[தேர்தல்களும் அதனால் ஏற்பட்ட பாதிப்புகளும்]

  • தேர்தல்களும் அதனால் ஏற்பட்ட பாதிப்புகளும்

பிஸ்மில்லாஹ் ஹிர் ரஹ்மானிர் ரஹீம், 

தேர்தல்கள் , ஜனநாயக வழி முறை , இவைகள் நபி வழி அல்ல . 


அருமை நபி சள்ளல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களோ, அவர்களை அடிச் சுவடாக பின்பற்றிய அருமை சஹாபாக்களோ , தாபியீன்களோ , தபஉத் தாபியீன்களோ , இவர்களை தொடர்ந்து வந்த இமாம்களோ , ஸலபுஸ் ஸாலிஹீன்களோ பின்பற்றிய வழி முறை அல்ல. 

நபி சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்  அவர்கள் தமக்குப் பிறகு அபூபக்ர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் ஆட்சித் தலைவராக வர வேண்டும் என்று சைக்கினை செய்து வைத்திருந்தார்கள். பல சந்தர்ப்பங்களில் அபூபக்ர் ரலியல்லாஹு அவர்களை தனக்கு அடுத்த நிலையில் உள்ளவர் என்று அடையாளம் காட்டி முன்னிறுத்தினார்கள்.  
இதனை அடிப்படையாக வைத்து  அடுத்த ஆட்சித் தலைவர் அபூபக்ர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் தான் என்று தீர்மானிக்கப்பட்டது. அடுத்தடுத்த ஆட்சியாளர்களும் இவ்வாறே தேர்ந்தெடுக்கப்பட்டனர். 
அபூபக்கர் ரலியல்லாஹு அன்ஹு தனக்கு பின் உமர் ரலியல்லாஹு அன்ஹு என்று கூறி சென்றார். உமர் ரலியல்லாஹு அன்ஹு தனக்கு பின் யார் என்பதை, தேர்ந்து எடுக்கும் பொறுப்பை அஷ்ரதுள் முபஸ்ஸரா குழுவிடம் ஒப்படைத்து விட்டு சென்றார். இப்படி தான் ஆட்சி தலைமை ஒன்றன் பின் ஒன்றாக தேர்ந்து எடுக்கப்பட்டது.   
ஆனால் பி. ஜே. போன்றோர் யூத வழிமுறையான ஜனநாயகம் இஸ்லாமிய வழிமுறை என்றும், இந்த யூத ஜனநாயக வழிமுறை ரீதியில் தான் அபூபக்கர் ரலியல்லாஹு அன்ஹு தொடக்கம் ஏனையோர் வரை தேர்ந்து எடுக்கப்பட்டனர் என்று பட்டவர்த்தனமாக பொய் உரைக்கின்றனர். இந்த ஜனநாயக வழி முறையை உலகுக்கு அறிமுக படுத்தியவர்களே யூதர்கள் என்று சிறு பிள்ளையும் அறியும்.
மாற்றமாக , யஹூதிகள் அறிமுகப்படுத்திய ஒரு வழி முறை தான் இந்த தேர்தல், ஜனநாயக வழி முறை. இந்த வழி முறையில் ஆட்சியாளர்களும், தலைவர்களும், நகராட்சி மன்ற உறுப்பினர்களும் தேர்ந்து எடுப்பது இஸ்லாமிய வழி முறை இல்லை. மாற்றமாக குப்பார்களின் வழி முறை ஆகும். 

குப்பார்களுக்கு ஒப்பாக நடப்பது, பிரதிபலிப்பது ஹராமாகும். 

இன்னும், இந்த வழி முறையினால் அல்லாஹ்வின் சட்டங்கள் ஒதுக்கப்பட்டு, மனிதர்களினால், இயற்றப்பட்ட சட்டங்கள் நிலை நாட்டப்படுகிறது. ஜனநாயகம் என்பது பெரும்பான்மை மக்களின் விருப்பத்திற்கேற்ப முடிவு செய்வதாகும். எனவே, இது குபூர் ஆகும். 
மேலும், பெரும்பான்மையினரின் விருப்பு  என்ற கொள்கையினால், நல்லவர்களும் கெட்டவர்களும் சமமாக்கப்படுகிறார்கள், சத்தியமும் , அசத்தியமும் சமமாக்கப்படுகிறது. தனக்கு விருப்பமானவர் என்ற விருப்பினால், தனக்கு விருப்பமான கட்சி என்ற பிரிவினால் முஸ்லிம்களின் ஒற்றுமை துண்டாடப்படுகிறது. 

இன்னும், இதற்கு அடிப்படையாக வெறுப்பு, எதிர்ப்பு, பிரிவினை ஏற்பட்டு, முஸ்லிம்கள் ஒருவரை ஒருவர் ஏமாற்றுவதும், சூழ்ச்சி செய்வதும், மயக்குவதும், கொலை செய்வது போன்ற கெட்ட , பாவமான காரியங்களில் ஈடுபடுகின்றனர். 

இந்த கெட்ட பாவமான காரியங்களை நிலை நாட்டுவதற்கு, உடலும் , பொருளும் , உயிரும், நேரமும் வீணாக செலவழிக்கப்படுகிறது. வீட்டில் இருக்க வேண்டிய பெண்கள் , வீதியில் இறங்கி இந்த பாவாமான் காரியங்களுக்கு ஒத்துழைப்பு செய்பவர்களாக, ஏன் அவர்களும் இந்த காரியங்களில் நேரடியாக ஈடுபடுபவர்களாக ஆகிவிடுகிறார்கள். 

இன்னும், ஒரு படி மேலே சென்று , ஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லிமை அரசியல் கட்சி வேற்றுமை காரணமாக கொலை செய்வதும், மற்ற முஸ்லிமின் சொத்தை சூறையாடுவதும் , இன்னொரு முஸ்லிமின் மானத்தையும் மரியாதையையும் அழிப்பதையும் சர்வ சாதாரணமாக செய்தும் விடுகின்றனர். 

இந்த குபூரான அரசியல், இஸ்லாத்திற்கான அரசியல் போராட்டத்திற்கான வழி முறை என்று கூட இன்று சில வழி கெட்ட சில இயக்கங்கள் கூறி அலைகின்றன. அதுவும் இரத்தம் சிந்தாத பொருளாதார நஷ்டத்தினை ஏற்படுத்தாத போராட்டம் என்று வேறு கூறிக் கொள்கிறார்கள். ஆயினும் இவர்கள் தமது மனசாட்சிக்கு எதிராகவும், குர்ஆனுக்கு எதிராகவும் குர்ஆன் வசனத்தைப் பொருத்தமற்ற இடத்தில் பயன்படுத்தி மக்களை வழிகெடுக்கின்றனர். 

முஸ்லிம்களின் சொத்தை சூறையாடுவதும், முஸ்லிமை கொலை செய்வதும், முஸ்லிமின் மானத்தை வாங்குவதும் சர்வ சாதாரணமாக நடைபெற்றுக் கொண்டிருப்பதை கண்டுக் கொண்டே இரத்தம் சிந்தாத பொருளாதார நஷ்டத்தினை ஏற்படுத்தாத போராட்ட வழி முறை என்று சொல்கிறார்கள் என்றால் நடைமுறை சாத்தியம் இல்லாத விடயங்களை தான் இந்த வழி கெட்ட இயக்க வாதிகள் பேசுகிறார்கள் மட்டுமில்லை, அத்தோடு , பச்சை குபூரின் மூலம் இஸ்லாத்தை நிலை நாட்ட, அல்லாஹ்வின் ஆட்சியை நிலை நாட்ட முயற்சி என்றால், இவர்கள் அறிந்த இஸ்லாம் அவ்வளவு தான். 
அல்லாஹ்வின் ஆட்சியை குபூரான அரசியலால் நிலை நாட்ட வேண்டும் என்று நேரடியாக இந்த வழி கெட்ட இயக்கங்கள் சொல்கிறது என்றால் , இந்த இயக்கங்களின் வழிகேட்டின் உச்சத்தை நாம் சொல்லி மக்கள் தெரிய வேண்டியதில்லை. அந்த அளவுக்கு பயக்கரமான வழிகேட்டில் இந்த இயக்கங்கள் பயணிக்கிறார்கள். 
அத்தோடு , இஸ்லாத்தை நிலை நாட்டும் வழி முறையை அறியாதவர்களா அல்லது, அறிந்துக் கொண்டே , வேண்டுமென்றே இஸ்லாத்தை அழிக்க வந்து விட்டார்களா என்று சிந்திக்க வேண்டியுள்ளது. அல்லாஹ் தான் அறிந்தவன்.
அத்தோடு, அல்லாஹ்வை மறுக்கும் காபிர்களுடன் கைகோர்த்து, அவர்களுக்கு ஆதரவு செலுத்தி அவனையே தனது தலைவனாக ஏற்படுத்திக் கொள்ள மேலே கூறிய அனைத்து அக்கிரமமான 
செயல்களையும் , கொலையை கூட தனது சகோதர முஸ்லிம் என்று கூட பார்க்காமல் செய்து விடுகின்றனர். இது முஸ்லிம் அல்லாத நாடுகளில் வாழும் முஸ்லிம்களின் நிலைப்பாடாகும்.
இன்னும், எமது நாட்டை பொறுத்தவரை, முஸ்லிம் தேர்தல் வேட்பாளர் மனு தாக்கல் செய்த பின்னர், எல்லா மத வழிபாட்டு தளங்களிலும் பூஜை மற்றும் பிரார்த்தனை நிகழ்சிகளில் ஈடுபடுவார். அதே போன்று, மாற்று மதத்தாரும், முஸ்லிம்களின் பள்ளிவாசல்களில் பிரார்த்தனைகளில் ஈடுபடுவர். 
அத்தோடு , தர்கா கப்ரு ஸ்தானங்களில் மாற்று மதத்தாருக்கு என்று விசேட நிகழ்சிகள் நடக்கும் . இது அடுத்த ஷிர்கிக்கு மேலாக ஷிர்க்குகள். இது அத்தனையும், வாக்கு பெறுவதற்காக , மக்களை திருப்தி அடையச் செய்து , அல்லாஹ்வின் திருப்தியை ஓரங்கட்டுவதாகும். 

இப்படி, குப்ரும் , ஷிர்க்கும் , பெரும் பாவங்களும் நிறைந்த ஒரு வழிமுறை தான் இந்த தேர்தல் வழிமுறை. 
எனவே, இந்த தேர்தல் வழி முறையில் முஸ்லிம்கள் ஈடுபடவும் முடியாது. அதற்கு ஆதரவாக தமது பங்களிப்பை செய்யவும் முடியாது. இப்படி பட்ட இந்த தேர்தல்களில் , எமது 
உரிமை என்று ஒரு முஸ்லிம் ஈடுபட முடியுமா ? முடியவே முடியாது. 

இது எமது முஸ்லிம் மக்களுக்கு , எமது மார்க்கத்தின் தீர்ப்பாக ,  ஒரு மார்க்க ரீதியான உபதேசமாக சொல்லப்படுகிறது. 

அல்லாஹ்வே மிக அறிந்தவன்.