வீடியோ போட்டோ ,கலாச்சாரமும் அநாச்சாரமும்

கல்யாண வீட்டில் வீடியோ எடுப்பது போட்டோ எடுப்பது என்பது புரையோடிப் போன ஒரு பழக்கமாக நீண்ட காலமாக நமது சமுதாயத்தில் உள்ளது. கல்யாணம் என்றதும் வீடு களைகட்டி நிற்கின்றது. வீடியோ இல்லாத திருமணமா ? போட்டோ இல்லாத திருமணமா ? என்று கேட்கும் அளவுக்கு வீடியோ போட்டோ ,கலாச்சாரமும் அநாச்சாரமும் கொடி கட்டிப் பறக்கின்றது. ஏழை பணக்காரன் என்ற பாகுபாடு இல்லாமல் இஸ்லாமிய சமூகத்தைத் தொற்றி நிற்கும் ஒரு கொடிய தொற்று நோயாகும். அந்நிய ஆடவர்களின் பார்வைகளில் நம்முடைய பெண்கள் விருந்தாகும் வீடியோ போட்டோ கலாச்சாரத்தையும், இதை அடிப்படையாகக் கொண்ட திருமணங்களையும், இத்தகைய கலாச்சார சீரழிவை குறித்தும் நமது சமுதாயம் சிந்திக்க கடமைப்பட்டுள்ளது.


மணமகன் இல்லத்திலிருந்து துவங்கி, மணமகள் இல்லத்திற்கு அல்லது மண்டபத்திற்குச் சென்று திருமண ஒப்பந்தம் முடியும் வரையிலும் அத்தனையும் படமாக்கப்படுகின்றன. குறிப்பாக இந்தக் கேமரா, பெண்கள் விருந்து பரிமாறும் போது, அங்க அசைவுகள் அனைத்தையும் கிளிக் செய்யத் தவறுவதில்லை. வேலை செய்கின்ற பெண்களுக்கு நிர்ப்பந்தமாக ஆடை விலகல் நடைபெறத் தான் செய்யும். ஆனால் இவையெல்லாம் ஒளிப்பதிவாகிக் கொண்டிருக்கின்றன என்பது தான் வேதனைக்குரிய விஷயமாகும்.அதாவது அங்கிங்கு அசைந்து, வந்த விருந்தாளிகளை விழுந்தடித்துக் கவனிக்கும் பெண்களை, கேமராமேன் குறி தவறாது பார்த்துக் கொண்டிருக்கின்றான். பற்றாக்குறைக்கு அவனுக்குப் பக்க துணையாக லைட் பிடிக்க இன்னொரு எடுபிடியாள் வேறு ! திருமணத்தில் கலந்து கொள்ளும் பெண்கள் முதல் அனைவரும் கேமரா மேன்களின் பார்வைகளுக்கு முதலில் விருந்தாகின்றனர். இந்த ரசிப்பின் பின்னர் தான் அவர் படமெடுப்பார். 


இப்படி மணப்பெண் முதற்கொண்டு, மனைவி, மக்கள், சகோதரிகள், தாய்மார்கள் , கொழுந்தியாக்கள் என்று அனைவர் மீதும் பாயும் கேமராவைப் போன்றே இந்த கேமராமேனின் பார்வையும் வளைத்து நிற்கின்றது. இதில் மிகமிக வேதனைக்குரிய விஷயமும் வெட்கக்கேடான விஷயமும் என்னவென்றால் இந்த வீடியோக்களுக்கு, வீட்டுப் பெண்கள் கூச்ச நாச்சமின்றி போஸ் கொடுப்பது தான்.பெண்கள் ஆண்களின் முன்னால் காட்சிப் பொருளாகத் தோன்றுவது கூடாது. இப்படி வீடியோவில் பதிவாகி காட்சிப் பொருளாகும் பெண்கள் ஒரு தடவை மட்டும் பாவம் செய்யவில்லை. அந்த வீடியோ கேஸட்டுகள் எப்போதெல்லாம் ஆண்களால் பார்க்கப்படுகின்றதோ அப்போதெல்லாம் பாவம் பதியப்படும் நிலையை அடைகின்றார்கள். இதில் தவ்ஹீத் ஜமாஅத் என்று கூறுவோர் கூட விதிவிலக்காக இல்லை. அவர்களது வீட்டிலும் வலீமா விருந்து என்ற பெயரில் வீடியோ எடுக்கப்பட்டு, அதில் குடும்பப் பெண்களை எல்லாம் அரங்கேற்றும் அவலத்தை நடத்தி விடுகின்றார்கள்.


இந்த விஷயத்தில் ஆண்கள் ரோஷமிழந்து நிற்கின்றார்கள். அதனால் தான் மணம் முடிக்கப் போகும் பெண்ணை ஒரு கேமராக்காரன் பார்த்து அவளது அழகை ரசிப்பதற்கு அனுமதிக்கின்றான். இதுபோன்று தனது வீட்டுப் பெண்கள் அனைவரையும் காட்சிப் பொருளாக ஆக்கி, அதை அடுத்தவர்களின் பார்வைகளுக்கு விருந்தாகப் படைக்கின்றான். இது இவனது ரோஷ உணர்வு முற்றிலும் உலர்ந்து போய் செத்து விட்டது என்பதையே காட்டுகின்றது. 


போட்டோக்கள் விஷயத்தில் பாஸ்போர்ட், அடையாள அட்டை, டிரைவிங் லைசன்ஸ் போன்ற அவசியத் தேவைகளுக்காகவும், ஆதாரங்களுக்காகவும் பயன்படுத்துவதில் தவறில்லை. ஆனால் இவையன்றி அநாவசியமாக போட்டோ எடுத்து அதைப் பாதுகாத்து வைப்பதன் மூலம் நாம் பாவமான காரியம் செய்தவர்களாகின்றோம். இத்தகைய உருவப்படங்கள் வீட்டில் இருக்கையில் மலக்குகள் வருவது கிடையாது.

நாயோ உருவப்படமோ உள்ள வீட்டில் வானவர்கள் நுழைய மாட்டார்கள் என்று நபி சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூதல்ஹா ரலியல்லாஹு அன்ஹு , புகாரி 


ஆயிஷா ரலியல்ல்லாஹு அன்ஹு வீட்டுக்கு நபி சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வருகின்ற போது உருவப்படங்களைக் கண்டு உள்ளே பிரவேசிக்க மறுக்கின்றார்கள் என்பதை புகாரி ஹதீஸில் காண முடிகின்றது.


எனவே நமது வீட்டில் அருளைச் சுமந்து வரும் மலக்குகள் உள்ளே வருவதற்குத் தடையாக அமைகின்ற , மார்க்கம் தடை செய்துள்ள இந்த உருவப் படங்களை விட்டும் நாம் தவிர்ந்திருக்க வேண்டும். இது மட்டுமின்றி ஏற்கனவே குறிப்பிட்டபடி திருமண வீடியோவினால், திருமண போட்டோக்களாலும் ஏற்படும் அனைத்து தீமைகளை விட்டும் நாம் விலகியிருப்போமாக !


ஈமெயில் மூலம் பெறப்பட்ட ஒரு கட்டுரையில் இருந்து சுருக்கமாக பிரசுரிக்கப்பட்டுள்ளது.