[பித்அத் களையும் பித்அத் வாதிகளையும் விமர்சிப்பதும் ஸலபிகளின் உண்மைகளும் தன்மைகளும்]

பித்அத் களையும் பித்அத் வாதிகளையும் விமர்சிப்பதும் ஸலபிகளின் உண்மைகளும் தன்மைகளும் 


எமது சமூகத்தில் இருப்பவர்கள் கல்வியில்லாத மடமையான வழிமுறைகளைக் கையாள்வதால் சத்தியத்தையும் அசத்தியத்தையும் வேறுபடுத்திக் காணமுடியாத துர்ப்பாக்கிய சாலிகளாக மாறிவிட்டார்கள். 

எந்தவிடயத்தை எடுத்தாலும் அதில் சரி அல்லது பிழையென்று தீர்ப்பளிப்பது வெறுமனே அவர்களின் தனி வழிமுறையோடான நடவடிக்கையாகவே இருக்கின்றது. அந்த முடிவுகள் அனைத்தும் குர்ஆன், சுன்னா ஆகிய அடிப்படைகளுடனோ அல்லது சிறப்புமிக்க முன்னோர்களான ஸலபுஸ் ஸாலிஹீன்களின் உஸுல்களின் வழிமுறைகளிலோ, அல்லது உலமா உஸ்ஸுன்னாவின் உபதேசங்களின் மூலமோ அல்லது அஹ்லுல் ஹதீஸின் அகீதாவின் பாதையில் இருந்த உலமாக்களின் பாதையை விளங்கியோ எடுக்கப்பட்ட முடிவுகளாக இருப்பதில்லை. 


இவர்களில் பொது மக்களும் மௌலவிகள் என்பவர்களும் இதே வழிமுறையில் சரியென்றும் பிழையென்றும் தீர்ப்பளிப்பதற்கு முந்திக்கொண்டு முன்வந்து விடுகிறார்கள். இந்நிலையிலும் இன்று சமூகத்தின் போக்கு எப்படியான நிலையில் இருக்கின்றதென்று நாம் கவனிக்கையில், யாரெல்லாம் இயக்கங்களோடு சேர்ந்து நடந்து அவ்வியக்கங்களுக்குக் குறை சொல்லாதவர்களாக இருக்கிறார்களோ அவர்களெல்லாம் சிறப்பானவர்களாக மாறிவிட்டார்கள். 


தனிமனித வழிபாடுகளை எதிர்த்து அதனைத் தட்டிக்கேட்டவர்களும், இயக்கங்களுக்குக் குறை சொல்பவர்களும் செய்கின்ற தஃவாவானது இன்று சமூகத்தில் கவனிக்கப்படாத, மதிப்பற்றதொரு தஃவாவாக ஆகிவிட்டது. எமது சமூகத்தில் இது தான் இன்றைய யதார்த்த நிலை. 


இந்தக் களங்கத்தை விட்டும் எமது சமூகத்திற்கு தெளிவு காட்டுவதற்காக இஸ்லாமிய தஃவா அமைப்பில் ஒரு ஸலபி எப்படி உண்மையானவனாக நடந்து கொள்வான் என்பதையும் இதில் ஒரு ஹலபி எவ்வாறு நடந்து கொள்வானென்பதையும் நாம் எடுத்துக்காட்ட ஆசைப்படுகின்றோம். 


ஒரு ஸலபியைப் பொறுத்தவரை அவன் இந்த தஃவாவைப் பெற்றுக்,கொள்ளும் காலத்திலும் அதனை நடைமுறைப்படுத்தும் காலத்திலும் அல்லது அதனை எத்திவைக்கும் காலத்திலும் அவனுக்கென்று இதில் ஒரு அடிப்படையுள்ளது. அந்த அடிப்படைக்கு மாற்றமாக அதனை அவன் மீறுபவனாக நடந்து கொள்ளமாட்டான். 


கல்வியைப் பெற்றுக்கொள்ளும் பொழுதும் அவன் ஆதாரபூர்வமான கல்வியை மட்டும்தான் பெற்றுக்கொள்வான். அது ஹதீஸ்களாக இருக்குமாயின் அதில் ஸஹீஹான ஹதீஸ்களை அறிந்து அதனையே அவனது வாழ்வில் நடைமுறைப் படுத்துவதற்கும் நம்பிக்கையைப் பெறுவதற்கும் ஒரு ஆதாரமாக எடுப்பவனாக இருப்பான். 


அதே போன்று ஒரு ஆலிமுடைய அல்லது உலமாக்களுடைய ஒரு வார்த்தை (கவ்ல்) என்றாலும் அந்த வார்த்தை உண்மையாவே அந்த ஆலிம் சொன்னதுதானா என்று ஆராய்ந்து அவர்களின் நூல்களில் அந்தக் கருத்து அறிவிப்பாளர் தொடரோடு அடைந்திருக்கிறதா என்று தெரிந்த பின்புதான் இன்னின்ன உலமாக்கள் இதனைக் கூறியிருக்கிறார்களென்று உறுதியுடனும் திருப்தியுடனும் பெற்றுக்கொள்வான்.ஸலபியாக இருப்பவர்கள் ஒரு மத்ஹபில் ஒரு கருத்து அமைந்துள்ளதெனக் கூறுவதற்கு முன் கல்வியின் அடிப்படையில் ஒரு மாணவராகச் செயற்பட்டு அந்தக் கருத்து குறிப்பிட்ட மத்ஹபில் அமைந்துள்ளதா என்பதை அறிந்து கொள்வார்கள். 


யாரோ எவரோ ஒர கருத்து இந்த மத்ஹபின் கருத்தென்று சொன்னதனால் அதனை அப்படியே ஹலபிகளின் அடிப்படையில் சுமந்து கொண்டு ஷாபிஈ மத்ஹப் இப்படி சொல்கின்றது, ஹனபி மத்ஹப் இப்படி சொல்கின்றதென்று ஒரு போதும் ஸலபிகள் கூறமாட்டார்கள். 


ஸலபிகள் கல்விரீதியாக இப்படி நடப்பவர்களல்ல. உதாரணமாகக் கூறுவதாயின், எகிப்தைச் சேர்ந்த அல் ஜஸ்ரி என்பவர் 'அல் பிக்ஹ் அலா மத்ஹபில் அர்பஆ" என்ற நூலை எழுதி வெளியிட்டார். இந்நூல் எட்டுப் பாகங்களைக் கொண்டது இந்த நூலின் மூலம் அல் ஜஸ்ரி நான்கு மத்ஹபின் அடிப்படையில் நான் பிக்ஹ்ஹை வழிகாட்டுகிறேன் என்று இதனை எழுதினார். 


இதனால் சமூகம் நினைத்தது என்னவென்றால் நாம் இந்த நூலைத் திறந்தால் நிச்சயமாக அங்கே ஒரு விடயத்தைப்பற்றி ஷாபிஈ மத்ஹப், ஹனபி மத்ஹப், மாலிகி மத்ஹப், ஹன்பலி மத்ஹப் ஒவ்வொன்றும் எதனைச் சொல்கின்றது என்பதனை தெளிவாக அறிந்து கொள்ள முடியும் என்று சமூகம் நினைத்து விட்டது. 


உண்மை என்னவென்றால், "அல் பிக்ஹ் அலா மத்ஹபில் அர்பஆ" என்ற இந்த நூலை ஸலபிகள் அல்லாத ஹலபிகள் தான் ஒரு வழிகாட்டும் நூலாக எடுத்தார்களே தவிர, ஸலபிகளாக இருக்கும் மாணவர்களும் ஸலபுஸ்ஸாலிஹீன்களின் வழிமுறையில் கல்வியைச் சுமந்த உலமாக்களும் இன்றுவரை இந்த நூலை ஒரு சரியான நூலாக ஏற்றுக்கொள்ள வில்லை. காரணம் என்னவெனில், இந்த நூல் எதனை ஷாபிஈ மத்ஹபில் இருப்பதாகச் சொல்கின்றதோ அது ஷாபிஈ மத்ஹபில் இல்லாத ஒன்றாக இருக்கின்றது. இந்த நூல் ஷாபிஈ மத்ஹப் சொல்லாத ஒன்றை ஷாபிஈ மத்ஹப் சொல்வதாக கூறுகின்றது. 


இவ்வாறுதான் இந்தநூலில் ஏனைய முன்று மத்ஹப்களை பற்றிய நிலை. இந்த நிலைகளைப் பற்றி ஷெய்க் நாஸிருத்தீன் அல்-அல்பானி ரஹிமஹுல்லாஹ் ஒரு உண்மையான வார்த்தையைச் சொன்னார். 


அதாவது 'யாரெல்லாம் தங்களை மத்ஹப் வாதிகளெனக் கூறிக்கொள்கின்றார்களோ, நாங்கள் ஷாபிஈ மத்ஹப், ஹனபி மத்ஹப், மாலிகி மத்ஹப், ஹன்பலி மத்ஹப் என்று கூறும் இவர்களில் எவருமே உண்மையான ஷாபிஈயும் அல்ல, மாலிகியும் அல்ல, ஹனபியும் அல்ல, ஹன்பலியும் அல்ல. ஏனென்றால் ஷாபிஈ என்று சொல்லிக்கொள்ளும் யாரும் இமாம் ஷாபிஈயுடைய பாதையில் சென்று இமாம் ஷாபிஈ வழிகாட்டிய முறையிலே மத்ஹபைப் பின்தொடர்ந்தவர்களல்ல. இந்த இமாமின் கருத்துகளை இவர்கள் சுமக்கவேயில்லை. இதே நிலைதான் ஹன்பலி, மாலிகி, ஹனபி பொன்றவைகளுக்கும் .


எனவே இதன் அடிப்படையில் ஷெய்க் நாஸிருத்தீன் அல்-அல்பானி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறுகிறார்: 'உண்மையாக ஷாபிஈ,மாலிகி, ஹன்பலி, ஹனபி ஆகிய பாதையிலே போகிறவர்களென்றால், அவர்கள் யாரெனில் யாரெல்லாம் குர்ஆன்,சுன்னா இரண்டையும் ஸஹாபாக்கள் விளங்கிப் பின்பற்றிய பிரகாரம் பெற்றுக்கொண்டார்களோ அவர்கள்தான் அந்த இமாம்களின் பாதையில் போகின்ற மக்களாகும். ஏனென்றால் அந்தப்பாதையில் தான் அந்த நான்கு இமாம்களும் இருதார்கள்." ஸலபி என்பவர்களின் இந்தப்பாதையில் இருக்கும் பொதுமக்களும், உலமாக்களும், மாணவர்களின் உண்மையான நிலைப்பாடு யாதெனில் எதுவெல்லாம் ஸஹாபாக்களின் கருத்துக்களோடு சேர்ந்து போகவில்லையோ அதனை மார்க்கமாக ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். எந்த விடயமும் யார் சொன்னதாக சொல்லப்பட்டாலும் அதனை ஆதாரமில்லாமல் சுமக்க மாட்டார்கள். 


முரண்பாடான எதிர்க்கருத்துக்களை சுமந்தவர்களின் கருத்துக்களை எதிர்த்து அதற்கு மறுப்பாக பதிலளிக்கும் பொழுது எப்பொழுதுமே ஸலப் உலமாக்கள் அந்த எதிர்கருத்து சுமந்தவர்களின் நூல்களிலிருந்து நேரடியே எடுத்துக்காட்டித்தான் அதனை மறுப்பார்களே தவிர , பொதுமக்கள் சொன்னதாகவோ அல்லது ஏதோ கதைகள் காதில் வீழ்ந்ததற்காகவோ மறுப்புக்களை எழுதியதாக எந்தவொரு ஸலபி இமாமுடைய நூலிலும் காணமுடியாது. 


அதே போன்று ஸலபுஸ் ஸாலிஹீன்களுடைய பாதையில் இருக்கும் தாலிபுல் இல்ம் எனப்படும் மாணவர்களை எடுத்துக்கொண்டால் அவர்கள் தங்களுடைய கல்வியில் இன்னொரு கருத்தைச் சுமந்தவர்களுக்கு விமர்சனம் செய்வதற்கு முன்வரும் போது அதில் ஸலபி வழிமுறையில் 'தஹ்ரீஜும்", 'தஹ்கீகும்" கையாள்கிறவர்களாக இருக்கிறார்கள். 


எதிர்க் கருத்தைச் சுமந்தவர்களின் நூலிலிருந்து அதனைச் சுட்டிக்காட்டி அதனைத்தான் விமர்சனம் செய்வார்கள். இதன் அடிப்டையிலேதான் எதிர்த்தரப்பினருடைய கருத்தை மறுத்துக் கூறுவார்கள். இதுவே ஸலபிகளுடைய தன்மையாகும். 


நாம் எமது அழைப்புப் பணியின் பாதையிலும் இந்த அடிப்படையிலே கையாள்கின்றோம். நாம் எமது மார்க்கத்தை பெற்றுக்கொள்ளும் வழிமுறையாகட்டும், அல்லது ஏதேனு மொன்றைப் பார்த்து இது எங்கள் மார்க்கத்தில் இல்லையென்று நிரூபிக்கும் சந்தர்ப்பமாகட்டும் இவையனைத்தும் அந்த விடயங்கள் தொடர்புபடும் நூல்களிலிருந்து நேரடியாக புரிந்து கொண்ட பின்புதான் நாம் ஒன்றை ஏற்றுக்கொள்கின்றோம் அல்லது மறுக்கின்றோம். இதுவே எமது வழிமுறையாகும்.நாம் இன்றிருக்கும் தப்லீக் ஜமாஅத் என்ற கூட்டத்தைப் பார்த்து அவர்களின் நடவடிக்கைகளைக் கவனித்துவிட்டு அது எமக்கு வழிகேடென்று தோன்றியதற்காக அவர்களை வழிகேடென்று சொல்லவில்லை. தப்லிக் ஒரு வழிகேடென்பதை நிரூபிக்கும் எமது ஆதாரம், அவர்களுடைய நூல்களின் அடிப்படையில் தான். அதாவது, அவர்களுடைய முக்கியமான நூல்களான பலாயிலுல் அஃமால், ஸகரியா காந்தலவியுடைய ஹயாதுஸ் ஸஹாபா, அஷ்ரப் அலி தானவியுடைய பதாவாக்கள் அவர்களுடைய நூல்கள், முஹம்மது இல்யாஸ் எழுதிய நூல்கள் போன்றவற்றைப் பார்த்து அதன் அடிப்படையில் காணப்படுகின்ற அவர்களுடைய அகீதாவையும், கொள்கைகளையும், அவர்கள் மார்க்கத்தைப் பின்பற்றும் வழிமுறையான மன்ஹஜையும் விளங்கிய பின்னர் தான் தப்லிக் என்ற கூட்டம் வழிகேடென்று நாங்கள் நிரூபிக்கின்றோம். 


அதேபோன்று மௌலானா மௌதூதி உருவாக்கிய அல் ஜமாஅதே இஸ்லாமி என்ற இயக்கமும் வழிகேடென்பதை அந்த இயக்கம் கையாளும் நூல்களின் அடிப்படையிலேயே நிரூபிக்கின்றோம். 


அவர்களுக்கும் எமக்கும் இருக்கும் பிரச்சினைக்காகவோ, கொடுக்கல் வாங்களிலுள்ள ஏதும் கோபத்திலோ நாங்கள் அவர்களை வழிகேடென்று சொல்லவில்லை. அவர்கள் முக்கியமாக கருதக்கூடிய நூல்களாக மௌதூதியுடைய நூல்களான 'தப்ஹீமுல் குர்ஆன்", 'கிலாபத் வ முலூகிய்யா", 'ரிலாலயில் மஸாஅலா" போன்றவை இருக்கின்றன. 


இந்த நூல்களின் அடிப்படையில் மௌதூதியிடம் அஷாயிராக் கொள்கை காணப்படுவதை எடுத்துக் காட்டியிருக்கின்றோம், முஃதஸிலாவின் வழிமுறையை காட்டியிருக்கின்றோம். அவர் கையான்டவற்றில் இருக்கின்ற மௌழூஆன அறிவித்தல்களை (பொய் அறிவித்தல்) சுட்டிக் காட்டியிருக்கின்றோம். உலமாக்களால் பொய்யரான அறிவிப்பளர்களென்று தீர்ப்பளிக்கப்பட்டவர்களின் அறிவிப்புகளை மௌதூதி சுமந்திரப்பதனை சுட்டிக் காட்டினோம். பாதினீய்யா கொள்கையின் செல்வாக்கு இவருடைய நூலிலே இருப்பதைக் காட்டினோம். இவ்வாறு அவருடைய நூல்களிருந்து எடுத்துக்காட்டுவதன் மூலம் அவர்கள் வழிகேடானவர்கள் என்று நிரூபிக்கிறோமே தவிர மொளதூதியின் மீதுள்ள கோபத்தில் அல் ஜமாஅதே இஸ்லாமி என்ற இயக்கத்தை நாம் விமர்சிக்கவில்லை. 


இதேபோன்று இஹ்வானுல் முஸ்லிமீன் என்ற இயக்கத்தை நாம் விமர்சனம் செய்ததும் இதே அடிப்படையில் தான். அதன் ஸ்தாபகர் ஹஸனுல் பன்னா எழுதிய 'ரிஸாலுல் ஹஸனுல் பன்னா" என்ற நூலில் அவர் எழுதியிருக்கும் குர்ஆன், ஸுன்னாவின் அடிப்படைக்கு எதிரான கருத்துக்களை காண்கிறோம். அவர் இந்த வழிகேடான நச்சுக்கருத்துக்களை இஹ்வானுல் முஸ்லிமீன் என்ற இயக்கத்துக்கு உபதேசமாகக் கூறுவதைக் காண்கிறோம். இதனை உலமாக்கள் கண்ட போதுதான் ஹஸனுல் பன்னாவுடைய பாதை வழிகேடானதென தீர்ப்பளித்தார்கள். 


இவரைப்போன்று, அப்துல் காதர் அவ்தா, ஷைய்யித் குத்;ப், முஹம்மது குத்ப், அபுல் ஹசன் அலி நத்வி, போன்றவர்களுடைய நூல்களை உலமாக்கள் பார்த்து விளங்கிய பின்புதான் இவர்கள் வழிகடானவர்கள் என்று தீர்ப்பளித்தார்கள். 


ஸலபி என்பவர்கள் இந்த வழிமுறையிலேயே யாரையும் வழிகேடர்களென்று தீர்ப்பளிக்கிறார்கள். இருந்தாலும், அனைத்துப் பொது மக்களும் அனைத்து நூல்களையும் வாசித்தவர்களோ விளங்கியவர்களோ அல்லர் என்பது இங்கு குறிப்பிடத்தக்க விடயமாகும். இதன் காரணமான அனைவரும் இந்த உண்மைகளைத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.சகோதரர்களே!
நாங்கள் எந்த ஒரு கூட்டத்தையேனும் வழிகேடென்று கூறுவதனால், அது எமது தனிப்பட்ட கோபத்தினாலோ எமது தனிவழிமுறையிலான போக்கினாலோ, ஏதோ ஒரு காரணத்தை காட்டுவதினாலோ அவர்களை வழிகேடர்களென்று சொல்வது ஸலபியுடைய உஸுல் அல்ல. இவ்வாறு சொல்வது ஸலபி என்றால் என்னவென்று தெரியாதவனுடைய வழிமுறையாகும். 


ஸலபி உஸுல் என்னவென்பதைப் புரிந்தவன் மற்றவனை வழிகேடென்று நிரூபிப்பது ஒரு விமர்சனம் என்றே கருதுவான். அது அவர்களைத் திட்டுவதாகவோ ஏசுவதாகவோ அர்த்தம் கொள்ளப்பட மாட்டாது. நாங்கள் யாரையும் திட்டுவதில்லை. மாறாக நாம் செய்வது விமர்சனம் மட்டுமே. நாங்கள் அனைத்து வழிகேடான போக்குடையவர்களையும் விமர்சனம் செய்கிறோம். நாங்கள் எந்த ஒரு அஹ்லுல் பித்அத்துக்கும் திட்டுவதில்லை. திட்டுவதென்பது எமக்கும் அவர்களுக்கும் இடையில்லுள்ள தனிப்பட்ட பிரச்சினைகளுக்கு அவர்களை நாம் கடிந்து கொள்வதையே குறிக்கும். 


மாறாக, நாம் அனைத்து அஹ்லுல் பித்அத்துக்கும் விமர்சனம் செய்கிறோம். இந்த விமர்சனத்தின் மூலமே அவர்களின் வழிகேடுகளை ஆதாரங்களுடன் நிரூபிக்கின்றோம். இதுவே திட்டுவதற்கும் விமர்சனம் செய்வதற்குமுள்ள வித்தியாசமாகும். நாம் எந்தக் கூட்டத்தைப் பார்த்து வழிகேடென்று சொன்னோமோ அவர்களின் வழிகேடுகள் அனைத்தும் அல்லாஹ்வின் அருளால் தகுந்த ஆதாரத்தோடு இல்லாமல் அவர்களை வழிகேடென்று நாம் கூறவில்லை. 


இன்னும் கூறினால், அவர்களை வழிகேடென்று நாம் தீர்ப்பளிக்கக் காரணம் அவர்கள் ஸலபுஸ் ஸாலிஹீன்களின் பாதையிலிருந்து வெளியே சென்றதுதான் என்பதை அனைவரும் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். இதுதான் இஸ்லாமிய தஃவாவில் ஸலபிகள் நடந்து கொள்ளும் முறையாகும். 


இவ்வாறான பண்புகளுடைய ஒரு ஸலபியைப் பொருத்தவரை சத்தியத்திலிருந்து திசைதிரும்பி அவனது உறவுகளாகட்டும், தகப்பனாகட்டும், பிள்ளைகளாகட்டும் அது யாராக இருந்தபோதும் அவர்களுக்கு எதிராக தீர்ப்பளிப்பதில் அவன் தயக்கம் காட்டுவதை நாம் காணமுடியாது. 


இந்த அடிப்படையில்தான் எமது நாட்டில் எட்டு வருடங்களாக ஸலபி தஃவாவில் பல சர்ச்சைகளை ஏற்படுத்திய மக்களையும் அவர்களின் செயற்பாடுகளின் மீதான தீர்ப்பை வழங்குவது எமக்குக் கடமையாகி விட்டது. 
நாம் இவ்வாறு செயற்படுகின்ற விதத்தைக் கண்டவர்கள் இது வெறுமனே சொந்தப் பிரச்சினைகளுக்காகவும், கோபங்களுக்காகவும் செய்யப்பட்ட விமர்சனம் எனக் கூறுகின்றார்கள். 


இவ்வாறு கூறுபவர்கள் இஸ்லாமிய அழைப்புப்பணியில் ஸலபிகளின் நிலைப்பாட்டை அறிந்தவர்களென்றால் இவ்வாறு கூறியிருக்க மாட்டார்கள். ஒரு ஸலபியானவன் உலக விடயங்களில் வருகின்ற முரண்பாடுகளை வைத்து மார்க்கத்தில் தீர்ப்பளிப்பவனல்ல. அவன் அனைத்து மனிதர்களுடனும் உலக ரீதியாக கொடுக்கல் வாங்கல்களைச் செய்பவனாக இருப்பான். வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடுவான். உலகில் பலதரப்பட்ட விடயங்களில் ஈடுபடுவான். இந்த விடயங்களுக்காக அவன் மார்க்கத்தில் ஒருவரை விமர்சிக்க முந்த மாட்டான். அவ்வாறு செய்வது அவனுக்குத் தகுதியானதல்ல.


ஏனென்றால் ஸலபிகளைப் பொறுத்தவரை தங்களுக்குள் செய்து கொள்ளக்கூடிய வியாபார கொடுக்கல் வாங்கல்களில் அவர்களுக்குள் ஏதேனும் பிணக்குகளோ முரண்பாடுகளோ உருவானாலும் அவர்களுடைய கொள்கை ஒன்றாக இருந்தால் அவர்கள் ஒருவரை யொருவர் சகோதரர்களாகவே நினைப்பார்கள். 


ஏனென்றால் முஃமின்களில் ஒருவர் மற்றவருக்குச் சகோதரராவார். எமது சகோதரத்துவம் பிரிவதற்கு வியாபாரக் கொடுக்கல் வாங்கல் காரணமாக இருக்குமாயின் அங்கு எமது கொள்கையில் உறுதித்தன்மை இல்லையென்பதே பொருளாகும். 


இவ்வாறு செய்வதனால் உலகத்தில் ஒரு பிழையைச் செய்ததற்காக கொள்கையை நாம் இழந்து விடக்கூடாது. மனிதன் என்ற ரீதியில் எமது உலக விடயங்களில் எம்மிடம் தாராளமாக பிழைகள் இருக்கலாம். ஒவ்வொரு மனிதரும் அவருடைய தனிப்பட்ட காரியங்களில் தவறுகளை விடுவதம் பிழைகளை செய்வதும் சாத்தியமானதாகும். மார்க்க விடயமாக இருந்தாலும் ஒருவருடைய தனிப்பட்ட செயலினால் அவர் அந்த மார்க்கத்தில் தவறு செய்து விடலாம். 


ஆனால் நாம் நம்மை ஸிராதுல் முஸ்தகீம் என்ற நேரான பாதையில் செல்பவர்கள் என்று கூறிக்கொண்டு எமக்கு மத்தியில் சொந்தப் பிரச்சினைகள் இருந்ததற்காக அதுவே எமது மார்க்கத்தையும் இரண்டாகப் பிரித்து இருதரப்பாரும் இரண்டு கொள்கையோடு இருப்பதற்கு எவ்வாறு சாத்தியமாகலாம்? இவர்கள் மார்க்கத்தில் பிரிய முடியாது. இந்த அடிப்படையை நன்றாக விளங்கிக் கொள்ளுங்கள். இதுவே ஸலபிகளின் உண்மையாகும்.ஸலபி சகோதரர்கள் மத்தியில் கொடுக்கல் வாங்கல்கள் இருக்கின்றன. அவர்களுக்குள் கடன்கள் இருக்கின்றன. வியாபாரத்திலே இலாபமும் நஷ்டமும் வந்ததாகவும் இருக்கின்றது. அவர்களுக்குள் வியாபார விடயத்தில் பினக்குகள் தோன்றியதாகவும் இருக்கின்றது. இவைகளெல்லாம் ஸஹாபாக்கள், தாபிஈன்களின் காலத்திலும் நடந்திருக்கும் விடயங்களாகும். இவைகள் அனைத்தும் மனிதப் பிழைகளால் நடப்பதாகும். இந்தப் பிழைகள் நிகழ்ந்தாலும் அவர்களின் கொள்கையில் மாற்றம் ஏற்படுவதில்லை. 


ஸலபிகளின் போக்கிற்கு மாற்றமான போக்குடையவர்களான ஹலபிகள்தான் தங்களுக்குள் ஒருவர் கடன் தர மறுத்துவிட்டால் அவர் இந்த இயக்கத்தை விட்டு இன்னொரு இயக்கத்தில் சேர்ந்து கொள்வார். அல்லது தான் ஒரு கடமையை சரியாக செய்யாவிட்டால் என் இயக்கத்திற்கு அபகீர்த்தி ஏற்பட்டு விடுமென்று பயப்படுவார். இவைகளெல்லாம் ஹலபிகளுடைய உஸுல்களாகும். 


ஓரு ஸலபி சகோதரர் உலக காரியத்தில் தவறிழைத்ததனால் ஸலபி தஃவாவிற்கு அவமானம் ஏற்பட்டு விடும் என்று ஸலபிகள் கருதுவதில்லை. ஏனென்றால் ஒருவருடைய தவறு அவரோடு மட்டுமே சம்பந்தமானது. அவருடைய போக்கும், நடவடிக்கையும் எமது மார்க்கமாகாது. 


மார்க்கமென்பது குர்ஆன், ஸுன்னா, ஸஹாபாக்களின் வழிமுறை ஆகியவையாகும். ஸலபிகளின் பார்வையில் ஒருவர் மார்க்கத்தில் ஒரு விடயத்தை எடுத்துப் பின்பற்றி விட்டாரென்றால் அவர் ஒரு நல்ல செயலை செய்து விட்டார். அதேபோன்று மார்க்கத்தில் ஒன்றைப் பின்பற்றா விட்டால் அந்த விடயத்தில் அவர் தவரிழைத்து விட்டார். அவர் தவரிழைத்து விட்டதனால் அழைப்புப்பணிக்கு எந்தவொரு இலாபமோ நஷ்டமோ வந்து விடாது. இதனை நமது சமூகம் நன்கு விளங்கிக்கொள்ள வேண்டும். 


இஸ்லாமிய தஃவா அமைப்பில் ஸலபிகளிடம் இருக்கும் இன்னுமொரு முக்கிய அம்சம்தான்; யாரெல்லாம் அல் குர்ஆனையும், அஸ் ஸுன்னாவையும் ஸஹாபாக்கள் பின்பற்றிய வழிமுறையில் பெற்றுக் கொள்கிறார்களோ அல்லது, அதனை நடைமுறைப்படுத்துகிறார்களோ அல்லது, அதனை எத்திவைக்கிறார்களோ அல்லது, அதற்கு ஒத்துழைப்புக் கொடுக்கும் தோழர்களாக இருக்கிறார்களோ அப்படிப்பட்டவர்களுடன் சேர்ந்திருப்பார்கள். 


இதில் அவர்களுக்கிடையில் எந்தளவு உலக விடயங்களில் வேறுபாடுகள் இருந்தாலும் அவர்கள் பிரிந்து போக மாட்டார்கள். ஏனென்றால், அவர்களின் நோக்கத்தின் அடிப்படையில் அவர்கள் பின்பற்றும் மார்க்கம் ஒன்றாக இருக்கின்றது.