[சலப்புகள் மத்தியில் கருத்து வேறுபாட்டிற்கான காரணங்களும் பொது மனித தக்லீத் இன் உண்மைகளும்]

சலப்புகள் மத்தியில் கருத்து வேறுபாட்டிற்கான காரணங்களும் பொது மனித தக்லீத் இன் உண்மைகளும் 


الحمد لله رب العالمين والصلاة والسلام على من لا نبي بعده
أما بعد


அறிந்து கொள்ளுங்கள்! 

பிக்ஹ் விடயத்தில் பிடிவாதமென்பதும், பிக்ஹ் விடயத்தில் வேறுபாடென்பதும், பிக்ஹ் விடயத்தில் கண்மூடித்தனமாகப் பின்பற்றுவதென்பதும், பிக்ஹ் விடயத்தில் உறுதியாக இருப்பதென்பதும் சமமான விடயங்களல்ல. இவையனைத்தும் வெவ்வேறான விடயங்களாகும்.

பிக்ஹ் விடயத்தில் வேறுபாடு என்பதன் அர்த்தம் என்னவென்றால் அதாவது ஒரு அறிஞரின் கருத்து இன்னுமொரு அறிஞரின் கருத்துக்கு முரணாக அமைந்திருப்பதாகும். 


ஒரு இமாமின் ஆராய்ச்சியின் படி அவருக்கு விளங்கிய விடயம் மற்றொரு இமாமின் ஆராய்ச்சியின் படி அந்த இமாமுக்கு வேறு விதமாக விளங்கியிருக்கிறது. இதுவே பிக்ஹ் விடயத்தில் வேறுபாடு என்பதன் அர்த்தமாகும். 


இது நடைமுறையில் சாத்தியமானதொரு அம்சமாகும். ஏனென்றால் ஒரு இமாமுக்கு அவரது ஆராய்ச்சியின் போது கிடைத்த ஹதீஸ் மற்றவருடைய கவனத்திற்கு வராமல் இருந்திருக்கலாம். அல்லது இருவரும் ஒரு ஹதீஸின் நிலைப் பாட்டை வேறுபட்ட விதமாகப் புரிந்திருக்கலாம். அல்லது ஒரு விடயத்தில் பல ஹதீஸ்களை சேர்த்து ஆராய்கையில் இருவரும் ஒன்றுக்கொன்று வித்தியாசமான முடிவுக்கு வந்திருக்கலாம். 

உசூளுன் நஸ் எனப்படும் ஆயத்களையும் ஹதீஸ்களையும் கையாளும் அடிப்படை தொடர்பான பல காரணங்களினால் ஆதாரங்கள் சரியாக அமையாத பட்சத்தில் இரு வேறுபட்ட முடிவுகள் அமைவதற்கு இடமிருக்கிறது. 


இந்த நிலைப்பாடைப் பற்றி ஷெய்குல் இஸ்லாம் இப்னு தைமிய்யா (ரஹிமஹுல்லாஹ்) கூறியிருப்பதை சுருக்கமாகக் கூறுவதென்றால் , ஒரு அறிஞர் பல நூல்களைக் கற்றுத் தேர்ந்தவராக இருந்தாலும் அவர் ஒரு மஸாஇல் தொடர்பாக பேசுகின்ற போது அவர் கற்ற அனைத்தும் அவரது நினைவில் இருக்குமென்று சொல்ல முடியாது. அவர் சில வேளை சில அம்சங்களை மறந்திருக்கலாம். அல்லது அந்த நேரத்தில் அவரது நினைவுக்கு வராமல் போயிருக்கலாம். 


எனவே அவ்வறிஞர் முன்னர் ஒரு சமயத்தில் பேசியிருக்கும் விடயத்திற்கும் சில காலத்துக்குப் பின்னால் பேசுகின்ற விடயத்திற்கும் வேறுபாடு இருப்பதற்கு வாய்ப்பிருக்கிறது. இதனடிப்படையில் யாருடைய கருத்திலும் வேறுபாடுகள் இருக்க முடியாதென்று கட்டுப்பாடுகளை நாம் ஏற்படுத்த முடியாது. 


எனவே வேறுபாடுகளை நாம் காண்கின்றபோது அக்கருத்துக்களில் அல்லது முடிவுகளில் எந்தக் கருத்து குர்ஆனாலும் சுன்னாவாலும் ஸஹாபாக்களின் வழிமுறையோடும் தரமாக முன்வைக்கப்படுகிறதோ அதனையே நாம் தேர்ந்தெடுக்க வேண்டும். 


அவற்றில் ஸஹாபாக்களின் வழிமுறையோடு முன்வைக்கப் படாதவற்றை நாம் தவிர்ந்து கொள்ள வேண்டும். மேலே எடுத்துக் காட்டப்பட்டவைதான் பிக்ஹ் விடயத்தில் வேறுபாடு என்பதன் யதார்த்தத் தன்மையாகும். 


குறிப்பாக இங்கு நாம் பேசும் வேறுபாடுகள் தூய்மையான சுன்னாவைப் பின்பற்றுகின்ற அறிஞர்கள் மத்தியிலுள்ள வேறுபாடுகளாகும். அந்த அறிஞர்கள் மத்தியில் முன்னர் குறிப்பிடப்பட்டது போன்று ஏதேனுமொரு காரணத்தினால்தான் வேறுபாடுகள் அமைகின்றன.


தூய்மையான சுன்னாவைப் பின்பற்றிய அறிஞர்களும் தலைசிறந்த இமாம்களுமான 


 • இமாம் அப்துல்லாஹ் இப்னு முபாரக் (ரஹிமஹுல்லாஹ்), 
 • இமாம் சுப்யான் அத்தவ்ரி (ரஹிமஹுல்லாஹ்), 
 • இமாம் அபூ ஹனீபா (ரஹிமஹுல்லாஹ்), 
 • இமாம் மாலிக் (ரஹிமஹுல்லாஹ்), 
 • இமாம் ஷாபிஈ (ரஹிமஹுல்லாஹ்), 
 • இமாம் அஹ்மத்(ரஹிமஹுல்லாஹ்), 
 • இமாம் இப்னு அப்துல் பர்(ரஹிமஹுல்லாஹ்), 
 • இமாம் இப்னு தைமிய்யா (ரஹிமஹுல்லாஹ்), 
 • இமாம் இப்னுல் கைய்யிம் (ரஹிமஹுல்லாஹ்), 
 • இமாம் ஸன்ஆனி (ரஹிமஹுல்லாஹ்), 
 • இமாம் ஷவ்கானி (ரஹிமஹுல்லாஹ்), 
 • இமாம் முஹம்மது இப்னு அப்துல்வஹ்ஹாப் ரஹிமஹுல்லாஹ்), 
 • இமாம் அல் அல்பானி (ரஹிமஹுல்லாஹ்) 


போன்ற சுன்னாவின் அறிஞர்களின் மத்தியிலுள்ள பிக்ஹ் விடயத்தின் வேறுபாடுகளைப் பற்றிக் கூறுவதென்றால் அதாவது இவர்களில் யாரும் ஹதீஸ்களுக்கோ குர்ஆன் வசனங்களுக்கோ அதன் அளவுகோளுக்கு வெளியே சென்று முரணான சட்டங்களை எடுக்கவில்லை. 


மனிதர்களென்ற ரீதியில் யாரின் மூலமும் தவறுகள் நிகழலாம்.
சில வேளை ஒருவருக்கு அவரது ஆராய்ச்சியின் போது அதற்குப் பொருத்தமான குர்ஆன் ஆயத்தோ ஹதீஸோ அவரது நினைவுக்கு வந்திருக்காதது போன்ற மனிதன் ரீதியான தவறுகளால் அவ்வாறான அறிஞர்களின் முடிவுகள் தவறாக அமைவதற்கு இடமிருக்கிறது. 


எனவேதான் பிக்ஹ் விடயத்தில் அறிஞர்கள் மத்தியில் மாறுபட்ட கருத்துகள் இருக்க முடியாதென்று நாம் ஒருக்காலும் கூறு முடியாது. ஏனெனில் இது போன்ற காரணங்களினால் ஸஹாபாக்கள் மத்தியில் கூட பிக்ஹ் விடயங்களில் வேறுபாடுகள் ஏற்பட்டுள்ளன. 


இருப்பினும் அந்த ஸஹாபாக்களின் உள்ளங்கள் தூய்மையான உள்ளங்களாக இருந்தன. அவர்களைக் குறித்து அல்லாஹ் கூறுகின்றான் :


رَضِيَ اللهُ عَنْهُمْ وَرَضُوْاعَنْهُ


அவர்களை அல்லாஹ் திருப்தியடைந்தான். அவர்களும் அல்லாஹ்வை தருப்தியடைந்தார்கள்.

இவ்வாறு அல்லாஹ் அந்த ஸஹாபாக்களின் தூய்மையான உள்ளங்களைப் பற்றி சாட்சி பகர்கின்றான். அவர்களுடைய உள்ளங்கள் அல்லாஹ்வைப் பற்றித் திருப்தியடைந்த நிலையில் இருந்தன. 


எனவே எந்தவொரு அம்சத்திலும் ஸஹாபாக்களின் அந்தஸ்து அவர்களுக்குப் பின்னால் வந்த அனைவரை விடவும் சிறப்பானதாகும். அல்லாஹ் அவர்களைப் பற்றித் திருப்தியடைந்தான் என்று கூறுவதற்கு வெளிப்படையாகவே அவர்களுடைய செயற்பாடுகள் சிறப்பானவையாக இருந்தமையே எமக்கு எடுத்துக் காட்டுகின்றது. 

இதில் ஆச்சரியப்படத்தக்க விடயம் எதுவுமில்லை. ஆனால் அவர்களும் அல்லாஹ்வை திருப்பியடைந்தார்களென்று அல்லாஹ் கூறிக் காட்டுவதன் மூலம் அல்லாஹு தஆலா அந்த ஸஹாபாக்களின் இதயத்திலிருந்த ஒரு ரகசியத்தை எமக்கு எடுத்துக் காட்டுகின்றான். 

அவர்களின் இதயங்கள் அல்லாஹ்வைப் பற்றித் திருப்தியடைந்தவையாக இருந்தன. 


எனவே அந்தத் தூய்மையான உள்ளங்கள் அல்லாஹ்வுக்கு எதிலும் மாறு செய்யும் உள்ளங்களாக இருக்கவில்லை. அவர்களின் வாழ்க்கை தூய்மையான நோக்கத்தைக் கொண்டதாக அமைந்திருந்தது. 


அதனால்தான் ஸஹாபாக்களை விமர்சனம் செய்வது வழிகேடர்களின் அடிப்படையென்று நாம் கூறுகிறோம். அனைத்து ஸஹாபாக்களும் நீதமானவர்களென்பது உம்மத்தின் ஏகோபித்த முடிவாகும். இது தொடர்பாக சுன்னாவின் இமாம்கள் அனைவரும் பேசியிருக்கிறார்கள். 


நீதமாக இருப்பது என்பதன் பொருள் என்னவென்றால் தெரிந்து கொண்ட விடயத்தில் தரமாகச் செயற்படுவதாகும். அதுவே நீதமாகும். ஸஹாபாக்கள் அனைவரும் தாங்கள் எதனையெல்லாம் தெரிந்து கொண்டார்களோ அதனைச் சிறப்பாகத் தங்களின் வாழ்வில் நடைமுறைப்படுத்தினார்கள். 


ஆனாலும் அவர்களும் மனிதர்களென்ற ரீதியில் அவர்களில் எல்லோருக்கும் எல்லா ஹதீஸ்களும் சென்றடையவில்லை. அவ்வாறு சென்றடையாததினாலும் அதனால் சில ஸஹாபாக்கள் சில விடயங்களைச் சரியாகப் புரிந்து கொள்ளாததினாலும் அந்த ஸஹாபாக்கள் மத்தியிலும் தவறுகள் நிகழ்ந்திருக்கின்றன. 


எனவேதான் ஸஹாபாக்கள் காலத்திலும் அவர்கள் மத்தியில் பிக்ஹ் விடயங்களில் வேறுபாடுகள் இருப்பதைக் காண முடிகிறது.

பிக்ஹ் விடயத்தில் (தக்லீத்) கண்மூடித்தனமாகப் பின்பற்றுவதைப் பற்றிக் கூறுவதாயின் அதாவது ஒருவர் குர்ஆனினதும் ஹதீஸினதும் மொழியான அரபு மொழியை அறியாதவராக இருக்கிறார். அதனால் அவரால் அதிலிருப்பதை வாசித்து விளங்குவதற்குரிய அறிவு அவரிடத்தில் இல்லாத நிலையில் இருக்கிறார். 


இருப்பினும் அவரும் ஒரு முஸ்லிமென்ற வகையில் அவருக்கும் மார்க்கத்தின் சட்டதிட்டங்களைப் பின்பற்றி நடக்க வேண்டிய கடமையும் தேவையுமிருக்கிறது. அவர் படிக்காதவர் என்பதற்காக அவர் தனது மார்க்கத்தைப் பின்பற்றாமல் விட்டுவிட்டு ஒரு காபிரைப் போன்று வாழ முடியாது. 


மாறாக அவரும் தன் வாழ்வில் மார்க்கத்தைப் பின்பற்றி வாழ்ந்து தானும் சுவனத்தை அடையவே விரும்புவார். இந்நிலையில் அவர் செய்ய வேண்டியது என்ன?

அல்லாஹ் கூறுகிறான்:


فَسْئلُوْااَهْلَ الذِّ كْرِاِنْ كُنْتُمْ لاَ تَعْلَمُوْنَ


நீங்கள் அறியாதவர்களாக இருந்தால் அறிந்தவர்களிடம் கேட்டுக் கொள்ளுங்கள். (அந்நஹ்ல் : 43)


எனவே அறிந்தவர்கள் யாரென்பதை அந்த மனிதர் அடையாளம் கண்டு கொள்ள வேண்டும். அதனடிப்படையில் சுன்னாவின் அறிஞர்கள் யாரிடம் கல்வியைப் பெற்றுக் கொள்ளும் படி பொதுமக்களுக்கு அடையாளம் காட்டித் தந்திருக்கிறார்களோ அத்தகையவர்களிடம் சென்று அந்த மனிதர் தனக்குத் தெரியாதவைகளைக் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும். 


நீங்கள் அத்தகைய அறிஞர்களிடத்தில் நீங்கள் அறியாதவைகளைப் பற்றிக் கேள்வி கேட்கையில் அந்த அறிஞர்கள் உங்களுக்கு நீங்கள் கேட்டதைப் பற்றிய விளக்கத்தைத் தருவார். அந்த அறிஞர்கள் சில வேளை அவர்களுடைய பதில்களை சுருக்கமாகக் கூறுவிடுவார்கள். சில வேளைகளில் விரிவாக விளக்குவார்கள். 


எனவே இந்த விடயத்தில் உங்கள் மீதுள்ள கடமை என்னவெனில் அந்த அறிஞர்கள் என்ன கூறுகிறார்களோ அதனை விளங்கிக் கொள்வதற்கு முயற்சி செய்ய வேண்டும். 


அதற்கு மாற்றமாக நீங்கள் அந்த அறிஞர்களிடம் குறுக்குக் கேள்விகளை உங்கள் புத்தியினடிப்படையில் கேட்பது உங்களை ஒரு தர்க்கவாதியாக மாற்றிவிடும். இவ்வாறு தர்க்கம் செய்வதை இஸ்லாம் தடுத்திருக்கிறது. 


நீங்கள் உங்களுக்குத் தெரியாததொரு விடயத்தைப் பற்றிக் கேள்வி கேட்பதும் உங்கள் புத்திக்குப் பொருந்தாதினால் தர்க்கிப்பதும் சமமல்ல. இருப்பினும் பொது மக்கள் தாங்கள் அறியாததொன்றை கல்வியைப் பெற்றவர்களிடம் கேட்கும் போது அம்மக்களுடைய கேள்விகளுக்கு பதில் கூறுவதும் கேட்கப்பட்ட விடயங்களை விளக்குவதும் கல்வியைப் பெற்ற அறிஞர்கள் மீது கடமையாகும். 

அதேபோன்று பொது மக்கள் அறிஞர்கள் வழங்கும் பதிலைப் புரிந்து அதிலிருந்து தெரிந்து கொள்ள வேண்டியவற்றைத் தெளிவாக விளங்கிக் கொள்ள வேண்டும். இவ்வாறு பெற்றுக் கொள்ளும் வழிமுறையைத்தான் அரபியில் தக்லீத் என்று சொல்லப்படுகிறது. 


அதன் காரணம் என்னவென்றால் நீங்கள் பெற்றுக் கொள்ளுகின்ற விடயங்களை உங்களிடம் மீட்டிக் கூறுமாறு கேட்கப்பட்டால் உங்களுக்கு அதற்கான ஆதாரங்கள் அனைத்தும் எடுத்துச் சொல்கின்ற அளவுக்கு நினைவில் இருக்க வாய்ப்பில்லை. அல்லது அதனை விளக்கிக் கூறும் அறிவுத் திறன் உங்களிடம் இருக்காது. 

எனவே நீங்கள் இன்னுமொருவருக்கு விளக்கிக் கூற முடியாவிட்டால் நீங்கள் செவிமடுத்த ஆதாரங்களைப் புரிந்து அதனடிப்படையில் செயற்படும் போது அது தக்லீதாக அமைந்து விடுகிறது. இவ்வகையான தக்லீத் பொது மக்கள் மீது அனுமதிக்கப்பட்டதாகும். 


ஆனாலும் இவ்வகையான தக்லீதை செய்பவர்கள் எப்போதுமே அதே நிலையில் இருக்க வேண்டுமென்பதல்ல அவர்கள் கல்வியைப் பெற்றுக் கொள்வது கடமையாகும். 


அதனடிப்படையில் அவர்கள் தங்களிடத்தில் கல்வி ரீதியான முன்னேற்றத்தைக் காண வேண்டும். அவ்வாறு கல்வியோடு நெருங்குவதன் மூலம்தான் இன்று புரியாத ஒரு விடயத்தை நாளை புரிந்து கொள்ள முடியும். நாளையும் புரியாவிட்டால் இன்னுமொரு நாளிலாவது புரிந்து கொள்ள வாய்ப்பு ஏற்படும். அதுவே அவர்களின் முன்னேற்றமாகும்.


Taken from Nabi Wali Nam vali magazine.