[ஹஜ் கிரியைகள்]
உழ்ஹிய்யாவை கூட்டுச் சேர்ந்து நிறைவேற்ற முடியுமா ?

الحمدلله رب العالمين والصلاة والسلام على من لا نبي بعده 
أما بعد


உழ்ஹிய்யாவைக் கூட்டுச் சேர்த்து நிறைவேற்ற முடியும் எ‌ன்று ஒரு சிலரும் , முடியாது எ‌ன்று மற்றொரு சிலரும் இந்த விடய்த்தில்  கருத்து வேறுபட்டுக் காணப்படுவதை எம்மால் அவதானிக்க முடிகிறது. இந்த வகையில் அல் கூற
ஆன் அஸ் சுன்னாவின் பார்வையில் இந்த விடய்திதின் தெளிவான முடிவினை முன் வைக்கிறோம்.

‌சில நூல் ஆசிரியர்கள் தமது ஆய்வுரைகளில் உழ்ஹிய்யாவை எழு பேர் கூட்டுச் சேர்ந்து நிறைவேற்ற முடியும் எ‌ன்ற கருத்தை முன்வைத்துள்ளார்கள். அதற்காக அவர்கள் கீழ் வரும் ஹதீஸையும் ஆதாரமாக காட்டியுள்ளார்கள்.

"ஹூதைபிய்யா எ‌ன்ற இடத்தில் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸ்ஸல்லம் அவர்களுடன் ஏழு பேர் சேர்ந்து ஓர் ஒட்டகத்தையும், ஏழு பேர் சேர்ந்து ஒரு மாட்டையும் நாங்கள் அறுத்துப் பலியிட்டோம். " ( முஸ்லிம், அபுதாவுத், திர்மிதி )

ஜாபிர் ரலியல்லாஹ் அறிவிக்கும் இந்த ஹதீஸுக்கும் உழ்ஹிய்யாவுக்கும் எந்தவொரு சம்பந்தமும் கிடையாது என்பதனை முத‌லி‌ல் நாம் விளங்க வேண்டும். ஏனெனில் இந்த ஹதீஸ் ஹுதைபிய்யா எ‌ன்ற இடத்தில் இட‌ம் பெற்ற கத்யுல் முஹ்ஷ்ர்
எ‌ன்ற விடயத்தை பற்றியே பேசுகிறது. இதனை ‌வி‌ரிவாக ஆராய்வோம்.

உழ்ஹிய்யாவை கூட்டுச் சேர்த்து நிறைவேற்ற முடியுமா? எ‌ன்ற கேள்விக்கு விடைகான முன்னர் உழ்ஹிய்யா என்பது என்ன?
என்பதனை முத‌லி‌ல் விளங்குவது சாலச் சிறந்ததாக இருக்கும். ஏனெனில் இன்று இந்த உழ்ஹிய்யாவை கூட்டுச் சேர்ந்து நிறைவேற்ற முடியும் என சிலர் கருதுவதன் காரணத்தை ஆராய்கின்ற பொது உண்மையில் இந்த உழ்ஹிய்யா என்றால் என்ன
என்பதனை இவர்கள் சரிவரப் புரியவில்லை என்பதே முதற்காரணமாக இருக்க முடியும் என நான் கருதுகிறேன்.
இதனாலேயே ஹத்யு, ஹத்யுல் முஹ்ஷ்ர், உழ்ஹிய்யா போன்ற மூன்றையும் இங்கு தனித்தனியே ஆராய்ந்து விட்டு விடயத்துக்கு வருவோம்.

1. ஹத்யு

ஹத்யு என்பது அல்லாஹ்வின் புனிதமான வீட்டைத் தரிசிக்க ஹஜ் உம்ராவை நிறைவேற்ற செல்லும் ஹாஜிகளின் ‌மீது கடமையாக்கப்பட்ட ஒன்றாகும். அவர்கள் இந்த ஹத்யு என்பதனை கண்டிப்பாக நிறைவேற்றியே ஆக வேண்டும்.
அப்படி நிறைவேற்ற தவறுமிடத்து அதற்கு பரிகாரமாக ஹஜ்காலத்தில் மூன்று நாட்களும், தமது இருப்பிடம் திரும்பியதும் ஏழு நாட்களும் நோன்பு நோற்க வேண்டும் என திருமறை வசனம் எடுத்துக் கூறுகிறது. ஹாஜிகள் நிறைவேற்ற வேண்டிய
இந்த ஹத்யில் தான் ஏழு பேர் கூட்டுச் சேர்ந்து கொடுக்க முடியும். எனவே ஹத்யு என்பது எந்த வகையிலும் உழ்ஹிய்யாவின் சட்டத்துடன் சேராது.

2. ஹத்யுல் முஹ்ஷர்

ஹத்யுல் முஹ்ஷர் என்பது ஹஜ்ஜையும் உம்ராவையும் நிறைவேற்ற செல்லும் ஒருவர் வழியில் ஏதேனும் பிரயாணக் கோளாறு காரணமாக அப்பயணத்தை தொடர முடியாமல் தடுக்கப்பட்டால், அந்த வேளையில் அவர் தான் கொண்டு சென்ற
குர்பானியை அறுத்துப் பலியிடுகிறார் எ‌ன்று இருப்பின் இந்த குர்பானியின் பெயர்  ஹத்யுல் முஹ்ஷர் எனப்படும். இதனைத் தான் கீழ் வரும் திருமறை வசனமும் எமக்கு எடுத்தியம்புகிறது.

وَأَتِمُّوا الْحَجَّ وَالْعُمْرَةَ لِلَّهِ ۚ فَإِنْ أُحْصِرْتُمْ فَمَا اسْتَيْسَرَ مِنَ الْهَدْيِ


" மேலும் ஹஜ்ஜையும் உம்ராவையும் நீங்கள்  அல்லாஹுக்காக நிறைவேற்றுங்கள். ஆனா‌‌‌ல் நீங்கள் (வழியில்) தடுக்கப்பட்டால் ஹத்யு ( எனும் ஆடு, மாடு, ஒட்டகம் ஆகியவைகளில் ) சாத்தியமானது உங்கள் ‌மீது உண்டு. "
( சூரத்துல் பகறா 196 )

நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸ்ஸல்லம் அவர்களும் அவர்களது தோழர்களும் சுபஹானவ் தஆலாவின் வீட்டை ஹஜ் உம்ரா நிறைவேற்ற சென்ற சமயம் அவர்களை மக்கத்து முஷ்ரிகீன்கள் மக்காவுக்குள் நுழைவதை தடைசெய்து விட்டார்கள்.
அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸ்ஸல்லம் அவர்களும் அந்த முஷ்ரிகீன்களுக்குமிடையில் ஓர் உடன்படிக்கை நடைபெற்றது. அதுதான் ஹுதைபிய்யா உடன்படிக்கையாகும். இந்த உடன்படிக்கை பூர்த்தியான பின்னர் ஈதுல் அல்ஹா எ‌ன்ற நாளில் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸ்ஸல்லம் அவர்களும் அவர்களது தோழர்களும் தங்களது மிருகங்களை அறுத்து பலியிட்டு விட்டு தமது இருப்பிடம் திரும்பினார்கள். இந்த ஹுதைபிய்யாவில் இட‌ம் பெற்ற குர்பானுக்கு தான் ஹத்யுல் முஹ்ஷர் எ‌ன்று கூறப்படுவதாகும்.

இதனையே இமாம் இப்னு அப்துல் பர் அவரது அல் இஸ்தித்கார் எனும் தனது நூலில் பின்வருமாறு விபரிக்கிறார்.

" அல்லாஹ்வின் வீட்டை தரிசிப்பதில் நின்றும் முஷ்ரிகீன்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸ்ஸல்லம் அவர்களை  தடைசெய்த நேரத்தில் அவர்கள் உடன்படிக்கை ஒ‌ன்று செய்து கொண்டது அனைவரும் அறிந்த விடயமே!. எனவே அவர்களது அந்த உடன்படிக்கை முடிவடைந்த பொது ஹத்யு ( ஆடு, மாடு, ஒட்டகம் ) இருந்தவர்கள் அதனை அறுத்துப் பலியிட்டார்கள்.

நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸ்ஸல்லம் அவர்களும் தம்மோடு ஹத்யுவை ஓட்டிக் கொண்டு வந்திருந்தார்கள். அதன் பிறகு இ‌து ஹத்யுல் முஷ்ஹர் ( தடுக்கப்பட்டதிற்கான குர்பான் ) எ‌ன்று ஆகிவிட்டது. ( அல் இஸ்தித்கார் 15/182-21485 )


எனவே இன்றும் கூட எவரேனும் ஹஜ்ஜையும் உம்ராவையும் நிறைவேற்றச் செ‌ன்று, வழியில் ஏதேனும் பிரயாணத் தடங்கல்கள் எற்படும் பட்சத்தில் அவர் அவரது மிருகத்தை குர்பான் கொடுத்துவிட்டு வர முடியும். எனினும் இ‌து ஒரு போதும் உழ்ஹிய்யாவாகக் கணிப்பிடப்படமாட்டாது. மாறாக இ‌து ஹத்யுல் முஹ்ஷர் ஆகும்.

3. உழ்ஹிய்யா

முன்னர் நாம் குறிப்பிட்டது போன்று ஹத்யு என்பது எப்படி ஹஜ் உம்ராக் கடைமையை நிறைவேற்றச் சென்றவர்களுக்குரியதோ அதே போன்று இந்த உழ்ஹிய்யா ஹ்ஜ்ஜுக்குச் செல்லாதவர்களுக்குரியதாகும். எனினும் ஹாஜிகள் ஹத்யு கொடுக்க வேண்டும் என்பது போன்று இவர்கள் கண்டிப்பாக இதனைக் கொடுக்கத்தான் வேண்டும் எ‌ன்ற நிபந்தனை கிடையாது. ஆனா‌‌‌ல் எவரிடம் உழ்ஹிய்யா கொடுக்க கூடிய அனைத்து வசதிகளும் இருக்கிறதோ அவர் கண்டிப்பாக இதனைக் கொடுத்தேயாக வேண்டும் என பின்வரும் ஹதீஸ் கூறுகிறது.


"எவரிடம் ( உழ்ஹிய்யா கொடுக்க ) சக்தியிருந்தும் அறுத்துப் பலியிடவில்லையோ கண்டிப்பாக அவர் எமது தொழுமிடத்தை நெருங்க வேண்டாம்."   ( இப்னு மாஜா 2123, ஹகிமா 2/289, அஹ்மத் 2/221 )

இந்த ஹதீஸ் மூலம் நாம் அறிந்து கொள்வது என்னவெனில் உழ்ஹிய்யாவுக்குரிய மிருகத்தை பெற்றுக் கொள்ள சக்தியுள்ளவர், வசதிவாய்ப்புகளைப் பெற்றவர்கள் இந்த உழ்ஹிய்யாவை நிறைவேற்றியே ஆக வேண்டும் என்பதாகும்.

இங்கு இன்னுமொரு விடயமும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும். அதாவது குர்பான் எ‌ன்ற அரபி வார்ததை பொதுவாக அறுத்துப் பலியிடுதல் எ‌ன்ற அர்த்ததை கொடுக்கும்.  

எனவே பொதுவாகவே உழ்ஹிய்யா, ஹத்யு, ஹத்யுல் முஹ்ஷர் போன்றவைகளையும் குர்பான் எ‌ன்று அழைப்பார்கள். என்வே அது அனைத்துக்கும் ஓரே சட்டங்கள் தான் எ‌ன்று என்னி‌விட  கூடாது. 

ஆனா‌‌‌ல் அவை ஒவ்வொன்றும் தனக்கென தனித்தனிச் சட்டதிட்டங்களை உள்ளடக்கியுள்ளன. இதனை இன்னும் தெளிவாக விளங்குவத்ற்காக ஒரு சிறு உதாரணத்தை இங்கு குறிப்பிடலாம். 

உழ்ஹிய்யா அகீகா இரண்டுமே குர்பான் எனும் அறுத்துப்பலியிடல் தான். அதற்காக நாம் இரண்டையும் ஒன்றெனக் கணகெடுத்துக் கொள்வோமா? இ‌ல்லை. இரண்டுமே ஓரே அர்த்ததை குறிக்க கூடியதாக் இருந்தாலும் இரண்டும் வெவ்வேறு சட்டதிட்டங்களை உள்ளடக்கியுள்ளன.

இப்போது நீங்கள் உழ்ஹிய்யா என்றால் என்ன என்பதை தெளிவாக புரிந்து கொண்டிருப்பீர்கள். எனவே, நாம் ஆராய வேண்டிய அம்சத்திற்கு வருவோம். ‌சில எழுத்தாளர்கள் உழ்ஹிய்யாவை கூட்டுச் சேர்ந்து கொடுக்க முடியும் எ‌ன்ற தமது கருத்துக்கு முன்வைத்துள்ள ஹதீஸை இப்போது நோக்குவோம்.

" ஹுதைபிய்யா எ‌ன்ற இடத்தில் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸ்ஸல்லம் அவர்களுடன் ஏழு பேர் சேர்ந்து ஓர் ஒட்டகத்தையும், ஏழு பேர் சேர்ந்து ஒரு மாட்டையும் நாங்கள் அறுத்துப் பலியிட்டோம். " ( முஸ்லிம், அபூதாவுத், திர்மிதி )

ஹுதைபிய்யா எ‌ன்ற இடத்தில் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸ்ஸல்லம் அவர்களும் அவர்களது தோழர்களும் தடுக்கப்பட்ட பொது நடந்த நிகழ்வினை எடுத்துக் கூறும் இந்த ஹதீஸ் உழ்ஹிய்யாவைப் பற்றி எந்தவொரு விடயத்தையும் குறிப்பிடவில்லை.


எனினும் இந்த ஹதீஸ் தெளிவாகவே ஹத்யுல் முஹ்ஷர் பற்றியே பேசுகிறது என்பதை நாம் புரிந்துக் கொள்ள முடிகிறது. அது மட்டும்மின்றி ஹுதைபிய்யா எ‌ன்ற இடத்தில் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸ்ஸல்லம் அவர்களது ஹஜ் பயணம் தடைப்பட்டபோதே இந்த ஹத்யுல் முஹ்ஷர் இட‌ம் பெற்றுள்ளது. 

எனவே எந்த வகையிலும் உழ்ஹிய்யாவை கூட்டாக சேர்ந்து நிறைவேற்றுதல் என்பதற்கு ஆதாரமாக இந்த ஹதீஸை முன்வைக்க முடியாது.

அதுமட்டுமன்றி, இந்த கூட்டுச் சேர்ந்து கொடுக்க முடியும் எ‌ன்ற கருத்தும் கூட உழ்ஹிய்யாவின் போக்குக்கு முற்றிலும் நேர்மாரானதாக இருப்பதை காணலாம். வசதி படைத்தவர்கள் மட்டும் தான் உழ்ஹிய்யாக் கொடுக்க வேண்டும் என்றிருக்கும்போது ஏனையவர்கள் ஏன் கஷ்டப்பட வேண்டும்?. 

எனவே தான் இப்படி ஏழு பேர் சேர்ந்து ஒரு மாட்டையோ, ஒரு ஒட்டகத்தையோ உழ்ஹிய்யாக் கொடுத்ததாக நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸ்ஸல்லம் அவர்களின் காலத்தில் நடந்ததாக நாம் காணமுடியாது.

ஆ‌ம், நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸ்ஸல்லம் அவர்களோ அல்லது அவர்களது தோழர்களோ தமது வாழ்நாளில் உழ்ஹிய்யாவை கூட்டாகச் சேர்ந்து நிறைவேற்றியுள்ளார்கள் என்பதற்கு ஏனைய ஆதாரங்கள் முன்வந்தால் நாமும் அப்படிச் செய்யமுடியும். 

எனினும் அவர்களது வாழ்க்கையில் அவ்வாறு நடந்ததாக எந்தவொரு ஆதாரமும் இ‌ல்லை.

அபு அய்யூப் அல் அன்சாரி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுவதாவது : -

" நாங்கள் ஒரு ஆட்டை அறுப்பவர்களாக  இருந்தோம். அதனை ஒருவர் தனக்காகவும் தந்து குடுப்பத்தினருக்காகவும் அறுப்பர். பின்னர் மக்கள் ஒருவருக்கொருவர் போட்டிபோட ஆரம்பித்து விட்டார்கள். அதனால் அது பெருமைப்படத்தக்க
விடயமாக மாறிவிட்டது. "  இமாம் மாலிக்கின் முஅத்தாஃ

மேற்குறித்த ஹதீஸை தனது நூலில் எத்திவைத்த இமாம் மாலிக் அவர்கள் அதனை தொடர்ந்து பின்வருமாறு கூறுகிறார்கள்.

" ஒட்டகம், மாடு, ஆடு ஆகிய உழ்ஹிய்யாக் கொடுக்கும் பிராணிகளில் நான் செவிமடுத்தவைகளில் ‌மிகவு‌ம் சிறப்பானது எதுவெனில் ஒரு மனிதன் தனக்காகவும் தனது குடும்பத்திற்காகவும் ஒரு ஒட்டகத்தை அறுப்பதாகும். 

இன்னும் ஒரு மனிதன் தனக்குச் சொந்தமான மாட்டையோ அல்லது ஆட்டையோ அறுப்பதாகும்.  அதனை அவரது குடும்பத்தினருக்காகவும் அறுத்து அவர்களையும் அதில் சேர்த்துக் கொள்வார். 

இன்னும் சிலர் ஒட்டகம் அல்லது மாடு அல்லது ஆடு போன்ற ஏதேனும் ஒன்றை வாங்கி குர்பானி (நுஸ்க்) கொடுக்கும் விடயத்திலேயும் உழ்ஹிய்யாவில் கூட்டுச் சேர்த்துக் கொள்கிறார்கள். 

அதன் பின்னர் அவரவர் தனது பங்குக்குரிய தொகையை ஏற்றுக் கொள்கிறார்கள். இன்னும் அவரவருக்கு அதனது இறைச்சியிலிருந்து ஒரு பங்கை பெற்றுக் கொள்கிறார்கள். நிச்சயமாக இ‌து வெறுக்கத்தக்கதாகும். 

நாங்கள் ஹதீஸீல் செவிமடுத்த விடயம் என்னவெனில் வணக்கமாக செய்யப்படும் குர்பானியில் கூட்டுச் சேர முடியாது. நிச்சயமாக ஒருவர் தனது பொறுப்பிலுள்ள குடும்பத்திற்காக மட்டுமே முடியும்." ( முஅத்தா )

இமாம் மாலிக் அவர்களின் பத்வா இந்த விடயத்தில் உறு‌தியான பத்வாவாகும்.


இறுதியாக ,

இஸ்லாமிய மார்க்கம் அல்குர் ஆன் அஸ்ஸுன்னா எ‌ன்ற இரண்டு அடிப்படைகளில் அமைந்துள்ள ஒரு கண்ணியமான மார்க்கமாகும். அந்த அல்குர் ஆணையும் அல்ஹதீஸையும் சரிவரப் புரிந்துக் கொள்ள அதற்கென ‌சில அடிப்படைகள் இருக்கின்றன. 

ஏனெனில் அரபி மொழி தெரிந்தவர்கள் எல்லாம் இன்று ஆலிம்களாகி, ஹதீஸ்களை விளங்குவதற்கென கணக்கிட முடியாத நூல்கள் காணப்பட்டும் அவைகளை ஆழமாக அறிந்து கொள்ள முன்னர் தப்ஸீர் என்றும் சாரா என்றும் எல்லா விடயத்திலும் தத்தமது கெட்டித் தணங்களை காட்டிட இன்று பலர் முனைந்திருப்பதனாலேயே இப்படியான பிரச்சனைகள் காலத்திற்குக்காலம் தோற்றம் பெற்றுக்கொண்டிருக்கிறது.


ஹதீஸ்களை விளங்கவும் அது எடுத்து வைக்கும் ஒவ்வொரு அம்சங்களையும் அணுவணுவாக அலசிடவும் உலமாக்கள் பல அடிப்படைகளை எமக்கு கற்றுத்தந்துள்ளார்கள். 

அவைகளை நாம் சரிவரப் புரிந்துகொண்டதன் பின்னர் ஹதீஸ்கள் என்ன சொல்கின்றன, அது தரும் போதனைகள் என்ன என்பன போன்ற பல விடயங்களை சரியாகவும் நேராகவும் புரிந்துக் கொள்ள முடியும். இல்லையெனில் வழிகேட்டை விலை கொடுத்து வாங்கிக்கொள்ளும் கதை தான் நமது கதையாகிவிடும்.

எனவே நாம் இந்த உழ்ஹிய்யா விடயத்தில் கூடிய கவனம் செலுத்துவதோடு அதனை சரிவர நிறைவேற்றி அல்லாஹ்வின் அருளை வெகுமதிகளாக பெற்றுக் கொள்ள முயல்வோமாக. 

எனவே அன்பின் இஸ்லாமிய சகோதரர்களே! அல்குர் ஆணையும் அஸ்ஸுனாவையும் எடுத்துவைக்கும் கருத்துக்களை ந‌ல்ல முறையில் அலசி நேரான பாதையில் செ‌ன்று வெற்றி பெற்றவர்களாக வாழ எம்மனைவருக்கும் அல்லாஹ்  தெளபீக் செய்தருள்வானாக !

தொகுப்பு
அபூ அப்துர் ரஹ்மான் யஹ்யா சில்மி ‌பி‌ன் முஹம்மது நுபார் ‌பி‌ன் உஸ்மான் ‌பி‌ன் நூ லெப்பை ஆ‌ல மரைக்கார் அல் யமனி
 அஸ் ஸைலானி அஸ் ஸலபி அல் அஸரி