[இன்றைய காலக்கட்டமும் தஃவா எதனை நோக்கி இருக்க வேண்டும் என்பதும்]

இன்றைய காலக்கட்டமும் தஃவா எதனை நோக்கி இருக்க வேண்டும் என்பதும்


நான் அழைப்புப் பணி செய்பவனாக இருந்து, என்னோடு மக்கள் நெருக்கமாக இருப்பதால் அல்லாஹ் வணங்கப்படுவதில்லை. என்னோடு மக்கள் தோழமை கொண்டாடினால் அல்லாஹ் வணங்கப்டமாட்டான். நான் மக்களை சந்தோஷமாக வைத்திருப்பதால் அல்லாஹ் வணங்கப்படமாட்டான். 


அல்லாஹ் எப்போது வணங்கப்படுவானென்றால் நான் மக்களுடைய உள்ளத்தில் பதியும் படியாக அல்லாஹ்வின் ஏகத்துவத்தையும் அவன் தனித்தவன் என்பதையும் தெள்ளத்தெளிவாக எடுத்துக் கூறி அதனை உறுதியாக எடுத்துரைத்து விட்டடேனென்றால் அப்போது அல்லாஹ் வணங்ப்படுபவனாக இருப்பான். 


அல்லாஹ் ஒருவன் இருக்கிறான். அவனை நாம் வணங்க வேண்டும் அவன் எங்களது இரட்சகன் என்று அந்த இரட்சகனுடைய பெயர்களையும் பண்புகளையும் புரிந்தவர்களாக மாக்களை நாம் மாற்றி விட்டோமென்றால் அன்று நிச்சயமாக அவர்கள் அல்லாஹ்வின் பால் திரும்புவார்கள. 


மாறாக அவர்கள் இதனை அறியாதவர்களாகவும் தங்களின் இரட்சகனை புரியாதவர்களாகவும் இருந்தார்களென்றால் எவ்வாறு அவர்கள் இஹ்லாஸாக மனத்தூய்மையுடன் நடந்து கொள்வார்கள்? எப்படி அல்லாஹ்வுடைய விடயத்திலே தூய்மையுடன் நடப்பவர்களாக அவர்களை எதிர்பார்க்க முடியும்.

எந்தளவுக்கென்றால் அழைப்புப் பணியென்பது ஷஹாதது லாஇலாஹ இல்லல்லாஹ் என்ற குறிக்கோளை மையமாகக் கொண்டே அமையவேண்டும் என்று நாம் கூறுகின்றபோது, இதனைக் கேட்டு ஒருசில கூட்டங்கள் சிரிக்கவும் செய்கிறார்கள். மேலும சிலர் இழிவாகக் கருதுகிறார்கள். 


அப்படியென்றால் நாம் அது தவிரவுள்ள ஏனைய விடயங்கள் அனைத்தையும் பற்றிக் கூறக்கூடிய ஆயத்துக்களை என்ன செய்வது என்று அறிவிழித்தனமாக கேள்வி கேட்கின்றார்கள். 


இவ்வாறு அவர்கள் கூறினாலும் அனைத்து குர்ஆன் வசனங்களின் சட்டங்களும் , அனைத்து ஹதீஸ்களின் தீர்ப்புகளும் அந்த அல்லாஹ்வை தனித்துவப்படுத்தி , ஏகத்துவப்படுத்தி வணங்குவதற்காகவே அருளப்பட்டிருக்கின்றன என்பதை அவர்கள் அறிந்தும் அறியாதவர்கள் போல் நடந்துகொள்கின்றார்கள். 


அழைப்புப்பணியின் திசைகள் பல திசைகளாக மாறியதன் விளைவாக அவன் அல்லாஹ்வை சரிவரப் புரியவில்லை. அந்த மனிதன் அல்லாஹ்வை வணங்கும விடயத்தைப் புரிந்தவனாக இருந்திருந்தால் அவனுடைய திசை மாறியிருக்காது. இதுவே அழைப்புப் பணியின் உண்மையான நிலைப்பாடாகும். அழைப்புப் பணியென்பது அல்லாஹ்வை ஏகத்துவப்படுத்தி வணங்குவதற்கான அழைப்புப் பணியாக இருக்கவேண்டும்.

அல்லாஹ்வைத் தனிப்பட்டவனாக வணங்க வேண்டும் என்ற அழைப்புப் பணி முதலில் எம்முடைய உள்ளத்தில் ஆரப்பிக்கப்பட வேண்டும். நாம் மற்றையவர்களுக்கு எத்திவைப்பதற்கு முன்னர் அவற்றை எமது உள்ளத்திற்கு எத்திவைத்துக் கொள்ள வேண்டும். 


எமது உள்ளத்திற்கு எந்த மார்க்கத்தை உபதேசமாக சொல்ல முடியாததாக இருக்குமோ அந்த மார்க்கம் யாருக்கும் உபதேசமான நாம் எத்திவைப்பதற்கு தகுதியானதல்ல. எந்த மார்க்கத்தை நீங்கள் மார்க்கமென்று நம்பியிருக்கின்றீர்களோ அதை உங்கள் உள்ளம் நம்பத் தயாரில்லை என்றால் அதனை யாருக்கும் சொல்வதில் பயனேதுமில்லை. நீங்கள் உங்களையே ஏமாற்றுபவர்களாக இருக்கின்றீர்கள். 


நீங்கள் எந்த மார்க்கத்தை மார்க்கமென்று புரிந்திருக்கின்றீர்களோ அதை உங்கள் உள்ளங்களுக்கு உறுதியாகச் சொல்லிக் கொடுங்கள். நீங்கள் அதிலே திருந்தி வாழுங்கள். நீங்கள் அதனைப் பின்பற்றியவர்களாக இருங்கள். அதிலே நீங்கள் அதற்கென்றே உறுதியாக வாழுங்கள். நீங்கள் அவ்வாறு நடந்து கொண்டால் உங்கள் வாழ்க்கையும் அதில் நீங்கள் வாழும் வழிமுறையும் ஒரு அழைப்புப் பணியாக மாறிவிடும். 


நபி சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய அருமைத் தோழர்கள் அனைவரும் உலமாக்கள் என்ற பெயரில் இருந்தார்களா? அவ்வாறு அவர்கள் இருக்கவில்லை. இருப்பினும் அந்த அனைத்து நபித்தோழர்களும் இந்த மார்க்கத்தின் பிரச்சாரத்தில் எடுத்துக்கொண்ட பங்களிப்பு ஒருபோது குறைத்து மதிக்கத்தக்க ஒன்றல்ல. 


ஏனென்றால் அவர்கள் தாங்கள் தெரிந்து கொண்டதை தமது வாழ்வில் எடுத்து நடந்தார்கள் அறிந்துகொண்ட மார்கத்தை தங்கள் வாழ்வில் உயிர்ப்பித்தார்கள். 


எனவே யாரெல்லாம் அந்த நபித்தோழர்களை சந்தித்தார்களோ அல்லது அவர்களது சபைகளில் அமர்ந்தார்களோ அவர்கள் அந்த ஸஹாபாக்களிடமிருந்து ஏதேனும் ஒரு படிப்பினையை பெறாது அங்கிருந்து நகரமாட்டார்கள். ஒரு தெளிவை பெற்றுக்கொள்ளாமல் போகவில்லை. 


இதன் காரணம் அநத ஸஹாபாக்கள் அல்லாஹ்வை ஏகத்துவப்படுத்தி வணங்குவதன் விடயத்தில் உயிரோட்டத்தோடு வாழ்கின்ற நிலையிலே இருந்ததுடன் அதுதான் தங்களது அழைப்புப் பணியென்பதை விளங்கியவர்களாக இருந்தார்கள். அந்த அழைப்புப் பணியில் அவர் சொல்கின்ற, செய்கின்ற அனைத்தும் அல்லாஹ்வை ஏகத்துவப்படுத்துவதை நம்பிக்கை கொண்டவன் என்ற அடிப்படையில்தான் அமைந்திருக்கும். 


அந்தப் பாதையில் எந்தத் துன்பமோ, அவமானமோ, நன்மையோ, தீமையோ, அவனைத் தடுத்துவிட முடியாது. அவனது கடமையைச் செய்வதை விட்டும் அவனைத் தடுத்து விட முடியாது. அவனுக்கு எப்படியானதொரு துன்பம் வந்தபோதும் அவனைப் பொறுத்தவரை அல்லாஹ்வை ஏகத்துப்படுத்துவதே முக்கிய இலட்சியமாக இருக்கும். 


இன்னும் யார் அழைப்புப் பணி என்பது என்னவென்று அறிந்தவனாக இருக்கிறானோ அவனே இந்த முக்கியத்துவத்தை அறிந்திருப்பான். மாறாக அதனைப் புரியாதவனோ தனது மானத்திற்கும் மரியாதைக்கும் குறைவந்துவிட்டதென்றால் அல்குர்ஆனையும் அஸ்ஸுன்னாவையும் ஒரு புறம்தள்ளிவிடுவான். மார்க்கத்தைவிட்டும் ஒதுங்கிவிடுவான். தனது கௌரவத்தையும் மதிப்பையும், அந்தஸ்தையும் பேணிக்கொள்ள அல்குர்ஆனின் வசனங்களையும், அல்ஹதீஸ்களையும மறுத்துவிடுவான். 


இதில் அல்குர்ஆனுக்கும், அல்ஹதீஸிற்கும எந்தவொரு அநியாயம் நிகழ்ந்தாலும் அதனைப் பற்றி சற்றும் கவலைப்பட மாட்டான். அவனுடைய கவலையெல்லாம் சொத்துக்காகவும், பொருளுக்காகவும், கௌரவத்திற்காகவுமாக தவிர வேறொன்றுகாகவுமாக இருக்காது. 


இது அல்லாஹ்வுக்கு தனித்துவப்படுத்தி வணங்குபவனுடைய தன்மையல்ல. இவன் அல்லாஹ்வுக்காக அழைப்புப் பணியைச் சுமந்தவனல்ல. 


சகோதரர்களே, சகோதரிகளே !! இதனை நன்றாக விளங்கிக் கொள்ளுங்கள்.

அல்லாஹ்வின் பால் நாம் அழைப்புவிடுப்பவராக இருப்பதென்றால் அல்லாஹ்வுடைய சட்டத்தை மட்டும் தான் நாம் சொல்ல முடியும. அது எமக்கோ நாட்டுக்கோ, மக்களுக்கோ புரிய முடியாததாக இருந்தாலும் சர்ச்சையை உருவாக்குவதாக இருந்தாலும் எமக்கு கடினமாமதாக இருந்தாலும் அல்லாஹ் கூறியதை அப்படியே எத்திவைக்க வேண்டும் 


மாற்றமாக எமது கருத்துக்களையோ சிந்தனைகளையோ அழைப்பு என்ற பெயரில் எத்திவைக்க முடியாது. அல்லாஹ் கூறிய விடயங்களை எங்கே பெற்றுக்கொள் முடியும்? அவை ஒன்று அவனது அல்குர்ஆன் இரண்டு அவனது தூதரின் மூலமாகக் காட்டித்தந்த நபிவழி - ஸுன்னா ஆகிய இரண்டில் இருந்தும் பெற்றுக்கொள்ள முடியும். 


ஏனவே அழைப்பாளர் ஒருவர் அல்குர்ஆனினதும், அஸ்ஸு ன்னாவினதும் வழிமுறையை விடுத்து வேறொரு முறையில் அழைப்புபணியை மேற்கொள் முடியாது. நாம் அழைப்புப் பணியைச் சுமந்தவர்கள் என்றால் நாம் சொல்வது அல்லாஹ்வின் களாமிலும் அவனது தூதரின் ஸுன்னாவிலும் நின்றுமுள்ளதாக இருக்கவேண்டும். இதனை நாம் அனைவரும் முதலில் அறிந்தவர்களாக இருக்க வேண்டும்.

அல்குர்ஆனை சரியான முறையில் விளங்கமால் நபிவழியின் வழிகாட்டல்களை அறியாமல் நாம் நம்மை எப்படி அழைப்பாளர்களா தேர்வு செய்ய முடியும்? நாம் சொன்ன, சொல்கின்ற, சொல்லப் போகின்ற விடயங்கள் அல்குர்ஆனிலும், அஸ்ஸுன்னாவிலும் நின்றுமுள்ளவைகள் என்பதனை எவ்வாறு புரிந்து கொள்ள முடியும்? 

அழைப்புப் பணியின் அவசியத்தைப் பற்றிக் கூறுகையில் ஊரெங்கும் எத்திவைப்பதற்கு முன்னர் அதன் அவசியத்தை ஒரு அவசியமாக நாம் முதலில் புரிந்தவர்களாக இருக்க வேண்டும். 


நாம் அழைப்புப் பணியை அவசியமென்று தெரிந்தவர்களாக இருந்தால் இந்த மார்க்கத்தில் அல்லாஹ்வைத் தனித்துவப்படுத்தி வணங்கும் விடயத்தில் முதலில் நாம் அதில் வாழக்கூடியவர்களாக இருக்க முடியும். இதில் எத்தகைய இடையூறுகளும், சர்ச்சைகளும் இருந்து போதும் அது எமக்கு ஒரு பிரச்சினைக்குரிய விடயமாக இருக்காது. மக்களைப் பொறுத்தவரை சர்ச்சையாகவும், குழப்பமாகவும், பிரச்சினையாகவும் இருக்கலாம். 


என்றாலும் அல்லாஹ்வை வணங்கும் ஒருவனுக்கு அது ஒரு தியாகமாகவும் ஒரு ஜிஹாதாகவும், பெருமையாகவும் இருக்கம். அவன் செய்த தியாகங்கள் அல்லாஹ்வுக்காக செய்த தியாகமாகவும் அவன் விட்டுவிட்டவைகளும், தவிர்ந்து கொண்டவைகளும் அல்லாஹ்வுக்காக செய்தவைகள் என்பதையும் இதன் மூலம் மறுமை நாளில் அல்லாஹ்விடம் இது ஒரு ஆதாரமாக அமையும் என்று உறுதியாக இருப்பவனாக இருப்பான். 


இதன் வழியில் அழைப்புப் பணியைச் சுமந்தவன் இந்தப்பண்பை உடையவனாக இருப்பான். மாறாக, இந்த அடிப்படையை சுமக்காத ஒருவனுக்கும் அழைப்புப் பணியென்பது இருக்க முடியும்!!??.


ஆனால் அந்த அழைப்புப்பணி அல்லாஹ்வை வணங்க வேண்டும் என்ற நோக்கத்தில் அழைக்கும் அழைப்புப் பணியாக இருக்காது. 


இதனாலேதான் அழைப்பு பணியென்ற பெயரில் அழைக்கும் முன்பு நாம் அழைக்கும் அந்த விடயத்தை நம் வாழ்வில் செய்து காட்டுபவர்களாக இருக்க வேண்டும். நாம் அதைப் பின்பற்றுபவர்களாக இருக்க வேண்டும். நாம் அதனை செயல்படுத்துபவர்காளக இருக்க வேண்டும். அவசியமான அனைத்து விடயங்களுக்கும் நாம் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். அதற்காக நாம் தியாகங்கள் செய்ய வேண்டும். அதற்கென கஷ்டப்பட வேண்டும். அழைப்புப் பணி என்பது அவசியாமானதென யார் கூறுகிறார்களோ அவர்கள் அல்லாஹ்வின் மார்க்கத்தில் குழப்பத்தைக் கண்டும் அதற்கெதிராக பதிலளிக்காமல் இருக்க முடியுமா? 


ஒருவன் அல்லாஹ்வின் திருமறையான அல்குர்ஆனை இழிவுபடுத்தும் போது அதற்கெதிராக பதிலளிக்காமல் இருக்க முடியுமா? குர்ஆனை இழிவுபடுத்துபவனைக் கண்டுகொள்ளாமல் அதறகெதிராக குரலெழுப்பாமல் அழைப்புப் பணியை மேற்கொள்வது அழைப்புப் பணியென்று சொல்வதற்குத் தகுதியானதொன்றாகுமா? 


குர்ஆனின் விளக்கத்தில் குழப்பம் விளைவிப்பவன் ஒருவன் இருக்கின்ற நேரத்தில் நாம் அழைப்புப் பணியை சுமந்தவர்களாக இருப்போமாயின் இங்கு எமது கடமை என்ன? 


எமது கடமையானது முதலில் அவனுக்கெதிராக, அவனுடைய போக்குக்கெதிராக குரல்கொடுப்பதுதான. இன்னும் அந்தக் குர்ஆனை தூய்மைப் படுத்தி வைப்பதும் மக்களுக்கு மத்தியில் குர்ஆனின் விளக்கத்தைத் தூய்மையாக முன்வைப்பதும் எமது கடமையாக அமையும். 


ஆனால் இன்னும் பலர் இந்தக் குழப்பத்தில் மத்தியில் வாழ்பவர்களாக இந்தக் குழப்பத்தினால் தோன்றியுள்ள தவறான விளக்கத்திலிருந்து தூய்மையான விளக்கத்தை பிரித்து அவற்றை சரிவர அடையாளம் காட்டுவதை அவசியமாகக கருதாதவர்களாக இருக்கிறார்கள். 


இன்னும் இந்தக் குழப்பமான விளக்கங்களுக்கு மறுப்புத் தெரிவிப்பதையும் அவசியமானதெனக் கருதுபவர்களாகவும் அவர்கள் இல்லை. 

நம்மில் பிரச்சாரம் செய்பவர்களாக இருந்தாலும் அல்லது சாதாரண மனிதனாக தனது வாழ்வை வாழ்பவர்களாக இருந்தாலும் 
ஷிர்க்குகளை காணும் போது அதற்கு மாற்றமான வாழ்க்கையை நாம் வாழவில்லையென்றால் ஷிர்க்கை அழிக்கும் அழைப்புப் பணிக்குத் தோழர்களாக இருக்கவில்லை என்றால் நம்மிடத்தில் ஏகத்துவ அடையாளம் எங்கே? 


நீங்கள் பித்அத்களைக் கண்டு அதற்கு முரணாக வாழ்கின்றவர்களாக இல்லாமல், பித்அத்களுக்கு எதிர்ப்புகாட்டுகின்ற அதற்கெதிராக குரல் கொடுக்கின்ற அழைப்புப் பணிக்கு ஒத்துழைப்பளிக்கும் தோழர்களாக இருக்கவில்லை என்றால் நீங்கள் பித்அத்தை வெறுப்பதற்கு ஆதாரம் என்ன? 


நபிவழிமுறைகளைச் சர்ச்சைக்குரிய விடயமாக ஆக்குவதைக் காண்கிறோம். இவைகளுக்கு மறுப்புகளைக் கொடுக்காமல் நாம் வாழ்வதெல்லாம் நாம் நபிவழியை நோக்கிறோம் என்பதற்கு ஆதாரம் என்ன?

நான் நபிவழியில் இருக்கின்ற மனிதனென்றால் நபிவழிக்கு முரணானதைக் கண்டு அதில் நான் பொறுத்திருக் முடியாது. அதைத் தாங்கிக் கொண்டிருக்க முடியாது. 


உங்களுக்கு அதை மறுத்துரைப்பற்கு போதிய கல்வியறிவு இல்லாதிருக்கலாம். ஆனாலும் கல்வியைச் சுமந்தவர்களுக்குக் கைகொடுப்பதில் நீங்கள் பின்வாங்கக் கூடாது. 


உங்கள் ஒவ்வொருவரது சக்தியும் தகுதியும் என்னவென்பதை அல்லாஹ் மட்டுமே அறிந்தவன். இதுபற்றி நீங்கள் அல்லாஹ்வின் முன்னிலையில் பதில் கூற வேண்டிய ஒரு காலம் வரும். இதுபற்றி அல்லாஹ் உங்களிடம் கேட்கும் நேரம் வரும்.  அன்று நீங்கள் கவலையடைவதில் எவ்வித பயனுமில்லை. 


இன்று உலகில் உயிரோடு இருக்கும் பொழுதே அல்லாஹ்வுக்காக செய்யப்படும் அழைப்புப் பணிக்கு ஒத்துழைப்புக் கொடுப்பதன் மூலம் அல்லாஹ்வின் தூய்மையான மனிதர்களாக மாறிவிடுங்கள்.