[ஜம்மியத்துல் உலமாவின் தீர்ப்புகளை பின்பற்றலாமா ? புறக்கணிக்க வேண்டுமா ?]

ஜம்மியத்துல் உலமாவின் தீர்ப்புகளை பின்பற்றலாமா ? புறக்கணிக்க வேண்டுமா ? 

பிறை காணும் விடயத்தில் வானியல் நிபுணர்களின் எதிர்வுகூறல்களுக்கு
முன்னுரிமை கொடுத்து பிறையை தீர்மானிப்பதை வழிமுறையாக எடுத்து கொண்டுள்ள இலங்கை ஜம்மியத்துல் உலமா சபையின் போக்கை எமது மக்களுக்கு எச்சரிக்கிறோம். 

நபி சள்ளல்லாஹு அலைஹி வஸல்லம்  அவர்கள் நேரடியாக தடை செய்துள்ள இந்த வழிமுறையை இலங்கை  ஜம்மியத்துல் 
உலமா சபை எடுத்து கையாள்கிறது என்ற உண்மையை அவர்களது பகிரங்கமான அறிவிப்பை ஆதாரமாக மேற்கோள் காட்டி 
கீழே விளக்கப்பட்டுள்ளது.   

கில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பிறைத் தீர்மானங்கள் 

அதவாது, தலைப்பிறையைத் தான் கண்டதாக ஒரு முஸ்லிமுடைய அறிவித்தல் விஞ்ஞானத்தின் எதிர்வு கூறலுக்கு முரண்பாடாக அமைந்தால் அவ்வறிவித்தல் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.


2006.09.06 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தலைமயகத்தில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் சார்பிலும், கொழும்பு பெரிய பள்ளிவாசல் சார்பிலும் ஒன்று கூடிய மெளலவிகள் பிறை பார்த்தல் தொடர்பாக ஏகமனதாக மேற்கொண்ட தீர்மானங்கள் கடந்த வாரங்களில் தொடர்பூடகங்களுக்கூடாக நாட்டு மக்களுக்கு அறிவிக்கப்பட்டன.

நபி சள்ளல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், நாம் உம்மி சமுதாயமாவோம். எழுதுவதை அறிய மாட்டோம்;  விண் கலையையும் (வானவியல் கணக்குகளையும்) அறிய மாட்டோம். 

(நூல்: ஸஹீஹுல் புகாரி) என்று கூற , 


கில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தலைப்பிறை பார்ப்பது தொடர்பிலான முக்கிய தீர்மானம் பின்வருமாறு அமைகின்றது:

     ஒரு நாளில் பிறை வெற்றுக் கண்ணுக்குப் புலப்படுவது சாத்தியமற்றது என நம்பகமான முஸ்லிமான வானியல் அறிஞர்கள் உறுதி செய்யுமிடத்து வானியல் அவதானத்தின் அடிப்படையிலான அந்நிலைப்பாடு ஏற்றக்கொள்ளப்படுவதோடு அவ்வடிப்படையில் அன்றைய தினம் பிறை காணமுடியாத நாளாகக் கொள்ளப்படும்.

ஒரு குறிப்பிட்ட நாளில் பிறை வெற்றுக் கண்களுக்குப் புலப்படுவது சாத்தியமற்றது என வானியல் கணிப்பீடுகள் உறுதி செய்யுமிடத்து கண்களால் பார்த்தவர்களின் சாட்சியம்  நிராகரிக்கப்படும் என்பது இமாம் தகிய்யுத்தீன் அஸ்ஸுப்கி (ரஹிமஹுல்லாஹ்) அவர்களின் தீர்ப்பாகும். வானியல் கணிப்பீடு என்பது உறுதியானது (கண்களால் பார்த்ததாகக் கூறும்) சாட்சியம் உறுதியற்றது உறுதியான ஒரு நிலைப்பாட்டுடன் உறுதியற்ற ஒரு நிலைப்பாடு முரண்பட முடியாது. என்கிறார் இமாம் ஸுப்கி (ரஹிமஹுல்லாஹ்).

குறைந்த பட்சம் பிறை கண்டதாக வரும் செய்தியை சரி காண்பதற்கு வானியலின் துணை நாடப்படலாம். இதன் பயனாக தப்பான நாளில் புதிய மாதம் ஆரம்பிக்கப்படுவது தவிர்க்கப்பட முடியும் என சில அறிஞர்கள் கருதுகின்றனர். தற்காலத்தில் இக்கருத்தை பல மெளலவிகள் ஆதரிக்கின்றனர். மிகவும் பொருத்தமானதும், நடுநிலையாதனதுமான கருத்தாக இது கொள்ளப்படுகின்றது. புகழ்பூத்த இஸ்லாமிய சட்டத்துறை அறிஞரான இப்னு ஹஜர் அல்ஹைதமீ (ரஹிமஹுல்லாஹ்) அவர்களின் கருத்தும் இதுவாகும்.

அதவாது, தலைப்பிறையைத் தான் கண்டதான ஒரு முஸ்லிமுடைய அறிவித்தல் விஞ்ஞானத்தின் எதிர்வு கூறலுக்கு முரண்பாடாக அமைந்தால் அவ்வறிவித்தல் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது. ஆயினும் விஞ்ஞானத்தின் எதிர்வு கூறல் இருந்த போதும் எவராலும் தலைப்பிறை வெற்றுக்கண்களால் காணப்படவில்லையாயின் அவ்வாறு அது கருதப்பட்டு நடப்பு மாதம் 30 நாட்களாக பூரணப்படத்தப்படும். வானியல் கணிப்பீடுகளை நம்பகமான முஸ்லிம் வானியல் அறிஞர்கள் உறுதி செய்தல் வேண்டும் என்பது எமது தீர்மானத்தில் இடம் பெற்றுள்ள ஒரு விடயமாகும். 

பிறை வெற்றுக் கண்களுக்குத் தென்படுவது அசாத்தியமானது என முடிவு செய்யப்பட்ட நாளில் ஒருவரோ அல்லது பலரோ பிறை கண்டதாகக் கருதினால் அவரோ அல்லது அவர்களோ தலைமைத்துவத்திற்குக் கட்டுப்படல் என்ற வகையிலும், முஸ்லிம் சமூகத்துடன் இணைந்து செல்லல் என்ற வகையிலும் குறித்த நாளில் நோன்பு நோற்பதற்கோ பெருநாள் கொண்டாடுவதற்கோ பிறரைத் தூண்டவோ, பிரகடனப்படுத்தவோ கூடாது. 

தனிப்பட்ட முறையில் அவரோ அல்லது அவர்களோ தான் அல்லது தாம் கண்டதாகக் கருதும் பிறையின் அடிப்படையில் செயற்படும் அனுமதியைப் பெறுவர்.  

இந்த முடிவும் எமது சுய ஆய்வின் அடிப்படையில் பிறந்த ஒன்றல்ல. இது எமது ஆரம்ப கால அறிஞர்கள், இமாம்கள் குர்ஆன், ஸுன்னாவின் ஒளியில் வெளியிட்டுள்ள கருத்தாகும்.

இமாம்களின் கருத்துப்படி அவர்கள் தனிப்பட்ட முறையில் ரகசியமாக நோன்பு நோற்கலாம். பெருநாளையும் கொண்டாடலாம்.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

இங்கு பரிதாபமான நிலை என்னவென்றால் இன்று முஸ்லிம் சமூகமும் பிறை விடயத்தில் இந்து மதத்தின் வழிமுறையைப் பின்பற்றுவதுதான். 


பிறை தொடர்பாக இந்துக்களின் அமாவாசையென்ற நாளை எமது மக்களும் எடுத்துக் கொண்டார்கள். முப்பதாம் பிறைக்குப் பின் பிறை மறைந்து விடும், அதன் பின்னர்தான் புதிய பிறை தோன்றுகிறது என்பது அமாவாசை தொடர்பாக இந்துக்களின் நிலைப்பாடாகும். 

ஆனால் இது பற்றிய இஸ்லாத்தின் நிலைப்பாடு வித்தியாசமானது. அதாவது முப்பதாவது பிறையின் பின்பு பிறை மறைந்து அமாவாசை ஏற்பட்டு அதன் பின்புதான் புதிய பிறை தோன்றுமென்ற கருத்து இஸ்லாமிய மார்க்கத்திலுள்ள அடிப்படைகளல்ல. 


அந்நிய மதத்தவர்களுக்கு முப்பதாம் பிறைக்குப் பின் மறைந்திருக்கும் பிறையைத் தேடிப் பிடிப்பதோ அல்லது தேடாது விட்டுவிடுவதோ எந்த விதத்திலும் முக்கியத்துவமுடையதொன்றல்ல. 

இஸ்லாமிய மார்க்கம் பிறையைக் காணவில்லையென்றால் அதனை எவ்வாறேனும் தேடிக் கண்டுபிடிக்கச் சொல்லவில்லை. இந்த விடயம் பற்றி அல்லாஹ்வின் து}தர் ஸல்லல்லாஹ{ அலைஹி வஸல்லம் எமக்கு வழிகாட்டாமல் செல்லவுமில்லை. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:

பஇதா ஹும் அலைக்குமுஷ் ஷஹ்ர பஅதிம்முஹு ஸலாஸீன்

“உங்களுக்கு அது மறைக்கப்பட்டால் மாதத்தை முப்பதாகப் பூரணமாக்குங்கள்”

இவ்வாறுதான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எங்களுக்குச் சொல்லித் தருகிறார்கள். எனவே இருபத்தி ஒன்பதாம் பிறைக்குப் பின்னர் பிறை தென்படவில்லையென்றால் அதனை அடுத்துள்ள நிலை தொடர்பாக இஸ்லாமிய மார்க்கத்தின் அடிப்படையும் அந்நிய மார்க்கங்களின் வழிமுறையும் முற்றிலும் வித்தியாசமானதாகும். 


அந்நியர்களின் வழிமுறையில் பிறை தென்படவில்லையென்று அதனது தற்போதைய நிலையை அவர்கள் ஒரு கணிப்பில் எடுத்து விடுகின்றனர். இந்த வழிமுறை எமது மார்க்கத்தின் வழிமுறையாக ஒருபோதும் இருக்க முடியாது. 

இன்று எமது சமூகம் அந்நிய மத நம்பிக்கையையும் வழிமுறையையும் பிறை விடயத்தில் கையாண்டதால் யவ்முஷ் ஷக் எனும் சந்தேகத்துக்குரிய நாள் எப்போது என்பதைத் தீர்மானிக்கும் விடயத்தில் அமாவாசையென்று காரணம் காட்டி மார்க்கத்தில் தடுக்கப்பட்டுள்ள அந்நிய வழிமுறையான வானசாஸ்திரத்தின் அடிப்படைகளை பிறை காணுதலைத் தீர்மானிக்கும் அளவுகோளாக்கிவிட்டர்கள். 


இது இஸ்லாம் காட்டும் அடிப்படையா? நிச்சயமாக எமது முஸ்லிம் சமூகம் பிறை விடயத்தில் புகுத்தியிருப்பது அந்நியர்களின் வழிமுறைகளைத் தவிர வேரில்லை. இந்த அடிப்படையை நாம் நன்கு விளங்கிக் கொள்ள வேண்டும். 

நாம் இந்த முஸ்லிம் சமூகத்தை நோக்கி நீங்கள் ஏன் மார்க்க விடயத்தில் அந்நியர்களுடைய வழிமுறையைக் கையாள்கிறீர்களெனக் கேட்டால் அவர்கள் எங்களை நோக்கி இந்த வஹ்ஹாபிகள் கிறிஸ்தவர்களுக்குப் பின்னாலும் அமெரிக்காவுக்குப் பின்னாலும் இங்கிலாந்துக்குப் பின்னாலும் நிற்கின்றவர்களென்று பதிலுக்கு குதர்க்கம் பேசுகிறார்கள். 


உண்மையான நிலைப்பாடுகளை இன்னும் புரிந்து கொள்ளாத இவர்களை நோக்கி நாங்கள் பின்வருமாறு ஒரு கேள்வியைக் கேட்கலாம். அதாவது நீங்கள் உங்கள் வணக்கங்களில் " கலிலியோ " போன்றவர்களின் அடிப்படையையும் இந்துக்களின் வழிமுறைகளையும் எடுத்து அதனை உங்கள் மார்க்கத்தின் வழிமுறையாகச் சுமக்கின்றீர்கள். அவ்வாறாயின் இங்கு யார் உண்மையில் காபிர்களின் பின்னால் இருப்பது? 


வானவியல் அடிப்படையில் மாதத்தைத் தொடங்கலாமா ? என இவர்களிடம் வினவினால் அது முடியாது வானவியலைக் கையாள்வதை இஸ்லாம் தடை செய்திருக்கிறது என்று சொல்வார்கள். இப்படிக் கூறும் இவர்களே யவ்முஷ் ஷக் என்ற நாளில் மாத்திரம் வானவியலைக் கையாளலாமென்று ஒரு புதிய கருத்தைக் கூறுகிறார்கள். 


வானவியலைக் கையாள்வதைப் பொருத்தவரை அது தடை செய்யப்பட்டதொரு விடயமென்று இப்னு உமர் (ரழியல்லாஹு அன்ஹு) அறிவிக்கும் ஹதீஸை இமாம் புஹாரி முஸ்லிம் ஆகியோர் பதிவு செய்திருக்கிறார்கள்.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:
இன்னா உம்மதன் உம்மிய்யா லா நக்துபு வலா நஹ்ஸுபு யகூனுஷ் ஷஹ்ரு ஹாக்கதா ஹாக்கதா ஹாக்கதா அவ் ஹாக்கதா ஹாக்கதா ஹாக்கதா

நாங்கள் ஒரு உம்மி உம்மத். நாம் படிப்பையோ கணக்கு வழக்கையோ பாவிக்க மாட்டோம். மாதம் என்பது இப்படி இப்படி இப்படி ( என்று பத்து விரல்களையும் மூன்று தடவை காட்டி முப்பது எனக் குறிப்பிட்டார்கள் ). அல்லது இப்படி இப்படி இப்படி இருக்கும் ( என்று பத்து விரல்களையும் இரு தடவைகள் காட்டி இருபது என்று குறிப்பிட்டு மூன்றாவது தடவை ஒரு விரலை மடித்து ஒன்பது விரல்களைக் காட்டி இருபத்தி ஒன்பது எனக் குறிப்பிட்டார்கள் )

எனவே நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்ன இந்த வார்த்தையின் அடிப்படையில் ஷாபிஈ மதிஹப்வாதிகள், ஸலபிகள்; இன்னும் பலர் வானவியல் கல்வியைக் கையாள்வது தடையென்று தீர்ப்பளித்துள்ளார்கள். 


மேலே கூறப்பட்ட நபிமொழியின் அடிப்படையில் மாதம் தொடங்குவதையோ அல்லது முடிவதையோ தெரிந்து கொள்வதற்கு எந்தக் கல்வியையோ கணக்கு வழக்குகளையோ பயன்படுத்த முடியாதென்ற விடயத்தில் இஸ்லாமிய உம்மத் உறுதியான முடிவோடு இருக்கிறது. 


மாதத்தைத் தொடங்குவதற்கும் முடிப்பதற்கும் இஸ்லாம் எமக்கு இலகுவான வழியைக் காட்டித் தந்திருக்கிறது. அதாவது இருபத்தி ஒன்பது நாட்களில் அல்லது முப்பது நாட்களில் மாதத்தைப் பூரணமாக்கிக் கொள்ள முடியும் என இஸ்லாம் வழி காட்டுகிறது. யாரெல்லாம் பிறை விடயத்தில் அந்நிய வழிமுறையினைக் கையாளாமல் ஒரு முடிவினைக் காண முடியாதெனக் குறைபாடான ஈமானோடு கூறுகின்றார்களோ அல்லது அந்நிய வழிமுறைகளும் எமக்குத் தேவையெனக் கூறுகின்றார்களோ அவர்களின் வாதத்தின் அடிப்படையில் மனிதன் தனது முயற்சியால் பிறையைத் தேடுவதை விட இன்று முன்னேற்றம் கண்டுள்ள வானவியல் கல்வியின் மூலம் சிறப்பாக அந்தப் பிறையைத் தேடிப் பிடித்து விட முடியும் என்றுதான் கூற வேண்டும். 


அதன் கருத்து என்னவென்றால் நபி சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்  அவர்களின் நோன்புகளை விடவும்  ஸஹாபாக்களின் நோன்புகளை விடவும் அவர்களின் பெருநாள் தொழுகைகளை விடவும் இன்று நாங்கள் நோற்கும் நோன்புகளும் பெருநாள் தொழுகைகளும் சிறப்பானவை. அவர்களைவிட சிறப்பான ஒன்றைத்தான் நாம் கண்டு பிடித்திருக்கிறோம் என்றுதான் அவர்கள் கூறுவது அர்த்தப்படுகிறது. 


இந்த வார்த்தைகள் ஷஹாதத் சொன்ன முஸ்லிம் சொல்ல முடியாத வார்த்தைகளாகும். இவர்களிடம் இருக்கும் அறிவீனமும் மடமைத் தன்மைகளும் இவர்களை இவ்வாறான வார்த்தைகளைக் கூற வைத்து விடுகிறது. 


எனவேதான் இன்றிருக்கும் வானவியல் கல்வி தரமானதென இவர்கள் வாதிடுகிறார்கள். வானவியல் கல்வியைப் பொருத்த வரை அதில் ஈடுபடும் ஆராய்ச்சியாளர்கள் தங்கள் ஆய்வுகளின் முடிவுகளைக் கூறும் போது அவர்களின் கணிப்பும் அளவும் மிகச் சரியாக இன்னின்ன அளவு இருக்கும் என்று உறுதியுடன் கூறுவார்கள்.


அதற்கு உதாரணமாக சந்திரன் சூரியன் போன்றவை செக்கனுக்கு செல்லும் வேகம் தூரம் போன்ற அளவுகளைக் கூறலாம். ஆனால் உண்மை என்னவென்றால் அந்த ஆராய்ச்சியாளர்களில் ஒருவருடைய முடிவை மற்றவர் ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை. ஒருவருடைய அளவீடும் ஆராய்ச்சி முடிவுகளும் மற்றவருடைய முடிவுகளுடன் வித்தியாசப்பட்டு மோதிக் கொள்கிறது. அவர்கள் மத்தியிலேயே ஒரு தீர்க்கமான முடிவில்லாத நிலையில் முரண்படுகிறார்கள். அவர்கள் மத்தியிலுள்ள முரண்பாடுகள் செக்கனுக்கு எவ்வளவு வேகத்தில் செல்கிறது நிமிடத்தில் எவ்வளவு தூரம் செல்கிறது என்பதில் மட்டுமல்ல. அவர்கள் மத்தியில் எத்தனையோ பிரச்சினைகளும் முரண்பாடுகளும் இருக்கின்றன. 


அந்நிய மர்க்கத்தில் இருப்பவர்கள் தாங்கள் அனைவரும் ஒன்றுபோல காட்டிக் கொண்டாலும் அவர்களுக்குள் எத்தனையோ பிரிவுகளாகப் பிளவுபட்டிருக்கிறார்கள். அந்நியர்களின் இந்நிலையைத் தெரிந்திருந்தும் அவர்களின் ஆராய்ச்சியை மதித்த எமது முஸ்லிம் சமூகம் கண்களால் கண்ட பிறைக்கு ஆயிரம் குறைகள் கூறி அதனை ஏற்க மறுக்கின்றது. அந்நியர்களின் வழிமுறையைப் பின்பற்ற ஆரம்பித்ததினால் கண்களால் காணும் பிறையென்பது சந்தேகத்துக்குரியதாக மாறிவிட்டது. 


அல்லாஹ்வும் அவனது தூதரும் காட்டித் தராத அந்நிய வழிமுறையைக் கையாள்வது மட்டுமின்றி அந்த வழிமுறையின் மூலம் பெறப்பட்ட முடிவுகளை “பிழையில்லாதது”  “மிகச் சரியானது” என்று இந்த சமூகம் கூறுவதற்கான காரணம் முஸ்லிம்கள் இஸ்லாமியக் கல்வியைச் சரியாகப் பெற்றுக் கொள்ளாததேயாகும். இதனை விடவும் பரிதாபம் என்னவென்றால் இந்த முஸ்லிம் சமூகம் அந்நிய கலாச்சாரத்தில் வளர்ந்து அதிலேயே வாழ்ந்து கொண்டு அதனைச் சரிகாண்பதாகும்.


ரமளான் பிறை தென்பட்ட பிறகும் நாம் வகுத்துக் கொண்ட பூமியின் எல்லைக் கோடுகளை காரணம் காட்டி 'இது எங்களுக்குரிய பிறையல்ல" என்று ஒதுங்குவது மார்க்க அடிப்படையில் சரிதானா ? என்பதை நாம் சிந்திக்க வேண்டும்.


ரமளான் பிறை அறிவிக்ப்பட்டு விட்ட பிறகும், வெட்கப்பட்டு கொண்டு அல்லது ஊரோடு ஒத்துபோவோம் என்ற பலவீனமான எண்ணத்தில் அல்லாஹ் அறிவித்த ரமளானை நாம் அலட்சியப்படுத்தினால் குற்றவாளியாகி விடுவோம். 


இந்த அலட்சியம் பெருநாள் தினத்தில் நோன்பு வைக்கக் கூடாது என்ற நபி சள்ளல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் எச்சரிக்கையையும் புறக்கணிக்க வைக்கும் என்பதை அஞ்சி தலைப்பிறைக் குறித்து முடிவு செய்யுமாறு உங்கள் அனைவரையும் அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.