[இஸ்லாமிய மார்கத்தில் பிறையும் அந்நிய மார்கத்தில் பிறையும்]

இஸ்லாமிய மார்கத்தில் பிறையும் அந்நிய மார்கத்தில் பிறையும் 

எமது மார்க்கமான இஸ்லாத்துக்கும் ஏனைய மார்க்கங்களுக்கும் பிறை என்ற விடயத்தில் முற்றிலும் வேறுபட்ட அடிப்படை காணப்படுகிறதென்பதை இங்கு நாம் உறுதியாகக் கூற முடியும். இஸ்லாத்தலே மட்டும் தான் நாம் பிறையை ஹிலால் என்ற வார்த்தையில் அழைக்கின்றோம். 

ஹிலால் என்ற வார்த்தைக்குரிய வரைவிலக்கணம் ஏனைய மார்க்கங்களில் பிறை என்பதற்குள்ள வரைவிலக்கணத்திலிருந்து முற்றிலும் மாற்றமானதாகும். பூமியில் நின்று கண்களால் முதல் பிறையைக் கண்டு அதனைக் கண்டதாக சாட்சியம் கூறும்போது அவ்வாறு காணப்பட்ட முதல் பிறையே இஸ்லாத்தில் ஹிலால் எனப்படுகிறது. 


இந்த வழிமுறை ஏனைய மார்க்கங்களைச் சுமந்த சமூகங்களிடம் இல்லை.
அவர்களிடம் கேட்டால் , பிறை வானத்தில் தோன்றும் என்றுதான் சொல்வார்கள். ஆனால் இவர்கள் கையாளும் விஞ்ஞானம் கூறுவது என்னவென்றால் வானத்தில் சந்திரனின் நிலை எப்போதுமே அதன் அரைவாசி இருளாகவும் மற்றைய பகுதி வெளிச்சமாகவும் இருக்கும். இந்நிலை மாறுவதில்லை. 


நாம் பூமியிலிருந்து பார்க்கும் போதுதான் அது எமக்கு முதலாம் பிறையென்றும் இரண்டாம் பிறையென்றும் தோற்றமளிக்கிறது. இது பூமியிலிருந்து பார்க்கும் போது மட்டுமே சந்திரன் இவ்வாறு தோற்றமளிக்கிறது. ஆனால் வானத்தில் அதன் நிலை ஒன்றுதான். அது பாதி இருளாகவும் பாதி ஒளியாகவும் இருக்கும். இவ்வாறுதான் அவர்களுடைய விஞ்ஞானம் கூறுகிறது. 

எனவேதான் ஏனைய வழிமுறையைக் கையாண்டு பிறையைக் காண்பதற்கும் இஸ்லாமிய வழிமுறையில் பிறை காண்பதற்கும் வேறுபாடு காணப்படுகிறது. அந்நிய மார்க்கத்தில் அவர்கள் எந்த வழிமுறையிலேனும் பிறையென்பதற்கு விளக்கம் கொடுத்து இதுதான் பிறையென்று சொல்ல முடியும். ஆனால் இஸ்லாத்தலே பூமியில் நின்று கண்ணால் காணவில்லையென்றால் அதனைப் பிறையின் இஸ்லாமிய வார்த்தைப் பிரயோகமான ஹிலால் என்று அர்த்தம் கொடுக்க முடியாது. 

ஷஹாதத் கூறிய முஸ்லிம் பூமியில் நின்று கண்களால் காணாத ஒன்றை இஸ்லாத்தின் ஹிலாலின் வரைவிலக்கணத்தின் படி ஹிலாலென்று ஒருபோதும்  சொல்ல முடியாது. என்றாலும் ஏனைய மார்க்கங்களில் பிறையைக் கண்களால் காண வேண்டுமென்றோ அல்லது பூமியிலிருந்துதான் அதனைக் காண வேண்டுமென்றோ ஒரு நிபந்தனையோ அவசியமோ இல்லை. 


அவர்களைப் பொறுத்தவரை எந்தவொரு வழிமுறையிலேனும் பிறையைக் கண்டு விட்டார்களாயின் அதனை அவர்கள் புதிய பிறையென்று சொல்லி விடுவார்கள். எனவேதான் முதலில் நாம் பிறையென்ற விடயத்தில் இஸ்லாமிய மார்க்கத்திற்கும் ஏனைய மார்க்கங்களுக்கும் இடையிலான வேறுபாட்டைப் புரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகும். 

இஸ்லாமிய மார்க்கத்தில் ஹிலால் எனும் பிறையை பூமியிலிருந்து கண்களால் நேரடியே காண வேண்டும். அவ்வாறு நேரடியே காணவில்லையென்றால் அது ஹிலால் அல்ல. இஸ்லாத்தின் வரைவிலக்கணத்துக்குட்பட்ட பிறையல்ல. 


ஹிலால் என்ற வார்த்தை அறபியில் "அஹல்ல " என்ற வார்த்தையிலிருந்து வந்ததாகும். ஒருவர் ஒரு விடயத்தைக் கண்ணால் கண்டு நான் கண்டேன் என்று அறிவித்தார் என்பதே அஹல்ல என்பதன் பொருளாகும். எனவே அவ்வாறு ஒருவர் அல்லது ஒரு சமூகம் பூமியில் நின்று தங்கள் கண்களால் பிறையைக் கண்டு அதனைக் கண்டதாக அறிவிக்கும் போதுதான் அது ஹிலால் என்பதன் வரைவிலக்கணத்திற்கு அமைவான பிறையென்று அர்த்தம் கொள்ளப்படுகிறது. 


இதனடிப்படையில் உறுதியாகக் கூறக் கூடியது என்னவென்றால் எமது மார்க்கத்தில் பிறையென்பது மனித சமூகத்திலே ஷஹாதத் கூறிய முஸ்லிம்களில் எவரும் காணவில்லையென்றால் அதனைப் பிறையென்று இஸ்லாமிய மார்க்கம் ஏற்றுக் கொள்ளாது.

இந்த நிபந்தனை ஏனைய எந்த மார்க்கங்களிலும் இல்லை. அந்நிய சமூகங்களைப் பொறுத்தவரை அவர்களுடைய வானவியல் கல்வியின் அடிப்படையில் முடிவு செய்யப்பட்டு விட்டால் அது அவர்களிடத்தில் முதற் பிறையாகவோ அல்லது புதிய பிறையாகவோ கருதப்படலாம். 


எனவே பிறை என்ற பொதுவான பதத்திற்கும் ஹிலால் என்பதற்கும் வரைவிலக்கண ரீதியாக வேறுபாடுகள் இருக்கின்றன. தமிழ் மொழியில் பிறையென்று சொன்னால் அது வெருமனே வானில் தோன்றுவதைக் கூறுவதாகும். இது ஹிலாலோடு தொடர்புடையதல்ல. 


ஹிலால் என்பதை ஒரு வரைவிலக்கணத்தோடுதான் சொல்ல முடியும். மாறாக அதனை ஒரு தனி சொல்லில் மொழி பெயர்க்க முடியாது. தமிழில் பிறையென்று சொல்லப்படுவது போல ஆங்கிலத்தில் அதனை "க்ரஸன்ட்" என்று அழைப்பார்கள். ஆனால் க்ரஸன்ட் எனப்படுவது ஹிலாலை விடவும் அளவில் பெரியதாகும். க்ரஸன்ட் அல்லது பிறை என்பது ஹிலாலை விட பல விடயங்களில் வேறுபடுகிறது. அவற்றில் முக்கியமாக அந்நிய மார்க்கங்களில் பிறையென்பது மாதத்தினை தொடங்கி வைக்கும் ஒரு விடயமாகக் கருதப்படுவதில்லை. இஸ்லாமிய மார்க்கம் தான் பிறையைக் கொண்டு மாதத்தினை ஆரம்பிக்கிறது. இது பிறை காணும் விடயத்தில் முதலாவது அடிப்படை அம்சமாகும். 

ஹிலால் எனப்படுவது பூமியிலிருந்து ஒரு சமூகம் அதனைக் கண்களால் காண வேண்டும். அதிலும் ஷஹாதத் சொன்னவர்கள் மாத்திரமே காண வேண்டும்.  ஷஹாதத் சொல்லாதவன் அந்த ஹிலாலைக் கண்டாலும் அது சாட்சியாக ஏற்றுக்கொள்ள முடியாது. இதற்கு ஆதாரமாக அப்துல்லாஹ் இப்னு உமர் றழியல்லாஹுஅன்ஹு அறிவிக்கும் ஸஹீஹான ஹதீஸ் அபூதாவூதில் பதிவாகியிருக்கிறது.

ஒருவர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் தான் பிறையைக் கண்டதாகக் கூறிய வேளையில் அந்த மனிதரிடம் நபியவர்கள் நீர் வணக்கத்திற்குத் தகுதியானவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லையென்றும் முஹம்மத் அல்லாஹ்வின் தூதரென்றும் சாட்சியம் கூறுகிறீரா என்று கேட்டார்கள்.

எனவே இந்த ஹதீஸின் மூலம் நாம் அறியக் கூடியது என்னவென்றால் நபி ஸல்லல்லாஹு  அலைஹி வஸல்லம் அவர்கள் பிறை காணுதலின் நிபந்தனையாக முதலில் எடுத்து வைக்கும் விடயம் என்னவென்றால்,  சாட்சி சொல்பவன் ஷஹாதத் சொன்ன முஸ்லிமாக இருக்க வேண்டும் என்பதாகும். 


இந்த ஹதீஸ் அறிவித்தலில் சிலர் குறை கண்டு அறிவிப்பாளர் தொடரைக் குறையாகக் காட்டினாலும் , ஷெய்க் முஹம்மத் நாஸிருத்தீன் அல் அல்பானீ (றஹீமஹுல்லாஹ்) அவரது ஸில்ஸிலதுல் ஹதீஸ் ஸஹீஹா வில் இந்த ஹதீஸ் ஸஹீஹானது எனத் தீர்ப்பளித்துள்ளார்கள். அதே போன்று இமாம் அபூ ஜஅபர் அத் தஹாவீ (றஹீமஹுல்லாஹ்) அவரது ஷரஹ் முஷ்கில் ஆஸார் என்ற நூலில் இந்த ஹதீஸை ஸஹீஹ் எனக் கொண்டதாக உள்ளது. 


எனவே இவைகள் அனைத்தினதும் அடிப்படை என்னவென்றால் பூமியில் மனிதர்கள் நின்று கண்ணால் காண்பது மட்டுமின்றி அதனைக் காண்பவர் ஷஹாதத் சொன்ன முஸ்லிமாக இருக்க வேண்டும் என்பதாகும். இதுவே அதன் நிபந்தனையுமாகும். 

ஷஹாதத் சொன்ன ஒரு முஸ்லிம் பூமியில் நின்றவாறு புதிய பிறையைக் கண்டு விட்டானென்றால் அதனை நாம் ஹிலால் என்று சொல்வோம். எனவே; இன்னுமொரு மார்க்கத்தில் பிறை காணும் விடயத்தில் இப்படியானதொரு நிபந்தனை இருப்பதாக யாரேனும் சொல்ல முடியுமா? நிச்சயமாக அவ்வாறு இருக்க முடியாது. 


ஏனைய மார்க்கங்களில் பிறையென்பது வெறுமனே வானத்தில் தோன்றுவதாகச் சொல்லப்படுமே தவிர எங்கள் மார்க்கத்தைப் போன்று நிபந்தனைகள் எதுவும் அவைகளில் கிடையாது. ஏனைய மதங்களில் அவர்கள் பிறையினை வானசாஸ்திரக் கல்வியின் அடிப்படையில் காகிதத்தில் கணக்கிட்டு , இந்த நாளில் பிறை தோன்றுமென முடிவு செய்வார்கள். இதனை அறபியில் "அலா ஹிஸாபுன் நுஜும்" என்று அழைப்பார்கள். அதற்கு நட்சத்திர சாஸ்திரத்தின் அடிப்படையில் கணக்கிடுவது என்று பொருள். 


நட்சத்திரத்தின் அடிப்படையில் உலகில் வணக்கங்களை அமைத்துக் கொள்ளுகின்ற கூட்டங்கள் அனைத்தும் பிறையைப் பார்ப்பதற்கென்று நவீன விஞ்ஞானத்தின் அடிப்படையிலோ அல்லது தொலை நோக்கிகளைப் பயன்படுத்தித்தான் பிறை தோன்றுவதைக் கணிப்பிடுகிறார்களெனச் சொல்ல முடியாது. ஏனென்றால் நட்சத்திர சாஸ்திரத்தின் அடிப்படையில் கணக்கிடுபவர்கள் நபி சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் காலத்திலும் அதற்கு முன்னும் கூட இருந்திருக்கிறார்கள்.

இவ்வாறு நட்சட்திரத்தினைக் கொண்டு கணக்கிடுகின்றவர்களில் மஜுஸிகளும் (நெருப்பு வணங்கிகள்) இந்துக்களும்; குறிப்பிடத்தக்கவர்கள். இவ்வாறு அவர்களின் மார்க்கங்களில் பிறையைக் கணக்கிடும் வழிமுறைகள் பல காணப்படுகின்றன. 


இதற்கு மாறாக பிறை காண்பதில் எமது வழிமுறை என்ன? அது ஷஹாதத் சொன்ன முஸ்லிம் பூமியிலிருந்து வானத்தில் முதல் பிறையைக் கண்டு அதனைக் கண்டதாகச் சாட்சி சொல்ல வேண்டும். இதுதான் புதிய பிறையைக் காண்பதில் எமது மார்க்கத்தின் அடிப்படை. இதனைத் தவிரவுள்ள ஏனைய வழிமுறைகள் அனைத்தும் அந்நிய மார்க்கங்களின் வழிமுறைகளாகும். 

பிறை விடயத்தில் நாம் விளங்க வேண்டிய இன்னுமொரு முக்கிய அம்சம்,  எமது மார்க்கத்தில் பிறையென்ற விடயம் எமது வணக்கத்தோடு தொடர்புடைய ஒன்றாகும். ஏனைய மார்க்கங்களைப் பொருத்தவரை பிறை என்பது அவர்களின் மார்க்கத்துடன் தொடர்புடையதாகவும் இருக்கலாம், தொடர்பற்றதாகவும் இருக்கலாம். 


ஆனால் எம்மைப் பொருத்த வரை வருடா வருடம் எம்மைத் தூய்மைப் படுத்திக் கொள்வதற்கும் அல்லாஹ்விடம் இறையச்சமுள்ளவர்களாக மனிதர்களை மாற்றுவதற்கும் ஏற்படுத்தப்பட்டுள்ள ரமழான் மாதம் ஆரம்பிப்பதைத் தெரிந்து கொள்வதற்கும் இன்னும் அதே போன்று ஏனைய மாதங்களில் நோன்பு நோற்பதற்கும் அதன் தினத்தை அறிந்து கொள்வதற்கும் பிறையென்று நாம் அழைக்கும் ஹிலால் அவசியமான ஒன்றாக இருக்கிறது. 


எமது சமூகம் எந்தளவுக்கு ஹிலால் என்பதன் சரியான விளக்கத்தைப் புரிந்திருக்குமோ அந்தளவுக்கு தமது மார்க்க விடயங்களில் தரமாக இருக்க முடியும். அதே போன்று யாரெல்லாம் பிறை விடயத்தில் அந்நிய வழிமுறையினைக் கையாளாமல் ஒரு முடிவினைக் காண முடியாதெனக் குறைபாடான ஈமானோடு கூறுகின்றார்களோ அல்லது அந்நிய வழிமுறைகளும் எமக்குத் தேவையெனக் கூறுகின்றார்களோ அவர்களின் வாதத்தின் அடிப்படையில் மனிதன் தனது முயற்சியால் பிறையைத் தேடுவதை விட இன்று முன்னேற்றம் கண்டுள்ள வானவியல் கல்வியின் மூலம் சிறப்பாக அந்தப் பிறையைத் தேடிப் பிடித்து விட முடியும் என்றுதான் கூற வேண்டும்.

அதன் கருத்து என்னவென்றால் நபி சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் நோன்புகளை விடவும் ஸஹாபாக்களின் நோன்புகளை விடவும் அவர்களின் பெருநாள் தொழுகைகளை விடவும் இன்று நாங்கள் நோற்கும் நோன்புகளும் பெருநாள் தொழுகைகளும் சிறப்பானவை. அவர்களைவிட சிறப்பான ஒன்றைத்தான் நாம் கண்டு பிடித்திருக்கிறோம் என்றுதான் அவர்கள் கூறுவது அர்த்தப்படுகிறது. இந்த வார்த்தைகள் ஷஹாதத் சொன்ன முஸ்லிம் சொல்ல முடியாத வார்த்தைகளாகும். இவர்களிடம் இருக்கும் அறிவீனமும் மடமைத் தன்மைகளும் இவர்களை இவ்வாறான வார்த்தைகளைக் கூற வைத்து விடுகிறது. 


எனவேதான் இன்றிருக்கும் வானவியல் கல்வி தரமானதென இவர்கள் வாதிடுகிறார்கள். வானவியல் கல்வியைப் பொருத்த வரை அதில் ஈடுபடும் ஆராய்ச்சியாளர்கள் தங்கள் ஆய்வுகளின் முடிவுகளைக் கூறும் போது அவர்களின் கணிப்பும் அளவும் மிகச் சரியாக இன்னின்ன அளவு இருக்கும் என்று உறுதியுடன் கூறுவார்கள்.

அதற்கு உதாரணமாக சந்திரன் சூரியன் போன்றவை செக்கனுக்கு செல்லும் வேகம் தூரம் போன்ற அளவுகளைக் கூறலாம். ஆனால் உண்மை என்னவென்றால் அந்த ஆராய்ச்சியாளர்களில் ஒருவருடைய முடிவை மற்றவர் ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை. ஒருவருடைய அளவீடும் ஆராய்ச்சி முடிவுகளும் மற்றவருடைய முடிவுகளுடன் வித்தியாசப்பட்டு மோதிக் கொள்கிறது. அவர்கள் மத்தியிலேயே ஒரு தீர்க்கமான முடிவில்லாத நிலையில் முரண்படுகிறார்கள். அவர்கள் மத்தியிலுள்ள முரண்பாடுகள் செக்கனுக்கு எவ்வளவு வேகத்தில் செல்கிறது நிமிடத்தில் எவ்வளவு தூரம் செல்கிறது என்பதில் மட்டுமல்ல. அவர்கள் மத்தியில் எத்தனையோ பிரச்சினைகளும் முரண்பாடுகளும் இருக்கின்றன. 


அந்நிய மர்க்கத்தில் இருப்பவர்கள் தாங்கள் அனைவரும் ஒன்றுபோல காட்டிக் கொண்டாலும் அவர்களுக்குள் எத்தனையோ பிரிவுகளாகப் பிளவுபட்டிருக்கிறார்கள். அந்நியர்களின் இந்நிலையைத் தெரிந்திருந்தும் அவர்களின் ஆராய்ச்சியை மதித்த எமது முஸ்லிம் சமூகம் கண்களால் கண்ட பிறைக்கு ஆயிரம் குறைகள் கூறி அதனை ஏற்க மறுக்கின்றது. அந்நியர்களின் வழிமுறையைப் பின்பற்ற ஆரம்பித்ததினால் கண்களால் காணும் பிறையென்பது சந்தேகத்துக்குரியதாக மாறிவிட்டது. 


அல்லாஹ்வும் அவனது தூதரும் காட்டித் தராத அந்நிய வழிமுறையைக் கையாள்வது மட்டுமின்றி அந்த வழிமுறையின் மூலம் பெறப்பட்ட முடிவுகளை “பிழையில்லாதது” “மிகச் சரியானது” என்று இந்த சமூகம் கூறுவதற்கான காரணம் முஸ்லிம்கள் இஸ்லாமியக் கல்வியைச் சரியாகப் பெற்றுக் கொள்ளாததேயாகும். இதனை விடவும் பரிதாபம் என்னவென்றால் இந்த முஸ்லிம் சமூகம் அந்நிய கலாச்சாரத்தில் வளர்ந்து அதிலேயே வாழ்ந்து கொண்டு அதனைச் சரிகாண்பதாகும்.


Taken from a lecture of Shaykh Yahya silmy hafidhahullaah , transcribed by Bro Riyas Negambo.