[அல்குர்ஆனை விளங்கும் உண்மைகளும் வழிகேடான தன்மைகளின் உண்மைகளும்]

அல்குர்ஆனை விளங்கும் உண்மைகளும் வழிகேடான தன்மைகளின் உண்மைகளும் 


 


இந்த தலைப்பிற்கு சம்பந்தமான சில அடிப்படையான விடயங்களை பார்ப்போம். இந்த தலைப்பில் மக்கள் ஓர் விடயத்தினைப் புரிந்துக் கொள்ள வேண்டும். அதாவது அல்குர்ஆனிற்கு ஓர் விளக்கம் உள்ளதென்பதை அறிந்து கொள்ள வேண்டும். மேலும் இவ்விளக்கத்துடன் பல வழிகேடான விளக்கங்களை அதற்குள் ஊற்றிவிடுகின்றார்கள் என்பதையும் அறிந்து கொள்ள வேண்டும். இவ்விரு உண்மைகளையும் புரிந்து வழிகேடான விளக்கங்களில் இருந்து நாம் எவ்வாறு தன்னை காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்பதைனை புரிந்து வைத்திருத்தல் எம்முடைய கடமையாகும். 


அல்குர்ஆனை விளங்கிக் கொள்வதற்கு மக்கள் பல வழிகளில் பல முயற்சிகள் மேற்கொள்கின்றனர். அவர்கள் அறிந்தும் அறியாமலும் உண்மையான அடிப்படை விளக்கங்கள் என்று பல வழிகேடான விளக்கங்கள் வளர்த்து வருகின்றனர். இவ்வாறான வழிகேடுகளை வழிகேடு என்று சுட்டிக்காட்டி மேலும், அதற்கு மாற்றமாக அல்குர்ஆனிற்கு ஓர் உண்மையான விளக்கம் உண்டு என்பதை சுட்டிக்காட்டுவது கடமையாகும். உம்மதுல் இஸ்லாமிய்யா , இந்த விடயத்தில் இரு தீவிரமான திசைகளில் உள்ளது.


1. இந்த குர்ஆனை தம்மால் விளங்க முடியாது என்று ஓர் திசையில் உள்ளார்கள். 

அதாவது அவர்களுடைய ஷேஹ் அல்லது மௌலவி கூறுகின்றவைகளே அல்குர்ஆனின் கருத்தாக இருக்க முடியும் என்ற சிந்தனையில் உள்ளார்கள். 

இவர்களுடைய வழிகேட்டினால் தோன்றிய ஓர் வழிகேடு தான் , 

அவர்களுடைய ஷேஹ் அல்குர்ஆனிற்கு ஓர் விளக்கமளித்தால் அது மொழி ரீதியாக நேரடியாக அரபி மொழிக்கு மாற்றமாக காணப்பட்டாலும் , அவ்விளக்கம் அவ்வாயத்திற்கான உண்மை விளக்கம் என்று “கராமிதா” , “பாதினியா” கொள்கை கொண்ட மக்கள் நம்புகின்றனர். “பாதினிய்யா”வும் “கராமிதா”வும் வெகுதூரத்திற்கு சென்றுள்ள வழிகேடான இரு கூட்டங்கள் என்பது யாவரும் அறிந்ததே. 


இவ்வாறான கண்மூடித்தனமாக பின்பற்றும் கூட்டம் அல்குர்ஆனை தான் வாசித்து ஒரு காலமும் விளங்க முடியாது , அதே போன்று ஒரு குறிப்பிட்ட மக்களால் மட்டுமே விளங்க முடியும் என்றும் கருதிக் கொண்டிருக்கின்றனர். மேலும் அந்த ஷேஹ் அல்லது மௌலவி கூறும் விளக்கங்களே அல்குர்ஆனுடைய விளக்கங்கள் என்று முடிவெடுத்து அல்குர்ஆனுடைய தெளிவினைப் பெற்றுக் கொள்ளாத மனிதர்களாக மாறிவிட்டார்கள். 

2 . அடுத்த திசையில் உள்ள கூட்டம், அல்லாஹ் சுபஹானஹுதாலா அல்குர்ஆனை தெளிவான அரபி மொழியில் இறக்கியுள்ளான் என்று கூறப்பட்டிருப்பதனால் அல்குர் ஆனில் உள்ள அனைத்தையும் தங்களால்; விளங்க முடியும் என்று சொல்லிக்கொண்டு தங்களுக்கு தேவையான அனைத்து கருத்துக்களையும், விளக்கங்களையும் அல்குர்ஆனின் பெயரில் சுமந்து கொள்வதற்கு முந்திக் கொண்டுள்ளனர்.

இவ்விரு கூட்டங்களும் செல்லும் பாதைகளும் தீவிரமான வழிகேடான பாதைகள் ஆகும். இந்த இரண்டு வழிகேடான போக்கையும் நோக்கி அப்துல்லா இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்களுடைய கூற்றின் சுருக்கத்தினையே முன்வைக்க ஆசைப்படுகின்றோம். 

அல்லாஹ்வுடைய வேதம் மூன்று பிரிவாகும். அவையாவன: 

• முதல் பிரிவு – அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறியாதவை


علم الغيب 

ஆக அமைத்துள்ள விடயங்கள். அதாவது , அல்லாஹ்வின் பெயர் பண்புகள், ஜென்னத் நரகம் பற்றிய அறிவுகள் உட்பட மனிதனுடைய அறிவிற்கு அப்பாற்பட்ட விடயங்கள் அனைத்திலும் யாருக்கும் தன்னுடைய சுயபுத்தியினால் விளக்கமளிப்பதற்கு அல்லது தன்னுடைய விளக்கங்களை சுமப்பதற்கு எவ்வித உரிமையும் இல்லை என்பது 

علم الغيب 

என்று நம்பி ஏற்றுக் கொள்வது கடமையாகும். 

இந்த 


علم الغيب 

அல்குர்ஆனின் மூன்றில் ஒரு பகுதியாகும். 

• இரண்டாவது பிரிவு -
அரபி மொழி தெரிந்த எவருக்கும் அல்குர்ஆனின் வசனங்கள் தெளிவாக விளங்கும். உதாரணத்திற்கு, 


 - இது ஒரு கிதாப். 
 

                             --அதில் ஓர் சந்தேகம் இல்லை 


என்று கூறிய வசனங்களை அரபி மொழி அறிந்த எவரும் விளங்குவார்கள். 

3 மூன்றாவது பிரிவு – அல்குர்ஆனுடைய மற்றொரு பக்கம்.


لا يعلم إلا العلماء  

அல்குர்ஆனுடைய கருத்துக்களை, விளக்கங்களை உலமாக்களைத் தவிர்ந்து வேறு எவராலும் விளங்க முடியாது. 


ஏனென்றால், குர்ஆனுடைய விளக்கங்களை ஏனைய ஆயத்துகளுடன் சேர்த்து மேலும் நபி சள்ளல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய அஹாதீஸ்களுடன் சேர்த்து விளங்க வேண்டும், அந்தக் கல்வியை கொண்ட உலமாக்கள் , ஆலிம்கள் போன்றவர்களே அன்றி , பொதுவாக ஒருவர் ஓர் ஆயத்தினை ஏனைய ஆயத்களுடன் அல்லது அஹாதீஸ்களுடன் சேர்த்து விளங்காமல் தனித்து ஆயத் ஒன்றினை விளங்குவதற்கு தகுதியில்லை என்பதை உறுதியாக அல்துல்லா இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அல்குர்ஆனை விளங்கும் விடையங்களை மூன்றாக பிரித்துக் காட்டியுள்ளார்கள். 

ஆல்குர்ஆனில் எந்த ஒன்றையும் தங்களால் விளங்க முடியாதென்று யாரெல்லாம் கூறியுள்ளார்களோ மேலும் அல்குர்ஆனில் தங்களால் அனைத்தையும் விளங்க முடியும் என்று யாரெல்லாம் கூறியுள்ளார்களோ, அந்த இரு சாராரின் வார்த்தைகள் அனைத்தும் பொய்யாகும் என்பதனை மேற்கூறிய இமாம் இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் கூற்றில் இருந்து அறிந்து நாம் படிப்பினை பெற்றுக் கொள்ளவேண்டும். 


அரபி மொழி தெரிந்த ஓர் பொது மகனுக்கு அல்குர்ஆனில் விளங்கிக் கொள்வதற்கு ஓர் பக்கம் உள்ளது. ஆயினும் அவ்அல்குர்ஆனில் மேலும் இரு பக்கங்கள் உள்ளது. அதில் ஒன்று:

• எம்மால் ஒரு போதும் கையாளமுடியாத பகுதியாகும். அந்த ரப்புல் ஆலமீன் மட்டுமே தெரிந்தவைகளாகும் அவைகளை அவன் கூறியவாறு ஏற்று நம்பிக்கை கொள்வது எம்மீதான கடமையாகும். 

• மற்றைய பகுதியினை எங்களால் படித்து விளங்கிக் கொள்ள முடியும். எவ்வாறென்றால், அதனுடைய கல்விகளை உரிய முறையில் வழிகாட்டியுள்ள பாதையில் பெற்றுக் கொண்டிருந்தால் முடியும் . அப்படியல்லாமல் அல்குர் ஆன் சுன்னாவின் கல்வியை முறையாக பெற்றுக் கொள்ளாவிட்டால் தனக்கு தேவையானவைகளை மார்கத்தினுள் நுளைத்து வழிகேடுகளை உருவாக்குபவர்களில் ஆகிவிடுவார்கள் என்பதில் எவ்வித ஜயமும் இல்லை. 

இவ்விடையமே பயங்கரமான வழிகேடுகள் உருவாக காரணமாக அமைகின்றது. மனிதர்கள் அல்குர்ஆனிற்கு விளக்கமளிப்பதற்கு முற்படுகின்றார்கள் , ஆனால், அல்குர்ஆனை உரிய வழியில் கற்காமல், அதனை சுமந்த உலமாக்களிடம் தெளிவுகளை பெற்றுக் கொள்ளாமல், மேலும் அவைகளுக்கு விளக்கமளித்த ஸஹாபா ரில்வானுல்லாஹி அஜ்மயீன்களின் அடிச்சுவடுகளை பின்பற்றாமல் , இன்னும் அந்த ஸஹாபா விளக்கங்களை உள்ளடக்கிய அடிப்படைகளை கையான்ட உலமாக்களின் தப்ஸீர் நூல்களைத் தவிர்த்துக் கொண்டு , ஆயத்களுக்கு விளக்கமளிக்க முற்படுகிறார்கள்.


எனவே , இந்த மக்கள் நிச்சயமாக தன் தேவையான விளக்கம் அளிப்பவர்களாக உருவாகுவார்கள் என்பது உறுதி. 

இதனாலேயே, ரசூல் சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் அதிக நெருக்கமாக இருந்த அபூபக்கர் ஸித்தீக் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறியுள்ளார்கள்:


 " நான் அல்லாஹ்வுடைய இந்த வேதத்திலே என்னுடைய புத்தியினால் பேசிவிட்டேனென்றால், எந்த வானம் என்னை கீழே வைக்கும் எந்த பூமியின் மேல் என்னால் வாழமுடியும் என்று " . 

இவ்வாறு அபூபக்கர் ஸித்தீக் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறியிருப்பது அல்குர்ஆனை விளங்காமலோ அல்லது தெரியாமலோ அல்ல. இன்னும் நபி சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் மிக நெருக்கமாக வாழ்ந்து, அவர்களால் அல்குர்ஆனை விளங்கும் தன்மை இல்லை என்றோ அல்ல. 


மாறாக, அல்குர்ஆனை நன்றாக விளங்கி, அல்லாஹ்வின் பயத்தைப் பெற்றுக் கொண்டு அதனால் தக்வா தாரியான அடையாளத்தின் ஓர் உண்மையே அல்குர்ஆன் விடயத்தில் முந்திக் கொள்ளாமலும், தனக்கு தேவையான விளக்கங்களை அதில் இணைக்காமல் இருப்பதற்கும் ஆகும். தான் அல்லாஹ்வுடைய வேதத்தில் தன்னுடைய சொந்த கருத்தினை கூறிவிட்டேனென்றால் எந்த பூமி என்னை வைக்கும் மேலும் எந்த வானதத்திற்குக் கீழ் நான் வாழ முடியும் என்று ரசூல் சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் மிக நெருக்கமாக உறவாடி அவர்களிடம் கல்வியினைப் பெற்றுக் கொண்ட, ரசூல் சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்குப் பின் தனது உம்மத்திற்கு இமாமாக வழிகாட்ட உகந்தவர் அபூபக்கர் ஸித்தீக் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் என்று ரசூல் சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களால் அடையாளம் காட்டிவிட்டுச் சென்ற ஸஹாபியே மேற்கூறப்படவாறு கூறினார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள் 


எனவே, நபி சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் கல்வியினைப் பெற்றுக் கொண்டு சிறப்பான ஸஹாபியாக வாழ்ந்த அந்த ஸஹாபியே இவ்வண்ணம் அல்குர்ஆன் விளக்கத்தில் விளக்கம் சொல்ல பயப்படுகிறார்கள் என்றால் , நபி சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய அஸ்ஸுன்னாவின் மூலம் அல்குர்ஆனை விளங்காதவர்கள் எவ்வண்ணம் நடந்து கொள்ள வேண்டும் என்று சிந்தித்து பாருங்கள் ? ஆகையால் தனக்கு தேவையானவாறு அல்குர்ஆனிற்கு விளக்கம் அளிக்க எக்காலத்திலும் எவர்களுக்கும் எவ்வித உரிமையும் இல்லை. 

தற்காலத்தில் காணப்படும் ஓர் அநியாயம் தான் ,ஆல்குர்ஆனை கற்றறிந்தோ அல்லது கற்றறியாமலோ, அதனுடைய தப்ஸீரினை விளங்கி அல்லது விளங்காமல், மேலும் அதனுடைய அடிப்படைகளை பெற்றுக் கொண்டு அல்லது பெற்றுக் கொள்ளாமல் ஒருவருக்கு அல்குர்ஆனில் ஓர் விளக்கம் தேவைப்பட்டால், இல்மை முறையாக பயின்று சுமந்த உலமாக்களிடம் பெற்றுக் கொள்ளாமல் அவர் அதனுடைய “முபஸ்ஸிராக” மாறி விடுவார். 
ஒரு ஆயத்தின் மொழி பெயர்ப்பு தனக்கு விளங்கி விட்டதென்றால், அவர் அதனுடைய “முபஸ்ஸிராக” மாறிவிடுவார். 

எனவே, நாம் தெரிந்துக் கொள்ளவேண்டியது என்னவென்றால் , அல்குர்ஆனிற்கென்று ஓர் கல்வியுள்ளது. ஆதனைப் படிப்பதற்கென்று ஓர் முறையுள்ளது. அதற்கென்று சில குறிப்பிட்ட “தப்ஸீர் நூல்கள் ” உள்ளது. அதற்கென்று அடிச்சுவடான பாதையுள்ளது. 


இதனை இன்னும் விளக்கமாக கூறுவது என்றால், முஜாஹித் இப்னு ஜபரல் மக்கி ரஹீமஹுல்லாஹ் அவர்கள், அப்துல்லா இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்களிடம் இருந்து அல்குர்ஆனை மூன்று முறை சூரதுல் “பாத்திஹா”வில் இருந்து “சூரத்துல் நாஸ்”வரையான ஆயத்துக்களுடைய விளக்கங்களை மீண்டும், மீண்டும் பெற்றுக் கொண்டவராகும். முஜாஹித் இப்னு ஜபரல் மக்கி ரஹீமஹுல்லாஹ் அவர்கள் அரபி மொழி தெரியாதவரோ அல்லது அரபி மொழி விளங்காதவரோ அல்ல. என்றாலும், அப்துல்லா இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்களிடம் இருந்து அல்குர்ஆனை மீண்டும், மீண்டும் ஒவ்வொரு ஆயத்திற்கும் மூன்று முறை விளக்கம் பெற்றுக் கொண்டார். அவ்வண்ணம் பெற்றுக் கொண்ட பிற்பாடே, முஜாஹித் இப்னு ஜபரல் மக்கி ரஹீமஹுல்லாஹ் அவர்கள் இதுவே அல்குர்ஆனுடைய விளக்கங்கள் என்று மக்களுக்கு அறிவித்துள்ளார்கள். 

உண்மையாக அல்லாஹ்வின் 

“ كلام ” 

க்கு கருத்துக் கூறுபவர்கள் , அல்லாஹ்விற்கு அஞ்சுபவர்கள் என்றால், உண்மையான விளக்கங்களை முறையாக கற்று பெற்றுக் கொள்ளாமல், அதற்கு கருத்து விளக்கங்கள் கொடுக்க தங்களை முற்படுத்த மாட்டார்கள். 


ஏனென்றால் கூற போகின்றவைகள் அல்லாஹ்வின் வார்த்தைகள் சம்பந்தப்பட்டவைகள் ஆகும் . எனவே, அதனுடைய உண்மையான விளக்கங்களை விளங்காமல், அவைகளுக்கு விளக்கம் அளிக்க முற்படுகின்றார்கள் என்றால் , அல்லாஹ்வின் மீது ஓர் பொய்யையே இட்டுக் கட்ட எத்தனிக்கின்றார்கள் அல்லது சுமக்க முனைகிறார்கள் என்று அர்த்தம் . அல்லாஹ்விற்கு அஞ்சுபவர்கள், ஒருபோதும் இவ்வாறு செயற்பட தங்களை முற்படுத்திக் கொள்ள மாட்டார்கள். 


அல்குர்ஆனை தவிர்ந்து, வேறு ஏதுமொரு துறையில் கூட,  ஒருவர் கல்வி பெற்றுக் கொள்ளாமல் அதனை கற்றுக் கொடுக்கும் மனிதனாக, யாரும் முந்திக் கொள்ள மாட்டார்கள். அதாவது, ஆங்கில மொழி தெரிந்ததிற்காக ஒருவருக்கு ஆங்கிலத்தினுடைய இலக்கணம் கற்றுக் கொடுக்கும் ஆசானாக  உருவெடுக்க முடியுமா ? ஆங்கிலத்தில் உள்ள பலதரப்பட்ட கிதாப்களை தானாகவே வாசித்து , குறிப்பிட்ட ஒரு துறையில் விளக்கமளிக்கும் ஆசானாக  உருவெடுக்க முடியுமா? ஏனைய மொழிகளாகட்டும் அல்லது வேறு எந்த விடயமாகட்டும் எப்படி இருந்தாலும், தான் வாசித்து விளங்கினதற்காக இன்னொருவருக்கு கற்றுக் கொடுப்பதற்கு தகுதியானவராக தன்னை முற்படுத்த மாட்டார்கள் . 


ஏனென்றால் அந்த மொழிகளையும் அதனுடைய விடயங்களையும் அவர்கள்  மதிப்பதனால் ஆகும். அவருடைய உள்ளத்தில் அவைகளுக்கு ஏற்ற மகத்துவத்தை கொண்டிருப்பதனால், கற்றுக் கொடுக்கும் தகுதியினை நன்கு கற்றறிந்தவருக்கு கையளிக்கின்றார்கள் . 


ஆனால் இன்று, அல்குர் ஆனிற்கு உள்ளத்தில் மதிப்பும் மகத்துவமும் இல்லாத தன்மையினால், தெரிந்து கொண்டு அல்லது தெரிந்து கொள்ளாமல், கற்று அல்லது கற்காமல் மேலும் எவ்வடிப்படையில் பெற்றுக் கொள்ளவேண்டுமோ அவ்வடிப்படையில் பெற்றுக் கொள்ளாமல் விளக்கம் அளிப்பதற்கு தங்களை முற்படுத்திக் கொள்கின்றார்கள். 


அல்லாஹ்வின்

 “كلام ” 

க்கு விளக்கம் அளிக்கின்றார்கள் . அல்குர்ஆனை விளங்குவதில் உண்மையாகவே ஒரு வழிமுறை உள்ளது என்று விளங்கிய யாரும் இவ்வாறு நடந்துக் கொள்ள மாட்டார்கள். முறையாக கற்று தான் கற்பிக்க முந்த வேண்டும் என்பதனையும் மறுக்க முற்பட மாட்டார்கள்.

ஆயத்தின் மொழி பெயர்ப்பு தெரிந்ததிற்காக, தனக்கு புரிந்ததெல்லாம் அல்குர்ஆனின் விளக்கம் என்ற கருதி, ஓர் ஆயத்தினை வாசித்து தன் சுயபுத்திக்கு விளங்கியவைகள் அல்குர்ஆனுடைய விளக்கமாகாது. அது அந்த மக்களுடைய விளக்கம் அன்றி வேறில்லை. 


ஏனெனில் ஸஹாபாக்களுடைய விளக்கம் , அவர்களுடைய பாதை, அந்த சஹாபாக்களை பின்பற்றிய தாபியீன்கள் பாதை, போன்ற விடயங்களை அறியாமல் எவ்வாறு, குறிப்பிட்ட ஆயத்திற்கு முரணான அல்லது அதற்கு தேவையான ஆயத்துக்கள் இன்னொரு இடத்தில் கூறப்படவில்லை அல்லது அஹாதீஸ்கள் காணப்படவில்லை என்று உறுதிப்படுத்துவார்கள் ? அவர்கள் பெற்றுக் கொண்ட விளக்கத்தினை பூரணமாக்குவதற்கு அல்லது பிரித்துக் காட்டுவதற்கு ஏனைய ஆயத்துக்கள் அல்லது அஹாதீஸ் இன்றி எவ்வாறு உறுதி செய்து பதில் அளிப்பதற்கு முந்துவார்கள். 


அல்குர்ஆனுடைய மகத்துவத்தினை விளங்கி சுமந்தவர்களாக இருந்தால், அல்லாஹ்வுடைய ஓர் குறிப்பிட்ட ஆயத்திற்கு பல ஆயத்துக்கள் விளக்கம் அளிப்பதாக உள்ளதென்பதையும் , அவ்வாயத்துகளுக்கு நபி சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பல விளக்கங்கள் அளித்திருப்பதையும் , உணர்ந்து விளக்கம் அளிக்க  முந்திக் கொள்ள மாட்டார்கள். 


எனவே, அவர்கள் அவ்வாயத்திற்கு விளக்கமளிப்பதற்கு முன், அந்த குறிப்பிட்ட ஆயத்துடன் தொடர்புடைய ஏனைய ஆயத்துக்களை எவ்வண்ணம் ரசூல் சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சேர்த்து விளங்க வேண்டும் என்று முன்மாதிரியாக காட்டித்தந்துள்ளார்களோ, எவ்வண்ணம் ஸஹாபாக்கள் அவைகளைப் நபி சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் இருந்து பெற்றுக் கொண்டு விளக்கம் அளித்துள்ளார்களோ, அவ்வண்ணம் விளங்கியே விளக்கம் சொல்ல முந்திக் கொள்வார்கள். 


மேலும் அவ்விடயத்தில் நபி சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய அஹாதீஸ்களுடைய விளக்கங்களை முதன்மை படுத்தி , அவற்றை விளங்கியே விளக்கத்திற்கு முந்திக் கொள்வார்கள். 

அன்று முதல் இன்று வரை ஸலப் உலமாக்கள் பாதையினை ஆராய்ந்தால், அல்குர்ஆனிற்கு அவர்கள் சுயவிளக்கம் அளிக்க முந்திக் கொள்ள மாட்டார்கள். அல்குர்ஆனிற்கு விளக்கம் அளிப்பதற்கு முன் , உலமாக்களுடைய “தப்ஸீர்” நூல்களை கற்று அவ்வடிப்படையிலேயே விளக்கம் அளிப்பார்கள். 

ஏனென்றால், அவ்வுலமாக்களுடைய பாதையில் இருந்து அல்லது அந்த உலமாக்களுடைய அடிச்சுவட்டில் இருந்து விலகிச் செல்லாமல் இருப்பதற்காகும். நேர் வழியில் உள்ள ஆலிம்கள் என்றால்; ஓர் ஆயத்திற்கு விளக்கமளிக்கும் போது அதனுடன் தொடர்புடைய ஏனைய ஆயத்துக்களையும் தொடர்புபடுத்தி விளக்கம் அளிப்பவராக காணப்படுவார்கள். 

இமாம் இப்னு கதீர் ரஹீமஹுல்லாஹ் அவர்களுடைய, இமாம் அத்தபரி ரஹீமஹுல்லாஹ் அவர்களுடைய, இமாம் பகவி ரஹீமஹுல்லாஹ் அவர்களுடைய, இமாம் நஸாயீ ரஹீமஹுல்லாஹ் அவர்களுடைய நூல்கள் அல்லது ஏனைய ஸலபு ஸாலிஹீன்களுடைய நூல்களை அடிப்படையாக் கொண்டே விளக்கங்களுக்கு முந்திக் கொள்வார்கள். 


எனவே, மேற்கூறப்பட்ட நூல்களைத் தவிர்ந்து, அல்குர்ஆனை திறந்ததும் தங்களது சுயபுத்திக்கு புலப்படும், தனக்கு தேவையான விளக்கங்களை அளிக்ககும் மக்கள் , அவர்களுடைய விளக்கங்களுடைய அடிப்படை என்ன என்பதும் , எங்கிருந்து பெறப்பட்டது என்பதும் கேள்விக்குறியாக உள்ள ஓர் வினாவாகும்.

இவர்களின் விளக்கங்கள் அந்த ஆயத்துகளின் உண்மையான விளக்கங்கள் என்றால், அவ்விளக்கத்தினை முபஸ்ஸிரீன்கள் அளித்துள்ளார்களா ? அப்படி என்றால் அந்த விளக்கங்கள் எந்த நூல்களில் பதிவாகி உள்ளது ? இல்லையென்றால் அவ்வாறு பதிவாகியிருக்கும் விளக்கங்களை ஏன் அவ்வாறே கையாள்வதில் இருந்து தவிர்ந்து தங்களுடைய சுயவிளக்கங்களுக்கு முந்திக் கொள்கிறார்கள் ? 

இவர்கள் அல்குர்ஆனிற்கு அளிக்கும் விளக்கங்கள், இப்னு கதீர் ரஹீமஹுல்லாஹ், இமாம் தபரி ரஹீமஹுல்லாஹ் , இமாம் குர்தபி ரஹீமஹுல்லாஹ், இமாம் பகவி ரஹீமஹுல்லாஹ் போன்ற ஆயிய்மத்துள் முஸ்லிமீன்கள் அளித்திருக்கும் விளக்கங்கள் தான் என்றால், அந்த இமாம்களின் நூல்களில் சுமந்துள்ள விளக்கங்களை சுட்டிக் காட்டி சுமப்பதற்கு ஏன் தயங்குகிறார்கள் ? 


அது அவ்வாறில்லை.  இவர்கள் தங்களுடைய சொந்த விளக்கங்களை தான் கொடுக்கின்றார்கள் . ஆகையால் தான், அந்த உலமாக்களுடைய நூல்களை உபயோகித்து அல்குர்ஆன் வகுப்பு ஆரம்பிப்பது இல்லை. ஏனெனில் இவர்களின் தேவைக்கேற்ப விளக்கங்கள் அளிப்பதற்கு முடியாமல் இருப்பதே அதனுடைய உண்மை நிலைப்பாடாகும். 


ஏனென்றால் அல்குர் ஆனின் ஆயத்துகளுக்கு அவர்கள் நாடும் விடயங்கள் அந்நூல்களில் காணப்படுவதில்லை. ஆகையால் தான் சஹாபா விளக்கங்களை கூற்றுக்களை சுமந்த தப்ஸீர் நூற்களை தவிர்ந்து வருகிறார்கள். 

மாற்றமாக ஆயத்தின் உண்மையான விளக்கத்தை சொல்ல முற்படுபவன் , தப்ஸீர் நூற்களில் காணப்படும் சஹாபாக்களின் விளக்கங்களும் , கூற்றுக்களும் அந்த குறிப்பிட்ட ஆயத்துடன் தொடர்புடைய ஏனைய ஆயத்களை இணைத்து அவ்வாயத்தின் அடிப்படைகளை விளக்குவதற்கு முனைவான். அதனை தவிர்ந்து, ஒவ்வொருவனும் அவனுக்கு புலப்பட்ட 

விளக்கங்களை முன்வைக்க முற்பட மாட்டான்.


இது ஷேக் யஹ்யா சில்மி அவர்களின் ஒரு பகிரங்க சொற்பொழிவின் ஒரு பகுதியின் எழுத்து வடிவமாகும். தந்தவர் உம்மு ருசைக்