[மஜ்மூ அதுத் தவ்ஹீத் நூலும் அதன் ஆரம்ப பகுதி விளக்கமும்]

மஜ்மூ அதுத் தவ்ஹீத் நூலும் அதன் ஆரம்ப பகுதி விளக்கமும் 

الحمد لله رب العالمين والصلاة والسلام على من لا نبي بعده 
أما بعد 


இமாம் இப்னு தைமிய்யா (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் தங்களுடைய  காலப்பகுதியில் தவ்ஹீதில் அனைத்து பகுதிகளையும் மக்களுக்கு தெளிவுபடுத்தியுள்ளார்கள். அவர்களுடைய ஏராளமான நூல்களை நோக்கினால் தவ்ஹீதினைப் பற்றியதாகவே இருக்கும். 


அதேபோன்று, இமாம் முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப் அந்நஜிதி (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் தவ்ஹீதினை நிலை நாட்டுவதற்காகவும், ஷிர்க்கை இல்லாதொழிப்பதற்காகவும் போராடியுள்ளார்கள். 


இதனாலேயே தற்போதுள்ள சூபியாக்களும், தரிக்காகளும் இமாம் இப்னு தைமிய்யா (ரஹிமஹுல்லாஹ்) அவர்களுடைய பெயரையோ அல்லது இமாம் முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப் அந்நஜிதி (ரஹிமஹுல்லாஹ்) அவர்களுடைய பெயரையோ செவியுற்றால் அவர்களுக்கு வேம்பாக கசக்கிறது . 


ஏனைய இமாம்களை விட இவ்விருவரையும் மிக எதிரித்தனமாக நோக்குகின்றனர். ஏனென்றால் இவ்விரு இமாம்கள் தவ்ஹீத்தினை பரப்புவதற்கு சமூகத்தில் கடினமாகப் போராடிய இமாம்களாவர்கள். 


எனவேதான் யாரெல்லாம் தவ்ஹீதின் பெயரை உச்சரிக்கின்றார்களோ அவர்களைப் பார்த்து இந்த சமூகம் “ வஹ்ஹாபி " என முத்திரையிட்டுள்ளார்கள். ஏனென்றால் இமாம் முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப் அந்நஜிதி (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் தவ்ஹீதிற்காக போராடிய ஒரு முக்கியமான அயிம்மாக்களில் ஒருவராவார். 

ஷெய்ஹுல் இஸ்லாம் இமாம் முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப் அன்நஜிதி (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் மஜ்மூஅதுத் தவ்ஹீதின் ஆரம்பமாக  கூறுகிறார்கள்: 


بسم الله الرحمن الرحيم 


அகிலத்தார் அனைவருக்கும் அருள் புரிபவனும் ஆஹிரத்தில் மூஃமின்களுக்கு மட்டும் அன்பு செலுத்துவபனுமாகிய அல்லாஹ்வின் பெயரால் ஆரம்பிக்கிறேன். 

அவனைக்கொண்டே நான் உதவி தேடுகிறேன், அல்லாஹ்வுக்கே எல்லாப்புகழும், அவனே போதுமானவனாக இருக்கின்றான், அவன் தேர்ந்தெடுத்த அடியார்களின் மீது ஸலாம் உண்டாவதாக.  


(அல்லாஹு சுபஹானஹுத்தாஆலா உங்களுக்கு நேர்வழி காட்டட்டும் ).  

அறிந்து கொள்ளுங்கள், அல்லாஹு சுபஹானத்தாஆலா ஏன் எங்களைப் படைத்துள்ளான் என்ற கேள்விக்கு “சூரத்துல் ஸாரியாத்திலே”: விடையளிக்கிறான் 


وَمَا خَلَقْتُ الجِنَّ وَالإِنسَ إِلاَّ لِيَعْبُدُونِ 


என்னை வணங்குவதற்காகவே அன்றி மனித இனத்தையும் ஜின் இனத்தையும் படைக்கவில்லை. (ஸாரியாத - 51:56) 

நாங்கள் அவனுக்கு அடியானாக வாழ்வதற்கும் அவனது அடியான் தன்மையில் இருந்து எங்களை எவையெல்லாம் அவனுக்கு இணைவைக்க இட்டுச் செல்கின்றதோ அவற்றில் இருந்து ஒதுங்க வேண்டுமென்பதற்காகவே படைத்துள்ளான். 

“ இபாதத் ” - வணக்கம் என்றால் அதுவே தவ்ஹீத் ஆகும். 


நபிமார்களுக்கும் அவர்களுடைய சமூகத்திற்கும் மத்தியில் காணப்பட்ட போராட்டம் “தவ்ஹீத் ” ஏகத்துவம் என்பதைப் பற்றியேயாகும். 

நாங்கள் ஒவ்வொரு சமூகத்திற்கும் ரசூல்மார்களை அனுப்பினோம் ஏனென்றால் நீங்கள் அல்லாஹ்வை வணங்கி அவனை ஏகத்துவப்படுத்துவதற்கும், அவனுடைய ஏகத்துவத்திற்கு விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய தாகூத்களை விட்டும் அதாவது ஷிர்க்கை விட்டும் நீங்கள் ஒதுங்க வேண்டும் என்பதற்கும் ஆகும்.