[சத்தமாக ஓதாத தொழுகையில் பாத்திஹா சூரா ஓதுவதும் இமாமை பின்பற்றுவதும்]

  • சத்தமாக ஓதாத தொழுகையில் பாத்திஹா சூரா ஓதுவதும் இமாமை பின்பற்றுவதும்  


الحمد لله رب العالمين والصلاة والسلام على من لا نبي بعده
أما بعد

கேள்வி : ஸிர்ரிய்யா தொழுகையில் (ஓதல் சத்தமின்றி அமைந்துள்ள தொழுகை) பாத்திஹா ஓதுவதில் இமாம் மஃமூமை விட அவசரமாக ஓதிவிட்டு ருகூவுக்குச் சென்றுவிட்டால் பின்னால் தொழும் மஃமூம்கள் பாத்திஹாவை ஓதிய பின்புதான் ருகூவுக்குச் செல்ல வேண்டுமா? அல்லது பாத்திஹா பூரணமாகாவிட்டாலும் இமாமைப் பின்பற்றி ருகூவுக்குச் சென்றுவிட வேண்டுமா?

பதில் : ஸிர்ரிய்யா தொழுகை என்பது இமாம் ஓதலை சத்தமின்றி ஓதும் தொழுகையாகும.; அவை- ளுஹர், அஸர், மஃரிபின் முன்றாவது ரக்அத், இஷாவின் கடைசி இரண்டு ரக்அத்களும் ஆகியவையாகும்;. 

இங்கு இமாம் பாத்திஹா ஓதும் விடயத்தில் மஃமூம்களுக்கு பாத்திஹாவை முழுவதுமாக ஓதவதற்கு போதுமான நேரம் கிடைக்காமல் இமாம் ருகூவை அடைந்துவிட்டால் இமாமுக்கும் மஃமூம்களுக்கும் தொடர்பான சட்டத்தை அறிவிக்கக் கூடிய பின்வரும் ஹதீஸின் அடிப்படையில் நாம் செயற்பட வேண்டும்.
நபி சல்லால்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:


إنما جعل الإمام ليؤتم به، فإذا ركع فاركعوا، وإذا رفع فارفعوا، وإذا صلى جالساً فصلوا جلوساً


நிச்சயமாக இமாம் நியமிக்கப்பட்டிருப்பத அவரைப் பின்பற்றுவதற்கேயாகும். அவர் ருகூஉ செய்தால் நீங்களும் ருகூஉ செய்யுங்கள். அவர் நிலைக்கு வருவதற்காகத் தலையை உயர்த்தினால் நீங்களும் நீங்களும் தலையை உயர்த்துங்கள். அவர் அமர்ந்து தொழுதால் நீங்களும் அமர்ந்து தொழுங்கள்.
(முஸ்லிம்)

இந்நபிமொழியின் அடிப்படையில் இமாமை முந்தக் கூடாது. இமாமைப் பின்பற்றியே தொழ வேண்டும். இதனை விரிவாக விளக்குவதென்றால்,ரசூ லுல்லாஹி சள்ளல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தொழுகையில் ஒரு செயலை பல விதமாகச் செய்திருக்கிறார்கள். 

உதாரணமாக :-,  சில சமயங்களில் கையை தோல் வரை உயர்த்துவார்கள். சில சமயங்களில் காது வரை உயர்த்துவார்கள். அதே போன்று இரண்டாவது ரக்அத்திலிருந்து மூன்றாவது ரக்அத்திற்காக எழும்புகின்ற போது சில சமயங்களில் கையை உயர்த்திவிட்டு எழுவார்கள். இவ்வாறு சுன்னாவில் பல வழிமுறைகள் இருக்கின்றன. இது போன்ற விடயங்களிலும் இமாமைப் பின்பற்றித்தான் ஆக வேண்டுமென்று சில அறிஞர்கள் முன்பு குறிப்பிட்ட ஹதீஸின்டிப் படை யில் சட்டத்தைக் கூறிவிட்டார்கள். 

ஆனால் அந்த ஹதீஸ் அதனைக் கூறவில்லை. ஹதீஸ் கூறுவது இமாமை முந்தக் கூடாது என்பதையே தவிர இமாம் செய்கின்ற அனைத்து விதமான செய்கைகளையும் மஃமூம்களும் செய்ய வேண்டும் என்பதல்ல. 

நபி சள்ளல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:


عن أبي هريرة  أن النبي  قال : ”أمَا يَخْشَى أحَدُكُمْ إذَا رَفَعَ رَأْسَهُ قَبْلَ الإِمَامِ أَنْ يَجْعَل اللهُ رَأْسَهُ رَأْسَ حِمارٍ! أوْ يَجْعَلَ اللهُ صُورَتَهُ صُورَةَ حِمارٍ“


அபூ ஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள் நபி சள்ளல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அறிவித்ததாக உங்களில் ஒருவர் அவரது தலையை இமாம்(உயர்த்துவதற்கு) முன்னால் உயர்த்தினால் அல்லாஹ{த்தஆலா அவரது தலையை கழுதையின் தலையாக மாற்றிவிடுவான். அல்லது அல்லாஹுத்தஆலா அவரது உருவத்தை கழுதையின் உருவமாக மாற்றிவிடுவான் என அவர் பயப்படவேண்டாமா? (ஆதாரம் : புகாரி, முஸ்லிம்)

இந்த விடயத்தில் மத்ஹப்களைச் சேர்ந்தவர்கள்; வேறு விதமாகச் சட்டத்தை எடுத்தார்கள். அதாவது இமாம் செய்வதையே மஃமூம்களும் செய்ய வேண்டும் என்று கூறினார்கள். அதனடிப்படையில் இமாம் கையை வைப்பதைப் போன்றும் கையை உயர்த்துவதைப் போன்றும் மஃமூம்களும் செய்ய வேண்டியிருக்கும். 

இவர்களுக்கு பதில் என்னவென்றால் நபி சள்ளல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ருகூவிலும் ஸுஜுதிலும் பல துஆக்களை ஓதியிருக்கிறார்கள். இமாமை அனைத்திலும் பின்பற்றுவதென்றால் இமாம் எந்த துஆக்களை ஓதுகிறார் என்பதையும் தெரிந்திருக்க வேண்டும். 

இதில் வருகின்ற இன்னுமொரு சிக்கல்தான் பின்னால் உள்ள வரிசையில் உள்ளவர்களுக்கு இமாம் எவ்வாறு கையை உயர்த்தினார் என்பதைத் தெரிந்து கொள்ள வாய்ப்பில்லை. இவ்வாறாக ஹதீஸ் சொல்லாததை சட்டமாக எடுப்பதை அரபியில் தகல்லுப் (تكلف) என்று சொல்லப்படும். 

அதாவது ஹதீஸ் எதனை நோக்கிக் கூறவில்லையோ அதனை சட்டமாக்கி விடுவது. இதனால் மார்க்கம் அளவுகடந்து சிரமத்துக்குரியதாக ஆக்கப்படுகிறது. எனவே இவ்வாறு நடந்து கொள்ளுமாறு அந்த ஹதீஸ் கூறவில்லை. 

இங்கு கேட்கப்பட்ட கேள்வி அமைதியான தொழுகையில் இமாம் முந்தியவராக ருகூஉ சென்றுவிட்டால் மஃமூம்கள் பாத்திஹாவை பூரணப்படுத்திவிட்டு ருகூஉ செய்வதா? அல்லது இமாமை அவரோடு சேர்ந்து பின்பற்றுவதா? என்பதுதான். 

அமைதியான தொழுகையில் இமாம் பாத்திஹாவை சத்தமாக ஓதாததினால் மஃமூம்கள் அதனை ஓதுவது கடமையாகும். இந்நிலையில் மஃமூம்களுக்கு அதனை ஓதுவதற்கு நேரம் கிடைக்காமல் இமாம் ருகூஉ செய்தால் முன்பு கூறிய ஹதீஸினடிப்படையில் 
 இமாம் ருகூஉ செய்தால் மஃமூம்களும் ருகூவுக்குச் சென்றுவிட வேண்டும்.

 இமாமைப் பின்பற்றுவது என்பதன் பொருளை தெளிவாக விளங்க வேண்டும். அதாவது இமாம் ருகூஉ செய்த பின்னரும் மஃமூம் ருகூஉ செய்யாமல் தாமதித்தால் இமாம் எடுத்துக் கொண்ட நேரத்தை விடவும் அதிக நேரத்தை மஃமூம் எடுத்துக் கொள்கிறார். இதில் இமாமை மஃமூம் முந்தி விடுகிறார். யதார்த்தத்தில் இமாமுக்கும் மஃமூம்களுக்கும் இடையில் இவ்வாறான சந்தர்ப்பங்கள் அமைவது இயல்பானது. இருப்பினும் நபிகளாரின் ஹதீஸின் அடிப்படையில் எந்நிலையிலும் இமாமை முந்திவிடாது பின்பற்றுவது கடமையாகும். 

இங்கு பாத்திஹா ஓதுவதின் நிலை பற்றி இப்போது பார்ப்போம். 
நபி சள்ளல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:

பாத்திஹா இல்லாமல் தொழுகை இல்லை.

இந்த ஹதீஸ் கூறுவதன் அடிப்படையில் ஒரு ரக்அத்தில் மாத்திரம் பாத்திஹா ஓத முடியாமல் போனதனால் அந்தத் தொழுகை இல்லை என்று அர்த்தம் அல்ல. முழுத் தொழுகையிலுமே பாத்திஹாவை ஓதாமல் தொழுதால்தான் அந்தத் தொழுகை வீணாகும்.


அல்லாஹ்வே மிக அறிந்தவன்.