ஹலால் சான்றிதழ்களும் மோசடிகளும்

ஹலால் உணவுபொருள் விஷயத்தில் ஹலால் சான்றிதழ் வழங்கும் அமைப்புகள் மிகுந்த கண்டிப்புடன் தான் இருக்கும் என்ற நம்பிக்கையில், அனைத்து முஸ்லிம்களும் அங்காடிகளிலிருந்து வாங்கும் உணவு பொருட்களைப் பெரும்பாலும் சோதித்துப் பார்ப்பது கிடையாது. தற்போது நிலவிவரும் உலகளாவிய நிதி நெருக்கடியின் போது தமது இலாபத்தை அதிகரிப்பதை மட்டும் குறிக்கோளாகக் கொண்ட பல பன்னாட்டு நிறுவனங்கள் இஸ்லாமிய முறைப்படி அறுத்துப் பலியிடல் குறித்த எந்த அறிவும் இல்லாமல் தனது இறைச்சிப் பொருட்களை ஹலால் முத்திரையுடன் விற்பனை செய்து வருகின்றன என்னும் அதிர்ச்சி தரும் செய்தி தற்போது தெரியவந்துள்ளது.


இஸ்லாம் முற்றிலும் தடை செய்துள்ள பன்றியிறைச்சிக்குக் கூட ஹலால் முத்திரை வழங்கப்பட்டுள்ள வேதனை மிகுந்த நிகழ்வும் பரவலாக நடைபெறுகிறது.  புதிதாக வெளியாகியிருக்கும் இத்தகவல் முஸ்லிம்களிடையே மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹலால் முறையைப் பின்பற்றாத நிறுவன இறைச்சித் தயாரிப்புகளுக்கு ஹலால் முத்திரை வழங்கப்படும் மோசடியும் நடப்பதாக தகவல்கள் கூறுகின்றன. 


ஹலால் முறையில் பலியிடுவதாக எண்ணிக் கொண்டு பல நிறுவனங்கள் அல்லாஹு அக்பர் என்று பதிவு செய்யப்பட்ட ஒலித்துண்டை ஒலிக்கவிட்டு கில்லட்டின் போன்ற கருவிகள் மூலம் அறுத்துப் பலியிடுகின்றன. இவ்வாறு பலியிடும்போது 90 விழுக்காடு சரியாக அறுபடாததால் இன்னொருமுறை அறுப்புப் பிராணிகள் ஊழியர் ஒருவரால் மீண்டும் அறுபட நேருகிறது. இது அறுப்புப் பிராணிக்குக் கடும் வேதனை அளிப்பது மட்டுமின்றி , ஹலாலான முறையிலான அறுவை விஷயத்தில் இஸ்லாம் அனுமதித்த முறைக்கு இது மாற்றமானதாகும். இன்னும், அந்த ஊழியர் முஸ்லிமா ? எப்படி அறுக்கிறார் போன்றவைகள் அறியப் படாமல் இருக்கின்றது. 


உண்மையில் கண்காணிப்பு எதையும் செய்யாமல் லஞ்சமாக பணம்பெற்று ஹலால் முத்திரைப் பத்திரங்களை இந்நிறுவனங்களுக்கு வழங்குவதாக செய்திகள் அடிப்படுகின்றன. இவ்வாறு பல சந்தேகங்களுடன் மற்றும் மோசடிகளுடன் நடைபெறும் இந்த ஹலால் சான்றிதழ் விடயத்தை பற்றிய இஸ்லாமிய கண்ணோட்டத்தை கீழ் வரும் லிங்கில் கேட்கலாம்.