[ஜரஹ் வத் த.தீல் அன்றும் இன்றும் என்றும்]

ஜரஹ் வத் த.தீல் அன்றும் இன்றும் என்றும் 



الحمد لله رب العالمين والصلاة والسلام على من لا نبي بعده
وبعد


ஜரஹ் வத் தஃதீல் இரு அம்சங்களை உள்ளடக்கியிருக்கிறது.

1.ஜரஹ்

2.தஃதீல்

ஜரஹ் என்பதன் அர்த்தம் காயம் என்பதாகும். எவ்வாறு ஒரு மனிதனுக்கு ஒரு காயம் ஏற்படும் போது அவன் அவனது ஆரோக்கியத்தில் பலவீனமடைவானோ அதேபோன்று ஒருவன் மார்க்கத்தைப் பின்பற்றும் போது அதில் அவனுடைய உறுதித் தன்மையில் பழுது ஏற்பட்டு விட்டதென்றால் அவன் தனது மார்க்கத்தை விளங்கும் தன்மையில் அவனுக்கு பலவீனம் ஏற்பட்டுவிடும். அதாவது அவனிடத்தில் ஏதோ ஒரு குறைபாடு இருக்கிறது. அந்தக் குறைபாட்டின் காரணமாக அவன் மார்க்கத்தை எத்திவைக்கும் பொழுது எத்திவைக்கப்படும் விடயத்திலும் குறைபாடுகள் அமைந்திருக்கும். அக்குறைபாடுகள் இரு வகைப்படும்

1. ஒருவன் தான் பெற்றுக் கொண்ட கல்வியை பெற்றுக் கொண்டது போன்றே மனதில் பதிய வைப்பதிலும் அதனை அவ்வாறே எத்திவைப்பதிலும் ஏற்படும் குறைபாடு.

2. தனது மார்க்கத்தை நிலைநாட்டுவதில் அல்லது செயற்படுவதில் ஏற்படும் குறைபாடு.

இவ்விருவகையுமே செயல் சார்ந்த விடயங்களாகும்.

முதலாவது வகை : 
ஒருவர் மார்க்கத்தை எத்திவைக்கப் பயன்படுத்தும் வசனங்கள் அல்லது வார்த்தைகள் அவர் பெற்றுக் கொண்ட கல்வியின் அடிப்படையில் அமையவில்லையென்றால் அது எத்திவைப்பதில் உள்ள குறைபாடாகும். 


ஏனென்றால் மார்க்கம் அவரிடம் எவ்வாறு வந்து சேர்ந்ததோ அவ்வாறே அதனை எத்திவைக்கும் தன்மையை இழந்துவிட்டார். இதன் காரணமாக அவருடைய நம்பிக்கைகளும் நடவடிக்கைகளும் மார்க்கத்தின் தூய வழியை விட்டும் வேறு திசைக்குத் திரும்பிவிட்டது. 


ஆகவே கல்வியாகப் பெற்றுக் கொண்டதை பெற்றுக் கொண்டது போன்றே மனதில் பதிய வைக்காமலும் அதன்படி செயற்படாமலும் இருப்பது ஜரஹ் ஆகும்.

மார்க்கக் கல்வியை அறிவித்தல்களின் அடிப்படையில் பெற்றுக்கொண்டு அதனை எத்திவைக்கும் போது அறிவித்தல்களின் மூலம் பெற்றுக் கொண்டது போன்றே எத்திவைக்கும் தன்மை இல்லாத போது எத்திவைக்கப்பட்ட வார்த்தையிலும் அதன் கருத்திலும் மாற்றம் ஏற்படுகிறது. அப்போது அங்கே சொல்லப்பட்டவைகளில் குறைபாடுகள் அமைந்து விடுகின்றன. இதன் காரணமாக இல்லாத ஒரு விடயம் இருப்பதாகச் சொல்லப்பட்டு உண்மை மறைக்கப்படுகிறது. இந்தப் பண்புகளைக் கொண்டவன் தான் பெற்ற கல்வியை எத்திவைப்பதற்கு சக்தி பெற்றவனாக கருதப்படமாட்டான். 


ஏனெனில் எத்தி வைக்கும் விடயத்தில் அவனிடம் குறைகள் காணப்படுகின்றன. இக் குறைபாடு சமூகத்திற்கு எடுத்துக் காட்டப்படாவிட்டால் சமூகம் அந்தக் குறைபாடுடைய மனிதனின் வார்த்தைகளை அதுதான் மார்க்கமென்று பெற்றுக் கொள்ளும். இதனைப் புரிந்திருந்ததனால் சுன்னாவின் இமாம்கள் இக் குறைபாடுகளை அடையாளம் காட்டினார்கள். இதனை தங்களின் கடமையாகவும் கருதினார்கள்.

மார்க்கத்தில் குறைபாடுகளை சுமந்தவன் மார்க்கத்தை முஸ்லிம் சமூகத்துக்கு எத்தி வைக்கும் பொழுது,

· வார்த்தைகளை மாற்றிக் கூறுகின்றான்
· இல்லாததை மேலதிகமாகச் சேர்த்துச் சொல்கின்றான்
· இரு வேறு விடயங்களை ஒன்றாக்கிக் காட்டுகின்றான்
· இருக்கின்ற ஒன்றை மறைத்து விடுகின்றான்

இதன் மூலம் அவனிடத்தில் எத்திவைக்கும் தன்மையில் குறைபாடுகள் ஏற்பட்டு விடுவதால் இக் குறைபாடுகளை இனங்கண்டு அதனை தெளிவாக எடுத்துக் காட்டுவதற்கு சுன்னாவின் இமாம்கள் தவறவில்லை. இதனடிப்படையில்தான் அறிவிப்பாளர்களையும், அழைப்பாளர்களையும் உலமாக்கள் ஆராய்ந்து மேற்கூறிய போக்குகள் உள்ளவர்களின் அறிவித்தல்களையும், விளக்கங்களையும் கையாளும் வழிமுறையையும் எடுத்துக்காட்டினார்கள்.

இரண்டாவது வகை: 

இது மார்க்கத்தைப் பின்பற்றும் தன்மையைப் பற்றியதாகும். ஒருவன் எந்தக் கொள்கையைச் சரியானதெனக் காண்கிறானோ அக் கொள்கையின் அடிப்படையில்தான் தன் வாழ்வை அமைத்துக் கொள்கிறான். அவ்வாறு பின்பற்றும் பொழுது அவனது கொள்கை உண்மையிலேயே நபிவழியில் உள்ளதா அல்லது அதுவல்லாததா என பரீட்சிக்கப்பட வேண்டும். அவன் செயற்படுத்தும் கொள்கை ரஸுலுல்லாஹி சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொல்லித் தராத கொள்கையாக இருந்தால் அதனை சுன்னாவின் இமாம்கள் அடையாளம் காட்டுவார்கள். அதன் மூலமே இன்னார் ஒரு முஃதஸிலி, அஷ்அரி என்று அவரவர் சுமந்துள்ள கொள்கைக்கு ஏற்ப பட்டம் சுட்டுவார்கள். 

சொல்லும் விடயம், செயற்படும் வழிமுறை ஆகிய இரண்டு விதமான விடயங்களிலும் விமர்சனம் செய்வதை சுன்னாவின் இமாம்கள்; அன்று முதல் இன்று வரை கையாண்டு வருகின்றனர். ஏனேனில் மார்க்கத்தின் உண்மையான விளக்கமும், தூய கல்வியும் மாற்றமடைந்து விடக் கூடாது. அதாவது ஸஹீஹான ஒரு ஹதீஸுக்கு வேறொரு விளக்கம் கொடுக்கப்படுவதால் அந்த ஹதீஸ் சுமந்த உண்மைதன்மை மாற்றப்படலாம் அல்லது ஸஹீஹான ஹதீஸின் வார்த்தையை மாற்றி அந்த ஹதீஸையே மாற்றிவிடலாம். நாம் இதற்கு இடமளிக்க முடியாது. 

மாற்றம் என்பது அறிவித்தல் 


( رواية ரிவாயத்) 


ரீதியாகவும், அதன் விளக்கம் 



( دراية திராயத்) 



ரீதியாகவும் அமைய கூடாது. விளக்கம் ரீதியாக மாற்றம் ஏற்பட்டுவிட்டால் அது அன்று ஸஹாபாக்கள் விளங்காததொரு புது விளக்கமாக அமைந்து விடும். 


ஆகையால் அப் புது விளக்கம் குர்ஆனிலுள்ளும் ஹதீஸினுள்ளும் புகுத்தப்படாமல் இருக்க,உடனடியே சுன்னாவின் இமாம்கள் தவறுகளை தட்டிப் பேசுவதை வழிமுறையாக கொண்டனர். 
அதனை முதல் முதலாக றஸுலுல்லாஹி சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களே தட்டிப் பேசிவிட்டார்கள். நபி சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:



“எல்லாப் புதிய விடயங்களும் பித்அத்கள். எல்லா பித்அத்களும் வழிகேடுகள். எல்லா வழிகேடுகளும் நரகத்தில்” (ஸஹீஹ் - ஸுனன் நஸாயி)

இந்த வார்த்தைகள் நபி சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அவர்களுடைய அனைத்துக் குத்பா உரைகளிலும் கூறும் வார்த்தைகளாகும். எனவே எதுவெல்லாம் மார்க்கத்தில் புதிதாகப் புகுத்தப்படுகிறதோ அதனை அல்லாஹ்வின் தூதர் அடியோடு மறுத்துக் கூறியிருக்கிறார்கள். 


மேலும், நபி சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:



“எமது காரியங்களில் அதில் இல்லாத ஒன்றை யாரும் உருவாக்கினால் அது நிராகரிக்கப்படும்.” (புஹாரி , முஸ்லிம்;)

இதே கருத்திற்கு ஓப்ப பல நபிமொழிகள் மார்க்கத்தில் புதிய விடயங்களையும், கருத்துக்களையும் சேர்ப்பதைவிட்டும் எச்சரிக்கும் வகையில் வந்துள்ளன. மார்க்கத்தில் அன்று இருக்காத புதிய கருத்துகளைக் கூறுவதை இந்நபிமொழிகள் கண்டிப்பாக மறுத்துக் உரைக்கின்றன. 


நபி சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் காலத்தில் முஸைலமா என்பவன் தன்னையும் ஒரு நபியென்று வாதிட்ட போது அவனை முஸைலமா அல் கத்தாப் 

(مسيلمة الكذاب) 

முஸைலமா ஒரு பொய்யன் என்று நபியவர்கள் அவனுக்குப் பொருத்தமான பெயரைக் கொடுத்தார்கள். 

இந்நபியின் அடிச்சுவட்டிற்கு ஏற்ப சஹாபாக்களும் தாங்கள் வாழ்ந்த சமூகத்தில் புதிய கருத்துகள் உருவானபோதெல்லாம் அதனைத் தட்டிப் பேசினார்கள். அதே போன்று தாபிஈன்களும், இமாம்களும் இவ்வழிமுறையைக் கையாண்டு இஸ்லாமிய உம்மத்தில் தோன்றிய பிரிவுகளுக்குப் பட்டங்கள் சுட்டினார்கள். 


இவ்வடிப்டையிலேயே நாமும் தற்காலத்தில் இஸ்லாத்தின் பெயரில் உருவாகும் அனைத்து பிரிவுகளையும் கூட்டங்களையும் அவர்களின் கொள்கையின் அடிப்படையில் எடுத்துக் காட்டிகிறோம்.

முஃதஸிலா معتزلة, 

அஷாயிராأشاعرة , 

ராபிழா رافضة, 

முர்ஜிஆ مرجئة, 

கதரிய்யா قدرية, 

ஜபரிய்யா جبرية, 

சூபிய்யா صوفية, 

சிஸ்திய்யா تشتية, 

தீஜானிய்யா تيجانية, 

பிரேளவீய்யா بريلوية, 

தேவ்பந்திய்யா ديوبندية 


போன்ற பெயர்களில் இக்கூட்டங்கள் பிரித்துக் காட்டப்படும். 


இவர்கள் குர்ஆனுக்கும் சுன்னாவுக்கும் தன் கருத்தை புகுத்தி அதனைத் தங்களின் பாதையாக அமைத்துக் கொண்டார்கள். இக்கூட்டங்களை அடையாளம் காட்டுவது தூய கொள்கையை சுமந்தவர்களின் கடமையாகும்.

“இதன் அடிப்படையில் மார்க்கவிடயத்தில் தகுதியற்றதை புகுத்தும் போது அதனை விமர்சனம் செய்வது எம் கடமையாகும்” 

இக்கூட்டங்கள் ஈமானென்றும், விளக்கமென்றும் எதனை சொல்கிறதோ அது ரஸுலுல்லாஹி சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கற்றுத்தராததாக இருக்கிறது. எனவே இப்பித்அத்வாதிகளை விமர்சனம் செய்வது தூய கல்வியைச் சுமந்தவர்கள் மீது கடமையாகும். இந்த வழிமுறை றஸுலுல்லாஹி சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் காலத்திலிருந்து இன்று வரை தொடர்கிறது.

ஜரஹ் என்பது ஹதீஸ்கள் தொகுக்கப்பட்ட காலங்களுடன் முடிந்துவிட்டதென்றும் அது அறிவிப்பாளர்களைப் பற்றிய ஆய்வுகளுக்கு மட்டுமே சம்பந்தமானதென்றும் கூறுபவர்கள் ஜரஹுடைய வரலாற்றைத் திரும்பிப் பார்த்துக் கொள்ள வேண்டும். ரஸுலுல்லாஹி சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்  செய்த ஜரஹ் , ஹதீஸை அறிவிக்கும் அறிவிப்பாளர்களுக்கு மட்டும் உரியதல்ல. மாறாக மார்க்கத்தை அரையும் குறையுமாக சுமந்தவர்களுக்கே செய்யப்பட்டது. இதே ஜரஹ் ஸஹாபாக்களின் காலத்திலும் கையாளப்பட்டிருக்கிறது. ஹதீஸின் அறிவிப்பாளர்கள் தொடர்பாக செய்யப்பட்ட ஜரஹ் என்பது பிற்காலத்தில் வந்ததாகும். 


இவ்வகையான ஜரஹ் பிற்காலத்தில் மார்க்க கல்வி மனனம் செய்யப்பட்டு பின்னால் வந்தவர்களுக்கு அறிவிக்கப்பட்ட போது கையாளப்பட்டதாகும். இது கல்வியைச் சுமக்கும் அம்சத்தோடு தொடர்பானது. இந்த ஜரஹ் மூலம் ஒருவர் பெற்றுள்ள கல்வியின் தரமும் குறையும் எடுத்துக் காட்டப்பட்டது. அதே போன்று ஒரு மனிதன் எதற்குத் தகுதியுள்ளவனாக இருக்கிறான் என்பதையும் அது எடுத்துக் காட்டியது.



Taken from Nabi Wali Nam Wali Aoril Issue