப்பத்தோறாவது நாளாகும். 

ஷாமின் அடிப்படையில் அன்று குரைப் மாதத்தைப் பூரணமாக்கினால் மதீனத்தாருக்கு அது இருபத்து ஒன்பதாவது நாளாகும். இந்த இரண்டிலும் முப்பத்தொராவது நாளென்பது இஸ்லாமிய மார்க்கத்தில் கிடையாது. 

நிலை இவ்வாறிருக்கையில் இவ்விறு வேறுபாடான நிலைப்பாடுகளில் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டியது எது? பிறையைக் கண்டவர்களில் பிந்தியவர்களான மதீனாவாசிகள்தான் முந்தியவர்களை ஏற்றுக் கொள்ள வேண்டும். 

இவர்கள் இரு சாராரும் இரு கருத்துக்களைச் சுமந்தவர்களாக இருந்திருந்தால் ஒருவர் மற்றவரை ஏற்றுக்கொள்ளவில்லையென்றால் நிச்சயமாக அன்று இரு பெருநாள்கள் வந்திருக்கும். 

ஆனால் அவ்வாறு இரு பெருநாள்கள் வரவில்லையென்பதுதான் வரலாற்று உண்மையென உலமாக்கள் சொல்கிறார்கள். எனவே இங்கு இப்னு அப்பாஸ் (ரழியல்லாஹு அன்ஹு) குரைப் ரழியல்லாஹு அன்ஹு) உடன் முரண்படவில்லை. 

அவர்கள் இருவரும் ஒரு கருத்துடன்தான் இருக்கிறார்கள். இந்த சம்பவத்தை அன்றிருந்த உலமாக்களான ஸஹாபாக்களோ தாபியீன்களோ தபஉத்தாபியீன்களோ, தபஉ அத்பா தாபியீன்களோ ஒரு சர்ச்சைக்குரிய விடயமாக எடுத்ததில்லை. 

இஸ்லாமிய உம்மத் பிறை காணும் விடயத்தில் தரமாகவும் தெளிவாகவுமே இருந்தது. என்றாலும் ஹிஜ்ரி 400 க்குப் பின் வானவியல் கல்வியை மார்க்கத்தில் புகுத்தி விட்டார்கள். இதன் பின் நாட்டுக்கு நாடு பிறை என்ற வாதம் உருவானதுடன் இந்த வாதத்திற்கு குரைப் - இப்னு அப்பாஸ் தொடர்பான ஹதீஸை ஆதாரமாகவும் காட்டுகிறார்கள். 

ஆனால் முன்சென்ற உலமாக்களிடம் இந்த ஹதீஸுக்கு இந்த விளக்கம் இருக்கவில்லை. இதுவரை குரைப் - இப்னு அப்பாஸ் தொடர்பான சர்ச்சைக்குக் கல்வி ரீதியாக நாம் விளங்க வேண்டியவைகளை எடுத்து வைத்தேன். 

அதனை சுருக்கமாகச் சொன்னால் குரைப் - இப்னு அப்பாஸ் ஆகியோருக்கிடையில் எந்த முரண்பட்ட கருத்துக்களும் இருக்கவில்லை. இருவருக்கும் இரு பிறைகளென்ற நிலை இருக்கவில்லை. இரு வேறு பெருநாள்கள் இருக்கவில்லை. 

இதற்கு மாறாக ஒருவர் மற்றவரை ஏற்றுக் கொண்டார் என்பதே இங்கு வெளிப்படையான உண்மையாகும். அவ்வாறு ஒருவர் மற்றவரை ஏற்றுக் கொள்ளாத நிலை இருக்குமாயின் இப்னு அப்பாஸ் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் வருகின்ற பிரயாணியைப் பார்த்து பிறையைப் பற்றிக் கேட்டிருக்க மாட்டார். அதற்கு அவசியமும் இருந்திருக்காது. 

ஷாம் நாட்டில் கண்ட பிறை மதீனாவாசிகளுக்கு அவசியமானது ஏன்? மற்றவர்கள் கண்ட பிறை எமக்கு அவசியமற்றது எமது பிறையே எமக்குப் போதுமானது என்ற கருத்தை இப்னு அப்பாஸ் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் கொண்டிருந்திருந்தார்களென்று எடுத்துக் கொண்டால் எதற்காக அவர் மதீனாவுக்கு வருகின்ற பிரயாணியிடம் நீர் எப்போது பிறை கண்டீரெனக் கேட்க வேண்டும். 

எனவே நிச்சயமாக மற்றவர்கள் கண்ட பிறையைப் புறக்கணிக்கும் நிலைப்பாட்டில் இப்னு அப்பாஸ் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் இருக்கவில்லையென்பது தெளிவாகத் தெரிகின்ற அம்சமாகும். 

எனவே எங்கு பிறை கண்டாலும் அதனை ஏற்றுக் கொள்ளும் சர்வதேச பிறையின் விடயத்திற்கும் குரைப் - இப்னு அப்பாஸ் தொடர்பான அறிவிப்புக்கும் எந்த முரண்பாடும் கிடையாது. அவர்கள் இரு பெருநாள்கள் கொண்டாடவில்லை. இதுவே இந்த ஹதீஸின் அடிப்படையில் நாம் பெறக்கூடிய தெளிவான முடிவாகும். இந்த ஹதீஸ் சர்வதேச பிறைக்கு சார்பான ஆதாரமே தவிர நாட்டுக்கு நாடு பிறை காணுதலுக்கு ஆதாரமன்று. 

இது வரை நாம் ஹதீஸின் அறிவிப்பின் அடிப்படையில் விளக்கத்தினைப் பெற்றுக் கொண்டோம். 

அடுத்து நான் முஹத்திஸீன் எனப்படும் ஹதீஸ் அறிஞர்களின் அடிப்படை ரீதியாக உங்களுக்கு சில விடயங்களைச் சொல்லலாமென நினைக்கிறேன். 
அதாவது இதுவரை குரைப் - இப்னு அப்பாஸ் தொடர்பான அறிவிப்பின் அடிப்படையில் இப்னு அப்பாஸ் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் எங்கு பிறை கண்டாலும் அதனை ஏற்றுக் கொள்ளும் நிலைப்பாட்டிலேயே இருந்தார்களென்பதை நாம் தெளிவாக விளங்கிக் கொண்டோம். 

வேறு இடங்களில் கண்ட பிறையை இப்னு அப்பாஸ் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் ஏற்றுக் கொள்பவராக இருந்ததற்கு இப்னு அப்பாஸ் (ரழியல்லாஹு அன்ஹு) வேறு சந்தர்ப்பங்களில் கூறியிருக்கும் வார்த்தைகள் ஆதாரமாகவும் சாட்சியாகவும் உள்ளது. அந்த அறிவித்தல்களை உங்கள் முன் எடுத்து வைப்பதற்கு நான் ஆசைப்படுகிறேன். 

இதனை இமாம் பைஹகி (றஹிமஹுல்லாஹ்) ஸுனன் குப்ரா என்ற நூலிலும் இமாம் தபரானி (றஹிமஹுல்லாஹ்) முஃஜம் அல் கபீர் என்ற நூலிலும் பதிவு செய்திருக்கிறார்கள். 

இந்த செய்தியை தாவூஸ் இப்னு கைஸான் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் அறிவித்திருக்கிறார்கள்.

மதீனாவில் இப்னு அப்பாஸும் இப்னு உமரும் வாழ்ந்து கொண்டிருக்கும் காலத்தில் மதீனாவின் கவர்னரிடம் ஒருவர் வந்து நான் ஹிலாலைக் கண்டேன் என்று சொன்னார். 

இந்த அறிவித்தலை ஏற்றுக் கொள்வது பற்றி மதீனாவின் கவர்னர் இப்னு அப்பாஸையும் இப்னு உமரையும் நாடினார். இப்னு அப்பாஸும் இப்னு உமரும் அந்த அறிவித்தலை ஏற்றுக் கொள்ளுமாறு கூறினார்கள். 

ஏனென்றால் நபி (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அவர்கள் றமழானை ஆரம்பிப்பதற்கு ஒருவருடைய தகவலை ஏற்றுக் கொண்டும் மாதத்தைத் தொடங்கியிருக்கிறார்கள். மாதத்தை முடிப்பதற்குத்தான் இருவருடைய தகவல் தேவையென்று எதிர்பார்ப்பார்த்தார்களென இப்னு அப்பாஸும் இப்னு உமரும் விளக்கினார்கள். 

எனவே இங்கு இப்னு அப்பாஸ் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வார்த்தைகளினாலேயே வருகின்ற தகவலை ஏற்றுக் கொள்ளுமாறு ஏவுகிறார்கள். இது ஒரு தெளிவான ஆதாரமாகும். 

குரைப் - இப்னு அப்பாஸ் தொடர்பான சம்பவமும் தகவல் வழங்கியவரின் தகவலை ஏற்றுக் கொள்ளுமாறு இப்னு அப்பாஸும் இப்னு உமரும் வழங்கிய தீர்ப்பும் எமக்கு இப்னு அப்பாஸ் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் நிலைப்பாடு என்னவென்பதைத் தெளிவாகக் காட்டுகிறது. 

இந்த ஆதாரங்களின் அடிப்படையில் தகவலை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதுதான் இப்னு அப்பாஸ் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் நிலைப்பாடு என்று கூறுவது வெறுமனே நாம் இப்னு அப்பாஸின் ஹதீஸைத் துருவி ஆராய்ந்து எடுத்த எமது தனி விளக்கமோ முடிவோ அல்ல. 

அந்தக் கருத்தை இப்னு அப்பாஸ் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களே தனது வார்த்தையினால் நேரடியாகக் கூறியதாக வந்துள்ள அறிவித்தல்களைக் கொண்டுதான் நாம் நிரூபித்தோம். சுருங்கச் சொன்னால் இப்னு அப்பாஸ் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களைப் பொருத்தவரை தகவல் எங்கிருந்து வந்தாலும் அத்தகவலை ஏற்றுக் கொள்பவராகவே இருந்தார்கள். 

இதற்கு மாறாக அவர் இருந்திருப்பின் அன்றைய மதீனா முறண்பாடான முடிவுகளையே எடுத்திருக்க வேண்டும். ஆனால் இப்னு அப்பாஸ் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களோ தகவலை ஏற்றுக் கொள்ளுமாறு ஏவியதுடன் றஸுலுல்லாஹி (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அவர்களின் வழிமுறையையும் எடுத்துக் காட்டினார்கள். 


அதாவது ஒருவருடைய தகவலைக்; கொண்டு மாதத்தைத் தொடங்களாமென்றும் மாதத்தை முடிப்பதற்கே இரு சாட்சிகளின் தகவல் அவசியமென்றும் சொல்லிக் கொடுத்தார்கள். 

இதில் ஒரு முக்கிய சர்ச்சைக்கான தீர்ப்பும் எமக்குக் கிடைக்கிறது. அதாவது மாதத்தை ஆரம்பிப்பதற்கு எத்தனை பேருடைய தகவல் தேவை? இன்னும் மாதத்தை முடிப்பதற்கு எத்தனை பேருடைய தகவல் தேவை? போன்ற கேள்விகளுக்கு இப்னு அப்பாஸ் (ரழியல்லாஹு அன்ஹு), இப்னு உமர் (ரழியல்லாஹு அன்ஹு) ஆகியோர் கொடுத்த தீர்ப்பு போதுமான பதிலாக இருக்கிறது. இதனடிப்படையில் கவனிக்கையில் இப்னு அப்பாஸ் (ரழியல்லாஹு அன்ஹு), குரைப் (ரழியல்லாஹு அன்ஹு) தொடர்பான ஹதீஸானது தேசியவாதத்திற்குச் சம்பந்தமான அறிவித்தலல்ல. .அந்த அறிவித்தல் எமது மார்க்கத்தோடு தொடர்புடைய அறிவித்தலாகும். நாம் வெறுமனே தேசியவாதத்தின் தன்மைகளையும் அதன் பழக்கங்களையும் எம்மில் உருவாக்கிக் கொண்டிருக்கிறோமே தவிர இந்தப் பழக்கங்களுக்கும் எமது மார்க்கத்துக்கும் எந்தவித சம்பந்தமுமில்லை. இந்த வழிமுறைகள் அனைத்தும் தேசியவாதத்தின் அடையாளங்களாகும்.


Taken from a lecture of Shaykh Yahya Silmy hafidhahullah , Transcribed by Bro Riyas Negambo