[அகீதா]

 முஸ்லிம்களுக்கு அல்லாஹ் த’லா கொள்கையாக தந்திருக்கும் அடிப்படை விஷயம் என்னவென்றால் ஷஹாத்து கலிமா எனும் ”வணக்கத்திற்கு தகுதியானவன் அல்லாஹ்வை தவிர வேறு யாரும் இல்லை,இன்னும் முஹம்மது நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அல்லாஹ்வின் தூதராவார். ”


இதுவே முஸ்லிம்களின் அடிப்படை கொள்கையாகும் இந்த கொள்கையை பரப்புவதும் இதனை விளக்குவதும் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் வாழ்வின் அனைத்து விஷயங்களிலும் கருவாக இருந்தது. அன்னாரின் எந்த ஒரு அடிப்படையான நடவடிக்கையையும் கவனிக்கையில் அவை அனைத்தும் நமக்கு காட்டுவது வணக்கத்திற்கு தகுதியானவன் அல்லாஹ்வை தவிர வேறு யாரும் இல்லை என்பதும் பின்பற்றுவதற்கு நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் தவிர வேறு யாருக்கும் தகுதியில்லை எனும் அடிப்படையாகும்.இதனையே நாம் கொள்கையென்று கூறுகிறோம்.இன்னும் அரபியில் இஃதிகாத் அல்லது அகீதா என்று சொல்கிறோம்.

வரலாற்றை நாம் கவனிக்கையில் உலமாவுல் முஸ்லிமீன்(முஸ்லிம்களின் அறிஞர்கள்) ஸஹாபாக்களின் காலம் தொடங்கி இன்று வரை இந்த கொள்கையின் ஒவ்வொரு விஷயத்தையும் ஆழமாக விளக்கம் காட்டியே சென்று இருக்கிறார்கள்.கொள்கை விஷயத்தில் எந்த ஒரு அம்சமாயினும் சிறிதேனும் தவறுகள் வந்திடாமல் இருக்க வேண்டும் என்பதும், அல்லாஹ்வை வணங்கும் விஷயத்தில் மனிதன் தூய்மையாக விளங்க வேண்டும், என்பதும் அதனுடைய விளக்கங்களில் புதிய விஷயங்கள் கலந்து விடாமல் இருக்க வேண்டும் என்பதுமே அய்மதுல் முஸ்லிமீன்களான(இஸ்லாமிய அறிஞர்கள்) இன்னும் ஸஹாபாக்களை பின் தொடர்ந்து வந்த தாபிஈன்கள் மற்றும் தபஉ தாபிஈன்கள்,அவர்களின் வழிமுறையில் இன்று இஸ்லாத்தை வளர்க்க வேண்டும் என்று ஆர்வமாக இருக்கும் உலமாக்கள் போன்ற அனைவருடைய போராட்டமாக இருக்கிறது. அந்த போராட்டத்தின் அடிப்படையான கொள்கை ” வணக்கத்திற்கு தகுதியானவன் அல்லாஹ்வை தவிர வேறு யாரும் இல்லை”.