[தவ்ஹீதின் கருத்தும் அதனை அறியாத தவ்ஹீத் வாதிகளும் முஸ்லிம்களும்]

தவ்ஹீதின் கருத்தும் அதனை அறியாத தவ்ஹீத் வாதிகளும் முஸ்லிம்களும்அல்லாஹு சுபஹானஹு வத்தாஆலாவை ஒருமைப்படுத்தல் 


لا إله إلا الله محمد رسول الله


“லா இலாஹா இல்லல்லாஹு முகம்மதுர் ரசூலுல்லாஹ்” என்ற 


கலிமாவை மொழிந்த ஒரு முஸ்லிம் இஸ்லாத்தின் உயிர் நாடியான தவ்ஹீதினை உரிய முறையில் விளங்கிக்கொள்ளவில்லை என்றால் இஸ்லாத்தினை உரிய முறையில் விளங்கவில்லை என்றாகும். 


தற்காலத்தில் ஏராளமான முஸ்லிம்கள் தவ்ஹீத் என்ற வார்த்தையை கேட்டால் எதிர்ப்பான, கசப்பான ஒரு வார்த்தையாக விளங்கிக் கொள்கின்றனர். இன்னும் ஒரு சாரார் அதனை ஒரு குறிப்பிட்ட ஒரு ஜமாத்துடைய பெயர் என விளங்கிவைத்துள்ளனர். 


மேலும் ஒரு சமூகம் தவ்ஹீத் என்றால் அது ஒரு பெயர் என்றும், அது என்னவென்றே எமக்கு தெரியாது என்றும், மேலும் சிலர் நாம் தவ்ஹீத் வாதிகள் ஆனால் தவ்ஹீத் என்றால் என்னவென்று தெரியாது என்றும், இவ்வாறு காணப்படும் சூழ்நிலையிலேயே எம் முஸ்லிம் சமூகம் வாழ்ந்து கொண்டு இருக்கின்றது. 


என்றாலும் தவ்ஹீதின் முக்கியத்துவத்தை நோக்கினால்:

அல்லாஹு சுபஹானஹுத்தாஆலா “சூரத்துல் நஹ்ல்” இல் கூறுகின்றான்:

நாங்கள் ஒவ்வொரு சமூகத்திற்கும் ரசூல்மார்களை அனுப்பினோம், ஏனென்றால் அல்லாஹ்வை வணங்குங்கள் என்ற ஏகத்துவக் கொள்கையினை அந்த சமூகத்திற்கு எத்தி வைப்பதற்கும், 

(அந்த தவ்ஹீதிற்கு எதிர்பதமான) தாஹூத்களை(ஷிர்க்) விட்டும் மக்களை பாதுகாப்பதற்காகும். (அல்குர்ஆன்- 16 – 36 )

ஒவ்வொரு ரசூல்மார்களும் அவர்களுடைய சமூகத்தினருடன் போராடிய போராட்டம், தவ்ஹீதினை நிலைநாட்டுவதற்கும் அதனை அவர்களுடைய உள்ளத்திலே மலரச் செய்வதற்குமாகும். இறக்கப்பட்ட ஒவ்வொரு வேதங்களும், சுகுபுகளும் தவ்ஹீதினையே எடுத்து இயம்புகின்றன. 


அதேபோன்று எமக்கு வேதமாக இறக்கப்பட்ட அல்குர்ஆனுடைய ஒவ்வொரு சூராவும் இதனையே கூறுகின்றது. நாம் ஒவ்வொருநாளும் எமது தொழுகையில் கட்டாயமாக மீட்டக்கூடிய “سبع المثاني” மீண்டும் மீண்டும் ஓதக்கூடிய “சூரத்துல் பாத்திஹாவுடைய” ஏழு வசனங்களும் இதனையே எடுத்து இயம்புகின்றது. இந்த தவ்ஹீதினை ஒவ்வொரு முஸ்லிமும் தன்னுடைய ஆழ் மனதில் ஆனிவேராக நட்டுதல் வேண்டும்.


ஆனால், தற்காலத்தில் எதிர்மறையாக தவ்ஹீத் என்றாலே ஒரு எதிர்பான வார்த்தையாக, ஒரு ஜமாத்தை குறிப்பிடும் வார்த்தையாக அல்லது நாம் தவ்ஹீத் வாதிகள் என்று பெருமை பாராட்டக்கூடிய வார்த்தையாக மாறியுள்ளதே தவிர தவ்ஹீதின் உண்மையான, யதார்த்தமாக குறிப்பிடக்கூடிய விடயங்களை தெரியாத மக்களாக இருக்கின்றனர்.

அல்லாஹு சுபஹானத்தாஆலா அவனுடைய திருமறையில் கூறுகின்றான்;

நீங்கள் ஞாபகப்படுத்துங்கள். நிச்சயமாக ஞாபகமூட்டல் மூஃமின்களுக்கு பயனளிக்கும் . (அல்குர்ஆன் 51;:55)


எம் உள்ளத்தில் மிகக் குறைந்த அளவு ஈமான் காணப்படுகின்றதென்றால் அதன் அர்த்தம், எம்மிடத்தில் தவ்ஹீதினைப்பற்றி ஒரு தெளிவான போதிய விளக்கம் இல்லை என்பதாகும். 


தவ்ஹீத் என்ற வார்த்தைக்கு ஒரு உண்மையான, தெளிவான விளக்கத்தினை பெற்று, மேலும் அதனை எம் ஆழ் மனதில் பதிந்தால் மாத்திரமே அது எம் ஈமானின் தன்மையை அதிகரிக்கும். இந்நிலமைதான் ஒரு முஸ்லிமை உண்மையான தவ்ஹீத் வாதியாக மாற்றும்.

தவ்ஹீத் என்ற வார்த்தையின் சுவை, முக்கியத்துவம், அதனுடைய யதார்த்தம் எங்களுக்கு புரிந்து இருக்குமேயனால் ஆழ்மனதில் அதனை பதியவைத்திருப்போம். 


ஏனென்றால், வேவ்வேறு விடயங்களை மனன மிடுகின்றோம். ஆனால் தவ்ஹீத் என்ற விடயத்தின் அடிப்படைகளை விளங்கி மனனம் செய்யாமல் உள்ளோம். 


ஏனெனில், தவ்ஹீத் என்றால் என்ன என்று கேட்டால், தெரியாமல் திரு திரு என்று விழிக்கும் அல்லது குர் ஆன் சுன்னா , அது இது என்று விடையளிக்கும் வருடக் கணக்கில் தவ்ஹீத் ஜாமாத் களில் உருண்டு பிரளும் தவ்ஹீத் வாதிகளையும் ஏனையோரையும் 

காணுகின்றோம். தவ்ஹீதின் கருத்தே தெரியாமல் தவ்ஹீத் வாதிகளாகவும், முஸ்லிம்கள் என்று பெருமை பாராட்டுபவர்களாகவும் தான் எமது சமூகம் இருக்கிறது. 


ஆகவே இந்த அடிப்படைகளை அறிந்து கொள்வதற்காக ஷெய்ஹூல் இஸ்லாம் இமாம் இப்னு தைமிய்யா (ரஹிமஹுல்லாஹ்) அவர்களும் ஷெய்ஹுல் இஸ்லாம் இமாம் முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப் அன்நஜிதி (ரஹிமஹுல்லாஹ்) அவர்களாலும் எழுதப்பட்ட தவ்ஹீதின் பெரும்பாலான விடயங்களை உள்ளடக்கிய ஒரு தொகுப்பு நூலான மஜ்மூஅதுத் தவ்ஹீதை முன்வைக்கின்றோம்.