[ஷவ்வால் மாதமும் அதன் ஆறு நோன்புகளும்]

ஷவ்வால் மாதமும் அதன் ஆறு நோன்புகளும்


ஷவ்வால் மாதத்தின் ஆறு நாட்களின் நோன்பின் ஆதாரம் விடயத்தில் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பிழையான பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டதனால் ஹதீஸ் அறிஞர்களின் நூல்களின் ஆதரத்துடன் எமது முஸ்லிம் மக்கள் தெளிவைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற நோக்கில் இதனை வெளியிடுகிறோம்.


அபூ அய்யூப் அல் அன்ஸாரி ரலியல்லாஹு அவர்கள் நபி சள்ளல்லாஹு அலைஹி வஸ் ஸல்லம் அவர்கள் கூறியதாக அறிவிக்கிறார்கள் :


யார்  ரமழானில் நோன்பு நோற்று அதனைத் தொடர்ந்து ஷவ்வாலின் ஆறு நாட்கள் நோன்பு நோற்றால் அவர் ஆண்டு முழுவதும் நோன்பு நோற்றவராவார் ".

(முஸ்லிம், அபூ தாவுத், இப்னு மாஜா, முஸ்னத் அஹ்மத், தாரமி, இப்னு அபீ ஷைபா, பைஹகி, முஸ்னத் தயாலிஸி, ஷறஹ் முஷ்கிலுல் ஆதார் தஹாவி)


இமாம் திர்மிதி, இமாம் தஹாவி, இமாம் இப்னு குதைமா, இமாம் அல் அல்பானி, இமாம் சித்தீக் ஹஸன் கான், இமாம் இப்னு ஹஜர் அல் அஸ்களானி உட்பட இன்னும் ஏனைய இமாம்களும் இந்த ஹதீஸை ஸஹீஹ் என தீர்ப்பளித்துள்னர். 


மேற்படி ஆதாரபூர்வமாக உறுதிப்படுத்தப்பட்ட ஹதீஸை செயல் வடிவம் கொடுக்கும்போது கவனிக்கப்பட வேண்டிய விடயங்களாவன.....


இந்த நோன்பு ஷவ்வால் மாதத்தின் ஏதேனும் ஆறு நாட்களில் நோற்றுக் கொள்ள முடியும். தொடராகத்தான் நோற்க வேண்டும் என்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை. தொடராகவோ விட்டு விட்டோ நோற்றுக்கொள்ள முடியும்.


சனிக்கிழமை நாட்களில் நோற்க முடியாது 

ஆதாரம்:


அஸ்ஸம்மா பின்த் புஸ்ர் ரலியல்லாஹு அன்ஹு  அவர்கள் நபி சள்ளல்லாஹு அலைஹி வஸ் ஸல்லம் அவர்கள் கூறியதாக அறிவிக்கிறார்கள்.


சனிக்கிழமை நாட்களில் பர்ளான நோன்பைத் தவிர நோற்க்க வேண்டாம் உங்களில் யாராவது திராட்சையின் நெட்டியை அல்லது ஒரு மரத்தின் குச்சியைத் தவிர எதையும் பெற்றுக்கொள்ளா விட்டால் அதையாவது சுவைத்துக்கொள்ளட்டும். "
(நஸாமி அல் குப்றா, திர்மிதி, இப்னு மாஜா, முஸ்னத் அஹ்மத்,)


மேற்குறிப்பிட்ட ஹதீஸில் சனிக் கிழமைகளில் பர்ழான (கடமை) நோன்பைத் தவிர ஏனைய நோன்புகள் தடைசெய்யப்பட்டுள்ள காரணத்தினால் ஷவ்வாலின் ஆறு நோன்பை சனிக்கிழமைகளில் நோற்க முடியாது.


குறிப்பு: ரமழான், கழா, நேர்ச்சை, கப்பாரா போன்ற நோன்புகள் பர்ழான (கடமையான) நோன்புகளாகும்.


வெள்ளிக் கிழமைகளில் இந்த நோன்பை தனியாக நோற்க முடியாது வியாழக் கிழமையுடன் இணைத்தே நோற்க வேண்டும். 


ஆதாரம்:


அபூஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் நபி சள்ளல்லாஹு அலைஹி வஸ் ஸல்லம் அவர்கள் கூறியதாக அறிவிக்கிறார்கள்.


 'உங்களில் எவரும் வெள்ளிக்கிழமை (மட்டும் ) நோன்பு நோற்காதீர்கள் அதற்கு முன்பு ஒரு நாள் அல்லது அதற்குப் பின்பு ஒரு நாள் நோன்பு நோற்பதைத் தவிர " (புகாரி, முஸ்லிம்)


வெள்ளிக் கிழமைக்கு முன் வியாழன் ஆகும் அதன் பின் சனிக் கிழமையாகும் எனினும் மேற் குறிப்பிட்ட சனிக் கிழமையில் கடமையான நோன்பைத் தவிர நோற்கத் தடுக்கப்பட்டதன் அடிப்படையில் ஷவ்வாலின் ஆறு நோன்பு நோற்கும் நாட்கள் கடமையான நோன்பு இல்லாததனால் வெள்ளிக் கிழமையுடன் சனிக் கிழமையை சேர்க்க முடியாது எனவே வியாழக்கிழமையுடன் இணைத்தே வெள்ளிக்கிழமை நோன்பு நோற்கப்படவேண்டும்.


பெண்களுக்கான மேலதிகமான குறிப்பான சட்டம் 


திருமணம் முடித்த பெண்களுக்கு இஸ்லாம் கூறும் சட்டம் என்னவென்றால் கணவன் உடனிருக்கும் போது ரமழான் நோன்பைத் தவிர கணவனின் அனுமதியின்றி நோன்பு நோற்க முடியாது ஆதாரம்: 


அபூஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் நபி சள்ளல்லாஹு அலைஹி வஸ் ஸல்லம்  அவர்கள் கூறியதாக அறிவிக்கிறார்கள். 


'கணவன் உடனிருக்கும் நிலையில் அவர் அனுமதியில்லாமல் ஒரு பெண் நோன்பு நோற்பது ஆகுமானதல்ல. " (புகாரி, முஸ்லிம்)


குறிப்பு: இங்கு புஹாரியின் வாசகம் இடம் பெற்றுள்ளது ' ரமழானைத் தவிர " எனும் வாசகம் அபூதாவுதில் அதிகப்படியாக உள்ளது.


பிக்ஹ் சட்டம்


மேற்குறிப்பிட்ட நபிமொழிகளால் நபி வழியைப் புரிந்து கொள்ளும் வழிமுறை என்னவென்றால் ஏதெனும் ஒரு நபிமொழியை நடைமுறைக்கு எடுக்கும் போது ஏனைய நபிமொழிகளுடன் முரண்படாத வகையில் நடைமுறைப்படுத்துவதே உண்மையாக நபியைப் பின்பற்றுவதன் அர்த்தமாகும்.


மாறாக நபிமொழியைப் பின்பற்றுவதாக கருதிக்கொண்டுஅல் குர்ஆனையோ அல்லது நபி மொழிகளையோ ஒன்றுக் கொன்று முரணாக சுமப்பது மார்க்கத்தில் தன் வழியை உருவாக்கும் வழிமுறையாகும் இதனைத் தடுப்பதற்காகவே எப்பபொழுதெல்லாம் நபிமொழிகள் தொகுக்கப்பட்டதோ அப்போதிலிருந்தே இமாம்கள் பாடத் தலைப்புகள் இடும் போது ஹதீஸ்களால் பெறப்படும் சட்டங்களையே தலைப்புகளாக இட்டார்கள். 


குர்ஆனையும் அஸ்ஸுன்னாவையும் அதைப் பெற்றுக் கொள்ளும் வழிமுறைகளைத் தவிர்த்துக் கொண்டு தானே மார்க்க மேதையாக மாற முயற்சிக்கும் நபர்களின் அறியாமைத் தன்மையால் மேற்குறிப்பிட்ட இமாம்களின் வழிமுறைகளை விளங்கிக் கொள்ள சக்தி பெறாததால் இன்றைய சமூகத்தில் எத்தனையோ நபிமொழிகளை அல்குர்ஆனுக்கும் ஏனைய நபிமொழிகளுக்கும் முரணாக விளங்கிக் கொள்வதிலிருந்து தப்பவில்லை.

 

இப்படிப்பட்ட தவறுகளில் ஒன்றாகத் தான் சனிக்கிழமை தொடர்பாக நாம் கூறும் மேற்குறிப்பிட்ட ஹதீஸையும் வெள்ளிக்கிழமை தொடர்பாக மேற்குறிப்பிட்ட ஹதீஸையும் முரணாகவும் பிழையாகவும் விளங்கும் சிக்களை நாம் காண்கிறோம். 


இன்னும் சிலர் ஹதீஸ் கல்வியை சரியாக அறியாத நிலையில் இவ்வாறான ஹதீஸ்களை பலஹீனமாக ஆக்கும் வழிமுறைகளை கையாண்டனர். இவைகளை நாம் கண்ணுற்ற நிலமையில் தான் இந்த ஆக்கத்தை  வெளியிடுகிறோம். 


இதிலே ஆதரங்களை சுருக்கமாகக் குறிப்பிட்டுள்ளோமே தவிர அதன் விரிவான விளக்கங்களையும் ஆழமான விடயங்களையும் தவிர்த்து விரிவை அஞ்சி சுருக்கமாக வெளியிடுகிறோம்.


மேலதிகமான விளக்கங்களுக்கும் ஆழமான கருத்துக்களை எடுத்துக் காட்டுவதற்க்கும் தேவைப்படும் பட்சத்தில் எதிர்வரும் வெளியீடுகளில் இன்ஷா அல்லாஹ் கவனமெடுப்போம்.


பலஹீனமான ஹதிஸ்


ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் அறிவிக்கிறார்கள்

'நபி சள்ளல்லாஹு அலைஹி வஸ் ஸல்லம்  அவர்கள் மாதத்தில் சனி, ஞாயிறு, திங்கள் நாட்களிலும்மற்ற மாதத்தில் செவ்வாய் புதன், வியாழன் போன்ற நாட்களிலும்நோன்பு வைப்பவர்களாக இருந்தார்கள்" (பலஹீனமான ஹதீஸ்: திர்மிதி, அபூதாவுத்)


குறிப்பு


ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்களிடமிருந்து அறிவித்த அறிவிப்பாளர் 'கைத்மா" நம்பகமானவராக இருந்தாலும் நேரடியாக செவிமடுக்காத விடயங்களை அறிவிக்கும் பழக்கமுள்ளவராக இருந்தார்.

அதனை இர்ஷால் எனக் கூறப்படும். (பார்க்க : தக்ரீப் இப்னு ஹஜர்)


ஷெய்க் நாசிருத்தீன் அல்-அல்பானி அவர்களின் முதல் வெளியிட்ட புத்தகங்களான 'ஸஹீஹ் அல் ஜாமி" 'அல்மிஷ்காத்" 'முஹ்தசருல் ஷமாயில்" போன்ற நூற்களில் இதனை ஸஹீஹ் என முடிவு கொடுத்திருந்தாலும் இருதியாக வெளியிட்ட தனது நூலில் இதனை பலஹீனமான ஹதீஸ் என தீர்ப்பளித்துள்ளார்.


பார்க்க : லயீப் திர்மிதி, ஸஹர் அர்-ரவ்ல் பக்கம்(37)


சுருக்கம்


அபூ  அய்யூப் அல் அன்ஸாரி ரலியல்லாஹு அன்ஹு  அவர்கள் நபி சள்ளல்லாஹு அலைஹி வஸ் ஸல்லம்  அவர்கள் கூறியதாக அறிவிக்கின்றார்கள் :


'யார் ரமாழனில் நோன்பு நோற்று அதனைத் தொடர்ந்து ஷவ்வாலின்

ஆறு நாட்களில் நோன்பு நோற்றால் அவர் ஆண்டு முழுவதும்

நோன்பு நோற்றவராவார்"


(ஆதாரம்: முஸ்லிம், அபூ தாவுத், இப்னு மாஜா, முஸ்னத் அஹ்மத், தாரமி, இப்னு அபீ ஷைபா, பைஹகி, முஸ்னத் தயாலிஸி, ஷரஹ் முஸ்கிலுல் ஆதார் தஹாவி)


நான் சரியாகத் தீர்ப்புக் கொடுத்திருக்கும் பட்சம் அது அல்லாஹ்விடம் இருந்துள்ளதாகும் பிழையாக தீர்ப்புக் கொடுத்திருக்கும் பட்சம் அது ஷைத்தானின் பக்கமிருந்தும் என்னிடமிருந்தும் ஏற்பட்டதாகும்.


சகல வல்லமைமிக்க அல்லாஹ்வுக்கும் புகழ் சேர்த்து இறுதி நபி சள்ளல்லாஹு அலைஹி வஸ் ஸல்லம் அவர்களின் மீது ஸலவாத்தும் ஸலமும் கூறி அபூ அப்துர் ரஹ்மான் அஸ் ஸைலானி யஹ்யா சில்மி பின் முஹம்மது நுபார் பின் உஸ்மான் பின் நூஹ் லெப்பை ஆல மரிக்கார் அல் யமனி அஸ்ஸைலானி அஸ் ஸலபி அல் அசரி ஆகிய நான் நபி சள்ளல்லாஹு அலைஹி வஸ் ஸல்லம்  அவர்கள் மதீனாவை நோக்கி இடம் பெயர்ந்த 1431ம் வருடம் ஷவ்வால் மாதம் பிறை 2ல் இதனை எழுதி வெளியிட்டேன்.