[தமிழ் உலகும் ஷேக் யஹ்யாவின் மனம் திறந்த மடலும்]

தமிழ் உலகும் ஷேக் யஹ்யாவின் மனம் திறந்த மடலும்


الحمد لله رب العالمين والصلاة والسلام على من لا نبي بعده
وبعد


தமிழ் உலகில் இஸ்லாத்தின் பெயரில் பல இயக்கங்களும், தரீக்காக்களும் இயங்குவது ஒரு வெளிப்படையான உண்மையாகும். இன்னும் ஏனைய மதக்கலாச்சாரங்களுக்கு மத்தியில் வாழ்ந்து அவைகளால் பாதிக்கப்பட்டு, உண்மையான இஸ்லாத்தின் அடையாளத்தை அழித்துக்கொண்ட ஒரு சமூகமே இந்த தமிழ் உலகம்.

தமிழ் உலகத்தில் ஸலபுஸ்ஸாலிஹீன்களின் அழைப்புப்பணியையும் அதன் தூய வழிமுறையையும் எடுத்துக்காட்ட அல்லாஹ் எனக்கு செய்த அருளுக்காக அவனுக்கு முதலில் நன்றி செலுத்துகிறேன்.

இந்த ஸலபுஸ்ஸாலிஹீன்களின் வழிமுறையை தமிழ் உலகம் தொடர்ச்சியாக விளங்கி பின்பற்றி நபிவழியை தங்கள் வழிமுறையாக அமைத்துக் கொள்வதற்காக உலமாவுஸ் ஸுன்னாவின் கிதாபுகளில் இருந்து பாடங்களையும் , தஃவா நடவடிக்கைகளையும் ,நபி வழி நம் வழி என்ற சஞ்சிகையையும் , ஆரம்பிக்க வாய்ப்பளித்த அல்லாஹ்வுக்கே எல்லாப்புகழும், 

இது இவ்வாறிருக்க தமிழ் உலகில் குர்ஆனையும் ஸுன்னாவையும் தூய்மையாகப் பின்பற்ற முன் வந்த மக்களுக்கு வழிகாட்ட வந்த தவ்ஹீத் ஜமாஅத்கள் அதை பின்பற்றுவதற்கு முட்டுக்கட்டையாக மாறியிருக்கின்றன. 


இதனை அதிகமான மக்கள் அறியாத, உணராத காரணத்தினால் இத் தவ்ஹீதின் பெயரில் இயங்கும் கூட்டங்களின் அட்டகாசங்களை பகிரங்கப்படுத்துவது எனது முக்கியமான கடமையென்பதை உணர்ந்தேன். நான் 1998 முதல் 2011 வரை இந்தக் கூட்டங்களின் மத்தியில் ஸலபி தஃவாவை பொறுமையுடன் என் சக்திக்கு உட்பட்ட வகையில் எடுத்து செல்கிறேன். 

அந்த வகையில் முதலாவதாக: 


பொதுமக்கள் தூய இஸ்லாத்தையும், தகுதியான இஸ்லாமிய அழைப்பாளர்களையும் இனங்கண்டு அசத்தியங்களையும், அசத்தியவாதிகளையும் விட்டும் தூரமாக வேண்டும்.

இரண்டாவதாக: 


இஸ்லாமிய அழைப்பாளர்கள் ஸலபுஸ்ஸாலிஹீன்களின் வழிமுறையை இனங்கண்டு அழைப்புப்பணியில் நபிமார்களின் வழிமுறையை ஏற்றுக்கொண்டு அவரவரின் தனி வழிகளை விட்டுவிட வேண்டுமெனவும் எதிர்பார்க்கிறேன். தன்மானத்திற்காகவோ, சமூக அந்தஸ்திற்காகவோ, பணத்திற்காகவோ, பதவி பட்டங்களுக்காகவோ நபி வழியை அன்றி வேறொரு வழியைத் தேர்ந்தெடுக்கக் கூடாது எனவும் எதிர்பார்க்கிறேன்.

எமது தஃவாவின் மூலம் தமிழ் உலகைப் பாதித்திருக்கும் இப் புற்று நோயைக் குணப்படுத்த நபி வழியைக் கையாள்கிறோம். இவ்வடிப்படையில் நபிவழியில் தீர்வுகளைக் காண முனைகின்றோம். இவ்வழி நபிவழி இல்லை எனக் கருதினால் அதனை ஆதாரத்துடன் சுட்டிக் காட்டுவீர்கள் என எதிர்பார்க்கிறேன்.

தமிழ் உலகை நபிவழியில் வழி நடத்த வேண்டுமெனில் அத் தஸ்பிய்யா வத் தர்பிய்யா என்ற வழிமுறை முக்கியமான, அடிப்படையான அம்சமாகும்.

அத் தஸ்பிய்யா - التصفية


அத் தஸ்பிய்யா என்பது தூய்மையாக்கும் வழிமுறையாகும். இஸ்லாம் அல்லாத விடயங்களை தமிழ் உலகில் இருக்கும் முஸ்லிம்களிடமிருந்து அகற்றுவதற்கு நபிவழியை போன்று ஒரு தூய வழி வேறொன்றும் கிடையாது. எவ்வாறு நபி சள்ளல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அவர்களின் 


சமூகத்தில்


الأمر بالمعروف 


எனும் நன்மையை ஏவுதலையும் 


إنكار المنكر 


எனும் தீமையை தடுத்தலையும் கையாண்டார்களோ அவ்வாறே நாமும் எமது சமூகத்தில் முன்கர்களை – தீமைகளை தடுக்க பின்வாங்க மாட்டோம். 


இதனை எம்மிடம் தாராளமாகக் காணலாம். வாசகர்கள் இதனைப் புதுமை எனக் கருதினாலும், இந்நபிவழியை உங்கள் உள்ளத்தால் தூரமாக்கி விட வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம் . 


அத் தர்பிய்யா – التربية


ஒரு சமூகத்தைப் பயிற்றுவித்து கட்டியெழுப்புவதற்கு சிறப்பான வழிமுறை, நபிவழியே ஆகும். இவ்வழிமுறையை நாமும் கையாள்வது, தமிழ் உலகை  பயிற்றுவிப்பதற்கான ஒரு முயற்சி ஆகும். 


நபி சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பயிற்றுவித்த ஏகத்துவத்தின் அதே அடிப்படைகளை நாமும் முன்வைக்கிறோம். நீங்கள் இவ்வடிப்படைகளை இனிப்பானதாக உணராவிட்டாலும் நபிவழி என்பதை மதித்து அதனை இனிப்பானதாக ஆக்கிக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.


இந்த அத்தஸ்பிய்யா வத் தர்பிய்யா ஆகியவற்றைக் கையாண்டு நபிவழி நம்வழி என்று எமது தஃவாவை முன்னெடுத்து செல்கிறோம் . எனவே, தமிழ் உலகம் இதில் ஆர்வத்துடன் எம்முடன் இணைந்து நபிவழியை தங்களின் வழியாக்கிக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

நபிவழி சென்றால் தீனாகும்
பிறவழி சென்றால் வீணாகும்


சகல வல்லமைமிக்க அல்லாஹ்விற்குப் புகழ் சேர்த்து இறுதி நபி சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு ஸலாமும் ஸலவாத்தும் கூறி

அபூ அப்துர் ரஹ்மான் யஹ்யா சில்மி பின் முஹம்மது நூபார் பின் உஸ்மான் பின் நூஹ்லெப்பை ஆல மரைக்கார் அஸ்-ஸைலானி அஸ் ஸலபி அல் அஸரி 
ஆகிய நான் நபி சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மதீனாவை நோக்கி குடிபெயர்ந்திலிருந்து ஹிஜ்ரி 1432 ஜமாதுல் அவ்வல் 02ம் திகதி இதை வெளியிட்டேன் .