[அந்த 72 வழி கெட்ட கூட்டங்கள் ஹதீஸும் பி. ஜே. கூட்டங்களின் வழி கெட்ட விளக்கங்களும்]

அந்த 72 வழி கெட்ட கூட்டங்கள் ஹதீஸும்  பி. ஜே. கூட்டங்களின் வழி கெட்ட விளக்கங்களும்

நபி அவர்களுடைய 73 பிரிவு என்ற மேற்கண்ட ஹதீஸினை விளக்குவதற்காக தென் இந்தியாவைச் சேர்ந்த வழிகேடான தர்க்கவாதத்தில் மார்க்கத்தைச் சுமக்கும் பீ.ஜெய்னுல் ஆபிதீன் என்பவர் தனது உரையொன்றில் தனது தலைப்பாக 'அந்த 72 கூட்டங்கள் யார்?" என்று வைத்தார். இதுவே அவருடைய தலைப்பு. 

தனது தலைப்பில் 72 கூட்டங்களைப் பற்றி விளக்கிவிட்டு அந்த 72 வழிகேடான கூட்டத்தினுல்லேயே நபித்தோழர்களையும் அவர்களைப் பின்தொடந்தவர்களையும் சேர்த்து விடுகிறார். இதில் இந்த மனிதன் எந்தளவு மயக்கத்தை சமூகத்தினுள் ஊற்றிவிட்டான் என்று விளங்கமுடிகிறது. 

ஏனென்றால் நபி சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறிய வார்த்தை என்னவென்பதை தெரிந்து கொண்டே இந்த மனிதன் அந்தத் தெளிவான நபி மொழியின் வார்த்தையை மயக்கமானதாக மாற்றிவிட்டான். 


நபி சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் ஸஹாபாக்கள் சுவர்க்கம் செல்லும் அந்தக் கூட்டம் எதுவென்று கேட்டபோது நபி அவர்கள் கூறினார்கள்:
யார் இன்று நானும் எனது தோழர்களும் இருக்கும் நிலைப்பாட்டில் இருக்கிறார்களோ அவர்கள் (தான் அந்தக் கூட்டம்) . 


இந்த நபிமொழி தெட்டத் தெளிவாக நபித்தோழர்களின் பாதையை நேர்வழியின் பாதையென்று கூறியிருக்க , பீ.ஜெய்னுல் ஆபிதீன் என்பவர் அந்த உத்தம நபித்தோழர்களையும் அவர்களது அடிச்சுவடுகளோடு வாழ்ந்த சிறப்புமிக்க ஸலபுஸ்ஸாலிஹீன்களையும் 72 வழிகேடானவர்களின் பட்டியலில் சேர்த்து விட்டார். இது அந்த ஹதீஸின் விளக்கத்தின் பெயரில் கொடுக்கப்பட்ட மயக்கமாகும்.

நேரடியே ஹதீஸின் வார்த்தைகளைக் கையாண்டு எத்திவைக்காமல் தங்களின் வார்த்தைகளால் விளக்க முன்வந்ததால் நபித்தோழர்களுக்கும் வழிகேடர்கள் என்ற பட்டத்தை ஹலபி உஸுலைக் கையான்டவர்கள் கொடுத்து விட்டார்கள். 

நாம் இவர்களை பார்த்து கேட்கிறோம் , நபி அவர்கள் இந்த ஹதிஸைக் கூறியதிலிருந்து 1400 வருடங்கள் தாண்டிவிட்ட நிலையில் இன்று வரைக்கும் எந்தவொரு இஸ்லாமிய அறிஞர்களும் இந்த ஹதீஸில் கூறப்பட்டுள்ள வழிகேடர்களையும் நேர்வழி செல்பவர்களையும் பற்றிக் கூறவில்லையா ? அந்த 72 கூட்டங்களையும் பற்றி எந்த உலமாக்களும் எமக்கு வழிகாட்டவில்லையா ? அதனை இந்த பீ.ஜெய்னுல் ஆபிதீன் என்பவர் தான் சரியாக கண்டு பிடித்துக் கூறியிருக்கிறார் ? என்று தான் கூறுகிறீர்களா ? வல்லாஹு முஸ்தஹான் 

நிச்சயமாக வரலாற்றில் இந்தவிடயத்தைப் பற்றி பல உலமாக்கல் தெட்டத்தெளிவாக தங்களின் நூல்களில் விளக்கியிருக்கிறார்கள். அதில் குறிப்பாக இமாம் ஷஹ்ரஸ்தானி (ரஹிமஹுல்லாஹ்) எழுதிய - 'அல் மிலல் வன் நிஹல்"  இமாம் இப்னு ஹஸ்ம் அல் அந்துலூஸி (ரஹிமஹுல்லாஹ்) எழுதிய - 'அல் பிஸல் பில் மிலல் வன் நிகல்"  இமாம் அப்துல் காஹிர் பக்தாதி (ரஹிமஹுல்லாஹ்) எழுதிய 'அல் பரகு பைனல் பிரக்" போன்ற இன்னும் பல உலமாக்களுடைய நூல்களில் 72 வழிகேடான பிரிவுகள் யாரென்பதையும் நேர்வழியில் இருக்கும் அந்த ஒரு பிரிவு யாரென்பதையும் பற்றி தெளிவாக விளக்கப்பட்டிருக்கிறது. 

வரலாற்றிலே இமாம்கள் இதனை அழகாக விளக்கியது மட்டுமின்றி அந்த 72 வழிகேடான பிரிவுகளும் ஹவாரிஜ், ரவாபித், கதரிய்யா, ஜபரிய்யா, முர்ஜிஆ, முஃதஸிலா ஆகிய ஆறு அடிப்படையான பிரிவுகளாகளப் பிரிவதாகவும் எமக்கு எடுத்து விளக்கியிருக்கின்றார்கள். இந்த ஆறு அடிப்படையான பிரிவுகளில் ஒவ்வொன்றும் 12 பிரிவுகளாகவப் பிரிகிறது. 

எனவே அனைத்துப் பிரிவுகளும் அவர்களின் அடிப்படைகளின் ரீதியாக மொத்தத்தில் 72 கூட்டங்களாக அமைகிறது. இந்த அனைத்து கூட்டங்களுக்குமுரிய பட்டங்களையும் பெயர்களையும் உலமாக்கள் அடையாலம் காட்டுவதோடு அவர்கள் ஒவ்வொருவரும் வழிகேடானதன் காரணம் என்னவென்பதையும் எடுத்துக் காட்டுகிறார்கள். 

இது வரலாற்று உண்மையாக இருந்தும் பீ.ஜெய்னுல் ஆபிதீன் தனது தலைப்பில் கூறும் எந்தவொரு விடயத்திலும் இமாம்கள் கூறியதாக எந்த இமாமையும் அவர் அடையாளம் காட்டவில்லை. அதே போன்று அந்த இமாம்கள் எழுதிய எந்த ஒரு நூல்களின் பெயர்களையும் அடையாளம் காட்டப்படவில்லை. இந்த உலமாக்கள் நூல்களையும் சமூகத்துக்கு இவர் எடுத்துக்காட்டவுமில்லை. இந்த உலமாக்களின் உபதேசங்களை இந்த உம்மத்துக்கு கூறிவைக்கவுமில்லை. 

மாற்றமாக அவர் விளக்கிய அனைத்தும் வெறுமனே அவருடைய புத்தியில் தோன்றிய விளக்கங்களாகும். அவர் கூறும் வரலாறு வெறுமனே அவர் உறுவாக்கியதொரு புதிய வரலாறாக இருக்கிறது. 


அவர் வரலாற்றின் அடிப்படையில் பிரிவுகளைப்பற்றி விளக்குகையில் தான் உருவாக்கிய வரலாற்றைக் கூறுகின்றாரே தவிர, ஷெய்குல் இஸ்லாம் இமாம் இப்னு கஸீர் (ரஹிமஹுல்லாஹ்) எழுதிய 'அல் பிதாயா வன்நிஹாயா" என்ற நூலில் உள்ளதையோ அல்லது இமாம் இப்னுல் ஜவ்ஸி (ரஹிமஹுல்லாஹ்) எழுதிய ' அல் முன்தஸிம் அத்தாரீஹ்" என்ற நூலில் உள்ளதையோ, அல்லது இமாம் இப்னுல் அஸீர் (ரஹிமஹுல்லாஹ்) எழுதிய 'அல் காமில்" என்ற நூலில் உள்ளதையோ, அல்லது இமாம் தபரி (ரஹிமஹுல்லாஹ்) எழுதிய 'தாரிஹ் உமம் வல் முலூக்" என்ற நூலில் உள்ளதையோ - இந்த மேற்கண்ட சிறப்பான வரலாற்று நூல்களில் உலமாக்கள் எடுத்துக் காட்டியதையோ அவர் எடுத்துக் காட்டவில்லை. 

மாற்றமாக இவைகளை யெல்லாம் தவிர்ந்து கொண்டு தனக்கொரு தனி வரலாறை உருவாக்கிக் கொண்டு அதனை வைத்து பிரிவுகளைப்பற்றி விளக்கம் கொடுக்கிறார். இதனடிப்படையில் இவரது விளக்கம் கூறும் ஒரு முக்கிய விடயம் என்னவெனில், இவரைப் பொருத்தவரையில் ஸலபி என்னும் குர்ஆனையும், ஸுன்னாவையும், ஸஹாபாக்களின் அடிச்சுவட்டிலும் பாதையிலும் விளங்கக் கூடியவர்களும் அந்த 72 வழிகேடான பிரவுகளுக்குள் உள்ளடங்கக் கூடியவர்களே! 

ஆனால், இவர் விளக்க எடுத்த அதே ஹதீஸிலேயே நபி அவர்கள் நேரான வழியிலுள்ள கூட்டம் 'யார் இன்று நானும் எனது தோழர்களும் இருக்கும் நிலைப்பாட்டில் இருக்கிறார்களோ அவர்கள் (தான் அந்தக் கூட்டம்)" என்று வெளிப்படையாகவும் தெளிவாகவும் கூறிவிட்டார்கள். 

இவ்வாறு நபி அவர்கள் கூறியிருக்கையில், பீ.ஜெய்னுல் ஆபிதீன் ஆராய்ச்சி செய்து - அந்த ஸஹாபாக்களின் பாதையில் சென்ற ஸலபுகளையும் நரகவாதிகள் செல்லும் பாதையில் சேர்த்து விட்டார் . 


இதனடிப்படையில் தெரிகின்ற ஹலபிகளின் இன்னுமொரு அடிப்படை என்ன வென்றால், அவர்களுக்கு எந்தவொரு ஹதீஸும் கூறுகின்ற நபிவழியைப் பின்பற்றி நடக்க வேண்டிய அவசியமில்லை. அதனைப் பணிவோடு ஏற்றுக்கொண்டுஅதனைப் பின்பற்றும் நோக்கத்தில் அவர்கள் செயற்படுவதில்லை. அது முக்கியமானதோ தேவையானதொரு அம்சமோ இல்லை. 

இதன் காரணமாக அவர்கள் ஹதீஸ்களிலிருந்து தங்களுக்குத் தேவைபோன்று விளக்கங்களையும் தீர்ப்புகளையும் அந்த ஹதீஸிலிருந்து கழற்றிவிடுவார்கள். ஹலபிகளின் இந்த வழிகெட்ட வழிமுறையை உம்மத்துக்கு அடையாளம் காட்டுவதற்கென்று வரலாற்றிலே முஹத்திஸின்கள் - (உலமா உஸ்ஸுன்னா) அவர்களுடைய அகீதா நூல்களில் ஹலபிகள் ஹதீஸ்களில் எவ்வாறெல்லாம் விளையாடுபவர்களென்பதை எடுத்துக் காட்டுபவர்களாக இருக்கிறார்கள். 

எனது அனுபவத்தில் கண்டதொரு உண்மையை இங்கு நான் சுட்டிக் காட்டலாமென நினைக்கிறேன். அதாவது, தமிழ்பேசும் மக்கள் மத்தியில் பீ.ஜெய்னுல் ஆபிதீன் என்கின்றவர் குர்ஆனையும், ஸுன்னாவையும் பின்பற்றும் ஒருவர் என்ற கருத்து நிலவியிருந்தது. 


இந்தக் கருத்தை சுமார் ஒன்பது வருடங்களுக்கு முன்பே நான் கேள்விப்பட்ட போது - நான் கூறினேன் இந்த மனிதர் குர்ஆன், ஸுன்னாவை பின்பற்றுபவரல்ல. 

மாறாக இந்த மனிதன் தர்க்கவாதப் போக்கில் இருக்கின்ற ஒருவன். இன்னும், தனது சொந்தக்கருத்தை குர்ஆனினதும், ஸுன்னாவினதும் பெயரில் சொல்கின்றவர். இவ்வாரெல்லாம் நான் ஒன்பது வருடங்களுக்கு முன்பே கூறியிருந்தும் மக்கள் அதனை ஏற்றுக்கொள்ள வில்லை. 

ஆனால் இன்று பலர் இந்த உண்மையை விளங்கிவிட்டார்கள். அதில் ஒரு எடுத்துக்காட்டடைக் கூறுவதாயின், நாம் அந்தத் தர்க்கவாதப் பாதையில் செல்லும் மனிதனிடம் அவரைப் பின்பற்றுபவர்களிடம் கேட்க விரும்புவது என்னவென்றால், எமக்குக் குர்ஆனும், ஸுன்னாவும் மட்டும் போதுமானது, இஜ்மாஃ, கியாஸ் எதுவும் அவசியமில்லை என்று வாதாடும் பீ.ஜெய்னுல் ஆபிதீனிடம் நான் கேட்கிறேன் - 


அதாவது, குர்ஆன் வசனமொன்றை அது கூறப்பட்டுள்ள - விதமே அதனை ஏற்றுக்கொள்ள நீங்கள் தயாரா? அல்லது, ஹதீஸின் வார்த்தையொன்று வந்ததென்றால் அது வந்த வாரே ஏற்றுக்கொள்ள நீங்கள் தயாரா? 

அவ்வாறு அது வந்திருப்பது போன்றே நீங்கள் ஏற்றுக்கொள்ளத் தயாரென்றால் நீங்கள் உண்மையில் குர்ஆனையும், ஸுன்னாவையும் பின்பற்றுகின்றீர்கள் என்று பொருளாகும். 


ஆனால் இவர்கள் அப்படி பட்டவர்கள் இல்லை. ஏனெனில்,  பீ.ஜெய்னுல் ஆபிதீனைப் பொறுத்தவரை குர்ஆனின் பல வசனங்களுக்கும் ஹதீஸின் பல வார்த்தைகளுக்கும் தனது விளக்கத்தைக் கொடுக்காமல் இருக்க முடியவில்லை. அல்லது, அந்த குர்ஆனின் விளக்கங்களைத் தவிர்ந்து கொண்டு அதற்கொரு மாற்றுக் கருத்தோ, விளக்கமோ தராமல் அந்த ஆயத்களையும் அந்த ஹதீஸ்களையும் அவருக்கு விளங்க முடியவில்லை. 

ஆனால் இதனைச் செய்கின்ற இந்த மனிதர்தான் எங்களுக்கு குர்ஆனும், ஸுன்னாவும் போதுமானது. இஜ்மாஃ என்றும் கியாஸ்; எதுவும் அவசியமில்லையென்று கூறுகிறார். 


இதனை உதாரணம் மூலம் கூறுவதாயின்,
'யத் உல்லாஹ் பவ்க அய்தீஹிம்" 

'அல்லாஹ்வின் கை அவர்களுடைய கைகளுக்கு மேல் இருக்கிறது" என்ற வார்த்தையை பீ.ஜெய்னுல் ஆபிதீனைப் பொறுத்த வரை அது வந்த பிரகாரமே சொல்ல முடியாது அதற்கொரு விளக்கம் தேவைப்டுகிறது. குர்ஆனும், ஸுன்னாவும் போதுமான மனிதனுக்கு அவருடைய விளக்கமும் தேவைப்டுகிறது. 

அவ்வாறாயின் இவருக்கு ஸஹாபாக்களின் விளக்கம் தேவையற்றதாகிப் போனது ஏன் ? உம்மதுல் இஸ்லாமியுடைய ஏகோபித் முடிவான இஜ்மாஃ தேவையற்றதானது ஏன்? இவர்கள் அனைவரது விளக்கங்களும் அவசியமற்றதெனக் கூறியதுடன் அதற்கு தான் விளக்கங் கொடுக்காமல் அந்த ஆயத்களையும் ஹதீஸ்களையும் விளங்க முடியாதென்ற நிலைப்பாட்டினை அவரது செயல் எடுத்துக்காட்டுகிறது. 

அதே போன்று இன்னுமொரு உதாரணத்தைக் கூறுவதாயின்,

'யன்ஸுலு ரப்புனா இலா ஸமாஅத்துன்யா"

என்று ஒரு ஹதீஸை நபி சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறுகிறார்கள். 'எங்களது இரட்சகன் பூமியின் வானத்திற்கு இறங்குகிறான்". என்பது தான் நபிகளாரின் ஹதீஸில் வரும் வார்த்தை. 

இங்கு குர்ஆனையும், ஸுன்னாவையும் மட்டுமே பின்பற்றுவேன் என்று கூறுபவன் ஒருவன் மேற்கண்ட ஹதீஸில் வந்துள்ள வார்த்தையை அது எப்படி வந்திருக்கிறதோ அப்படியே ஏற்க வேண்டும். 


ஆனால் குர்ஆன், ஸுன்னாவென்று குரளெழுப்பி அதற்கு வாதாடும் இந்த மனிதன் நபி சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் இந்த ஹதீஸுடைய வார்த்தையோடு தடுமாறுவதேன். 

எதனையெல்லாம் அப்படியே நம்ப வேண்டுமோ அதனை இவர்கள் நம்புவதில்லை. நபி சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் 'எங்களது இரட்சகன் பூமியின் வானத்திற்கு இறங்குகிறான்" என்று கூறுகிறார்கள். இந்த ஹதீஸுக்கு பீ.ஜெய்னுல் ஆபிதீன் விளக்கம் கொடுக்கையில் 'இரட்சகன் இறங்குவதில்லை, அவனுடைய அருள்தான் இறங்குகிறது" என்று கூறுகிறார். 

இது எவ்வாறு குர்ஆனையும், ஸுன்னாவையும் பின்பற்றுவதாக முடியும். நபி சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வார்த்தைக்கு மேலால் தனக்கொரு விளக்கத்தை அமைத்துக் கொண்டார் இவர். இவைகள் ஹலபிகளின் தன்மைக்குள் அடங்கும் விடயங்களாகும். இந்த தன்மை தான் பி. ஜெய்னுல் ஆபுதீனிடமும் காணப்படுகிறது. 


Taken from a lectue of Shaykh Yahya Silmy hafidhahullaah. Transcribed by Bro Riyas Negambo.