பொய் நபிக் கொள்கையும் அபூ அப்துல்லாவின் அறியாமையும்

காதியானிகள் முஸ்லிம்கள் இல்லையா?

Filed under 2010 அக்டோபர் by அந்நஜாத்

K.M.H அபூ அப்தில்லாஹ் 


பொய் நபி மிர்சா குலாமை நபியாக நம்பிக்கை கொண்டு செயல்படுகிறவர்கள் தங்களை அஹமதியா முஸ்லிம்கள் என அழைத்துக் கொள்கின்றனர். மிர்சா குலாம் வடநாட்டில் காதியான் என்ற ஊரைச் சேர்ந்தவர் என்பதால், கீரனூரை சேர்ந்தவர் கீரனூரி என்றும், தானபவனைச் சேர்ந்தவர் தானவி என்றும் அழைக்கப் படுவதுபோல் காதியானி என்றும், அவரை நபியாக ஏற்றுள்ளவர்கள் காதியானிகள் என்றும் அழைக்கப்படுகின்றனர். இந்த காதியானிகள் பற்றி பல தவறான செய்திகள் பரப்பப்படுவதால், அவர்களின் உண்மை நிலையை நேர்வழி நடப்பவர்கள் குர்ஆன், ஹதீஸ் வெளிச்சத்தில் அறிந்து கொள்வது அவசியமாக இருக்கிறது.

 அஹ்மதியா முஸ்லிம்கள் என்ற காதியானிகள் செல்வது நேர்வழி அல்ல; கோணல் வழிகளில் ஒன்றே என்பது குர்ஆன், ஹதீஸை எவ்வித சுயவிளக்கமும் இல்லாமல் உள்ளது உள்ளபடி விளங்குகிறவர்கள் அறிய முடியும். மார்க்கம் முழுமை அடைந்து விட்டது; அதில் புதிதாக சேர்க்க ஒன்றுமே இல்லை (5:3) அல்லாஹ்விடம் அங்கீகரிக்கப்பட்ட மார்க்கம் 1431 வருடங்களுக்கு முன்னரே முழுமைப்படுத்தப்பட்ட அந்த மார்க்கம் மட்டுமே (3:19) அந்த மார்க்கத்தில் புதிதாக ஒரு நபியை ஏற்று, அவருக்கு இறைவனிடமிருந்து செய்தி வருகிறது என நம்பி, அதன்படி செயல்படுகிறவர்களின் புதிய மார்க்கம் ஒருபோதும் அல்லாஹ்வால் அங்கீகரிக்கப்படாது. அவர்கள் நாளை மறுமையில் பெரும் நட்டத்திற்குரியவர்கள் (3:85) முழுமைப் படுத்தப்பட்ட மார்க்கத்தை இறுதி வழிகாட்டி நெறிநூல் அல்குர்ஆன் மூலம் பெற்றுத்தந்த நபி முஹம்மது (சல்) அவர்களே காத்தமுன் நபி-முத்திரை நபி-இறுதி நபி (33:40) என்பதை 7:3, 18:102, 33:36, 2:186, 50:16, 56:85 இறைக் கட்டளைகள்படி அல்லாஹ்வுக்கும் தங்களுக்கும் இடையில் எவ்வித இடைத் தரகரையும் புகுத்தாமல், அப்படிப் பட்டவர்களின் சுய விளக்கங்களை ஏற்காமல், உள்ளதை உள்ளபடி விளங்குகிறவர்கள் நிச்சயம்  அறிய முடியும்.

 தங்களின் சுயபுத்தியை நபி(சல்) அவர்களுக்குப் பிறகு வந்த இடைத்தரகர்கள் யாரிடமும் கடன் கொடுத்துவிட்டு, அந்த இடைத் தரகர்கள்  கூறுவதை வேதவாக்காக(?) அது ஷைத்தானின் தூண்டுதலால் தங்களின் மனோ விருப்பப்படி இருப்பதால் ஏற்று நடப்பவர்கள் நாளை மறுமையில் நரகில் கிடந்து ஒப்பாரி வைப்பார்கள் என்பதை 33:66-68 இறைவாக்குகள் படம் பிடித்துக்  காட்டுகின்றன.

 மேலே நாம் குறிப்பிட்டுள்ள அனைத்து இறைவாக்குகளையும் நடுநிலையோடு நேரடியாகப் படித்து விளங்குகிறவர்கள் காதியானிகளின் அனைத்து வாதங்களும் தவறானவை; ஏற்கத்தக்கவை அல்ல என்பதை எவ்வித சந்தேகத்திற்கும்  இடமின்றி  விளங்க  முடியும்.

 மிர்சா குலாமை நபி என நிலை நாட்ட அவர்கள் காட்டும் வசனங்கள் அனைத்துமே அவர்கள் கூறும் சுய விளக்கங்களை கூறுபவை அல்ல; அவை கூறும் நேரடிக் கருத்தை திரித்து வளைத்து மறைத்து (பார்க்க 2:159, 161, 162) பொய் நபி மிர்சா குலாமை நபி என நிலைநாட்ட முற்படுவார்கள் காதியானிகள்.

 இறுதித் தூதர் முஹம்மது(சல்) அவர்களுக்கு அருளப்பட்ட இறுதி வழிகாட்டி நெறிநூல் அல்குர்ஆன் அருளப்படுவதற்கு முன்னுள்ள நெறிநூல்கள் உடனுக்குடன் பதிந்து பாதுகாக்கப்படவில்லை. எனவே நபி முஹம்மது (சல்) அவர்களுக்கு முன்னர் வந்த ஒவ்வொரு நபியும் இறைச் செய்திகளை வஹீ மூலம்  பெற்று, முன்னைய நபிமார்களுக்கு அருளப்பட்டதை உண்மைப்படுத்தும் நிலையிலும் அவற்றை விளக்கிச் செயல்படுத்திக் காட்டும் கட்டாயத்திலும்  இருந்தார்கள். இறுதி நெறிநூல் அல்குர்ஆன் உடனுக்குடன் பதிந்து பாதுகாக்கப்பட்டு விட்டதாலும், மார்க்கத்தை 23 வருடங்களாக நபி(சல்) அவர்கள் இரவையும் பகலைப் போல் விளக்கிச் செயல் படுத்திக் காட்டிவிட்டதாலும், எனக்குப் பின்னர் நபியோ, ரசூலோ இல்லவே இல்லை எனத் திட்டமாகத் தெளிவாக நபி(ஸல்) அறிவித்து விட்டதாலும், நபி(சல்) அவர்களுக்குப் பிறகு இறைவனிடமிருந்து இறைச் செய்தியை வஹீ மூலம் பெறும் அவசியமோ, முன்னைய நபிமார்களின் செய்திகளை உண்மைப்படுத்தும் கட்டாயமோ, மார்க்கத்தை மேல் அதிகமாக விளக்கும்  தேவையோ  இல்லவே  இல்லை.

 எனவே காதியானிகள் பொய் நபி மிர்சா குலாமை நபியாக நம்பிச் செயல்படுவது பெருத்த வழிகேடு என்பதில் அணுவளவும் சந்தேகமே இல்லை. மிர்சா குலாமை நபியாக நிலைநாட்ட அல்குர்ஆன் வசனங்களில் சிலவற்றை அவர்கள் திரித்து வளைத்துச் சுய விளக்கம் கொடுத்து (2:159,161,162)  வழிகெட்டுச் செல்கிறார்கள் என்பதிலும் அணுவத்தனையும் சந்தேகம் நேர் வழி நடப்பவர்களுக்கு இருக்க முடியாது.

 அதேபோல் ஈசப்னு மரியம் என நபி(சல்) குறிப்பிட்டுக் கூறியது, இந்த மிர்சா குலாமைத் தான் என்ற பொய்யான வாதத்தை நிலை நாட்ட ஈசா(அலை) அவர்கள் மரணித்து விட்டார்கள் என நிலைநாட்டும் கட்டாயமும் காதியானிகளுக்கு இருக்கிறது. எனவே அல்குர் ஆனில் காணப்படும் ஈசா(அலை) அவர்கள் மரணிக்கவில்லை; அல்லாஹ் அவரைத் தன்னளவில் உயர்த்திக் கொண்டான். அப்படி உயிரோடு உயர்த்த அல்லாஹ் வல்லமை பெற்றவன் (4:157,158) அல்குர்ஆன் இறங்கும்போது நபி(சல்) மரணிக்காமல் உயிரோடு இருந்தது போல், (பார்க்க 3:144) அதே குர்ஆன் இறங்கிய கி.பி.610-632 காலகட்டத்தில் ஈசா(அலை) மரணிக்காமல் உயிரோடிருந்ததை 5:75 இறை வாக்கு உறுதிப் படுத்துவதை நடுநிலையோடு சிந்திப்பவர்கள்  விளங்க  முடியும்.

 காதியானிகள் கூற்றுப்படி ஈசா(அலை) உயிருக்குப் பயந்து, தனது தூதுத்துவப் பணியைக் கைவிட்டு அல்லது மறந்து காஷ்மீருக்குத் தப்பித்தோம் பிழைத்தோம் என ஓடிப்போய் 120 வருடங்கள் வாழ்ந்து மரித்திருந்தால், அல்லாஹ் 5:75ல் மர்யமுடைய மகன் மசீஹ் இறந்து நூற்றாண்டுகள் கடந்து விட்டன என்று 610-632 காலகட்டத்தில் கூறி இருப்பானா? அல்லது அன்று உயிரோடிருந்த இறுதி நபி முஹம்மது(சல்) அவர்கள் இனிமேல் இறந்து போகக் கூடிய ஒரு தூதரே என 3:144ல் கூறி இருப்பதுபோல், ஈசா(அலை) அவர்களும் இனி மேல் இறந்து போகக் கூடிய ஒரு தூதரே என 5:75ல் அல்லாஹ் கூறி இருப்பானா? என்பதை நடுநிலையோடு சிந்திப்பவர்கள் உணர முடியும்.

 மேலும் 43:61ல் ஈசா(அலை) இறுதிக் காலத்திற்குரிய அத்தாட்சியாவார் என அல்லாஹ் கூறி இருப்பதிலிருந்து அவர் உலகம் அழியும் காலத்தில் இவ்வுலகிற்கு மீண்டும் வந்து வாழ்ந்து இறப்பார்; அவர் மரணமற்றவர் அல்லர்  என்பதை  உறுதிப்படுத்துகிறது.

 ஆதம்(அலை) அவர்களுக்கு முன்னரே படைக்கப்பட்ட ஜின் இனத்தைச் சேர்ந்த ஷைத்தான் உலகம் அழியும் வரை உயிரோடிருக்கும் அனுமதியை அல்லாஹ்விடம் பெற்றிருக்கும் நிலையில், ஈசா(அலை) இறுதி நாள் வரை இறக்காமல் உயிரோடிருப்பது அதிசயமல்ல. ஆயினும்  மரணிப்பவர்களே!

 ஈசா(அலை) அவர்கள் இதுவரை மரணிக்கவில்லை. உலகின் அழிவிற்கு சமீபமாக இவ்வுலகிற்கு மீண்டும் வந்து வாழ்ந்து மரணிப்பார்கள் என நம்புவது முக்கடவுள் கொள்கையிலிருக்கும் கிறித்தவர்களுக்குச் சாதகமான கொள்கை. நபி(ஸல்) அவர்கள் இறந்து ஈசா (அலை) எப்படி உயிரோடிருக்க முடியும்? போன்ற காதியானி களின் வாதமெல்லாம் அறிவு குறைந்த மக்களை ஏமாற்றும் தந்திரமே அன்றி எதார்த்தம் அல்ல.

 அல்லாஹ் எதை நாடுகிறானோ அதுவே நிறைவேறும் என்ற உறுதியான நம்பிக்கையுடையவர்களே நேர்வழி நடப்பவர்களாகும். தகப்பனின்றி  அல்லாஹ்வின் கட்டளைப்படி ஈசா(அலை) பிறந்தது, தொட்டில் குழந்தையாக இருக்கும்போதே பேசியது, குஷ்டரோகிகளை சுகப்படுத்தியது, இறந்தவர்களை உயிர்ப்பித்தது இன்னும் பல அதிசயங்களை நிகழ்த்திக் காட்டியது இவை அனைத்தும் அல்லாஹ்வின் நாட்டப் படி, அல்லாஹ்வின் கட்டளைப்படியே என்று உறுதியாக நம்புவது ஈமானில் உள்ளதாகும்.

 இதே வரிசையில் அல்லாஹ் ஈசா(அலை) அவர்களை தன்னளவில் உயர்த்தி இறுதி நாள் வரை உயிரோடு வைத்திருப்பது அல்லாஹ்வின் வல்லமைக்கு இயலாத -சாத்தியமில்லாத ஒன்றல்ல. இதுபற்றி 1988லேயே ஈசா(அலை) அவர்கள் பற்றி காதியானிகள் கிளப்பும் அனைத்து சந்தேகங்களுக்கும் குர்ஆன் ஹதீஸ் ஆதாரங்களுடன் பதிலளித்து “”காதியானிகளின் ஆகாசப்புளுகு” என்ற பெயரில் தனி நூல் ஒன்றை வெளியிட்டோம். அப்படி ஒரு நூல் வெளி வந்தால் அதை வரிக்கு வரி மறுத்து தனி நூல் தயாரித்து இலவசமாக வெளியிடுவோம் என சவால் விட்ட காதியானிகள் இன்று 22 வருடங்கள் ஆகியும் அவர்களது சவாலை நிறைவேற்ற முடியாமல் திணறுகிறார்கள். இதுவொன்றே அவர்கள் பொய்யர்கள். பொய்யான வாதங்களை எடுத்து வைத்து மக்களை வழிகெடுத்து வருகிறார்கள் என்பதைக் குன்றிலிட்ட தீபமாக உணர்த்தப் போதுமானதாக இருக்கிறது.

 ஆக மிர்சா குலாம் நபி என்ற வாதத்திலும், ஈசா(அலை) தனது 120 வயதில் இறந்துவிட்டார்கள் என்ற வாதத்திலும் பொய்யர்களாக இருக்கிறார்கள். இந்த இரண்டு பொய் வாதங்களை நிலைநாட்ட அவை சம்பந்தப்பட்ட குர்ஆன் வசனங்களுக்கும், ஹதீஸ்களுக்கும் அவர்களது சுய விளக்கங்களைக் கொடுத்து அவர்களை நம்பியுள்ளவர்களை ஏமாற்றுவார்கள்; வழி கெடுப்பார்கள். இதுவே உண்மையாகும்.

 சுன்னத் ஜமாஅத்தினர், பல இயக்கத்தினர், சலஃபிகள் என அனைத்து மவ்லவி வர்க்கமும் காதியானிகள் காஃபிர்கள் என்று கூறுவது போல், காதியானிகளும் மிர்சா குலாமை நபியாக ஏற்காதவர்களை முஸ்லிம்களாக ஒப்புக் கொள்ளமாட்டார்கள். அவர்கள் பின்னால் நின்று தொழமாட்டார்கள். அந்த வகையில் இந்த இரு சாராரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகளே; 21:92, 23:52 இறைவாக்குகளை நிராகரிப்பவர்களே!

காதியானிகள்  மீது  பொய்க்  குற்றச்சாட்டுக்கள்!

 மற்றபடி அவர்களது கலிமா “”அஷ்ஹது அன்லாயிலாஹ  இல்லல்லாஹுவ அஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹூவரசூலுஹூ” இல்லை; “”லா இலாஹ இல்லல்லாஹ் குலாம் அஹமது நபியுல்லாஹ்” என்று சுன்னத் ஜமா அத்தினர் கூறி வருவது பொய்யாகும். இது போல் பல பொய்களைக் கூறி அப்பாவி பொது மக்கள் காதியானிகள் மீது வெறுப்பைக் கக்கவும், அவர்கள் முஸ்லிம்கள் இல்லை; காஃபிர்கள் என தவறாக எண்ணவும் வழி வகுக்கிறார்கள்.

 மிர்சா குலாம் நபி, ஈசா(அலை) அவர்கள் அப்பொழுதே இறந்துவிட்டார்கள் என்ற இரண்டு விடயங்களிலும், அந்த இரண்டு சம்பந்தப் பட்ட செய்திகளிலும் தடம் புரண்டு பொய் வாதங்களை எடுத்து வைப்பார்களே அல்லாமல், அவை அல்லாத மற்ற விடயங்கள் அனைத்திலும் சுன்னத் ஜமாஅத்தினரைவிட அவர்கள் உயர் நிலையிலேயே இருக்கிறார்கள்.

 சுன்னத் ஜமாஅத்தினரிடம் காணப்படும் பெரும்பாலான ஷிர்க், குஃப்ர், பித்அத் செயல் பாடுகள் காதியானிகளிடம் இல்லை. தர்கா சடங்குகள், தரீக்கா சடங்குகள், மீலாது, மவ்லூது, கத்தம், ஃபாத்திஹா, 3ம், 7ம் 40ம், வருட ஃபாத்திஹா சடங்குகள், பலரின் பேரால் உள்ள ஃபாத்திஹா சடங்குகள், கூடு, கொடி, கந்தூரி சடங்குகள் இவை போன்ற அநாகரீக, மெளட்டீக, மூட நம்பிக்கைகள் நிறைந்த சடங்கு சம்பிரதாயங்கள் காதியானிகளிடம் காணப்படுவதில்லை.

 சுருங்கச் சொல்லின் இன்று சுன்னத் ஜமாஅத் தினரிடம் காணப்படும் வழிகேட்டுக் கொள்கைகளில், நரகில் தள்ளும் கொள்கைகளில் மிகப் பெரும்பாலானவை காதியானிகளிடம் இல்லவே இல்லை.

 இன்று தப்லீஃக் ஜமாஅத் உட்பட அனைத்து சுன்னத் ஜமாஅத்தினரிடம் காணப்படும், அல்லாஹ்வுக்கும் அடியார்களுக்கும் இடையில் எப்படிப்பட்ட இடைத்தரகரும் இல்லை என்று கூறும் 7:3, 18:102-106, 33:66-68, 2:186, 50:16, 56:85 போன்ற இறைக் கட்டளைகளை நிராகரித்து விட்டு-குஃப்ரிலாகி அல்லாஹ் அல்லாதவர்களின் பொருட்டால் கேட்கும் கொடிய ஷிர்க்கான பழக்கம்  காதியானிகளிடம்  இல்லை.

 தொழுகை, நோன்பு, ஜகாத் போன்றவற்றிலும் சுன்னத் ஜமாஅத்தினரைவிட சிறந்த முறையில் பேணுதலாக இருக்கிறார்கள் என்றே சொல்ல முடியும். இப்படி பலவகையிலும் சுன்னத் ஜமாஅத்தினரைவிட காதியானிகள் சிறந்து காணப்படுவதால்தான் பா.தாவூத்ஷா போன்ற அறிஞர்கள், பல சுய சிந்தனையாளர்கள் காதியானி கொள்கையால் ஈர்க்கப்பட்டார்கள். உண்மைதான்! சுன்னத் ஜமாஅத்தினரை விட காதியானிகள் அல்லாஹ்வுக்கு நெருக்க மானவர்கள். ஷைத்தானுக்குத் தூரமானவர்கள். காரணம் சுன்னத் ஜமாஅத்தினர் முன் சென்றவர்களைப் பின்பற்றுவது கொண்டு, அப்படிப்பட்ட மனிதர்களின் பொருட்டால் துஆ கேட்பது கொண்டு அல்லாஹ் 4:48,116 ஆகிய இரண்டு இடங்களில் எச்சரித்துக் கூறும் இறைவனால் மன்னிக்கவே படாத  இணை   வைத்தலை – ஷிர்க்கை  செய்கின்றனர். 

 1987 பிப்ரவரி மாநாட்டில் இடம் பெற்ற ஓர் உண்மைச் சம்பவத்தை நினைவு படுத்துகிறோம். திருச்சியில் நடைபெற்ற அம்மாநாட்டில் காதியானிகள் சில பிரசுரங்களைப் பட்டுவாடா செய்தனர். அப்போது எம்மோடு இணைந்திருந்து இப்போது பல பிரிவுகளிலாகிவிட்ட மதனிகள், உலவிகள், இம்தாதிகள், மிஸ்பாஹிகள், ரஹ்மானிகள் ஆக அனைத்துரக மவ்லவிகளும் காதியானிகள் பிரசுரம் கொடுப்பதைத் தடுத்து நிறுத்த வேண்டும் எனக் குதித்தனர். நாம் அவர்களிடம் சொன்னோம். அவர்களின் பிரசுரங்களிலுள்ள குர்ஆன், ஹதீஸுக்கு முரண்பட்ட கொள்கைகளை தெளிவுபடுத்த வக்கற்றவர்கள்தான் காதியானிகள் பிரசுரம் கொடுப்பதை தடுக்க முற்படுவார்கள். (இதே நிலையில்தான் இவர்கள் அனைவரும் இன்று அந்நஜாத்தைப் படிப்பதை விட்டும் தங்கள் ஆதரவாளர்களைத் தடுக்கிறார்கள்) காதியானிகளின் பிரசுரங்களிலுள்ள தவறுகளை தெளிவு படுத்த எம்மால் முடியும். பிரசுரம் கொடுப்பதைத் தடுக்க வேண்டாம் எனக் கூறி காதியானிகள் பிரசுரம்  கொடுப்பதை அனுமதித்தோம்.

 மாநாட்டு முடிவில் தீர்மானங்கள் போடும் போது காதியானிகள் காஃபிர்கள் எனத் தீர்மானம் போடவேண்டும் என அவர்கள் அனைவரும் வற்புறுத்தினார்கள். மார்க்கத்தில் அதற்கு அனுமதியே இல்லை எனக் கூறித்தடுக்க முயன்றோம். அவர்கள் அனைவரும் அதில் குறியாக இருந்ததால், அப்படியானால் அல்லாஹ்வுக்கே இணை வைக்கும் சுன்னத் ஜமாஅத்தினருக்கு குறிப்பாக கபுரு வணங்கிகளுக்கு காஃபிர் ஃபத்வா கொடுத்துவிட்டு, அதன் பின்னர் காதி யானிகளுக்கு காஃபிர் ஃபத்வா கொடுக்க முற்படுங்கள் எனக் கூறினோம்.

 காரணம் அல்லாஹ் தன்னந்தனியனான ஒரு வனே. அவனுக்கு இணையோ, துணையோ, இடைத்தரகரோ யாருமே இல்லை. அவனது அனுமதி இன்றி யாருமே அவனிடம் யாரைப் பற்றியும் பரிந்துரை செய்ய முடியாது. அந்த இறைவனுக்கே 7:3, 18:102 இறைக் கட்டளைகளுக்கு முரணாகச் செயல்பட்டு இணை வைப்பது-´ர்க் செய்வது பெருங்குற்றமா?

 அல்லது அல்லாஹ் தன்னந்தனியனான ஒருவனே என்பதுபோல் நபி முஹம்மது (சல்) அவர்கள் மட்டுமே நபியல்ல; ஆயிரக்கணக்கான நபிமார்கள் இவ்வுலகிற்கு அனுப்பப்பட்டார்கள். அவர்களில் நபி முஹம்மது(சல்) அவர்கள் இறுதி நபியாவார்கள் என்று அல்லாஹ் கூறுவதை நிராகரித்து விட்டு, நபி(ஸல்) அவர்களுக்குப் பின்னரும் ­ஷரீஅத்தோ, உம்மத்தோ இல்லாத டம்மி நபி வரமுடியும் என்று காதியானிகள் கூறுவது பெருங்குற்றமா? என்று கேட்டுவிட்டு, காதியானிகளுக்கு காஃபிர் ஃபத்வா கொடுப்பதாக இருந்தால் அதைவிடப் பெருங்குற்றத்தில் ஈடுபடும் சுன்னத் ஜமாஅத்தினருக்கு காஃபிர் ஃபத்வா கொடுத்துவிட்டு அதன் பின்னர் காதியானிகளுக்கு காஃபிர் ஃபத்வா கொடுங்கள் என்றோம்.

 உடனே பெருங்கொண்ட சுன்னத் ஜமாஅத்தினருக்கு காஃபிர் ஃபத்வா கொடுத்துவிட்டு, அதன் பின்னர் யாரிடம் போய் அழைப்புப் பணி செய்வது? என்று கூறி காதியானிகளுக்கு காஃபிர் ஃபத்வா கொடுப்பதைத் தவிர்க்க முன் வந்தனர். இதிலிருந்தே இந்த மவ்லவிகளின் உலகியல் ஆதாயக் குறிக்கோள் புரிகிறதா? இல்லையா?

இஸ்லாத்திற்கு முற்றிலும் முரண்பட்ட கொடிய செயல்!

 சமீபத்தில் ஒரு காதியானி முஸ்லிம் நடுத்தரப் பெண்மணியின் பிரேதத்தை அடக்கப்பட்ட பின்னர் வெளியில் எடுத்து வீசிய அரக்கத்தனத்தை,  காட்டுமிராண்டிச் செயலை, மனித நேயமற்ற துர்ச்செயலை உலகே கண்டு வெட்கித் தலை குனிந்தது. எதார்த்தத்தில் ஓர் இந்துவோ, ஒரு கிறித்தவரோ, அல்லது முஸ்லிம் அல்லாத யாருடைய ஆண் பிரேதமோ முஸ்லிம் மைய வாடியில் தவறுதலாக அடக்கப்பட்டிருந்தாலும் அதைத் தோண்டி எடுத்து வெளியில் வீசுவது இஸ் லாமிய மார்க்கம் அனுமதிக்கும் ஒரு  செயல்  அல்ல.

 ஒரு யூதரது பிரேதம் செல்லும் போது நபி (சல்) அவர்கள் எழுந்து நின்று, யாருடைய எந்த மதத்தினருடைய பிரேதமாக இருந்தாலும் அதற்கு உரிய மரியாதை செலுத்தவேண்டும் என்று இறைத்தூதர் கற்றுத் தந்திருக்க அதற்கு முரணாக, நபியின் அழகிய முன்மாதிரியை (பார்க்க 33:21, 36) புறந்தள்ளி, நிராகரித்து விட்டு ஓர் அஹ்மதியா முஸ்லிம் பெண்மணியின் அடக்கம் செய்யப்பட்ட பிரேதத்தை தோண்டி எடுத்து வெளியே எறிந்தவர்கள் குர்ஆன், ஹதீஸை பின்பற்றும் உண்மை முஸ்லிம்களா? அரக்க குணம் கொண்ட காட்டு மிராண்டிகளிடம் கூட இந்த ஈனச் செயலை நாம் பார்க்க முடியாது. இதுதான் மார்க்க அறிஞர்கள் என மார்தட்டும் புரோகித மவ்லவிகளின் இழி நிலை. அல்லாஹ் 7:175 முதல் 179 வரை கூறும் நீச குணங்கள் அனைத்தையும் அவர்களிடம் காணலாம்.

ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம்!

 ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம் என்பது பழமொழி. அன்றைய கூத்தாடிகள் இன்றைய நட்சத்திரங்கள்-நடிகர்கள். அவர்கள் மேடையில் நடிக்கும், பேசும் உயர் குணங்கள் எதையும் அவர்களின் நிஜ வாழ்க்கையில் பார்க்க முடியுமா? பரிபூரண பத்தினியாக நடிக்கும் ஒரு நடிகையிடம், நிஜவாழ்க்கையில் அந்த பத்தினித்தனத்தைப் பார்க்க முடிகிறதா?

 ….. முற்றிலும் துறந்த முனிவரும் அல்ல; நடிகை… படி தாண்டா பத்தினியும் அல்ல என்று கூறியது பிரபல்யம்.

 நடிகர், நடிகைகள் காசுக்காக நடிக்கிறார்கள். அதேபோல் மார்க்கத்தைப் பிழைப்பாகக் கொண்ட மவ்லவிகள் காசுக்காக நடிக்கத்தான் செய்வார்கள். கூத்தாடியைப் போல் சமுதாயத்தைப் பிளவு படுத்துவதில்தான் அவர்களது பிழைப்பே தங்கி இருக்கிறது.