[அல்லாஹ்வை ஈமான் கொள்வதும் அதன் வழிமுறைகளும்]


பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்


இமாம் அப்துர்ரஹ்மான் பின் நாஸிர் அஸ்ஸஃதி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் இமாம் அபுல் அப்பாஸ் அஹ்மத் இப்னு அப்துல் ஹலீம் இப்னு தைமிய்யா ரஹிமஹுல்லாஹ் அவர்கள் எழுதிய அல் அகீததுல் வாஸிதிய்யா என்ற நூலுக்கு விளக்கவுரையாக ஷரஹ் அகீததுல் வாஸிதிய்யா என்ற நூலை எழுதினார். 


இந்நூலினை ஷெய்க் அபூஅப்துர்ரஹ்மான் யஹ்யா சில்மி பின் முஹம்மது நூபார் அஸ்ஸைலானி ஹபிதஹுல்லாஹ் அவர்கள் தனது வகுப்பில் விளக்குகையில் இறுதியாக சில மேலதிக குறிப்புகளையும் விளக்கங்களையும் ஒன்று சேர்த்திருக்கிறார். அதனை இங்கு எழுத்துருவில் தரப்பட்டுள்ளது.


இமாம் அப்துர்ரஹ்மான் பின் நாஸிர் அஸ்ஸஃதி ரஹிமஹுல்லாஹ் கூறுகிறார் :
இமாம் அபுல் அப்பாஸ் அஹ்மத் இப்னு அப்துல் ஹலீம் இப்னு தைமிய்யா அல் ஹர்ரானி அத்திமஷ்கி ரஹிமஹுல்லாஹ்: இறப்பு- ஹி 728) எழுதிய அல் அகீததுல் வாஸிதிய்யா என்ற நூலில் 


அல்லாஹ்வின் பெயர்களையும் பண்புகளையும் எடுத்துச் சொல்லக்கூடிய அல்குர்ஆன் வசங்களையும் ஹதீஸ்களையும் முன்வைக்கிறார்கள் . இமாம் இப்னு தைமிய்யா ரஹீமஹுல்லாஹ் அவர்கள் அஸ்மா வ ஸிபாத் எனப்படும் அல்லாஹ்வின் பெயர்கள் பண்புகள் தொடர்பாக சுருக்கமாகவும் , பொதுவாகவும் முன்வைத்திருக்கிறார்கள் . 


மேலும், அல்லாஹ்வின் அடிமையாக இருப்பவன் , தனது நம்பிக்கை விடயத்தில் அல்லாஹ்வின் பெயர்களையும் பண்புகளையும் ஒரு அடிப்படை அஸ்திவாரமாகப் பெற்றுக்கொள்ள வேண்டுமென்பதை அறிந்திருக்க வேண்டும் என்பதற்காகவே முன்வைத்திருக்கிறார்கள் . 


எனவேதான் இமாம் இப்னு தைமிய்யா ரஹிமஹுல்லாஹ் ஒரு அடிமை நம்பிக்கை கொள்ளவேண்டிய அம்சங்ளைப் பற்றி குறிப்பிடுகையில் அல்லாஹ்வின் பெயர்களையும் பண்புகளையும் நம்பிக்கை கொள்வதற்கு அடிப்படையாக அமைந்துள்ள அல்குர்ஆன் ஆயத்களையும் ஹதீஸ்களையும் முன்வைகின்றார்கள். 


இதனை ஒரு அடியான் அறிந்து வைத்திருப்பதால் அல் குர்ஆனிலும் ஸுன்னாவிலும் வந்திருக்கக்கூடிய அனைத்து அம்சங்களையும் ஈமான் கொள்வதன் பால் அவனை வழிகாட்டுவதோடு வழிகேடான கொள்கைகளை விட்டும் பாதுகாப்பாகத் தப்பியிருப்பதற்கும் அவ்வடியான் வழிகாட்டப்படுகிறான். 


இதனால்தான் இமாம் இப்னு தைமிய்யா ரஹிமஹுல்லாஹ் அல்லாஹ்வின் பெயர் பண்புகள் பற்றிய அடிப்படையை முதலில் எடுத்து வைக்கிறார். 


ஷெய்குல் இஸ்லாம் இமாம் இப்னு தைமியா அவர்கள் , அல்லாஹு ஸுப்ஹானஹுதாலா அவனது வேதத்தில் கூறியிருக்கின்ற விடயங்களிலும் இன்னும் அல்லாஹ்வின் தூதர் சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அறிவித்திருக்கும் அனைத்து அம்சங்களிலும் ஈமான் கொள்ள வேண்டியது எம்மீது கடமையாகுமென்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும் என்று வழிக்காட்டுகின்றார். 


சுத்தமான ஈமான் என்பது " மறுக்கும்" போக்கிலிருந்தும் , முரண்பட்டுப் போவதிருந்தும், கேள்விகளை எழுப்புவதிலிருந்தும் , இன்னுமொன்றுடன் ஒப்பிட்டுப் பார்ப்பதிலிருந்தும் தவிர்ந்து கொண்டதாகும். 


எனவே அல்லாஹ்வின் பெயர் பண்பு விடயத்தில் அல்லாஹ்வும் அவனது தூதரும் உறுதிப்படுத்திக் காட்டியவற்றை நாமும் உறுதிப்படுத்த வேண்டும். அதாவது, அல்லாஹ்வும் , ரசூலும் , அல்லாஹ்வின் பெயர் பண்புகள் விடயத்தில் உறுதி காட்டியவற்றில் குறைகாணாமலும் அதில் மேலதிகமாக எதனையும் சேர்க்காமலும் கூறப்பட்ட  அதே மாதிரி உறுதியாக ஏற்றுக் கொள்ள வேண்டும். 


அந்த வகையில் அல்லாஹ்வின் " தாத்" எனும் உள்ளமையும் அவனுடைய உயர்ந்த பண்புகளும் அவனுக்கென்று தனித்துவத்தோடு அமைந்ததாகும் என்பதை நாம் விளங்க வேண்டும். எவ்வாறு அல்லாஹ்வின் உள்ளமையைப் போன்று இன்னுமொன்று இருக்க முடியாதோ, அதே போன்று அவனுடைய பண்புகளுக்கு ஒப்பாக இன்னுமொன்று இருக்க முடியாது. 


யார் அல்லாஹ்வின் பண்புகளில் ஒன்றையோ அதில் சிலவற்றையோ மறுப்பதற்கு முனைந்து விட்டாரோ அவர் நிச்சயமாக அல்லாஹ்வின் பண்புகள் விடயத்தில் " தஃதீல்" (மறுத்தல்) என்ற வழிகெட்ட வழிமுறையைக் கையாண்டுவிட்டார். தஃதீலைக் கையாண்டு அவர் மறுப்பதற்கு காரணம் " தஹ்ரீப் " (மாற்றுக் கருத்துக் கொடுத்தல் ) என்ற வழிமுறையையும் அவர் கையாண்டதாலாகும். 


அதே போன்று அவர், அப்பண்புகள் விடயத்தில் ,அது அல்லாஹ்வுக்கு எப்படி இருக்க முடியுமென்று கேள்வி எழுப்பி, அப்பண்புகளை படைப்புகளின் பண்புகளோடு ஒப்பாக்கி எடுத்துவிட்டாரென்றால், நிச்சயமாக அவர் " தகீப் " எனப்படும் கேள்வி கேட்கும் வழிமுறையையும் " தம்ஸீல் " எனப்படும் படைப்புகளோடு உவமானம் கூறும் வழிமுறையையும் கையாண்டுவிட்டார். 


தஃதீல், தஹ்ரீப், தகீப், தம்ஸீல் ஆகியவை அல்லாஹ்வின் பெயர் பண்பு விடயத்தில் கையாளக்கூடாத வழிகெட்ட வழிமுறையாகும். 


தஃதீலுக்கும் தஹ்ரீபுக்கும் இடையிலான வேறுபாடு என்னவென்றால் தஃதீல் (மறுப்பது) என்பது அல்லாஹ்வின் வேதத்திலும் நபிகளாரின் சுன்னாவிலும் வந்திருக்கும் அல்லாஹ்வின் பெயர் பண்புகளின் சத்தியமான நேரடி கருத்தை மறுப்பதாகும். 


தஹ்ரீப் (மாற்றுக் கருத்துக் கொடுப்பது) என்றால் குர்ஆனிலும் சுன்னாவிலும் வந்திருக்கும் அல்லாஹ்வின் பெயர்களுக்கும் பண்புகளுக்கும் உள்ளரங்கமான விளக்கங்களைக் கொடுத்து , அந்த பெயர்களின் பண்புகளின் கருத்தை அதற்குத் தகுதியற்ற கருத்தாக இருந்தாலும் அந்தக் கருத்தை அந்த பெயர் பண்புகளுக்கு விளக்கமாக நுழைத்து இன்னொரு கருத்தின் பால் திசைதிருப்பிவிடுவதாகும். 

இவ்வாறு அல்லாஹ்வின் பெயர்களுக்கும் பண்புகளுக்கும் மாற்றுக் கருத்து கொடுக்கும் பொது, தஃதீலும் தஹ்ரீபும் சில சமயங்களில் ஒன்றோடொன்று சேர்ந்து போய்விடுகிறது. 


அதாவது அல்லாஹ்வின் பெயருக்கும் பண்புக்கும் தகுதியில்லாத விளக்கத்தைக் கொடுத்துவிட்டால் ,அந்நேரத்தில் தஃதீலும் தஹ்ரீபும் சேர்ந்து போய்விடுகிறது. அதாவது, சத்தியமான நேரடியான கருத்தை மறுத்து அசத்தியமான கருத்தை, விளக்கத்தைப் புகுத்திவிட்டால் அவ்விடத்தில் அல்லாஹ்வின் பெயர் பண்புகளை மறுப்பதும், மாற்றுக் கருத்து கொடுப்பதும் சமமாக அமைந்துவிடும். சில சமயங்களில் மறுக்கும் தன்மை மாற்றுக் கருத்துக் கொடுக்காமலேயே அமைந்துவிடும். 


யாரெல்லாம் அல்லாஹ்வின் பண்புகளை மறுக்கின்றார்களோ அவர்கள் நேரடியாகவே மறுத்துவிட்டார்கள். " தஹ்ரீப் " எனும் மாற்றுக் கருத்தைக் கொடுக்கும் வழிமுறையை கையாளாமல் , நேரடியாகவே அல்லாஹ்வின் பண்புகளை மறுத்தவர்களிடம் , அவ்வாறு மறுத்ததற்குக் காரணம் கேட்கப்பட்டால், அந்தப் பண்புகளின் அர்த்தத்தை அல்லாஹ் மட்டும்தான் தெரிந்தவன் , எனவே நாம் அதன் கருத்தை அல்லாஹ்வுக்கு " தப்வீத் " செய்துவிட்டோம் என்று சொல்வார்கள். . 


இது " முபவ்விதாவின் " போக்கு எனப்படும் . இவர்களின் இந்த போக்கின் விளக்கம் என்னவென்றால் அல்லாஹ்வுக்குள்ள பெயர்களுக்கும் பண்புகளுக்கும் ,அது வந்துள்ள பிரகாரமே நம்பி அதன் நேரடியான அர்த்தத்தை நாம் விளங்கிக் கொள்ள முடியாது. அந்தப் பண்புகளுக்கு உள்ளரங்கமான இன்னுமொரு அர்த்தம் இருக்கலாம். அதன் சரியான அர்தத்தை அல்லாஹ் மட்டுமே தெரிந்தவன் என்று கூறி அந்தப் பண்புகளை இவர்கள் மறுத்துவிடுகிறார்கள். 


இவர்களின் இந்தப் போக்கு தவறானதாகும். அந்த பண்புகளின் தன்மை எவ்வாறென்று நாம் அறிய முடியாவிட்டாலும், அல்லாஹ் அதனை அறிதவன் என்று நம்ப வேண்டும். அதே போன்று அந்தப் பண்புகளின் வெளிப்படையான கருத்தை அது வந்துள்ளவாறே நாம் நம்பிக்கை கொள்ள வேண்டும். 


இவ்வடிப்படைக்கு மாற்றமாக, நேரடியாகவே அல்லாஹ்வின் பண்புகளை மறுப்பவர்கள் நாங்கள் அப்பண்புகளின் வெளிப்படையான கருத்தையும் விளங்க முடியாதென்று கூறுகிறார்கள். இவ்வாறு மறுப்பதன் மூலம் இவர்கள் அல்லாஹ்வையே மறுப்பவர்களாக ஆகிவிடுகிறார்கள். 


இந்தத் தவறான போக்கு முபவ்விதாக்களிடம் இருக்கிறது. இந்தப் போக்கை சிலர் ஸலபின் போக்கென்றும் கூறுகிறார்கள். இது மிக மோசமான தவறாகும். 


ஏனென்றால் ஸலப்கள் அல்லாஹ்வுக்குப் பெயர்களும் பண்புகளும் இருப்பதை உறுதிப்படுத்துகிறார்கள். ஸலப்கள் அல்லாஹ்வின் பண்புகளை விளங்கும் விடயத்தில் அல்லாஹ்வுக்கு இந்தப் பண்புகள் இருப்பது எப்படி சாத்தியமாகுமென்று கேள்வியெழுப்பும் "கைபிய்யா" என்ற போக்கைத்தான் தவிர்ந்து கொண்டார்களே தவிர அந்தப் பண்புகளில் நேரடியே வந்துள்ள வெளிப்படையான கருத்தை ஏற்றுக்கொள்ள வேண்டுமென்பதை மறுக்கவில்லை. 

ஸலப்கள் எப்போதும் சொல்வார்கள்:

பண்புகளின் (வெளிப்படையான) அர்த்தம் எமக்குத் தெரிந்ததாகவே உள்ளது.
வல் கைப மஜ்ஹுல் - அந்தப் பண்பு எப்படி அமைந்திருக்குமென்று எமக்குத் தெரியாது

வல் ஈமானு பிஹி வாஜிப் - அதனை ஈமான் கொள்வது கடமை

வல் இஸ்பாதுஹு வாஜிப் - அதனை உறுதிப்படுத்துவது கடமை

வஸ் ஸுவாலுன் கைபிய்யதிஹி பித்ஆ - அது எப்படியென்று கேள்வி கேட்பது பித்அத்தாகும். 

(கமா கால இமாம் மாலிக் வ கைரஹு பில் இஸ்திவா) இமாம் மாலிக்கும் ஏனையவர்களும் அல்லாஹ் அர்ஷின் மீது உயர்ந்து விட்டான் என்ற பண்பின் விடயத்தில் கூறியது போன்றதாகும். 

தகீப் மற்றும் தம்ஸீல் ஆகியவற்றுக்கிடையிலான வேறுபாடு என்னவென்றால்...தகீப் என்பது அல்லாஹ்வின் பண்புகள் விடயத்தில் ஆராய்ந்து பார்த்து இந்தப் பண்புகள் அல்லாஹ்வுக்கு எவ்வாறு இருக்க முடியுமென்று கேள்வியை எழுப்புவதாகும். 


தம்ஸீல் என்பது அல்லாஹ்வின் பண்புகளை படைப்புகளின் பண்போடு ஒப்பிட்டுப் பார்த்து விளக்கம் கொடுப்பதாகும். 


நிச்சயமாக அல்லாஹ்வுக்கு ஒப்பாகவோ நிகராகவோ எதுவுமில்லை. அல்லாஹ்வுக்கு சமமாக நிகராக ஒப்பாக எதுவுமில்லை என்ற குர் ஆன் வசனம் , 


இந்த மறுத்துரைக்கும் (தகீப்) என்ற வழிமுறையையும் , தம்ஸீல் என்ற படைப்புகளோடு ஒப்பிடும் போக்கையும் மறுப்பதாகும். இந்த அடிப்படையில்தான் அல்லாஹ்வின் பண்புகளான ஸமீஃ-(அனைத்தையும் கேட்பவன்)...

 பஸீர்- (அனைத்தையும் பார்ப்பவன்) போன்ற பண்புகளும் விளங்கப்பட வேண்டும். 


அல்லாஹ்வின் கேட்கும் தன்மையையும் பார்க்கும் தன்மையையும் படைப்பினங்களின் தன்மையோடு ஒப்பாகவோ உவமையாகவோ உதாரணமாகவோ எடுக்கக் கூடாது. இதே அடிப்படையில் நாம் அல்லாஹ்வின் பெயர்களுக்கும் பண்புகளுக்கும் மாற்றுக் கருத்துக் கொடுத்து தஹ்ரீபைக் என்ற போக்கை கையாளாமலும் , அவைகளை மறுத்து தஃதீல் என்ற போக்கை கையாளாமலும் , அல்லாஹ்வின் பெயர்களையும் பண்புகளையும் உறுதிப்படுத்த வேண்டும். 


ஏகத்துவத்துடன் இருக்கும் ஒரு முஃமின் அல்லாஹ்வின் அனைத்துப் பண்புகளையும் ஏற்றுக்கொள்பவனாக இருப்பான். அப்பண்புகள் எவ்வாறு அல்லாஹ்வின் மகத்துவத்திற்கும் மாட்சிமைக்கும் அமைய அவனுக்கென்று தனித்துவமானதாக இருக்கின்றதோ அவ்வாறே அந்த முஃமின் ஏற்று அதனை உறுதிப்படுத்துவான். 


ஆனால் தஃதீல் எனும் மறுக்கின்ற போக்கைக் கையாளும் முஅத்தில் என்ற கூட்டங்கள் அல்லாஹ்வின் பண்புகளில் சிலவற்றையோ அல்லது அனைத்தையுமோ மறுத்து விடுவார்கள். 


இப்போக்குக்கு முரணான போக்குடையவர்கள் தான் தம்ஸீலைக் கையாளும் முமஸ்ஸில் என்ற கூட்டத்தார். முமஸ்ஸில் என்ற கூட்டத்தார் , அல்லாஹ்வின் பண்புகளை உறுதிகாண்பவனாக இருந்தாலும் அவன் அல்லாஹ்வின் பண்புகளை படைப்பினங்களின் பண்புகளோடு ஒப்பாக எடுத்து அந்த விளக்கத்தினடிப்படையில் தான் உறுதிகாண்கிறான். இது தவறாகும். 

அல்குர்ஆனிலும் சுன்னாவிலும் வந்திருக்கும் எல்லா ஆதாரங்களையும் நாம் சேர்த்துப் பார்த்தால் அல்லாஹ்வின் பூரணத்துவமான தன்மை யாருடைய தன்மையுடனும் ஒப்பானதாக இல்லையென்பதை விளங்கிக் கொள்ள முடியும். அது தெளிவான விளக்கத்துடன் இருக்கிறது. இன்னும் நம்பிக்கை கொள்வதற்குத் தகுதியான உறுதியான தரத்தில் இருக்கின்றது.


மேலே கூறப்பட்டுள்ள இமாம் அப்துர்ரஹ்மான் பின் நாஸிர் அஸ்ஸஃதி ரஹிமஹுல்லாஹ் அவர்களின் கூற்றை விளக்கு முகமாக ஷெய்க் அபூஅப்துர்ரஹ்மான் யஹ்யா சில்மி அஸ்ஸைலானி ஹபிதஹுல்லாஹ் அவர்கள் கூறுவதாவது :

மேலே நாம் கண்ட விடயங்களில் இமாம் அப்துர்ரஹ்மான் நாஸிர் அஸ்ஸஃதி ரஹிமஹுல்லாஹ் எடுத்துக் காட்டிய அம்சங்களில் நாம் தெரிந்து கொள்வது என்னவென்றால் , அல்லாஹ்வின் பெயர் மற்றும் பண்பு விடயத்தில் நாம் தஃதீல் தஹ்ரீப் தகீப் தம்ஸீல் ஆகியவற்றைக் கையாளாமல் விளங்குவதில்தான் உண்மையாக அல்லாஹ்வை நம்புவதன் வழிமுறையே அமைந்திருக்கிறது. 


யாரெல்லாம் இந்த அடிப்படையில் அல்லாஹ்வின் பெயர் பண்புகளை விளங்குவார்களோ அத்தகையவர்கள்தான் குர்ஆன் சுன்னா காட்டும் நேர்வழியை அடைந்தவர்களாக இருப்பார்கள். யார் இதற்கு மாற்றமாக விளங்குவார்களோ அத்தகையவர்கள் இஸ்திகாமத் எனும் உறுதியுடன் குர்ஆனையும் சுன்னாவையும் பின்பற்றுவதற்கு சாத்தியமற்றவர்களாக இருப்பார்கள். 


இந்த விடயம் தொடர்பாக இமாம் அப்துர்ரஹ்மான் பின் நாஸிர் அஸ்ஸஃதி ரஹிமஹுல்லாஹ் ஒரு முக்கியமான விடயத்தை எடுத்துக் காட்டுகிறார். அதாவது கைபிய்யா- எப்படி என்ற விடயம் அல்லாஹ் மாத்திரமே அறிந்தவன் என்று ஸலப்கள் கூறியது போன்று , அந்தப் பண்புகளின் மஸ்னா - அர்த்தத்தையும் அல்லாஹ் மட்டுமே தெரிந்தவன் என்று சில கூட்டங்கள் கூறி தப்வீதின் வழிமுறையைக் கையாள்கிறார்கள். 


தப்வீத் என்றால் வார்த்தையில் வெளிப்படையாக வந்திருக்கும் அர்த்தத்தையும் அல்லாஹ்தான் அறிந்தவன் எனக் கூறி அதனை நாம் விளங்க முடியாதென்றும் அவ்வாறு விளங்குவது சாத்தியமற்றதென்றும் கூறுவதுதான் தப்வீத் செய்வதென்பதன் பொருளாகும். 


இந்தக் கொள்கையைச் சுமந்தவர்கள்தான் முபவ்விதா என்பவர்கள். இந்தக் கொள்கையை இமாம் அப்துர்ரஹ்மான் பின் நாஸிர் அஸ்ஸஃதி ரஹீமஹுல்லாஹ் அவர்கள் மோசமானதொரு தவறென்றும் பிழையென்றும் சுட்டிக் காட்டுகிறார். அவ்வாறு கூறுவதற்குக் காரணம் என்னவென்றால் ஸலபுஸ்ஸாலிஹீன்கள் அல்லாஹ்வின் அனைத்துப் பண்புகளையும் புரிந்தவர்களாக இருந்தார்கள். 


அவர்களின் வழிமுறையில் நாமும் கூறுகிறோம். அதாவது தகீப் என்ற விடயத்தில் தான் நாம் அல்லாஹ்வின் பண்புகளின் தன்மைகள் அல்லாஹ்வுக்கு மட்டுமே தெரிந்ததென்று கூறுகிறோமே தவிர அல்லாஹ்வின் பெயர்களுக்கும் பண்புகளுக்கும் வெளிப்படையாக உள்ள கருத்தை அல்லது அர்த்தத்தை விளங்காமல் இருப்பதற்கு அதனை அல்லாஹ் எமக்குத் தெரியாத மொழியில் கூறவில்லை. எனவே அதன் அர்த்தத்தை நாம் விளங்கிக்கொள்ள முடியும் என்பதுதான் ஸலபுஸ்ஸாலிஹீன்களின் உறுதியான நிலைப்பாடாகும். 


மேலும் இமாம் நாஸிர் அஸ்ஸஃதி ரஹிமஹுல்லாஹ் அத்தகீப் அத்தம்ஸீல் ஆகியவற்றுக்கிடையிலான வேறுபாட்டையும் அத்தஃதீல் அத்தஹ்ரீப் ஆகியவற்றுக்கிடையிலான வேறுபாட்டையும் எடுத்துக் காட்டினார். 


தஹ்ரீப் என்பது அல்லாஹ்வின் பெயர் பண்பு இன்னதுதானென்று ஏற்றுக்கொண்ட பின் அந்தப் பெயர் பண்புக்கு மாற்றுக் கருத்தையும் விளக்கத்தையும் கொடுத்து அதன் உண்மையான பொருளிலிருந்து வேரொரு பொருளுக்கு திசை திருப்பிவிடுவதாகும். 


தஃதீல் என்பது அல்லாஹ்வின் பெயர்களையும் பண்புகளையும் மறுத்துவிடுவதாகும். கல்வியின் அடிப்படையில் கூறுவதென்றால் - குல்லு தஹ்ரீபின் தஃதீல் - அனைத்து மாற்றுக் கருத்தும் மறுக்கும் போக்காகும். அதாவது நேரடியே மறுக்காமல் மாற்றுக் கருத்துக் கொடுத்து மறுப்பதாகும். 

தகீப் தம்ஸீல் விடயத்தில் தம்ஸீல் என்றால் அல்லாஹ்வின் பெயர் பண்புகளை படைப்பினங்களின் பண்போடு ஒப்பாக எடுத்து உதாரணம் காட்டுவதாகும். 


தகீப் என்பது அல்லாஹ்வின் பெயர் பண்பை ஏற்றுக் கொண்ட பின் அது எப்படி அல்லாஹ்வுக்கு இருக்க முடியுமென்று கேள்வியைப் போட்டு அதற்கென்று ஒரு விளக்கத்தைக் கொடுப்பதாகும். இங்கு இப்படியான கேள்விகள் உருவாகக் காரணம் படைப்புகளுடன் ஒப்பாக்குவதாகும். அல்லாஹ்வுக்கு இப்படியொரு பண்பு எவ்வாறு அமைந்திருக்க முடியுமென்று கேள்வியைக் கேட்பதன் காரணம் அல்லாஹ்வின் பண்பை படைப்புகளின் பண்புகளோடு ஒப்புநோக்கிப் பார்த்ததுதான். 


ஆனால் இதற்கு மாற்றமாக அல்லாஹ்வின் பெயர்களும் பண்புகளும் அவனுக்கு மட்டுமே தனித்துவமானவையென்று நம்பிக்கை கொள்ளும் பொழுது அந்த விடயத்தில் கேள்விக்கே இடமில்லாமல் போய்விடுகிறது. 


அல்லாஹ்வின் பெயர்களும் பண்புகளும் அவனுக்கு மட்டுமே தனித்துவமானவையென்று யாரெல்லாம் விளங்காமல் இருப்பார்களோ, அப்படியானவர்கள் குர்ஆனிலோ ஹதீஸிலோ அல்லாஹ்வின் எந்தவொரு பெயரையோ பண்பையோ கண்டுவிட்டால் அவர்கள் முதலில் எப்படியென்று கேள்வி கேட்கும் தகீபின் நோயில்தான் மாட்டிக்கொள்வார்கள். 


அவர்கள் ஏற்கனவே அல்லாஹ்வின் பண்புக்கென்று தங்களுக்கென ஒரு விளக்கத்தை அமைத்துக் கொண்டதனால்தான் , அவர்களுக்கு அப்படியொரு கேள்வி உருவாகிறது. படைப்புகளின் பண்புகளை அல்லாஹ்வின் பண்புகளோடு ஒப்பாகக் கருதியதினால்தான் குர்ஆனிலோ ஹதீஸிலோ அல்லாஹ்வின் கை என்று வந்திருந்தால் எப்படி அல்லாஹ்வுக்குக் கை இருக்க முடியுமென்று கேள்வி கேட்கிரான் . 


இதன் காரணம் அவர்கள் அல்லாஹ்வின் கையையும் படைப்புகளின் கையையும் தம்ஸீலின் அடிப்படையில் ஒப்பிட்டுப் பார்த்ததுதான். இவர்கள் தகீபின் அடிப்படையில் கேள்வி கேட்டதால் இவர்களை அது தம்ஸீலின் பால் திசை திருப்புகிறது. 


எனவே அதற்கு தஹ்ரீபைக் கையாண்டு ஒரு மாற்றுக் கருத்தைக் கொடுக்க வேண்டியேற்படுகிறது. இவ்வாறு இறுதியாக தஹ்ரீப் இவர்களை தஃதீல் என்னும் மறுக்கும் நிலைக்குக் கொண்டு வந்து சேர்த்து விடுகிறது . 


முடிவில் இவர்கள் அல்லாஹ்வின் பண்புகளை மறுத்து விடுகிறார்கள். மொத்தமாகவே மறுத்து விடுகிறார்கள். இவர்கள் தம்ஸீலின் நோயினால் தகீபைக் கையாண்டார்கள். தகீப் செய்வதை வழிமுறையாக எடுத்ததால் அதிலிருந்து தப்புவதற்கு தஹ்ரீபைக் கையாண்டார்கள். இறுதியில் இவையனைத்தினதும் இறுதி எல்லை தஃதீலில் வந்து முடிந்தது. இந்நிலைக்கு அடிப்படைக் காரணம் 

அவனைப் போன்று எதுவுமில்லை. 

அவன் செவியேற்கிறவன்..பார்க்கிறவன் (சூறா அஷ் ஷுறா : 11)


என்ற வசனத்தை அவர்கள் சரியாக விளங்காததுதான். எனவே அவர்கள் அல்லாஹ்வின் அஸ்மா வ ஸிபாத் விடயத்தில் எல்லா பித்அத்வாதிகளிடமும் உள்ள நோயில் மாட்டிக் கொண்டார்கள். 

இவர்கள் இந்த வசனத்தை உறுதியாக விளங்கவில்லை. அவ்வாறு உறுதியாக விளங்காததினால் வழிகெட்ட வழிமுறைகளைக் கையாண்டு இறுதியில் அல்லாஹ்வின் பெயர்களும் பண்புகளும் தங்கள் விளக்கத்துக்கு முரணாக அமைந்தவுடன் அவைகளை ஏற்றுக் கொள்ளாமல் உடனே தட்டி விடுகிறார்கள். இதுவே அஸ்மா வ ஸிபாத்தில் அனைத்து பித்அத்வாதிகளினதும் நிலையாகும். 

எனவே நாம் அல்லாஹ்வின் வேதத்திலும் ரசூலுல்லாஹ்வின் சுன்னாவிலும் வந்திருக்கும் அல்லாஹ்வின் எந்தவொரு பெயரையோ பண்பையோ- அவனைப் போன்று எதுவுமில்லை. அவன் செவியேற்கிறவன்..பார்க்கிறவன்- என்ற வசனத்தின் விளக்கத்தைத் தாண்டி விளங்கக் கூடாது. 


அந்த அடிப்படையில் நாம் விளங்க முயற்சி செய்தால் இன்ஷா அல்லாஹ் வழிகெட்ட அடிப்படைகளான தம்ஸீல் தகீப் தஹ்ரீப் தஃதீல் ஆகிய நோய்களிலிருந்து தப்பி சரியான வழிமுறையில் அல்லாஹ்வை ஈமான் கொண்டவர்களாக ஆகுவதற்கு சாத்தியமானவர்களாக இருக்க முடியும்.