[பிக்ஹ் விடயத்தில் பிடிவாதமும் இயக்கவாதிகளின் அடையாளமும்]

பிக்ஹ் விடயத்தில் பிடிவாதமும் இயக்கவாதிகளின் அடையாளமும்

அறிந்து கொள்ளுங்கள்! ஒரு விடயத்தில் உறுதியோடு இருப்பதும் அதில் பிடிவாதத்துடன் இருப்பதும் இரண்டும் ஒன்றல்ல. பிடிவாதம் என்பதற்கு அரபியில் அத்தஅஸ்ஸுப்

(التعصب) 

என்றும், உறுதியோடு இருப்பதை அல்இஸ்திகாமத் 

(الاستقامة) 

என்றும் சொல்லப்படும். தஅஸ்ஸுப் - இஸ்திகாமத் ஆகிய இரண்டும் ஒன்றுக்கொன்று முரண்பட்ட பொருளைக் கொண்ட இரு விடயங்களாகும். 

பிடிவாதம் (தஅஸ்ஸுப்) என்பது ஒரு விடயம் ஆதாரமற்றது என அறிந்த பின்னரும் அதனை விட்டுவிடாமல் பற்றிப்பிடித்துக் கொண்டிருப்பதாகும். 

உறுதித்தன்மை (இஸ்திகாமத்) என்பது ஒரு விடயம் ஆதாரபூர்வமானதுதான் என்பதை அறிந்து அதனை உறுதியோடு எடுத்து நடப்பதாகும்.

ஒருவர் சுமந்திருக்கும் ஒரு பிக்ஹின் கருத்தை ஆதாரமற்றது என நிரூபிக்கப்பட்டதன் பின்னும் அதனைச் சுமப்பது பிடிவாதமாகும். அதே போல் அவன் ஆதாரத்தைப் புரிந்து கொள்வதற்கு போதிய கல்வியறிவு இல்லாத போது ஒரு உலமாவின் கருத்தை அவர்மீது கொண்ட நம்பிக்கையின் காரணமாக தனக்கு ஆதாரம் தெரியாவிட்டாலும் அதனை எடுத்துப் பின்பற்றுவது தக்லீதாகும்.

இவ்வகையான தக்லீத் ஆதாரத்தைப் புரிந்து கொள்ளச் சக்தியற்றவர்களின் மீது அனுமதிக்கப்பட்டதாகும். ஏனெனில், ஒரு பொதுமனிதன் தனக்குத் தெரியாத விடயங்களை கல்வியைச் சுமந்த ஒரு ஆலிமை அணுகியே பெற்றுக் கொள்ள வேண்டியிருக்கிறது. 

ஒரு முஹத்திஸ் ஒரு அறிவிப்பை ஸஹீஹ் என கூறினால் பொது மனிதனாக இருப்பவனுக்கு அந்த முஹத்திஸின் தீர்ப்பு சரியானதா அல்லது தவறானதா என்பதை புரிந்து கொள்ள முடியாது. அதே போன்று சில நேரங்களில் ஒரு பகீஹ் (சட்டக் கலை அறிஞர்) ஒரு விடயத்தை ஹராம் என்று சொன்னால் அதனைக் கேட்கும் ஒரு பொதுமனிதன் அந்தத் தீர்ப்புக்கு ஆதாரமாக எடுக்கப்பட்ட அல்குர்ஆன் வசனங்களையோ, ஹதீஸ்களையோ அறிந்திருக்க மாட்டார். 

ஏனென்றால் அந்த பகீஹ் அவரது தீர்ப்புக்கு ஆதாரமாக பல ஆயத்துகளையும், ஹதீஸ்களையும் ஆய்வு செய்திருப்பார். அந்த ஆதாரங்கள் அனைத்தையும் ஒரு பொது மனிதன் ஆராய்வதற்குச் சக்தி பெறமாட்டார். எனவே இத் தீர்ப்பைப் பொது மக்கள் சுமக்கும் போது அது தக்லீதாகவே கருதப்படும். இவ்வகையான தக்லீத் மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்டதாகும்.

எந்த அறிஞர்களெல்லாம் குர்ஆனையும் சுன்னாவையும் சஹாபாக்கள் விளங்கி, நடைமுறைப்படுத்திய பிரகாரம் தாங்களும் விளக்கம் பெற்றுக் கொண்டார்களோ அத்தகைய உலமாக்களின் தீர்ப்பைப் பெற்றுக் கொள்வது பொது மக்கள் மீது அனுமதிக்கப்பட்டதாகும். அதே போன்று அதே பாதையில் கல்வியைச் சுமந்த அறிஞர்களால் அடையாளம் காட்டப்பட்ட அல்லது பொது மக்கள் கல்வியைப் பெற்றுக் கொள்வதற்குச் சிபாரிசு செய்யப்பட்ட ஏனைய அறிஞர்களிடமும் பொது மக்கள் தங்களின் தீர்ப்பைப் பெற்றுக் கொள்வது அனுமதிக்கப்பட்டதாகும்.

பொது மனிதனாக இருக்கும் ஒருவர் சுன்னாவின் அறிஞர் ஒருவரிடம் தனது விடயங்களுக்குத் தீர்ப்பைப் பெற்று அதன்படி செயற்படுபவராக இருக்கும் நிலையில், தான் தீர்ப்பைப் பெற்றுக் கொண்ட அறிஞரின் தீர்ப்புக்கு முரணாக இன்னுமொரு சுன்னாவின் அறிஞரின் தீர்ப்பு இருப்பதைக் கண்டதன் பின்னால், முரணாக சொன்ன சுன்னாவின் அறிஞரின் தீர்ப்பையும் கவனிக்காமல், அதனைச் செவிமடுக்காமல் தான் தேர்ந்தெடுத்த அறிஞரின் தீர்ப்பை மட்டுமே ஏற்றுக் கொள்வது அல்லது ஏனைய சுன்னாவின் உலமாக்களின் தீர்ப்புகளை அவசியமற்றதாகக் கருதுவது பிடிவாதப் போக்காகும்.

எனவே சத்தியமான பாதையிலுள்ள அறிஞர்களிடம் பிக்ஹ் மஸாஇல்களின் தீர்ப்புக்களில் சில சமயங்களில் அவர்களின் தீர்ப்புகளுக்கு மத்தியில் முரண்பாடான தீர்ப்புகளையோ, கருத்து வேறுபாடுகளையோ நீங்கள் காணக்கூடும். அந்நிலையில், அவர்கள் அனைவருடைய கருத்துகளையும் நீங்கள் செவிமடுத்து, அத்தீர்ப்புகளில் அல்லது கருத்துகளில் எவருடைய தீர்ப்புகளுக்கான ஆதாரம் அல் குர்ஆனாலும் சுன்னாவாலும் ஸஹாபாக்களின் வழிமுறையாலும் நிருபிக்கப்பட்டதாக உள்ளதோ அதை பின்பற்றுவதே உங்கள் மீதுள்ள கடமையாகும். 

இஸ்திகாமத் என்பது உறுதியோடு செயற்படுவதைச் சார்ந்ததாகும். இதனை விட்டுவிட்டு நீங்கள் தனிப்பட்ட ஒருவரை மட்டுமே நாடுவதை நோக்கமாகக் கொள்ளும்போது அது தஅஸ்ஸுப் எனும் பிடிவாதமாக மாறிவிடும். 

இதனை நன்கு விளங்கிக் கொள்ளுங்கள். ஆதாரத்தின் மீது உறுதியுடன் செயற்படும் இஸ்திகாமத்தைப் பெற வேண்டுமென்றால் அதற்கு மார்க்க கல்வி இன்றியமையாதாகும். மார்க்க கல்வியோடுதான் இஸ்திகாமத் என்பது நிலை பெற்றிருக்கும். மார்க்க கல்வியில்லாத நிலைதான் தக்லீதை தோற்றுவிக்கிறது. 

எனவேதான் மார்க்க கல்வியைப் பெறாதவர் தனக்கு நம்பிக்கைக்குரிய உலமாவுஸ் ஸுன்னா என்று சொல்லப்படும் அறிஞர்களிடம் தனக்குரிய தீர்ப்பைத் தக்லீதின் அடிப்படையில் சுமந்து செயற்படுவது மார்க்க கல்வியைப் பெறாத பொது மக்கள் மீது கடமையாகும்.

ஆனால் இதற்கு மாற்றமாக தனது நிலைப்பாட்டுக்கு முரணாக இருக்கும் கருத்துதான் சரியானதென்றும் ஆதாரபூர்வமானதென்றும் தெளிவானதன் பின்னால் அதன் உண்மை நிலையை ஆராயாமல் சுன்னாவின் அறிஞர்கள் இருவர் இருக்கும் நிலையில் அவர்களில் ஒருவரின் கருத்தைப் பற்றிப் பிடித்துக் கொண்டு அதற்கு முரணான கருத்தைச் சுமந்த சுன்னாவின் அறிஞருடைய தீர்ப்பை ஏற்றுக் கொள்ள மறுப்பதும் குறிப்பிட்ட ஒரு அறிஞரின் தீர்ப்பை மட்டுமே ஏற்றுக் கொள்வோமென்று கூறுவதும் எவருக்கும் எந்நிலையிலும் அனுமதிக்கப்பட்டதல்ல.

ஏனென்றால் நாம் எமக்குத் தேவையான தீர்ப்புகளை எந்தவொரு தரமான அறிஞரிடம் பெற்றாலும், அந்த அறிஞரிடமும் தவறுகள் நிகழலாம். அஹ்லுஸ்சுன்னாவின் அறிஞர்களில் ஒருவரின் தீர்ப்பை மட்டுமே நாம் ஏற்றுக் கொள்வோமென்று கூறுவதற்கு பொது மக்களில் எவருக்கும் உரிமையில்லை. 

ஆனாலும் ஸஹாபாக்களின் அடிச்சுவட்டில் மார்க்கத்தை அமைத்துக் கொண்ட அஹ்லுஸ்ஸுன்னாவின் அறிஞர்களல்லாத மனோ இச்சையினடிப்படையிலும் சுய புத்தியினடிப்படையிலும் மார்க்கத்தை அமைத்துக் கொண்ட அஹ்லுல் பித்அத்தைச் சேர்ந்த அறிஞர்களிடம் நாம் தீர்ப்புகளைப் பெற்றுக் கொள்ளமாட்டோமென்று பொது மக்கள் சொல்வது தவறல்ல. 

ஏனென்றால் அஹ்லுஸ்ஸுன்னாவின் அறிஞர்களல்லாத ஏனைய கொள்கையைச் சேர்ந்த அறிஞர்களை நெருங்குவது வழிகேட்டின் பால் நெருங்குவதாகும். 

ஏனென்றால் , அஹ்லுஸ்ஸுன்னாவைச் சேராத அறிஞர்கள் குர்ஆனையும் சுன்னாவையும் அதன் சரியான விளக்கத்துடன் விளங்கி அதனடிப்படையில்தான் தீர்ப்பளிப்பார்கள் என்று சொல்வதற்கு எந்த உத்தரவாதமுமில்லை. இவ்வாறான அறிஞர்கள் சரியாகவோ தவறாகவோ தீர்ப்பளித்தாலும் இவர்களின் தீர்ப்பை நாம் எடுத்துச் செயற்பட முடியாது. இவர்களின் தீர்ப்பை எடுப்பது நேர்வழியிலிருந்து தவிர்ந்து கொள்வதாகவும் அசத்தியத்திற்கு ஒத்துழைப்பை வழங்குவதாகவுமே அமையும். 
இது பாவமானதொரு செயலாகும்.

அல்லாஹ் கூறுகிறான்:நீங்கள் நன்மையிலும் தக்வாவிலும் ஒருவருக்கொருவர் உதவியாளராக இருங்கள். பாவத்திலும் பகைமையிலும் ஒருவருக்கொருவர் உதவியாளராக இருக்க வேண்டாம். (அல் மாயிதா : 2)

எனவே நாம் வழிகேட்டிற்கு ஒத்துழைப்பை வழங்குவதன் மூலம் அல்லாஹு ஸு ப்ஹானஹுவ தஆலா தடை செய்த ஒன்றை மீறிய குற்றத்திற்கு ஆளாகிவிடுவோம். 

ஏனென்றால் , இது உம்மத்தில் பிளவை ஏற்படுத்தும் செயலாகும். நேர்வழியைத் தவிர்ந்து கொண்டு வழிகேட்டின் பாதையில் பிரச்சாரம் செய்பவர்கள் , அவர்கள் எத்திவைக்கும் கல்வியை நேர்வழியின் அடிப்படையில் சுன்னாவின் அறிஞர்களிடம் பெறவில்லை. இதனால் அவர்கள் குர்ஆன் சுன்னாவின் தூய பொருளை விளங்கவில்லை. இது மாபெரும் அநியாயமாகும்.  

இன்னும், இவர்கள் எந்த ஆயத்தை எந்த ஆயத்துடன் அல்லது ஹதீஸுடன் தொடர்புபடுத்தி விளங்க வேண்டுமென்ற அடிப்படையை சஹாபாக்களின் வழிமுறையில் விளங்கவில்லை. இதன் விளைவாக குர்ஆனுக்கும் சுன்னாவுக்கும் விளக்கமென்ற பெயரில் யார் வந்து எதனைச் சொன்னாலும் அதனை உள்வாங்கிக் கொண்டவர்கள்.


இவர்கள் படிக்கின்ற குர்ஆன் சுன்னாவின் கல்வி, உஸுலுல் பிக்ஹின் கல்வி,  போன்ற எக்கல்வியாக இருப்பினும் அதன் விளக்கத்தை ஏதோவொரு மத்ஹபின் விளக்கமாகவே அல்லது தர்க்க ரீதியான விளக்கமாகவே பெற்றுக்கொள்கிறார்கள். அஹ்லுஸ்ஸுன்னாவைச் தவிரவுள்ள அறிஞர்கள் குர்ஆன் சுன்னாவை ஸஹாபாக்கள் விளங்கிய விதத்தில் விளங்காததன் காரணமாக இவர்கள் குர்ஆனையும் சுன்னாவையும் தரமாக விளங்கியவர்களாக இல்லை.


இதே அடிப்படையில்தான் இன்று உலகளாவிய ரீதியில் பிரச்சாரம் செய்கின்ற யூஸுப் அல் கர்ளாவி அல் குர்ஆனையும் சுன்னாவையும் தரமாக விளங்கியவரல்ல என கூறுகின்றோம். 

இவ்வாறு நாம் சொல்வது இஸ்லாத்துக்கு செய்கின்ற உதவியும் இந்த உம்மத்திற்குக் கூறுகின்ற சிறந்த உபதேசமுமாகும். யூஸுப் அல் கர்ளாவி அல்குர்ஆனுக்கும் ஹதீஸுக்கும் விளக்கம் கொடுக்கக் கூடியவராக இருப்பினும் அவரது விளக்கங்களில் கையாளும் குர்ஆன் ஆயத்களும் ஹதீஸ்களும் ஸஹாபாக்களின் விளக்கத்தின் அடிப்படையில் கையாளப்படவில்லை. அவர் பல விளக்கங்களைக் கொடுத்திருக்கிறார், பல நூல்களை எழுதியிருக்கிறார், இஸ்லாத்தைப் பற்றிப் பல இடங்களில் பேசியிருக்கிறார். ஆனால் இவையனைத்திலும் அவருடைய அளவுகோள் அவருடைய சுய புத்தியும் தர்க்கவாதமும் ஆகும். 

றஸுலுல்லாஹி சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எவ்வாறு ஸஹாபாக்களுக்கு கொள்கையையும் சட்டங்களையும் கற்றுக் கொடுத்தார்களோ அவ்வாறான அளவுகோளில் விளக்கம் கொடுப்பவராக யூஸுப் அல் கர்ளாவி இல்லை. 

எனவேதான் அவர் இன்று உலகில் பெரியதொரு பிரச்சாரத்தில் ஈடுபடுபவராக இருந்தாலும் அவரை நாம் விமர்சிக்கிறோம். அவ்வாறு விமர்சிப்பதன் காரணம் அவர் எத்திவைக்கும் கல்வியை அவர் சரியான வழிமுறையில் பெற்றுக் கொள்ளவில்லை என்பதால் ஆகும். சரியான வழியில் பெறவில்லையென்பதன் பொருள்; குர்ஆன் ஆயத்களுக்கும் ஹதீஸ்களுக்கும் அவர் விளக்கம் கொடுக்கத் தெரியாதவர் என்பதல்ல. மாறாக அவரது விளக்கங்கள் சுய புத்தியாகும்.

இதற்கு மறுப்பாக நாம் கூறுவது, குர்ஆன் ஆயத்களையும் ஹதீஸ்களையும்  
றஸுலுல்லாஹி சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஸஹாபாக்களுக்கு எவ்வாறு காட்டிக்கொடுத்தார்களோ அதுவே ஆயத்களையும் ஹதீஸ்களையும் விளங்கும் சரியான அடிப்படையாகும். எனவே குர்ஆனின் மொழியைப் புரிந்து அறபு இலக்கணத்தைத் தெரிந்து அதனடிப்படையில் விளக்கம் கொடுப்பது இஸ்லாமிய வழிமுறையாகாது. 

எக்கல்வி ஸஹாபாக்களின் வழிமுறையை அளவுகோளாகக் கொள்ளவில்லையோ அது நேர்வழியை விட்டும் விலகிச் சென்ற கல்வியாகும்.இவ்வகைக் கல்விகள் குர்ஆன் சுன்னாவின் பெயரில் கொடுக்கப்பட்டாலும் அவையனைத்தும் வழிகேடுகளாகும். 


taken from nabi walin nam wali april issue