[இபாதத்களுக்கு தடை செய்யப்பட்ட வானவியல் கல்வியும் அதனை உபயோகப்படுத்தும் ஜம்மியத்துல் உலமாவும்]

இபாதத்களுக்கு தடை செய்யப்பட்ட வானவியல் கல்வியும் அதனை உபயோகப்படுத்தும் ஜம்மியத்துல் உலமாவும்


நாம் அல்லாஹ்வின் அருளால் பிறை தொடர்பான தெளிவுபடுத்தல்களை பல தலைப்புகளில் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் எத்தி வைத்திருக்கிறோம். இத்தலைப்புகள் மீதான ஆழமான விளக்கங்கள் கொடுப்பதும் அதில் வருகின்ற சர்ச்சைகளுக்குப் பதிலளிப்பதும் தெளிவுபடுத்துவதும் எமது முக்கிய பங்காக இருந்தது. இவ்வருடம் பிறை காணுதல் தொடர்பாக இச்சமூகத்தில் கையாளப்படுகின்ற அந்நிய வழிமுறைகளையும் இஸ்லாமிய வழிமுறையையும் பிரித்துக் காட்ட வேண்டும் என்ற எமது நோக்கத்தினை செயற்படுத்துவதற்கு எல்லாம் வல்ல அல்லாஹ் எமக்கு அருள் புரிந்திருக்கிறான.


பிறை தொடர்பாக ஏனைய கொள்கையைச் சுமந்தவர்கள் பொது மக்கள் மத்தியில் பலவாறான விளக்கங்களைப் பரப்பி வருகிறார்கள். அதில் முக்கியமாக ‘அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா’ என்ற அமைப்பு பிறை சம்பந்தமாக மார்க்கத்தில் பல சர்ச்சைகளை உருவாக்கி விட்டது. 


அந்த வகையில், அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவுக்கும் பிறை தொடர்பாக ஏனைய கருத்துகளைச் சுமந்தவர்களுக்கும் இன்னும் பிறை காணுதலில் இஸ்லாமிய மார்க்கத்தின் வழிமுறையைத் தவிர்ந்து கொண்டு யாரெல்லாம் ஏனைய வழிமுறையைக் கையாள்கிறார்களோ அத்தகையவர்களுக்கும் ஒரு பதிலாகவும் எங்களுடைய பிறை சம்பந்தமான ஆக்கங்கள் இருக்கும். இன்ஷா அல்லாஹ் 


எமது சமூகத்தில் இன்று மார்க்க விடயங்களில் அந்நிய வழிமுறைகளைக் கையாள்பவர்கள் இஸ்லாமிய மார்க்கம் தொடர்பாக சமூகத்தினுள் பல சந்தேகங்களை உருவாக்கி விட்டார்கள். அல்லாஹு தஆலா எமக்கு வழிகாட்டியாக இறக்கி வைத்த அல் குர்ஆனிலும் ஸுன்னாவிலும் அவ்வாறான சந்தேகங்களுக்கும் சர்ச்சைகளுக்கும் பதில்களை சிறப்பாகப் பெற்றுக்கொள்ள முடியும். அனைத்து விடயங்களுக்கும் நிச்சயமாக அதில்தான் தீர்விருக்கிறது. 


இந்த இஸ்லாமிய சமூகத்தில் பல கூட்டங்கள் தங்கள் மார்க்கத்தை அந்நிய வழிமுறைகளில் பின்பற்றுவதற்கு முயற்சி செய்வதைக் காண முடிகிறது. பிறை விடயத்தில் மட்டுமின்றி ஏனைய விடயங்களிலும் அந்நிய வழிமுறைகள் பின்பற்றப்படுகின்றன.


எந்தளவுக்கென்றால் இரட்சகனான அல்லாஹ்வை விளங்குவதற்குக் கூட பல்ஸபா, மன்திக், இல்முல்கலாம் போன்ற அந்நிய மார்க்கங்களின் அடிப்படையில் இஸ்லாமிய மத்ரஸாக்கள் என்று சொல்லப்படுகின்ற இடங்களில் போதிக்கப்படுகின்றன. இந்தக் கூட்டங்கள் அல்லாஹ்வை விளங்கும் விடயத்திலும் அல்லாஹ்வின் பெயர்களையும் பண்புகளையும் விளங்கும் விடயத்திலும் இரட்சகன் யாரென்று அறிந்து கொள்ளும் விடயத்திலும் அந்நியர்களின் கல்வியைக் கையாள்பவர்களாகவும் அதனைத் தவிர்ந்து கொள்ளாதவர்களாகவுமே இருக்கிறார்கள். இந்த அடிப்படையான காரணத்தினால் இன்று எமது சமூகம் சத்தியமான மார்க்கத்தை விளங்குவதில் இஸ்லாம் காட்டித் தந்த வழிமுறைகளை அறியாத சமூகமாக இருக்கிறது.


இன்னும் மார்க்கத்தின் முக்கிய அம்சங்களான கொள்கை, பிக்ஹ், வரலாறு, உஸுல் ஆகிய அனைத்திலும் இந்த சமூகம் அல்லாஹ்வும் அவனது தூதரும் காட்டித் தந்த வழிமுறையைத் தவிர்ந்து கொண்டு ஏனைய வழிமுறைகளில் அவர்களின் மார்க்கத்தைப் பின்பற்ற முயற்சி செய்கின்ற சமூகமாக இருக்கிறது. 


இது மிகவும் கவலைக்குரிய விடயமாகும். இவ்வாறான போக்கின் விளைவாக ஏற்பட்டிருப்பது என்னவெனில் அல்குர்ஆனும் ஸுன்னாவும் எதை நோக்கிக் கூறுகிறதோ அதனை அடையாத சமூகமாக அது மாறிவிட்டது. இன்னும் மனிதனுடைய ஏனைய நடவடிக்கையான திருமணம், வியாபாரம், ஆடை போன்றவற்றைக் கவனித்தால் அதிலும் கூட அல்லாஹ்வும் அவனது தூதரும் காடடித் தராத வழிமுறைகளே கையாளப்படுகின்றன.இதன் காரணம் இந்த சமூகம் தனது செயற்பாட்டின் அடிப்படையாக அல் கிதாப் அஸ்ஸுன்னா ஆகிய இரண்டையும் கையாண்டு அதன்படி செயற்படும் சமூகமாக இல்லாதிப்பதாகும். அந்நிய வழிமுறைகளான மன்திக், பல்ஸபா, இல்முல்கலாம் என்பதை மட்டுமின்றி அந்நியர்களான காபிர்களின் விளக்கங்களும் அவர்களுடைய அடிப்படைகளும் இஸ்லாமிய மார்க்கத்திற்கு அவசியமானதொன்றாக மாறிவிட்டதால் இன்று இஸ்லாத்தின் பெயரில் இஸ்லாம் சொல்லாத கொள்கை, இஸ்லாம் சொல்லாத பிக்ஹ், இஸ்லாம் சொல்லாத வாழ்க்கை, இஸ்லாம் சொல்லாத வழிமுறைகளெல்லாம் இன்று இஸ்லாத்தினுள் காண முடிகிறது. இது இவ்வாறு இருப்பினும் இன்றைய தலைப்பில் பிறையைப் பற்றிப் பேசவேண்டியிருப்பதால் அது தொடர்பான விடயங்களை மட்டும் உங்களுக்கு எத்தி வைக்க ஆசைப்படுகிறேன். 


இஸ்லாத்திலே பிறைகாணுதல் என்ற விடயத்தைப் பற்றிப் பேசும் இடத்தில் , ஷஹாதத் சொன்ன ஒரு முஸ்லிம் பூமியில் நின்றவாறு புதிய பிறையைக் கண்டு விட்டானென்றால் அதனை நாம் ஹிலால் என்று சொல்வோம். 


எனவே; இன்னுமொரு மார்க்கத்தில் பிறை காணும் விடயத்தில் இப்படியானதொரு நிபந்தனை இருப்பதாக யாரேனும் சொல்ல முடியுமா? நிச்சயமாக அவ்வாறு இருக்க முடியாது. 


ஏனைய மார்க்கங்களில் பிறையென்பது வெறுமனே வானத்தில் தோன்றுவதாகச் சொல்லப்படுமே தவிர எங்கள் மார்க்கத்தைப் போன்று நிபந்தனைகள் எதுவும் அவைகளில் கிடையாது. 


ஏனைய மதங்களில் அவர்கள் பிறையினை வானசாஸ்திரக் கல்வியின் அடிப்படையில் காகிதத்தில் கணக்கிட்டு இந்த நாளில் பிறை தோன்றுமென முடிவு செய்வார்கள். இதனை அறபியில் "அலா ஹிஸாபுன் நுஜும்" என்று அழைப்பார்கள். அதற்கு நட்சத்திர சாஸ்திரத்தின் அடிப்படையில் கணக்கிடுவது என்று பொருள். 


நட்சத்திரத்தின் அடிப்படையில் உலகில் வணக்கங்களை அமைத்துக் கொள்ளுகின்ற கூட்டங்கள் அனைத்தும் பிறையைப் பார்ப்பதற்கென்று நவீன விஞ்ஞானத்தின் அடிப்படையிலோ அல்லது தொலை நோக்கிகளைப் பயன்படுத்தித்தான் பிறை தோன்றுவதைக் கணிப்பிட வேண்டும் என்ற நிபந்தனையோ நிர்பந்தமோ இல்லை. அப்படித்தான் கணிப்பிடுகிறார்களெனச் சொல்லவும் முடியாது. 


ஏனென்றால் நட்சத்திர சாஸ்திரத்தின் அடிப்படையில் கணக்கிடுபவர்கள் நபி சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் காலத்திலும் அதற்கு முன்னும் கூட இருந்திருக்கிறார்கள்.


இவ்வாறு நட்சட்திரத்தினைக் கொண்டு கணக்கிடுகின்றவர்களில் மஜுஸிகளும் (நெருப்பு வணங்கிகள்) இந்துக்களும்; குறிப்பிடத்தக்கவர்கள். இவ்வாறு அவர்களின் மார்க்கங்களில் பிறையைக் கணக்கிடும் வழிமுறைகள் பல காணப்படுகின்றன. 


இதற்கு மாறாக பிறை காண்பதில் எமது வழிமுறை என்ன? அது ஷஹாதத் சொன்ன முஸ்லிம் பூமியிலிருந்து வானத்தில் முதல் பிறையைக் கண்டு அதனைக் கண்டதாகச் சாட்சி சொல்ல வேண்டும். இதுதான் புதிய பிறையைக் காண்பதில் எமது மார்க்கத்தின் அடிப்படை. இதனைத் தவிரவுள்ள ஏனைய வழிமுறைகள் அனைத்தும் அந்நிய மார்க்கங்களின் வழிமுறைகளாகும். 

இஸ்லாத்திலே பிறைகாணுதல் என்ற விடயத்தைப் பற்றிப் பேசும் இடத்தில் இஸ்லாமிய சமூகத்தில் உருவாகியிருக்கும் குழப்பங்களையும் சர்ச்சைகளையும் பற்றிப் பேசாமல் இருக்க முடியாது. இந்த இஸ்லாமிய உம்மத்தில் அல்லாஹ்வின் வேதத்தையும் அல்லாஹ்வின் தூதருடைய வழிமுறையையும் சரியாக விளங்காத மக்கள் இருக்கும் காரணத்தினால் அந்நியர்களின் வழிமுறைகளிலுள்ள அனைத்து அநியாயங்களும் எமது மார்க்கத்தினுள்ளும் புகுந்து விட்டன. 


இவ்வாறு புகுந்திருப்பது பிறை விடயத்தில் மடடுமல்ல. மாறாக தொழுகையிலும் கொள்கையிலும் இன்னும் மார்க்கத்தின் பல பகுதிகளிலும் அந்நிய வழிமுறைகளின் பாதிப்புகள் பல உள்ளன. இதில் எதனை எடுத்தாலும் அதற்குள் பித்அத்கள் நுழைந்ததன் காரணம் அந்நிய வழிமுறைகள் எமது மார்க்கத்தினுள் ஊடுருவியதுதான் என்பதை தெட்டத் தெளிவாக நாம் நிரூபிக்க முடியும். 

அந்நிய மார்க்கங்களின் வழிமுறைகளைக் கையாள்பவர்களைப் பற்றிக் கூறுவதாயின் அந்நிய மார்க்கங்களைப் பொருத்தவரை அவர்கள் கணிப்பிடும் வானவியல் அடிப்படையில் அவர்களிடம் நாட்டுக்கு நாடு வேறுபாடென்ற பிரச்சினை கிடையாது. அவர்களில் ஒவ்வொரு கூட்டத்தாருக்கும் அவர்கள் கணிப்பிடும் வழிமுறை ஒன்றுக்கொன்று வித்தியாசமானதாகும். 

அதே போன்று நம் சமூகத்தில் அந்த அந்நியர்களின் வழியில் செல்லும் கூட்டத்தினரைப் பொருத்தவரை அவர்களில் ஒவ்வொரு ஷெய்குக்கும் ஒவ்வொரு வழிமுறை இருக்கிறது. ஒவ்வொரு தர்காவுக்காவுக்கும் ஒவ்வொரு வழிமுறை இருக்கிறது. அவர்கள் மத்தியில் நாட்டுக்கு நாடென்ற கருத்துகள் கிடையாது. அவர்களைப் பொருத்தவரை நட்சத்திரக் கணிப்பின் அடிப்படையில் அதனைக் கணித்துக் கொள்வார்கள். இவ்வாறு கணிப்பிடும் முறைகளில் கூட ஒவ்வொரு தர்காவிலுமுள்ள ஷெய்க்மாருக்கும் ஒவ்வொரு கணிப்பு முறை இருக்கிறது. 

அந்தக் கணிப்பினடிப்படையில் அந்த ஷெய்க்மார்கள் மாதம் வருவதற்கு முன்பே இந்த நாளில்தான் எமக்கு றமழான் ஆரம்பிக்கிறதென்றும் இந்த நாளில்தான் எங்கள் பெருநாள் தினமென்றும் முடிவு செய்து விடுவார்கள். இதுதான் ஒவ்வொரு தர்காவிலும் அவர்களின் ஷெய்க்மார்கள் பிறைக் கணக்கை முடிவெடுக்கும் வழிமுறையாகும். இந்த வழிமுறை எங்கு பிறை கண்டாலும் ஏற்றுக் கொள்ள வேண்டுமென்ற கருத்திற்கோ நாட்டுக்கு நாடு தனித்தனியாக பிறை பார்க்க வேண்டுமென்ற கருத்திற்கோ சம்பந்தமானதல்ல. 

மாறாக இது அந்நிய மார்க்கங்களின் வழிமுறையோடு சம்பந்தமானதாகும். இவ்வாறு வானவியல் அல்லது வானசாஸ்திரத்தின் அடிப்படையில் கணக்கெடுப்பது இன்றிருக்கும் இந்துக்களினதும் நெருப்பு வணங்கிகளினதும் வழக்கமும் வழிமுறையுமாகும். இவ்வழிமுறை இந்துக்களுக்கும் நெருப்பு வணங்கிகளுக்கும் அவர்களின் முக்கியமான சம்பிரதாயமாக இருந்து வருகிறது. 

வானத்திலுள்ள கோள்களினதும் நட்சத்திரங்களினதும் நிலையைக் கவனித்து அதனைக் கொண்டு நல்ல நேரத்தையும் கெட்ட நேரத்தையும் கணித்துக் கொள்வது குறிப்பாக இந்துக்கள் மத்தியில் முக்கியதொரு விடயமாகக் கருதப்படுகிறது. இருப்பினும் அவ்வாறு கணிப்பதில் கூட அவர்களுக்கு மத்தியில் பல கருத்து வேறுபாடுகளும் பிரிவுகளும் காணப்படுகின்றன. 


பல்வேறு மதங்களில் நல்ல நாளையும் கெட்ட நாளையும் பிறந்த நாளின் பலனையும் இன்னும் எத்தனையோ விடயங்களையும் வானசாஸ்திரத்தைக் கொண்டுதான் முடிவெடுக்கிறார்கள். இன்று கூட இந்து மதத்தில் ஒருவர் திருமணம் செய்ய வேண்டுமென்றால் அவர்களின் மதகுருமார்களிடம் சென்று வானசாஸ்திரத்தின் அடிப்படையில் கணித்து ஒரு குறிப்பிட்ட நாளை திருமணத்திற்கான நல்ல நாளென்று முடிவு செய்து கொள்வார்கள். எனவே இவ்வாறான வழிமுறைகள் அந்நிய மதத்தைச் சேர்ந்தவர்களுடைய வழிமுறைகளென்பதை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும். 

இதன் அடிப்படையில் நாம் விளங்குவது என்னவென்றால் அந்நிய மார்க்கங்களைப் பொருத்த வரை அவர்களிடம் பிறையைக் கணக்கிடுவதில் பல்வேறு வழிமுறைகள் கையாளப்படுகின்றன. அவர்கள் அதனை நாட்டுக்கு நாடு வேறுபாடானதென்று கருதுவதில்லை. ஒரு விதத்தில் பிறையை நாட்டோடு தொடர்புபடுத்துவது ஒரு முட்டாள்தனமாகும். 

இந்துக்களின் மதகுருமார்களைப் பொருத்தவரை அவர்களுக்கு மத்தியில் பல கருத்து முறண்பாடுகள் இருக்கின்றன. இங்கு பரிதாபமான நிலை என்னவென்றால் இன்று முஸ்லிம் சமூகமும் பிறை விடயத்தில் இந்து மதத்தின் வழிமுறையைப் பின்பற்றுவதுதான். 


பிறை தொடர்பாக இந்துக்களின் அமாவாசையென்ற நாளை எமது மக்களும் எடுத்துக் கொண்டார்கள். முப்பதாம் பிறைக்குப் பின் பிறை மறைந்து விடும், அதன் பின்னர்தான் புதிய பிறை தோன்றுகிறது என்பது அமாவாசை தொடர்பாக இந்துக்களின் நிலைப்பாடாகும். 

ஆனால் இது பற்றிய இஸ்லாத்தின் நிலைப்பாடு வித்தியாசமானது. அதாவது முப்பதாவது பிறையின் பின்பு பிறை மறைந்து அமாவாசை ஏற்பட்டு அதன் பின்புதான் புதிய பிறை தோன்றுமென்ற கருத்து இஸ்லாமிய மார்க்கத்திலுள்ள அடிப்படைகளல்ல. 


அந்நிய மதத்தவர்களுக்கு முப்பதாம் பிறைக்குப் பின் மறைந்திருக்கும் பிறையைத் தேடிப் பிடிப்பதோ அல்லது தேடாது விட்டுவிடுவதோ எந்த விதத்திலும் முக்கியத்துவமுடையதொன்றல்ல. 

இஸ்லாமிய மார்க்கம் பிறையைக் காணவில்லையென்றால் அதனை எவ்வாறேனும் தேடிக் கண்டுபிடிக்கச் சொல்லவில்லை. இந்த விடயம் பற்றி அல்லாஹ்வின் து}தர் ஸல்லல்லாஹ{ அலைஹி வஸல்லம் எமக்கு வழிகாட்டாமல் செல்லவுமில்லை. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:

பஇதா ஹும் அலைக்குமுஷ் ஷஹ்ர பஅதிம்முஹு ஸலாஸீன்

“உங்களுக்கு அது மறைக்கப்பட்டால் மாதத்தை முப்பதாகப் பூரணமாக்குங்கள்”

இவ்வாறுதான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எங்களுக்குச் சொல்லித் தருகிறார்கள். எனவே இருபத்தி ஒன்பதாம் பிறைக்குப் பின்னர் பிறை தென்படவில்லையென்றால் அதனை அடுத்துள்ள நிலை தொடர்பாக இஸ்லாமிய மார்க்கத்தின் அடிப்படையும் அந்நிய மார்க்கங்களின் வழிமுறையும் முற்றிலும் வித்தியாசமானதாகும். 


அந்நியர்களின் வழிமுறையில் பிறை தென்படவில்லையென்று அதனது தற்போதைய நிலையை அவர்கள் ஒரு கணிப்பில் எடுத்து விடுகின்றனர். இந்த வழிமுறை எமது மார்க்கத்தின் வழிமுறையாக ஒருபோதும் இருக்க முடியாது. 

இன்று எமது சமூகம் அந்நிய மத நம்பிக்கையையும் வழிமுறையையும் பிறை விடயத்தில் கையாண்டதால் யவ்முஷ் ஷக் எனும் சந்தேகத்துக்குரிய நாள் எப்போது என்பதைத் தீர்மானிக்கும் விடயத்தில் அமாவாசையென்று காரணம் காட்டி மார்க்கத்தில் தடுக்கப்பட்டுள்ள அந்நிய வழிமுறையான வானசாஸ்திரத்தின் அடிப்படைகளை பிறை காணுதலைத் தீர்மானிக்கும் அளவுகோளாக்கிவிட்டர்கள். 


இது இஸ்லாம் காட்டும் அடிப்படையா? நிச்சயமாக எமது முஸ்லிம் சமூகம் பிறை விடயத்தில் புகுத்தியிருப்பது அந்நியர்களின் வழிமுறைகளைத் தவிர வேரில்லை. இந்த அடிப்படையை நாம் நன்கு விளங்கிக் கொள்ள வேண்டும். 

நாம் இந்த முஸ்லிம் சமூகத்தை நோக்கி நீங்கள் ஏன் மார்க்க விடயத்தில் அந்நியர்களுடைய வழிமுறையைக் கையாள்கிறீர்களெனக் கேட்டால் அவர்கள் எங்களை நோக்கி இந்த வஹ்ஹாபிகள் கிறிஸ்தவர்களுக்குப் பின்னாலும் அமெரிக்காவுக்குப் பின்னாலும் இங்கிலாந்துக்குப் பின்னாலும் நிற்கின்றவர்களென்று பதிலுக்கு குதர்க்கம் பேசுகிறார்கள். 


உண்மையான நிலைப்பாடுகளை இன்னும் புரிந்து கொள்ளாத இவர்களை நோக்கி நாங்கள் பின்வருமாறு ஒரு கேள்வியைக் கேட்கலாம். அதாவது நீங்கள் உங்கள் வணக்கங்களில் " கலிலியோ " போன்றவர்களின் அடிப்படையையும் இந்துக்களின் வழிமுறைகளையும் எடுத்து அதனை உங்கள் மார்க்கத்தின் வழிமுறையாகச் சுமக்கின்றீர்கள். அவ்வாறாயின் இங்கு யார் உண்மையில் காபிர்களின் பின்னால் இருப்பது? 


வானவியல் அடிப்படையில் மாதத்தைத் தொடங்கலாமா ? என இவர்களிடம் வினவினால் அது முடியாது வானவியலைக் கையாள்வதை இஸ்லாம் தடை செய்திருக்கிறது என்று சொல்வார்கள். இப்படிக் கூறும் இவர்களே யவ்முஷ் ஷக் என்ற நாளில் மாத்திரம் வானவியலைக் கையாளலாமென்று ஒரு புதிய கருத்தைக் கூறுகிறார்கள். 


வானவியலைக் கையாள்வதைப் பொருத்தவரை அது தடை செய்யப்பட்டதொரு விடயமென்று இப்னு உமர் (ரழியல்லாஹு அன்ஹு) அறிவிக்கும் ஹதீஸை இமாம் புஹாரி முஸ்லிம் ஆகியோர் பதிவு செய்திருக்கிறார்கள்.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:
இன்னா உம்மதன் உம்மிய்யா லா நக்துபு வலா நஹ்ஸுபு யகூனுஷ் ஷஹ்ரு ஹாக்கதா ஹாக்கதா ஹாக்கதா அவ் ஹாக்கதா ஹாக்கதா ஹாக்கதா

நாங்கள் ஒரு உம்மி உம்மத். நாம் படிப்பையோ கணக்கு வழக்கையோ பாவிக்க மாட்டோம். மாதம் என்பது இப்படி இப்படி இப்படி ( என்று பத்து விரல்களையும் மூன்று தடவை காட்டி முப்பது எனக் குறிப்பிட்டார்கள் ). அல்லது இப்படி இப்படி இப்படி இருக்கும் ( என்று பத்து விரல்களையும் இரு தடவைகள் காட்டி இருபது என்று குறிப்பிட்டு மூன்றாவது தடவை ஒரு விரலை மடித்து ஒன்பது விரல்களைக் காட்டி இருபத்தி ஒன்பது எனக் குறிப்பிட்டார்கள் )

எனவே நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்ன இந்த வார்த்தையின் அடிப்படையில் ஷாபிஈ மதிஹப்வாதிகள், ஸலபிகள்; இன்னும் பலர் வானவியல் கல்வியைக் கையாள்வது தடையென்று தீர்ப்பளித்துள்ளார்கள். 


ஆனால் இன்று எமது சமூகமோ ஒரு புறம் வானவியல் கல்வியைக் கையாள்வதைக் கூடாதென்று கூறிவிட்டு இன்னுமொரு புறத்தால் அந்தக் கல்வியை யவ்முஷ் ஷக்குடைய நாளில் மட்டும் கையாளலாமெனக் கூறுகின்றார்கள். 


றஸுலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களே அதனைத் தடை செய்திருக்கும்போது இவர்கள் எங்கிருந்து அந்தத் தடையை நீக்குவதற்கு அனுமதியைப் பெற்றுக் கொண்டார்கள்?.

மேலே கூறப்பட்ட நபிமொழியின் அடிப்படையில் மாதம் தொடங்குவதையோ அல்லது முடிவதையோ தெரிந்து கொள்வதற்கு எந்தக் கல்வியையோ கணக்கு வழக்குகளையோ பயன்படுத்த முடியாதென்ற விடயத்தில் இஸ்லாமிய உம்மத் உறுதியான முடிவோடு இருக்கிறது. 


மாதத்தைத் தொடங்குவதற்கும் முடிப்பதற்கும் இஸ்லாம் எமக்கு இலகுவான வழியைக் காட்டித் தந்திருக்கிறது. அதாவது இருபத்தி ஒன்பது நாட்களில் அல்லது முப்பது நாட்களில் மாதத்தைப் பூரணமாக்கிக் கொள்ள முடியும் என இஸ்லாம் வழி காட்டுகிறது. 


இன்று யாரெல்லாம் நாங்கள் வானவியல் கல்வியைக் கையாள மாட்டோமென்றும் அதனைக் கையாள்வது மார்க்கத்தில் கூடாதென்றும் கூறுகிறார்களோ அவர்கள் அதனை றஸுலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் நபிமொழியை அறிந்தே அவ்வாறு கூறினார்கள். 


அவர்களை நோக்கி நான் கேட்க விரும்புவது என்னவென்றால் அந்நபிமொழி எதனைத் தடைசெய்யப்பட்டதென்று கூறுகின்றதோ அதனை நன்கு விளங்கி அதனைப் புரிந்த பின்னர் அதிலிருந்து தவிர்ந்து கொண்டீர்கள். இவ்வாறிருக்க யவ்முஷ் ஷக்கின் நாளில் மட்டும் வானவியலைப் பயன்படுத்துவதற்கான அனுமதி உங்களுக்கு எங்கிருந்து கிடைத்தது?. அவ்வாறு அனுமதி வழங்கும் ஆதாரத்தை நீங்கள் காட்ட முடியுமா? அது நிச்சயமாக முடியாது. 


நீங்கள் ஒரு விடயத்தை நன்கு விளங்கிக் கொள்ள வேண்டும். அதாவது மார்க்க விடயங்களில் எதனை நாம் முடிவாக எடுக்கின்றோமோ அதனை நாம் பின்பற்ற வேண்டும். எதனைச் செய்வதிலிருந்தும் அல்லாஹ்வின் தூதர் தடுத்தாரோ அதனை நாம் எவ்வாறு செய்ய முடியும்? அவ்வாறு நடந்து கொள்வது இஸ்லாத்தில் அனுமதிக்கப்பட்டதல்ல. 


இதனடிப்படையில் பார்த்தால் இன்று எமது சமூகத்திலுள்ளவர்கள் தடை செய்யப்பட்டதொரு விடயத்தை அது தடை செய்யப்பட்டதென்று தெரிந்து கொண்டுதான் அதனைக் கையாள்கிறார்கள். இந்த சமூகம் அறியாமையினால் அதனைச் செய்யவில்லை. நன்கு தெரிந்திருந்தாலும் ஏதோ ஒரு வகையில் அதனைச் சரிகாண்கிறார்கள். 

ஒரு காலம் இருந்தது. அன்று பிறை கலண்டர் என்ற பெயரில் அடுத்து வரும் வருடத்தில் வரக்கூடிய றமழான் மாதம் எந்த நாளில் ஆரம்பிக்கின்றதென முன்கூட்டியே அந்தக் கலண்டரில் அடையாளமிட்டிருப்பார்கள். ஆனால் அன்றிருந்த அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா இதற்கு எந்த ஆட்சேபனையும் தெரிவிக்கவில்லை. அவர்களும் அந்தக் கலண்டரைச் சரிகண்டு பின்பற்றினார்கள். இதனால் அவர்கள் சமூகத்தைத் தெளிவிலிருந்து தூரமாக்கிக் கொண்டிருந்தார்கள். 


ஆனால் இன்று அதே ஜம்இய்யதுல் உலமா அந்தப் பிறைக் கலண்டரை தவறானதென்று சொல்கிறது. அவர்களே அதனைத் தவறென்று ஏற்றுக் கொண்டதையிட்டு நான் அவர்களுக்கு நன்றி சொல்கிறேன். இது அவர்கள் இந்த உம்மத்திற்குச் செய்திருக்கும் பெரும் உதவியென்றே நான் கருதுகிறேன். 


ஏனென்றால் இந்த உம்மத்திலுள்ள அனைவரும் பிறைக் கலண்டர் மீது ஒரு தனி நம்பிக்கையை வைத்திருந்தார்கள். அதனைக் கொண்டுதான் அந்த மக்கள் அவர்களுடைய நோன்பையும் பெருநாளையும் அது போன்ற ஏனைய அவசியமான ஏற்பாடுகளையும் செய்து வந்தார்கள். 


ஆனால் இன்று அதனை ஜம்இய்யதுல் உலமா தவறென்று ஏற்றுக் கொள்கிறது. இந்த விடயம் தவறானதென பல வருடங்களுக்கு முன்பே நாம் அவர்களுக்கு எத்தி வைத்துவிட்டோம். அந்நேரத்தில் எமக்கெதிராக அவர்கள் வாதிட்டார்கள். தங்களின் அந்தக் கருத்திலிருந்து அவர்கள் வாபஸ் பெற்றதற்காக நாம் அல்லாஹ்வுக்கு நன்றி செழுத்துகிறோம். 


ஒரு காலத்தில் ஜம்இய்யதுல் உலமாவைச் சேர்ந்தவர்கள் வானொலி நிகழ்ச்சிகளில் வானவியலைக் கையாள்வதற்கு சார்பாகப் பேசினார்கள். அதை இந்த முஸ்லிம் சமூகமும் கேட்டுக் கொண்டிருந்தது. நாம் அன்றே இதற்கு மறுப்பைத் தெரிவித்திருந்தோம். இன்று அவர்கள் தாங்கள் கூறி வந்த அந்தக் கருத்தையும் முன்பு போல வாபஸ் வாங்கி விட்டார்கள். 


அவர்கள் சொல்வதாவது : வானவியலைப் பயன்படுத்தக் கூடாது. ஆனாலும் நாம் அதனை யவ்முஷ் ஷக்குடைய நாளில் மட்டும் பாவிப்பது குற்றமில்லை. அதாவது , ஜம்மியத்துல் உலமா பின்வருமாறு இன்று வாதாடுகிறார்கள். 

"தலைப்பிறையைத் தான் கண்டதாக ஒரு முஸ்லிமுடைய அறிவித்தல், வானியல் நிபுணர்களின் எதிர்வுகூறல்களுக்கு முன்னுரிமை கொடுத்து விஞ்ஞானத்தின் எதிர்வு கூறலுக்கு முரண்பாடாக அமைந்தால் அவ்வறிவித்தல் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது."

யாரெல்லாம் பிறை விடயத்தில் அந்நிய வழிமுறையினைக் கையாளாமல் ஒரு முடிவினைக் காண முடியாதெனக் குறைபாடான ஈமானோடு கூறுகின்றார்களோ அல்லது அந்நிய வழிமுறைகளும் எமக்குத் தேவையெனக் கூறுகின்றார்களோ அவர்களின் வாதத்தின் அடிப்படையில் மனிதன் தனது முயற்சியால் பிறையைத் தேடுவதை விட இன்று முன்னேற்றம் கண்டுள்ள வானவியல் கல்வியின் மூலம் சிறப்பாக அந்தப் பிறையைத் தேடிப் பிடித்து விட முடியும் என்றுதான் கூற வேண்டும். 


அதன் கருத்து என்னவென்றால் நபி சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்  அவர்களின் நோன்புகளை விடவும்  ஸஹாபாக்களின் நோன்புகளை விடவும் அவர்களின் பெருநாள் தொழுகைகளை விடவும் இன்று நாங்கள் நோற்கும் நோன்புகளும் பெருநாள் தொழுகைகளும் சிறப்பானவை. அவர்களைவிட சிறப்பான ஒன்றைத்தான் நாம் கண்டு பிடித்திருக்கிறோம் என்றுதான் அவர்கள் கூறுவது அர்த்தப்படுகிறது. 


இந்த வார்த்தைகள் ஷஹாதத் சொன்ன முஸ்லிம் சொல்ல முடியாத வார்த்தைகளாகும். இவர்களிடம் இருக்கும் அறிவீனமும் மடமைத் தன்மைகளும் இவர்களை இவ்வாறான வார்த்தைகளைக் கூற வைத்து விடுகிறது. 


எனவேதான் இன்றிருக்கும் வானவியல் கல்வி தரமானதென இவர்கள் வாதிடுகிறார்கள். வானவியல் கல்வியைப் பொருத்த வரை அதில் ஈடுபடும் ஆராய்ச்சியாளர்கள் தங்கள் ஆய்வுகளின் முடிவுகளைக் கூறும் போது அவர்களின் கணிப்பும் அளவும் மிகச் சரியாக இன்னின்ன அளவு இருக்கும் என்று உறுதியுடன் கூறுவார்கள்.


அதற்கு உதாரணமாக சந்திரன் சூரியன் போன்றவை செக்கனுக்கு செல்லும் வேகம் தூரம் போன்ற அளவுகளைக் கூறலாம். ஆனால் உண்மை என்னவென்றால் அந்த ஆராய்ச்சியாளர்களில் ஒருவருடைய முடிவை மற்றவர் ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை. ஒருவருடைய அளவீடும் ஆராய்ச்சி முடிவுகளும் மற்றவருடைய முடிவுகளுடன் வித்தியாசப்பட்டு மோதிக் கொள்கிறது. அவர்கள் மத்தியிலேயே ஒரு தீர்க்கமான முடிவில்லாத நிலையில் முரண்படுகிறார்கள். அவர்கள் மத்தியிலுள்ள முரண்பாடுகள் செக்கனுக்கு எவ்வளவு வேகத்தில் செல்கிறது நிமிடத்தில் எவ்வளவு தூரம் செல்கிறது என்பதில் மட்டுமல்ல. அவர்கள் மத்தியில் எத்தனையோ பிரச்சினைகளும் முரண்பாடுகளும் இருக்கின்றன. 


அந்நிய மர்க்கத்தில் இருப்பவர்கள் தாங்கள் அனைவரும் ஒன்றுபோல காட்டிக் கொண்டாலும் அவர்களுக்குள் எத்தனையோ பிரிவுகளாகப் பிளவுபட்டிருக்கிறார்கள். அந்நியர்களின் இந்நிலையைத் தெரிந்திருந்தும் அவர்களின் ஆராய்ச்சியை மதித்த எமது முஸ்லிம் சமூகம் கண்களால் கண்ட பிறைக்கு ஆயிரம் குறைகள் கூறி அதனை ஏற்க மறுக்கின்றது. அந்நியர்களின் வழிமுறையைப் பின்பற்ற ஆரம்பித்ததினால் கண்களால் காணும் பிறையென்பது சந்தேகத்துக்குரியதாக மாறிவிட்டது. 


அல்லாஹ்வும் அவனது தூதரும் காட்டித் தராத அந்நிய வழிமுறையைக் கையாள்வது மட்டுமின்றி அந்த வழிமுறையின் மூலம் பெறப்பட்ட முடிவுகளை “பிழையில்லாதது”  “மிகச் சரியானது” என்று இந்த சமூகம் கூறுவதற்கான காரணம் முஸ்லிம்கள் இஸ்லாமியக் கல்வியைச் சரியாகப் பெற்றுக் கொள்ளாததேயாகும். இதனை விடவும் பரிதாபம் என்னவென்றால் இந்த முஸ்லிம் சமூகம் அந்நிய கலாச்சாரத்தில் வளர்ந்து அதிலேயே வாழ்ந்து கொண்டு அதனைச் சரிகாண்பதாகும்.  


இவர்கள் தாங்கள் முன்பு கூறிக் கொண்டிருந்த கருத்துகளை எவ்வாறு வாபஸ் வாங்கினார்களோ அதே போன்று யவ்முஷ் ஷக்குடைய நாளில் மாத்திரம் வானவியலைக் கையாள்வது தவறில்லையென்ற கருத்தையும் இன்ஷா அல்லாஹ் இவர்கள் விரைவில் வாபஸ் வாங்குவார்களென்று நான் எதிர்பார்க்கிறேன். நாங்கள் யவ்முஷ் ஷக்குடைய நாளில் வானவியலைக் கையாள்வதை விட்டுவிட்டு பிறையைக் கண்டு தீர்மானிப்போம் என்று இவர்கள் கூறுவார்களென நான் எதிர்பார்க்றேன். 


இதே போன்று குர்ஆனிலும் ஸுன்னாவிலும் ஆதாரமில்லாத நாட்டுக்கு நாடு பிறையென்ற கருத்தையும் இவர்கள் தவறென்று புரிந்து அதில் விளக்கத்தைப் பெற்றுக் கொண்டு தங்களின் நிலையை அல்லாஹ்வும் அவனது தூதரும் காட்டித் தந்த வழியில் அமைத்துக் கொண்டு இந்த முஸ்லிம் சமூகத்திற்கு உதவியாகவும் ஒத்துழைப்பாகவும் இருப்பார்களென்று நான் எதிர் பார்க்கிறேன் இன்ஷா அல்லாஹ். Take from a lecture of Shaykh Yahya Silmy Hafidhahullah , Transcribed by Bro Riyas Negambo