[சனிக்கிழமை நாட்களில் நோன்புகளும் அதுபற்றிய தடைகளும்]

சனிக்கிழமை நாட்களில் நோன்புகளும் அதுபற்றிய தடைகளும்

அஸ்ஸம்மா பின்த் புஸ்ர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் நபி சள்ளல்லாஹு அலைஹி வஸ் ஸல்லம் அவர்கள் கூறியதாக அறிவிக்கிறார்கள்.

சனிக்கிழமை நாட்களில் பர்ளான நோன்பைத் தவிர நோற்க்க வேண்டாம் உங்களில் யாராவது எதையும் பெற்றுக்கொள்ளா விட்டால் திராட்சையின் நெட்டியை அல்லது ஒரு மரத்தின் குச்சியையாவது சுவைத்துக்கொள்ளட்டும். ”

(நஸாமி அல் குப்றா, திர்மிதி, இப்னு மாஜா, முஸ்னத் அஹ்மத்,)

மேற்குறிப்பிட்ட ஹதீஸில் சனிக் கிழமைகளில் பர்ழான (கடமை) நோன்பைத் தவிர ஏனைய நோன்புகள் தடைசெய்யப்பட்டுள்ள காரணத்தினால் அரபா நோன்பை சனிக்கிழமைகளில் நோற்க முடியாது.

குறிப்பு: ரமழான், கழா, நேர்ச்சை, கப்பாரா போன்ற நோன்புகள் பர்ழான (கடமையான) நோன்புகளாகும்.

சனிக்கிழமை நோன்பை இன்னொரு நாளுடன் சேர்த்து பிடிக்கலாம் என்ற பிழையான ஆதாரம். 

அபூஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் நபி சள்ளல்லாஹு அலைஹி வஸ் ஸல்லம் அவர்கள் கூறியதாக அறிவிக்கிறார்கள்.

‘உங்களில் எவரும் வெள்ளிக்கிழமை (மட்டும் ) நோன்பு நோற்காதீர்கள் அதற்கு முன்பு ஒரு நாள் அல்லது அதற்குப் பின்பு ஒரு நாள் நோன்பு நோற்பதைத் தவிர ” (புகாரி, முஸ்லிம்)

வெள்ளிக் கிழமைக்கு முன் வியாழன் ஆகும் அதன் பின்
சனிக்கிழமையாகும். எனினும் மேற் குறிப்பிட்ட சனிக்கிழமையில் கடமையான நோன்பைத் தவிர நோற்கத் தடுக்கப்பட்டதன் அடிப்படையில் அரபா நோன்பு கடமையான நோன்பு இல்லாததனால் வெள்ளிக் கிழமையுடன் சனிக்கிழமையை சேர்க்க முடியாது. வெள்ளிக்கிழமை நோன்பு பிடிப்பதாயின் வியாழக்கிழமையுடன் இணைத்தே வெள்ளிக்கிழமை நோன்பு நோற்கப்படவேண்டும். 


ஒரு தடை வந்து , ஒரு ஏவலும் வந்தால், தடை முற்படுத்தப்படும். இது ஹதீஸ் கலையின் விதியாகும். 


சனிக்கிழமை நோன்பு கடுமையாக தடை செய்யப்பட்ட நாள் ஆகும். ஏனெனில், நோன்பு நோற்க வேண்டாம் என்ற தடை உடன் , தவறியும் நோன்பு நோற்று இருந்தால் அதனை மரத்தின் வேரை கடித்தாலும் நோன்பை விடும்படி உறுதிக்காட்டப்படுகிறது. 


மேற்குறிப்பிட்ட நபிமொழிகளால் நபி வழியைப் புரிந்து கொள்ளும் வழிமுறை என்னவென்றால் ஏதெனும் ஒரு நபிமொழியை நடைமுறைக்கு எடுக்கும் போது ஏனைய நபிமொழிகளுடன் முரண்படாத வகையில் நடைமுறைப்படுத்துவதே உண்மையாக நபியைப் பின்பற்றுவதன் அர்த்தமாகும்.

மாறாக நபிமொழியைப் பின்பற்றுவதாக கருதிக்கொண்டு அல் குர்ஆனையோ அல்லது நபி மொழிகளையோ ஒன்றுக் கொன்று முரணாக சுமப்பது மார்க்கத்தில் தன் வழியை உருவாக்கும் வழிமுறையாகும். 


இதனைத் தடுப்பதற்காகவே எப்பபொழுதெல்லாம் நபிமொழிகள் தொகுக்கப்பட்டதோ அப்போதிலிருந்தே இமாம்கள் பாடத் தலைப்புகள் இடும் போது ஹதீஸ்களால் பெறப்படும் சட்டங்களையே தலைப்புகளாக இட்டார்கள்.

குர்ஆனையும் அஸ்ஸுன்னாவையும் அதைப் பெற்றுக் கொள்ளும் வழிமுறைகளைத் தவிர்த்துக் கொண்டு தானே மார்க்க மேதையாக மாற முயற்சிக்கும் நபர்களின் அறியாமைத் தன்மையால் மேற்குறிப்பிட்ட இமாம்களின் வழிமுறைகளை விளங்கிக் கொள்ள சக்தி பெறாததால் இன்றைய சமூகத்தில் எத்தனையோ நபிமொழிகளை அல்குர்ஆனுக்கும் ஏனைய நபிமொழிகளுக்கும் முரணாக விளங்கிக் கொள்வதிலிருந்து தப்பவில்லை.

இப்படிப்பட்ட தவறுகளில் ஒன்றாகத் தான் சனிக்கிழமை தொடர்பாக நாம் கூறும் மேற்குறிப்பிட்ட ஹதீஸையும் வெள்ளிக்கிழமை தொடர்பாக மேற்குறிப்பிட்ட ஹதீஸையும் முரணாகவும் பிழையாகவும் விளங்கும் சிக்களை நாம் காண்கிறோம்.

இன்னும் சிலர் ஹதீஸ் கல்வியை சரியாக அறியாத நிலையில் இவ்வாறான ஹதீஸ்களை பலஹீனமாக ஆக்கும் வழிமுறைகளை கையாண்டனர். இவைகளை நாம் கண்ணுற்ற நிலமையில் தான் இந்த ஆக்கத்தை வெளியிடுகிறோம்.

இதிலே ஆதரங்களை சுருக்கமாகக் குறிப்பிட்டுள்ளோமே தவிர அதன் விரிவான விளக்கங்களையும் ஆழமான விடயங்களையும் தவிர்த்து விரிவை அஞ்சி சுருக்கமாக வெளியிடுகிறோம்.

மேலதிகமான விளக்கங்களுக்கும் ஆழமான கருத்துக்களை எடுத்துக் காட்டுவதற்க்கும் தேவைப்படும் பட்சத்தில் எதிர்வரும் வெளியீடுகளில் இன்ஷா அல்லாஹ் கவனமெடுப்போம்.

பலஹீனமான ஹதிஸ்

ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் அறிவிக்கிறார்கள்
‘நபி சள்ளல்லாஹு அலைஹி வஸ் ஸல்லம் அவர்கள் மாதத்தில் சனி, ஞாயிறு, திங்கள் நாட்களிலும்மற்ற மாதத்தில் செவ்வாய் புதன், வியாழன் போன்ற நாட்களிலும்நோன்பு வைப்பவர்களாக இருந்தார்கள்” (பலஹீனமான ஹதீஸ்: திர்மிதி, அபூதாவுத்)

குறிப்பு

ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்களிடமிருந்து அறிவித்த அறிவிப்பாளர் ’கைத்மா” நம்பகமானவராக இருந்தாலும் நேரடியாக செவிமடுக்காத விடயங்களை அறிவிக்கும் பழக்கமுள்ளவராக இருந்தார்.
அதனை இர்ஷால் எனக் கூறப்படும். (பார்க்க : தக்ரீப் இப்னு ஹஜர்)

ஷெய்க் நாசிருத்தீன் அல்-அல்பானி அவர்களின் முதல் வெளியிட்ட புத்தகங்களான ‘ஸஹீஹ் அல் ஜாமி” ‘அல்மிஷ்காத்” ‘முஹ்தசருல் ஷமாயில்” போன்ற நூற்களில் இதனை ஸஹீஹ் என முடிவு கொடுத்திருந்தாலும் இருதியாக வெளியிட்ட தனது நூலில் இதனை பலஹீனமான ஹதீஸ் என தீர்ப்பளித்துள்ளார்.

பார்க்க : லயீப் திர்மிதி, ஸஹர் அர்-ரவ்ல் பக்கம்(37)