கொள்கையின் உண்மைகளும் மனிதனின் தன்மைகளும்


இந்த உரையில் நான் முன் வைத்து கொள்வது, கொள்கையென்பதன் உண்மையான நிலைபாடு என்ன என்பதையும் அதனோடு மனிதன் நடந்து கொள்ளும் அவனது தன்மை பற்றியும் எனது சமூகத்திற்கு அடிப்படை விஷயங்களை முன் வைக்க ஆசைப்படுகிறேன்.


ஸலஃபுஸாலிஹீன்களின் கொள்கையை நாம் தெளிவாக விளங்க வேண்டும் என்பதும் இந்த சமூகத்தில் ஸலஃபுஸாலிஹீன்களின் உண்மையான கருத்துகளும் அதன் சிறப்பான பாதையும் மக்களால் சிறப்பாக விளங்கப்பட வேண்டும் என்பது இந்த உரையின் நோக்கம்.
அல்லாஹ்வின் அருளால் இன்று தமிழ்ப்பேசும் மக்களிடத்தில் ஸலஃபுஸாலிஹீன்களின் கொள்கையும் பாதையும் பலரால் பின்பற்ற படுவதாகவும் அதனை விளங்குவதற்கு பலர் முயற்சி செய்வதையும் காணமுடிகிறது.


இன்னும் பல மக்கள் ஸலஃபுஸாலிஹீனின் கொள்கையின் பால் ஆசை வைத்த பின்னும் அதனை நேசித்த பின்னும் அதனை பின்பற்ற வேண்டும் என்று போராடிய பின்னும், அதன் அடிப்படைகளை விளங்காமல் அந்த பாதையின் நிபந்தனைகளை என்னவென்று புரியாமல் ஸலஃபுஸாலிஹீன்களின் பெயரிலேயே பலர் வழிகேடுகளிலும் பித் அத்களிலும் சிக்கி கொண்டிருப்பதை நாம் காண்கிறோம்.


இவ்வாறான பித்அத்களையும் வழிகேடுகளையும் எமது உள்ளங்களிலிருந்து அகற்றி உள்ளங்களை தூய்மையாக ஆக்கி கொள்ள வேண்டும். இந்த அசத்தியங்களை எமது சமூகத்திலிருந்து கழற்றி தூர வீசப்பட வேண்டும். இதன் காரணமாகவே கொள்கையின் உண்மைகளை நமது சமூகத்திற்கு தெளிவுபடுத்தும் நோக்கத்தில் அதனை இந்த உரையின் தலைப்பாக வைத்தேன்.


கொள்கையெனும்போது முஸ்லிமான ஒருவனுக்கு எப்படி ஒரு கொள்கை இருக்கிறதோ அதே போன்று இஸ்லாத்தை எதிர்ப்பவனுக்கும் ஒரு கொள்கை இருக்கின்றது என்பதை நாம் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.


எந்த விஷயத்தை அவன் தெளிவு பெறுவதற்கான விளக்கமாகவும் அவனது வாழ்க்கையின் ஒரு அடிப்படையாகவும் உருவாக்கி விட்டானோ அதுவே அவனுக்கு கொள்கையாக மாறிவிடுகிறது. அதே போன்று முஸ்லிம்களுக்கு அல்லாஹ் த’லா கொள்கையாக தந்திருக்கும் அடிப்படை விஷயம் என்னவென்றால் ஷஹாத்து கலிமா எனும்                                                    

”வணக்கத்திற்கு தகுதியானவன் அல்லாஹ்வை தவிர வேறு யாரும் இல்லை,இன்னும் முஹம்மது நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அல்லாஹ்வின் தூதராவார். ”


இதுவே முஸ்லிம்களின் அடிப்படை கொள்கையாகும் இந்த கொள்கையை பரப்புவதும் இதனை விளக்குவதும் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் வாழ்வின் அனைத்து விஷயங்களிலும் கருவாக இருந்தது. 


அன்னாரின் எந்த ஒரு அடிப்படையான நடவடிக்கையையும் கவனிக்கையில் அவை அனைத்தும் நமக்கு காட்டுவது வணக்கத்திற்கு தகுதியானவன் அல்லாஹ்வை தவிர வேறு யாரும் இல்லை என்பதும் பின்பற்றுவதற்கு நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் தவிர வேறு யாருக்கும் தகுதியில்லை எனும் அடிப்படையாகும்.


இதனையே நாம் கொள்கையென்று கூறுகிறோம்.


இன்னும் அரபியில் இஃதிகாத் அல்லது அகீதா என்று சொல்கிறோம்.


வரலாற்றை நாம் கவனிக்கையில் உலமாவுல் முஸ்லிமீன் (முஸ்லிம்களின் அறிஞர்கள்) ஸஹாபாக்களின் காலம் தொடங்கி இன்று வரை இந்த கொள்கையின் ஒவ்வொரு விஷயத்தையும் ஆழமாக விளக்கம் காட்டியே சென்று இருக்கிறார்கள்.


கொள்கை விஷயத்தில் எந்த ஒரு அம்சமாயினும் சிறிதேனும் தவறுகள் வந்திடாமல் இருக்க வேண்டும் என்பதும், அல்லாஹ்வை வணங்கும் விஷயத்தில் மனிதன் தூய்மையாக விளங்க வேண்டும், என்பதும் அதனுடைய விளக்கங்களில் புதிய விஷயங்கள் கலந்து விடாமல் இருக்க வேண்டும் என்பதுமே அய்மதுல் முஸ்லிமீன்களான(இஸ்லாமிய அறிஞர்கள்) இன்னும் ஸஹாபாக்களை பின் தொடர்ந்து வந்த தாபிஈன்கள் மற்றும் தபஉ தாபிஈன்கள், அவர்களின் வழிமுறையில் இன்று இஸ்லாத்தை வளர்க்க வேண்டும் என்று ஆர்வமாக இருக்கும் உலமாக்கள் போன்ற அனைவருடைய போராட்டமாக இருக்கிறது. 


அந்த போராட்டத்தின் அடிப்படையான கொள்கை ” வணக்கத்திற்கு தகுதியானவன் அல்லாஹ்வை தவிர வேறு யாரும் இல்லை”.


இந்த கொள்கையின் உண்மையான தன்மைகள் பற்றி அல்லாஹூ தஅலா குர் ஆனிலே மனிதர்களுக்கு எடுத்து காட்டுகிறான்.


சூரா இப்ராஹிம் வசனம் 24,25 


”கலிமத்துத் தய்யிபாவிற்கு அல்லாஹ் எவ்வாறு உவமை கூறுகிறான் என்பதை கவனிக்கவில்லையா? அது ஒரு நல்ல மரத்தைப் போன்றதாகும். 


அதன் வேர் பூமியில் ஆழமாக பதிந்து இருக்கிறது. அதன் கிளைகள் வானளவில் உயர்ந்து நிற்கின்றன,எந்நேரமும் அம்மரம் தன் இறைவனின் ஆணைக்கேற்ப கனிகளை வழங்கிக் கொண்டிருக்கிறது. மக்கள் படிப்பினை பெற வேண்டும் என்பதற்காகவே அல்லாஹ் அவர்களுக்கு இதனை உவமையாக கூறுகின்றான்”.


இந்த வசனத்தில் கொள்கையின் உண்மையை கூறிவிட்டு அதை தொடரும் அடுத்த வசனத்தில் இந்த கலிமத்துத் தய்யிபாவிற்கு எதிரான ஏனைய அனைத்தையும் பற்றி அல்லாஹ் இவ்வாறு கூறுகிறான்.


“கெட்ட வார்த்தைக்கு உவமை ஒன்றுக்கும் உதவாத ஒரு கெட்ட மரத்தை போன்றதாகும். அந்த மரம் பூமியின் மேல் மட்டத்திலிருந்து பிடுங்கி எறியப் படுகின்றது. அதற்கு எவ்வித நிலையான தன்மையும் கிடையாது. நம்பிக்கை கொண்டோருக்கு அல்லாஹ் ஒர் வலுவான வாக்கின் அடிப்படையில் இம்மையிலும் மறுமையிலும் உறுதிப்பாட்டை அருளுகின்றான்.”  சூரா இப்ராஹிம் 14: 24,25


எனவே எதை நாங்கள் கொள்கையென்று ஏற்கிறோமோ, அதைத்தான் நாம் கலிமத்துத் தய்யிபா என்று கூறுகிறோம். சிறப்பான வார்த்தை “வணக்கத்திற்கு தகுதியானவன் அல்லாஹ்வை தவிர வேறு யாரும் இல்லை,இன்னும் முஹம்மது ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அல்லாஹ்வின் தூதர் என நான் சாட்சி கூறுகிறேன்” என்பதாகும்.

        

முஹம்மது(ஸல்லல்லாஹு வ அலைஹிவ ஸல்லம்) அவர்கள் அல்லாஹ்வின் தூதரென நான் சாட்சி கூறுகிறேன் என்பதாகும்,

முஹம்மது (ஸல்லல்லாஹு அலைகி வஸல்லம்) அவர்கள் இந்த பூமிக்கு ஒரு நபியாக வந்தபோது

         

இந்த பூமியில் நடக்கின்ற அநியாயங்களை கண்டார், மனிதன் செய்கின்றஅநியாயங்கள், விபச்சாரங்கள்,சொத்துகளை அபகரிக்கும் களவுகள், கொலைகள், போன்ற அனைத்து அக்கிரமங்களையும் கண் முன்னால் கண்ட போது அதை அனைத்தையும் சீர்திருத்துவற்கு அவர் ஒரேயோரு வழிமுறையையே கையாண்டார்கள், அன்னார் கையாண்ட ஒரே வழிமுறை ”வணக்கத்திற்கு தகுதியானவன் அல்லாஹ்வை தவிர வேருயாரும் இல்லை”   எனும் அடிப்படையான கொள்கையை கூறியதாகும்,


இந்த அடிப்படையே அந்த மனிதனின் பழக்கத்தை மாற்றுவதற்கும் உயிர்களும் ஜாஹிலிய்யாஹ் எனும் அறியாமையின் காலம் என அழைக்கப்பட்டிருக்க அதில் ஒழுக்கச் சீர்கேடுகளும் குழப்பங்களும் அநியாயங்களும் நிறைந்த்திருந்த போது அந்த மக்களிடம் நபி (ஸல்லல்லாஹு வ அலைஹி வ ஸல்லம்) அவர்கள் ”வணக்கத்திற்குத் தகுதியானவன் அல்லாஹ்வை தவிர வேறு யாறுமில்லை” என்று கூறு உனது வெற்றியை நீ பெற்றுகொள்வாய்! என்பதுதான் முதலில் கூறிய விஷயமாக இருந்தது. 


காரணம் என்னவென்றால் ஒரு மனிதன் இருந்தக்கொள்கையில் வளர்ந்து விட்டால் அவன் அதில் உறுதியாக இருப்பான் அவனது உறுதி ஒரு நல்ல மரத்தின் வேர்களைப் போன்று உறுதியாக இறுக்கும்,இந்த உறுதிப்பாட்டையே அல்லாஹ் மேற்கண்ட குர் ஆன் வசனத்தில் உவமையாகக் காட்டுகின்றான்.    


காற்றுக்கும் மழைக்கும் அந்த மரம் சாய்ந்து விடாது, அந்த மரம் உறுதியாக நிற்பது போன்று அவனுடைய கொள்கையும் உறுதியாக இறுக்கும் இன்னும் அந்த மரத்தின் கிளைகள் வானளவு உயந்ததாக இறுக்கும் 


அதாவது கொள்கையில் உண்மையானவனாகவும் ஒருவன் இருப்பானாயின் அவன் அதிலே உறுதியாக இருப்பது மட்டுமின்றி அவனிடமிருக்கும் பயன்மிக்க விஷயங்கள் அவனோடு மட்டும் நின்று விடாமல் பல பக்கங்களிலும் கிளைகளாக பரந்து பல பக்கங்களிலும் பயன் தருவதாக இறுக்கும்,இந்தத் தன்மைகளிள் அடிப்படைகளே கொள்கையின் உண்மைகளாகும்.


இந்த அடிப்படையில் நபி (ஸல்லல்லாஹு வ அலைஹிவ ஸல்லம்) அவர்கள் அன்றைய அறியாமைக் கால பூமியை மாற்றினார்கள் அதாவது அன்னாரின் போராட்டம் அல்லாஹ்வை மட்டுமே ஏகத்துவப்படுத்தி வணங்க வேண்டும் என்பதாகவே இருந்தது. அன்னார் இதன் விளக்கத்தை மக்களுக்கு விளக்கி காட்டினார்கள்.


அன்று அல்லாஹ்வை தனிப்பட்டதாக வணங்கும் இக்கொள்கை எந்தெந்த உள்ளங்களில் உறுதியாக பதிந்ததோ அந்த உள்ளங்களில்லெல்லாம் அவர்களின் மரணம் வரை அல்லாஹ்வுடைய அனைத்து சட்டங்களையும் பின்பற்றி நடந்தார்கள். அதிலே ஒரு போதும் கவனக் குறைவாக நடந்து கொள்ளவில்லை. இவர்கள் அல்லாஹ் என்பதை தெரிந்தவர்களாக இருந்தாலும் அல்லாஹ்வின் உண்மையான பெயர்களையோ பண்புகளையோ அடிபடையான சட்டங்களைப்யோ தெரிந்தவர்களாக இல்லை.


இதர்காகவே அஇம்மது முஸ்லிமீன் நேர்வழியையும் வழிகேட்டையும் பிரித்து காட்டும் விஷயத்தில் ஒரு முக்கிய அடிப்படையையும் எடுத்து காட்டுகிறர்கள், 


அதாவது யாரெல்லாம் அல்லாஹ்வின் (ஈமான்), நம்பிக்கை விஷயத்திலும் அவனை வணங்கும் விஷத்திலும் அல்லது அவன் இறகக்கியிருக்கும் அல் குர்ஆன் வசனங்களிலும் அவனது தூதர் (ஸல்லல்லாஹு அலைகி வ ஸல்லம்)அவர்கள் கூறியிருக்கும் ஹதீஸ்களில் முரண்பாடுகளைக் காணுகிறார்களென்றாள் அவர்கள் நேர்வழியைப் பின்பற்றுபவர்கள் என்று கூறுவதற்கு அவர்கள் எந்தத் தகுதியையும் பெற்றவர்களல்ல. 


இது அஇம்மது முஸ்லிமீனின் முடிவாகும்,நபி (ஸல்லல்லாஹு வ அலைஹிவ ஸல்லம்)அவர்கள் இந்த உம்மதின் எதிர்கால நிலைப்பாட்டை நாம் அறிந்து கொள்வதற்கு அன்னாரின் ஹதீஸின் வழியாக எமக்கு வழிகாட்டியிருக்கிறார்கள்.


நபி (ஸல்லல்லாஹு அலைகி வ ஸல்லம்)அவர்கள் கூறினார்கள்

”என்னுடைய உம்மத் 73 பிரிவாக பிரியும்-அதில் எல்லாம் நரகம் செல்லும் ஒன்றை தவிர”


இவ்விஷயதில் நபி (ஸல்லல்லாஹு அலைகி வ ஸல்லம்) அவர்கள் கூறுவது இந்த உம்மதுல் முஸ்லிமீன் 72 கூட்டமாக பிரிவதுடன் அவர்கள் அனைவரும் நரகம் போய்ச் செர்வார்கள், இன்னும் உம்மதின் ஒரே ஒரு கூட்டம் மட்டுமே சுவர்க்கதில் நுழைவதற்கு தகுதியுள்ளவர்களாக இறுப்பார்கள். 


இந்த விஷயத்தை நபி (ஸல்லல்லாஹு அலைகி வஸல்லம்)அவர்கள் கூறியபோது இதனைகேட்ட ஸஹாபக்கள் அல்லாஹ்வின் தூதரே! சுவர்க்கம் செல்லும் அந்த ஒரு கூட்டம் யாரெனக் கேட்டார்கள், அவர்களின் கேள்விக்கு பதிலாகவும் சுவர்க்கம் செல்வதற்குமான நிபந்தனையாகவும் நபி (ஸல்லல்லாஹு அலைகி வஸல்லம்)அவர்கள் கூறியது, 


யார் இன்று நானும் எனது தோழர்களும் இறுக்கும் நிலைப்பாட்டில் இறுக்கிறார்களோ அவர்கள் தான் அந்த ஒரு கூட்டம்.


இதன் அடிபடையில் (அஇம்மது முஸ்லிமீன்) முஸ்லிம் இமாம்கள் நேர்வழியில் இருப்பவர்களையும் நேர்வழியை தவிர்ந்து கொண்டவர்களையும் அஹ்லுஸ் ஸூன்னத் வல் ஜமாஅத் என்னும் அஹ்லுல் பித்அத் என்றும் பிரித்து காட்டியிருக்கிறார்கள். 


பித்அத்வாதிகளுக்கும் சுன்னத் வல் ஜமாத்தைச் சேர்ந்தவர்களுக்கும் இடையில் உள்ள வேறுப்பாட்டை அடையாளம் காட்டுவதற்கான முக்கிய அம்சம் என்னவென்றால், ரஸுல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் ஸஹாபாக்களும் மார்க்க விஷயத்தில் அதிலும் முக்கியமாக அல்லாஹ்வை ஈமான் கொள்ளும் விஷயத்தில் எவ்வாறு ஈமான் கொண்டார்களோ அதே முறையில் யாரெல்லாம் ஈமான் பெற்று கொள்கிறார்களோ அவர்கள் தான் அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாத் ஆகும். இவர்கள் தான் ஸுன்னத் வல் ஜமாத்தின் பாதையை பின்பற்றுபவர்கள். 


மாறாக யாரெல்லாம் அல்லாஹ் கூறிய குர் ஆன் வசனங்களிலும், அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் அறிவிப்புகளிலும், இன்னும் அல்லாஹ்வின் பெயர் மற்றும் பண்புகளின் விஷயத்திலும் முரண்பாட்டுடன் நடந்து கொள்கிறார்களோ அவர்களுக்கு பித் அத்வாதிகள் என்ற பட்டத்தை உலமாக்கள் கொடுத்து விட்டார்கள். 


பித் அத்வாதிகள் மார்க்கத்தை புதியதொரு போக்கில் நோக்குகிறார்கள். புதியதொரு வழிமுறையில் மார்க்கம் இருக்க வேண்டுமென எதிர்பார்க்கிறார்கள். 


அல்லாஹ் அல்குர் ஆனில் எவ்வாறு கூறினான் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எமக்கு கூறினார்களோ அந்த விஷயத்திலும் அதே போன்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அல்லாஹ்வின் பெயர்களையும் பண்புகளையும் பற்றி எந்த முறையில் எமக்கு கூறியிருக்கிறார்களோ அந்த விஷயத்தில் ஒரு சமூகம் முரண்படுகின்றது என்றால் அந்த சமூகம் அல்லாஹ்வை நம்பும் விஷயத்தில் புதியதொரு முறையை கையாண்டுவிட்டது. 


அந்த சமூகம் ரஸுல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியிருக்கும் விஷயங்களை ஏற்றுக் கொள்வதற்குத் தயாரில்லை. குர் ஆன் எவ்வாறு இறக்கப்பட்டதோ அவ்வாறே ஏற்றுக் கொள்கிவதற்கு தயாரில்லை. 


இவ்வாறு இருப்பவர்கள், அவர்களுடைய விளக்கத்தை புகுத்தும் வரை அல்லாஹ் என்று சொல்வதில் அவர்களுக்குச் சந்தேகம் இருக்கிறது. அல்லாஹ்வின் பெயர் மற்றும் பண்பு விஷயத்தில் தங்களின் விளக்கத்தை அதற்கு கொடுக்கும் வரை இதுதான் என் இரட்சகன் எனக் கூறுவதில் அவர்கள் தடுமாற்றத்துடனே இருக்கிறார்கள். தங்களுடைய விளக்கத்தையும் கருத்துகளையும் கொடுக்கும் வரையில் கொள்கையில் உறுதியிருப்பதே பித்அத்வாதிகளின் பாதையாக இருக்கிறது. 


எனவே கொள்கையின் உண்மையை அறிந்திருப்பது போன்று அந்த உண்மைக்கு முரணாக இருப்பவைகளையும் நாம் அறிந்து கொள்ள வேண்டும்.


கொள்கையின் உண்மை என்னவென்றால், அல்லாஹ் இறக்கியிருக்கும் குர் ஆனையும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் காட்டித் தந்திருக்கும் நபிவழிகளையும் முழுமையாக நம்புவது. அதில் எந்த விஷயத்திலும் குழப்பமில்லாமல் இருக்க வேண்டும். 


அதில் அடிப்படையான விஷயம் வணக்கத்துக்கு தகுதியானவன் என்றும் எனது இரட்சகனென்றும் நாம் யாரை ஏற்றுக் கொண்டோமோ அந்த ரப்பைப் பற்றி எவற்றையெல்லாம் அல் குர் ஆன் கூறியிருக்கிறதோ இன்னும் எவற்றையெல்லாம் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் அறிவிப்புகளில் கூறப்பட்டுயிருக்கிறதோ அவை அனைத்தையும் முழுமையாக நம்ப வேண்டும்.


இதிலே நாம் முரணான விளக்கங்களையும் மேலதிக கருத்துகளையும் புகுத்திவிட்டோம் என்றால் எமது இந்த நிலை கூறுவது என்னவென்றால், அல்லாஹ் அவனைப் பற்றி பூரணமாக எமக்குக் கூறவில்லை என்று, நாம் கூறுவதாகவே அர்த்தப்படும், அல்லது அவனது வார்த்தையில் அவன் சரியாகக் கூறிவில்லையென்றுதான் அர்த்தப்படும். 


அல்லாஹ் அவனது வார்த்தையை பற்றி கூறும் போது.

அவனுடைய வார்த்தைகள் உண்மையானது. அவனது விளக்கங்கள் சிறப்பானது என்றுதான் கூறுகிறான்.


எனவே, இவ்வாறு அல்லாஹ் கூறிய பின்னும் அவனுடைய வார்த்தைக்கு விளக்கமென்ற பெயரில் எனது கருத்துகளையும் புகுத்திக் கொள்ள வேண்டுமென்று நினைப்பது உண்மையாக இருக்கும் அல்லாஹ்வின் வார்த்தையைப் பொய்பிக்கும் செயலாகும். 


அல்லாஹ்வின் வார்த்தை உண்மையானது என்றும் அவனது விளக்கம் சிறப்பானது என்றும் நாம் உறுதியாக நம்பினால் அதற்கும் மேல் எந்த சிறப்பையும் நாம் தேடி செல்ல மாட்டோம். அவனுடைய மார்க்கத்துக்கும் அவனுக்கும் மேலாக நாம் விளக்கம் கொடுப்பதில் முந்திக் கொள்ள மாட்டோம். 


எனவே கொள்கையின் அடிப்படையில் முதலாவது அம்சம் நாம், இரட்சகனாக ஏற்றுக் கொண்ட அல்லாஹ்வின் விஷயத்தில் உறுதியுடன் இருக்க வேண்டும்.


ரஸுல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் 23 வருட தாவத்தில் 13 வருட கால தவத் அல்லாஹ்வை தவிர வேறு யாரும் வணக்கத்திற்கு தகுதி இல்லை என்பதாக இருந்தது. 


காரணம் எல்லாவற்றுக்கும் முதலில் மக்களின் உள்ளங்களில் அல்லாஹ்வை மட்டுமே தனித்துவப்படுத்தி வணங்க வேண்டுமென்ற விஷயம் உறுதியாக பதியப் பட வேண்டும். அந்த மக்கள் தங்களின் வாழ்வில் மார்க்கம் என்ற விஷயத்தில் அல்லாஹ்வை தவிர வேறு யாருக்கும் இடம் இல்லை என்பதை அறிந்தவர்களாக வாழ வேண்டும். 


சட்டமென்ற விஷயத்தில் இரட்சகனது சட்டத்திற்கே கீழ்ப்படிய வேண்டும் என்பதை அறிந்து அதற்கு கீழ்ப்படிய வேண்டும். மாறாக அவருக்கும் இவருக்கும் கீழ்ப்படியும் நிலை வந்துவிட்டால் அந்த மக்களின் உள்ளங்களில் அல்லாஹ்வை ஏகத்துவமாய் ஏற்றுக் கொள்வதில் சந்தேகத்திற்கிடமான நிலை உருவாகி விடும். 


எனவே தான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தனது தவத்தின் முதல் பத்து வருடங்கள் கொள்கையின் அடிப்படை உண்மைகள் மக்களின் மனதில் உறுதியாக பதிய வேண்டுமென போராடினார்கள். 


அன்று அறியாமை கால ஜாஹிய்யஹ் மக்களாக இருந்தவர்கள் சத்தியமான கொள்கை அவர்களது உள்ளங்களில் புகுந்த பின் அவர்களின் நிலை ஆச்சரியமானதொன்றாக மாறிவிட்டது. 


உமர் ரளியல்லாஹூ அன்ஹூ, பிலால் ரளியல்லாஹு அன்ஹூ போன்றவர்களின் நிலை இஸ்லாத்தின் முன்னும் பின்னும் முற்றிலும் வேறுப்பட்டதாக இருந்தது. 


பிலால் ரளியல்லாஹூ அன்ஹூ அவர்கள் ஒர் அடிமையாக சமூகத்திலிருந்து சமூகத்துக்கு விற்கப்படுகின்ற ஒரு பொருளாக இருந்தார். அவருடைய குரலுக்கு செவிமடுப்பதற்கு அன்று யாரும் இருக்கவில்லை. அடிமைகளின் நிலை அன்று இவ்வாறு தான் இருந்தது. இந்நிலையில் அவரது உள்ளத்தில் சத்தியம் நுழைந்தது. 


அல்லாஹ்வை தவிர வணக்கத்திற்கு தகுதியானவன் இல்லை என்பதை அவர் புரிந்த கொண்டார். இந்த உண்மை அவரது உள்ளத்தில் உறுதியாக பதிந்த பின் அவருக்கு எந்தக் கஷ்டம் வந்த போதிலும் எப்படியானதொரு துன்பம் வந்தபோதிலும் அஹத் – என்ற வார்த்தையை விட்டு கொடுக்க அவர் தயாரில்லை. 


மற்றவர்கள் அவருக்கு எத்தகைய அநியாயத்தையும் வேதனையும் கொடுத்த போதிலும் அவர் தன் நிலையிலிருந்து மாறாமல் உறுதியாக இருந்ததன் காரணம், அவர் கொள்கையின் உண்மையை அறிந்தவராக இருந்தார். 


விற்கப்படும் பொருளாக இருந்த பிலால் ரளியல்லாஹூ அன்ஹூ அவர்கள் இஸ்லாத்தில் இணைந்த பின்னான காலங்களில் எப்படியானதொரு மனிதராக இருந்தாரென்றால், நேர்வழி சென்ற கலீஃபாக்களில் இரண்டாமவரும் அன்று மொரோக்கோவிலிருந்து பாகிஸ்தானின் எல்லை வரையும் ஸ்பெயின் முதல் ஆஃப்ரிக்கா வரையும் பிரதேசத்தை ஒரே நாடாக ஆட்சி செய்தவருமான உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் பிலால் ரளியல்லாஹு அன்ஹூ அவர்களை பார்த்துக் கூறினார்.


“ஏ பிலாலே ! நீங்கள் எங்களுடைய ஒரு தலைவர்.”


எனவே, பிலால் ரளியல்லாஹூ அன்ஹூ அவர்கள் இப்படியானதொரு தகுதியை எப்படிப் பெற்றுக் கொண்டார் ? மக்களிடம் செல்வாக்கினைப் பெற்றும், சிபாரிசுகளைச் சேர்த்தும், சொத்துக்களைச் சம்பாதித்தும் அப்படியானதொரு சிறப்பை அவர் பெறவில்லை. 


மாறாக, அவரிடமிருந்த தகுதி, ஏகத்துவம் என்ற விஷயத்தை அவருடைய உள்ளத்தில் அவர் புரிந்து கொண்டிருந்தார். இதுவே பிலால் ரளியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு அப்படியானதொரு சிறப்பை பெற்று கொடுத்தது. அல்லாஹ்வை தவிர வேறு யாரும் வணங்குவதற்கு தகுதியானவனில்லை என்பதை அவர் அவரது வாழ்வில் உண்மை படுத்தினார். அதற்காக தன் உயிர் போகும் நிலை வந்தாலும் தன் நிலையில் உறுதியாக இருந்தார். 


ஏகத்துவத்தில் விட்டுக் கொடுக்காத ஒரு ஸஹாபி மனித சமூகத்திற்கே ஒரு உதாரண புருஷராக மாறிவிட்டார். பிலால் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் பொறுமைக்கு உதாரணமாகவும் ஒரு தலைவராகவும் மக்களுக்கோர் முன்மாதிரியாகவும் அன்றைய காலத்திற்கு மட்டும் இருக்கவில்லை. இன்னும் இனி வரும் காலங்களிலும் கூட மக்கள் அவரை தங்களுக்கொரு முன்மாதிரியாகவே கருதுவார்கள். 


அதற்கான காரணம் அந்த நபித்தோழர் ஏகத்துவத்தை அவரது உள்ளத்தில் உறுதியாகப் பதிந்திருந்தார். ரஸுலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் காலத்தில் இஸ்லாத்தை தழுவியவர்கள் தாங்கள் அல்லாஹ்வின் தூதரோடு தோழராக இருப்பதால் பெருமையடைவதற்கும் ரஸுலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பொருளையோ சொத்தையோ கண்டதின் காரணத்தினாலோ இஸ்லாத்தில் நுழைவில்லை. 


மாறாக யாரெல்லாம் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களோடு சேர்ந்தார்களோ அவர்கள் போராடுவதற்கும் தியாகம் செய்வதற்கும் சொத்துக்களை இழப்பதற்கும் அல்லாஹ்வுக்காக தங்கள் குடும்பங்களை பிரிந்து வாழ்வதற்கும் அல்லாஹ்வுக்காக தங்களின் இரத்தத்தை சிந்துவதற்கும் தயாராகவே இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார்கள். 


அவ்வாறு இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட ஸஹாபாக்களும் அன்றைய காலத்தில் மட்டுமில்லாமல் வரலாற்றில் இன்றுவரை இஸ்லாத்திற்கு வெற்றியை கொடுத்து கொண்டு இருக்கிறார்கள். இன்றுவரை அவர்களது வார்த்தைகளும் அவர்களின் நடைமுறைகளும் அவர்களது வாழ்க்கைகளும் மார்க்கத்துக்கு மார்க்கத்துக்கு வெற்றியை கொடுத்த வண்ணமிருக்கின்றன.


அது மட்டுமில்லாமல் அவர்கள் நேர்வழிக்கு ஒரு நிபந்தனையாகவே மாறிவிட்டார்கள். ரஸுல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தனது உம்மத்தில் சுவர்க்கம் செல்லும் கூட்டத்தின் நிபந்தனையாக கூறியது – “யார் இன்று நானும் எனது தோழர்களும் இருக்கும் நிலைபாட்டில் இருக்கிறார்களோ அவர்கள் தான்.” (சுவர்க்கம் செல்லும் கூட்டம் ஆகும்). 


எனவே ஸஹாபாக்கள் என்னும் அந்தக் கூட்டத்தின் நிலைபாட்டில் இருப்பது சுவர்க்கம் செல்லும் நிபந்தனையாக மாறிவிட்டது. இந்த ஸஹாபாக்கள் எனப்படுபவர்கள் யாரென்றும் இவர்கள் ஏன் இவ்வாறானதொரு சிறப்பான அந்தஸ்தைப் பெற்றார்களென்றும் அல்லாஹ் ஏழு வானங்களுக்கு மேலிருந்து கூறிய வார்த்தைகள் எமக்குக் காட்டுகின்றன.


“... அவர்களை அல்லாஹ் பொருந்தி கொண்டான். அவர்களும் அல்லாஹ்வை பொருந்தி கொண்டார்கள்.”


இவ்வாறானதொரு உத்தரவாதத்தை அந்த ஸஹாபாக்களுக்கு அல்லாஹ் கொடுப்பதென்றால் இதைவிடவும் சிறப்பானதொரு அந்தஸ்து எதுவாகவும் இருக்க முடியாது. அந்தக் கூட்டத்தின் மேல் அல்லாஹ்வின் திருப்தியை இது காட்டுகிறது. இந்த வசனம் இறங்கிய காலத்தில் மட்டுமில்லாமல் எந்தக் காலத்திலும் ஸஹாபாக்களின் சிறப்பு அவர்களுக்கு உரித்தானதாகவே இருக்கிறது. 


ஏனென்றால் அல்லாஹ் அவர்களின் எதிர்காலத்தையும் தெரிந்தவனாக இருக்கின்றான். இன்னும், அந்த வசனம் சொல்வது போல் அவர்களுடைய உள்ளங்களும் அல்லாஹ்வை பொருந்தி கொண்ட உள்ளங்களாக இருப்பதை அல்லாஹ் எடுத்துக் காட்டுகின்றான். இந்த மார்க்கத்தைப் பின்பற்றுவதில் உறுதியாய் நின்ற சமூகமென்று அல்லாஹ் சாட்சி கூறிவிட்டான். 


அந்த உள்ளங்கள் ஏழு வானத்திலிருந்து இவ்வாறானதொரு சிறப்பான சாட்சியத்தையும் உத்திரவாதத்தையும் பெற்றுக் கொள்ள காரணம் என்ன? காரணம், அவர்கள் அல்லாஹ்வை தனித்துவப் படுத்தில் அவனை ஏகத்துவப்படுத்துவதில் உறுதியான மக்களாக இருந்தார்கள். இந்த ஷஹாதத்திற்கு முந்திக் கொண்ட கூட்டமாக இருந்தார்கள். அதற்கென போராடுபவர்களாகவும் தியாகம் செய்பவர்களாகவும் இருந்தார்கள். 


மாறாக, இரு பக்கம் சாய்பவர்களாகவும் ஒழிந்து மறைந்து சந்தர்ப்பம் பார்ப்பவர்களாகவும் இருக்கவில்லை. சத்தியத்தை சொல்வதற்கும் நடைமுறைப் படுத்துவதற்கும் சத்தியக் குரலை தியாகத்துடனாயினும் எத்தி வைப்பதற்கும் இவர்கள் தயக்கமின்றி முன்வந்தார்கள். 


ரஸுலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எப்போது ஜிஹாதை அறிவிப்பாரோ அப்போதெல்லாம் முன் வரிசையில் நிற்கும் கூட்டமாகவும் ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைப் பாதுகாப்பதற்கு குடும்பங்களையும் சொத்துக்களையும் விட்டு அந்த நபியோடு நின்ற சிறப்பான கூட்டமாக அவர்கள் இருந்தார்கள். 


ஏனென்றால் வணங்கப்படுவதற்குத் தகுதியானவன் அல்லாஹ் மட்டுமே என்ற உண்மையை உணர்ந்து அதன்படி வாழ்வதற்கென்ற முடிவு அவர்களின் உள்ளத்தில் உறுதியாக இருந்தது. இதுவே கொள்கையின் உண்மை நிலையாகும்.


இந்தக் கொள்கை எமது உள்ளத்தில் உண்மையாகவே பதிந்து விட்டிருக்குமாயின் இந்த மார்க்கத்துக்காக நாம் தியாகம் செய்வதில் தயங்க மாட்டோம். இந்த் மார்க்கத்துக்காகப் போராடுவோம். ஆட்கள் குறைந்ததினாலோ, சொத்துக்கள் அழிந்ததினாலோ குடும்பங்கள் அழிந்ததினாலோ எதிர்ப்புகள் வந்ததினாலோ சோதனைகள் வந்ததினாலோ மார்க்கத்திற்கான எமது சேவையில் பின்வாங்கமாட்டோம். அதன் கடமையில் பின் வாங்க மாட்டோம். எமக்கு முடிந்ததை செய்வதற்கு முன்வருபவர்களாக இருப்போம். 


இவ்வாறான நிலையில் நாம் ஒரு ஊரில் வாழும்போது அங்கிருக்கும் ஷிர்க்களையும் குஃப்ர்களையும் பித் அத்களையும் நாம் பார்த்து கொண்டு உணர்வற்று ஒருக்க முடியுமா? அங்கே, அல்லாஹ்வை மட்டுமே வணங்குவதென்று கூறிக் கொண்டு அல்லாஹ்வோடு இணை வைக்கிறான். அல்லாஹ்வின் மார்க்கத்துக்கு முரணாகப் பேசுகிறான். அல்லாஹ்வுடைய மார்க்கத்தை இழிவு படுத்துகின்றான். நபிமொழிகளை கேவலப் படுத்துகின்றான். ஏனைய கொள்கைகளின் வழிமுறைகளை வளர்க்கின்றான். தனக்கு தேவையான கருத்துகளைப் பரப்புகின்றான். நபிமொழிகளை மறுக்கின்றான். இவற்றையெல்லாம் ஏகத்துவத்தோடு வாழ்பவர்களால் பார்த்து கொண்டிருக்க முடியுமா? இவற்றை பொறுத்திருக்க முடியுமா? 


ஒருகாலும் முடியாது. கொள்கைவாதியாக இருப்பவனுக்கு இது ஒருபோதும் முடியாது. ஆனால், அவன் கொள்கைவாதியாக இல்லையென்றால், அல்லாஹ்வுக்கு இணைவைக்கப்பட்டாலும் பித்அத்கள் நடந்தாலும் அல்லாஹ்வின் தூதர் இழிவுப்படுத்தப் பட்டாலும் அவனிடத்தில் அது எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தி விடாது. அவனைப் பொறுத்த வரை அவனைச் சேர்ந்த கூட்டமும் அவனுடைய இடமும் அவனது சொத்தும் பாதுகாப்புடன் இருந்தால் இது அவனை பொருத்த வரை அவனது கடமையை அவன் பூரணப்படுத்தி விட்டதாகவே நினைக்கின்றான். 


கொள்கைவாதியின் போராட்டம் நிச்சயமாக இப்படி இருக்காது. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை உலகமெங்கும் இழிவுப்படுத்தும் நேரத்தில் அந்த நபியின் மதிப்பைப் பாதுகாப்பதற்கு நாம் எமது பங்களிப்பாக எதைச் செய்தோம். நாம் வாழும் நாட்டிலும் எமது கிராமங்களிலும் அல்லாஹ்வுக்கு இணை வைப்பதற்குப் பலர் போராடுகிறார்கள். ஷிர்க்கை சமூகத்தில் பரப்புகிறார்கள். சந்தேகங்களையும் பிழையான விளக்கங்களையும் கூறி மக்களிடத்தில் வழிகேடுகளை வளர்க்கிறார்கள். இவைகளுக்கெதிராக எங்களது பங்களிப்பு எத்தகையது? 


பலரது நிலைபாடு என்னவென்றால் ஷிர்க்கை மறுத்தால் நாம் வாழும் சமூகத்தில் குழப்பங்களும் பிரச்சனைகளும் உருவாகிவிடும் என்று தங்களின் இடத்தை பாதுகாப்பாக வைப்பதற்கென்றும் தங்களின் சொத்துகளை பாதுகாப்பதற்கென்றும் தங்களின் உடம்பில் சிறு காயம் வந்துவிடக் கூடாதென்றும் அஞ்சியவனாக பித் அத்வாதியின் நடுவிலும் முஷ்ரிகீன்களின் நடுவிலும் அவர்களின் அடிமையாக ஆகிவிட்டார்கள். தங்களை காத்துக் கொண்டு தங்களுக்குக் கிடைக்கும் ஆதாயங்களை அனுபவித்து கொண்டிருக்கிறார்கள்.


ஆனால் மார்க்கத்துக்கு எவ்விதப் பாதுகாப்பும் இருப்பதில்லை. ஆனால் இவர்களின் சொத்துக்கும் மானத்துக்கும் பாதுகாப்பு செய்கிறார்கள். தனி மனித விளக்கங்கள் பாதுகாக்கப் படுகின்றன. அதனோடு சேர்ந்து நபிமொழிகளுக்கு மறுப்புகளும் வருகின்றன. அதற்கு முரணான குரல்கள் எழுகின்றன. ஆங்காங்கே ஷிர்க்களும் பித் அத்களும் முளைக்கின்றன. இவைகளை தட்டி கேட்பதற்கும், மறுப்பதற்கும், வழிகேடென்று சுட்டி காட்டுவதற்கும் சமூகத்தில் யாருமில்லை. அதைப் பற்றி பேசுவதற்கே அஞ்சுகிறார்கள். இது கொள்கைவாதியின் தன்மையாக இருக்க முடியுமா? 


இவ்வாறு சமூகத்தில் வழிகேடுகள் முளைக்கும் நிலையில் அதைக் கண்டும் காணாமல் இருக்கும் நிலை பிலால் ரளியல்லாஹு அன்ஹு இருந்த சமூகத்திலும் அபூபக்கர் ரளியல்லாஹு அன்ஹு இருந்த சமூகத்திலும் ஸஹாபாக்கள் இருந்த சமூகத்திலும் இருந்ததா? 


அவர்களின் சமூகத்தில் இவ்வாறான வழிகேடுகள் தோன்றிய பொது அதற்கெதிராக குரல் கொடுக்காமல் இருந்ததாக வரலாற்றில் எங்கேனும் காண முடியுமா? அஇம்மத்துல் முஸ்லிமீன்(முஸ்லிம் இமாம்கள்) வாழ்ந்த காலத்தில் இந்நிலை இருந்ததா? ஒருபோதும் இல்லை. 


ஏனென்றால் கொள்கையின் உண்மையை தெரிந்திருக்கும் கொள்கைவாதிகள் இவ்வாறான வழிகேடுகளுக்கு முரணாகவே நிற்பார்கள். அல்லாஹ்வுக்கு மட்டும் கீழ்ப்படிந்து அவனை மட்டுமே வணங்கும் விடயத்தில் உறுதியுடன் நிற்பார்கள்.


நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:

        ”அல்லாஹு த அலா இந்த மார்க்கத்தை மீண்டும் மீண்டும் நாட்டிவிடுவான். மக்கள் கியாமத் நாள் வரை இதன் பலனை அடைந்து கொண்டிருப்பார்கள்.”


இந்த ஹதீஸை இமாம் புஹாரி ரஹிமஹுல்லாஹ், அவரது நூலான தாரீகுல் கபீர் – இலும் இன்னும் இப்னு மாஜா, இப்னு ஹிப்பான் ஆகிய இமாம்கள் தங்கள் நூல்களில் பதிவு செய்து இருக்கிறார்கள்.


இந்த ஹதீஸ் கூறுவது என்னவென்றால் சமூகங்களில் மார்க்கம் அழிந்து கொண்டு போதும் நிலை உருவாகும்,அதை பின்பற்றுவதில் மக்கள் கவனம் இல்லாமல் இருக்கும் நிலையில் அல்லாஹு தஆலா வீழ்ந்துக்கொண்டு இருக்கும் இந்த மார்க்கத்தை மீண்டும் நாட்டிவிடுவான். இதன் மூலம் கியாமத் நாள் வரையும் மக்கள் இதில் பயனடைந்து கொண்டு இருப்பார்கள், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறிய மேற்சொன்ன ஹதீஸின் விளக்கத்தினை என் சமூகத்துக்கு தெளிவாக்கி வைப்பதற்கு நான் ஆசைப்படுகிறேன்.


மார்க்கத்தைத் திரும்பவும் நிலை நாட்டுவது என்றால் என்ன? அடுக்கடுக்காக நூல்களை வைத்திருப்பதா? அல்லது தமக்கென ஒரு பெயரை வைத்து கொண்டு தங்களின் கொள்கையை மக்களிடத்தில் மார்க்கமென காட்டுவதா? அவ்வாறல்ல மார்க்கத்தை நிலை நாட்டுவதென்றால் நீங்கள் உங்களையும் உங்களது குடும்பத்தையும் நரகத்திலிருந்து பாதுகாப்பதாகும். நாமும் திருந்தி நம் குடும்பங்களையும் திருத்தி நபிவழியை நம் வழியாக்கி மார்க்கத்தின் அனைத்து விஷயங்களையும் பின் பற்றுவதற்கு முன் வருவதாகும் இதன் மூலம் தான் மார்க்கத்தை நாம் உறுதியாக நிலைநாட்ட முடியும். 


எதை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மார்க்கமாக பின்பற்றினாரோ அதை நாம் உயிர்பிப்போம், அதனை பின்பற்றுவோம். எமது சமூகத்தில் அதனை நடைமுறைக்கு கொண்டு வருவோம். நாமும் பின்பற்றி ஏனைய மக்களுக்கும் பின்பற்றுவதற்கான வழியை காட்டிவிடுவோம். இதுவே மார்க்கத்தை நிலை நாட்டுவதாகும். 


அல்லாஹு த ஆலா தான் விரும்பியவர்களுக்கு இந்த பாக்கியத்தை கொடுப்பான். நிச்சயமாக யாரெல்லாம் மார்க்கத்தை ஆர்வத்தோடு பின்பற்றுகிறார்களோ அவர்களுக்கு தான் இப்பாக்கியம் கிட்டும்.

அல்லாஹு த ஆலா இஸ்லாமிய மார்க்கத்தின் அடிப்படையில் நிச்சயமாக எமது வாழ்வில் அனைத்து அம்சங்களுக்கும் சட்டங்களை அமைத்து இருக்கிறான். அது கொள்கை,நடைமுறை வாழ்வு, ஆடை, குடும்ப வாழ்க்கை, சமூக பிரச்சனை, வியாபாரம் போன்ற எந்த ஒரு அம்சமாக இருப்பினும் அவைகளுக்கென மார்க்கத்தில் தெளிவான சட்டங்கள் இருக்கின்றன. இந்த சட்டங்கள் அனைத்தையும் பின்பற்றுவதே மார்க்கத்தை உயிர்பிப்பதாகும். 


மார்க்கத்தின் சிறப்பான கல்வியை கற்று அதன் உண்மையான கருத்துகளை விளங்கி அதை பின்பற்றுவதே மார்க்கத்தை உயிர்பிப்பதாகும். இதை செய்பவர்கள் யார்? அல்லாஹ்வை மட்டுமே தனிப்பட்டதாக வணங்க வேண்டுமென உறுதியுடன் இருப்பவர்கள் தான் மார்க்கத்தை உயிர்பிப்பதற்கென கஷ்டபடுவார்கள். அவர்கள் தான் இதற்காக போராடுவார்கள், தியாகம் செய்வார்கள். இவர்களுக்கு தான் அல்லாஹ்வின் சட்டத்தையும் அவனது தீர்ப்பையும் அவனது மார்க்கத்தையும் தெரிந்து கொள்வதற்கு தேவை இருக்கிறது. இவர்கள் தான் முயற்சியும் தியாகமும் செய்து அதனை கற்று தன் வாழ்வில் பின்பற்றுவார்கள்.


யாரெல்லாம் அல்லஹ்வை தனிப்பட்டதாக வணங்கும் விஷயத்தில் தடுமாற்றம் உள்ளவர்களாக இருக்கிறார்களோ அவர்கள் மார்க்கம் என்ற விஷயத்தில் கவனம் இல்லாமல் இருப்பார்கள். இந்த விஷயங்கள் பலருக்கு சிரமமானதாகவும், கடுமையானதாகவும் இருக்கலாம். 


ஏனென்றால் எவர்கள் அல்லாஹ்வை மட்டுமே வணங்கி அவனது சட்டங்களுக்கு மட்டுமே கட்டுப்பட்டு நடக்கவேண்டும் என்ற விஷயத்தில் உறுதியின்றி இருப்பார்களோ அவர்களுக்கு இவை அனைத்தும் சிரமமாகவும், கடினமாகவும் இருப்பதில் ஆச்சர்யம் இல்லை. இந்தத் தெளிவை நாம் விளங்கியிருக்க வேண்டும்.


நாம் வணக்கத்திற்கு தகுதியானவன் அலலாஹ்வை தவிர வேறு யாருமில்லையெனக் கூறியவுடனேயே நாம் அவ்வாறு வணங்குவதற்கு   தகுதியான நிலையை அடைந்து விடுவோமா? ஒருவன் இந்த வார்தைகளை தூய்மையான உள்ளத்துடன் கூறினால்,அவன் அல்லாஹ்வின் இந்த மர்க்கத்தை தேடுவான். அதை படிப்பவன், அதை நடைமுறைப்படுத்துவதெற்கென்டு சிரமப்படுவான்,ஏனென்றால் அவன் அதை அவனது உள்ளத்திலிருந்து கூறியவனாக இருக்கின்றான். 


எனவேதான் அலலாஹ் கலிமதுத் தய்யிபாவைப் பற்றிக் கூறும்போது

              ......”அதன் வேர்கள் பூமியில் ஆழப் பதிந்திருக்கிறது”


எனக் குறிப்பிடுகிறான். அதனது அடிப்படை உறுதியானதாக இருக்கிறது. மேலும் அல்லாஹ் கூறும் போது 


”அதனது கிளைகள் வானளாவ உயர்ந்து நிற்கின்றன”


எனக் குறிப்பிடுகின்றான். 


எனவே அந்த ஷஹாதத்தைக் கூறிய மனிதன் உண்மையாகவே அதற்குச் சாட்சியம் கூறியவனென்றால் வாயால் மட்டும் கூறிவிட்டு அவனது உள்ளத்தில் பதியாதவனாக இருக்க முடியாது. உள்ளத்தில் பதிந்து விட்டால் எந்தவொரு துன்பத்திலும் அல்லாஹ்வின் மார்க்கத்தை விளங்குவதைத் தவிர்ந்து கொள்ள மாட்டான். 


வணக்கத்துக்கு தகுதியானவன் அல்லாஹ்வை தவிர வேறு யாருமில்லை என்றும் அவனது மார்க்கத்தை தவிர வேறெந்த மார்க்கமும் பின்பற்றுவதற்கு தகுதியில்லை என்றும் அவன் உறுதியோடு இருப்பான். 


எப்போது ஷஹாதத்துல் இஸ்லாம் என்பது ஒரு கேவலமான ஒன்றாக ஆகிவிட்ட்தோ அது வெறுமனே பழகிப்போன ஒரு பழக்கவழக்கமாக ஆகிவிட்டதோ, மற்றவர்கள் சொன்னதற்காக நானும் சொல்கிறேன் என்பதாகிவிட்டதோ, அதன் உறுதி உள்ளத்தில் பதிந்ததாக இல்லை. 


அல்லாஹ் கூறுவது போல் ”அதன் வேர்கள் பூமியில் பதிந்ததாக ” இல்லையென்றால் அதன் பிரதிபலனை கப்ரிலே கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில் சொல்லும் பொழுது கண்டு கொள்ளலாம். கப்ரிலே அந்த மலக்குகள் கேள்வி கேட்கும் பொழுது இந்த இஸ்லாத்தினை நாம் எந்த அடிப்படையில் பின்பற்றினோம் என்பதை புரிந்து கொள்வோம். 


அங்கே எம்மிடம் மூன்று கேள்விகள் கேட்கப்படும்.

  • உன் இரட்சகன் யார்?
  • உன் நபி யார்?
  • உனது மார்க்கம் என்ன?


என்ற மூன்று கேள்விகள் கேட்கப்படும். இது பற்றி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் ஹதீஸை முஆத் இப்னு ஜபல் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள். 


அதாவது ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள், 


கப்ரிலே ஒரு மூஃமினிடம் அதாவது மார்க்கத்தை உறுதியாக பின்பற்றினானோ அவனிடம் உன் இரட்சகன் யார்? என்று கேட்கப்பட்டால் உடனே அவன் என் இரட்சகன் அல்லாஹ் எனக் கூறுவான். எனது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம், எனது மார்க்கம் (தீன்) இஸ்லாம் என்று உடனே பதில் சொல்லி விடுவான். 


ஏனென்றால் அவன் அதற்கென்று தன் வாழ்வில் கஷ்டப்பட்டான். அதற்கென போராடினான். அதை பின்பற்றியவனாக இருந்தான். எனவே அவனிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிப்பதில் தயக்கம் இருக்க வில்லை. 


தொடர்ந்து ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் “யார் ஃபாஸிக்காக இருந்தானோ” அல்லது “காஃபிராக இருந்தானோ” (ஹதீஸ் அறிவித்தல்களில் ஃபாஸிக் என்றும் இன்னுமொரு அறிவித்தலில் காஃபிர் என்றும் வந்துள்ளது), இங்கு ஃபாஸிக் என்றால், எல்லையை மீறி நடந்தவன். அவன் முஸ்லிமாக இருந்தும் மார்க்கத்தை தெரிந்து நடைமுறைபடுத்தவில்லை. 


எனவே அவன் ஃபாஸிக் ஆகிவிட்டான். அதே போன்று காஃபிரான (நிராகரித்தவன்) ஆகிய இருவரிடமும் மலக்குகள் உன் இரட்சகன் யாரென்று கேட்டவுடன் அவன் “மக்கள் இவ்வாறு கூறினார்கள் எனவே நானும் கூறினேன்.” என்று கூறுவான்.

        


அதாவது அவன் கூறியவனாக இருந்தாலும் அவனது உள்ளத்திலிருந்து அதனைக் கூறவில்லை. வெறுமனே மக்கள் கூறியதால் நானும் கூறினேன் என்று பதில் கூறுவான். இதுதான் ஃபாஸிக்கின் அடையாளம். 


இவனும் தன் இரட்சகன் அல்லாஹ் தான் என்று கூறி கொண்டிருந்தான். காரணம், சமூகத்தில் எல்லோரும் கூறினார்கள். அதனால் இவனும் இவ்வாறு கூறி கொண்டிருந்தான். கப்ரிலே கேட்கப் படும் மூன்று கேள்விகளுக்கும் ஃபாஸிக்கும் காஃபிருக்கும் அதே பதிலையே கூறுவான். இவன் கூறிக் கொண்டிருந்ததெல்லாம் மக்களும் அவ்வாறுதான் கூறினார்கள் என்பதற்காகவே தவிர இவன் அதைப் பின்பற்றுவதற்கென்றோ அதிலே உறுதியாக இருப்பதற்காகவோ கூறவில்லை. என் பெற்றோரும் எனது சமூகமும் அல்லாஹ்வை வணங்குவதால் நாமும் அல்லாஹ்வை வணங்குகின்றோம். உறுதியாக நம்பி அதனைப் பின்பற்றுவதற்கென்றோ குர் ஆன் சொல்வது போல் வேர்கள் உறுதியாக பதிந்து கிளைகள் வானளாவ உயர்ந்து நிற்பதற்கென்றோ அல்ல. 


மாறாக, வெறுமனே மக்கள் கூறியதற்காக அவனும் கூறிக் கொண்டிருந்தான். இந்த நிலையில் இருக்கும் ஒவ்வொரு மனிதனும் தனக்கென்று கப்ரில் ஒரு நேரம் வரும்போது கேட்கப்போது கேள்விகளுக்கு இந்த பதிலயே கூறவேண்டியிருக்கும் என்ற விதிமுறையை அல்லாஹ் விதித்துவிட்டான். 


எனவே நாம் முஃமின்கள் கப்ரிலே சொல்கின்ற பதிலை சொல்லவேண்டும் என்றால் அந்த பாக்கியத்தைப் பெற்றுக் கொள்ளும் வாய்ப்பை இந்த வாழ்க்கையிலே அமைத்து கொள்ளுங்கள். அங்கே சொல்ல போகின்ற பதில்களை இந்த வாழ்க்கையில் செயல்வடிவில் அமைத்து கொள்ளுங்கள்.எந்தளவு கொள்கையில் உறுதியுள்ளவர்களாக இருப்பீர்களோ அந்தளவு கப்ரிலே உங்கள் பதிலுக்குத் தயாராக இருப்பீர்கள். எந்தளவுக்கு இதனை இழிவாக கருதுவீர்களோ அதே இழிவுடன் தான் கப்ரிலே மாட்டி கொள்வீர்கள். 


ஏனென்றால் கப்ரிலே மனிதன் தான் உலகில் சுமந்த அனைத்து கேவலங்களும் அவனிடமே வந்து சேரும். இதுவே அவனை நரகத்தில் சேர்க்கும்.


கொள்கையின் உண்மைகளை விளங்குவதற்கு எமது முன்னோறோன ஸஹாபாக்களை கவனித்தே நாம் அதன் உண்மையை விளங்க வேண்டும். இன்று நாம் நமது சமூகத்தில் உள்ள பலருக்கு கொள்கைவாதிகளென்று பட்டத்தைக் கொடுக்கின்றோம். இவ்வாறு இவர்களுக்கு பட்டங்களையும் கொடுப்பதானது நாம் இஸ்லாமிய மார்க்கத்திற்குச் செய்யும் துரோகமும் அநியாயமும் ஆகும். 


ஏனென்றால் அவர்கள் கொள்கைவாதிகளாக இருந்தால் இன்று இந்த சமூகத்திலுள்ள குழப்பங்களுக்கும் ஷிர்க்களுக்கும் எதிர்ப்பு காட்டாமல் இருக்க மாட்டார்கள். இதை நான் புரிந்திருக்க வேண்டும். மக்களோடு மக்களாக இருப்பவன் எதோ ஒரு ஆசைக்காக போராடுவான். பட்டத்துக்கும் சொத்துக்கும் பெயருக்கும் போராடுவான். இந்த நிலைக்கு ஷைத்தான் அவனை மாற்றிவிடுவான். 


ஆனால், கொள்கைக்காகப் போராடும் ஒருவன் கொள்கைவாதிகளோடு மட்டுமே சேர்ந்து போவான். யாரெல்லாம் கொள்கைவாதிகளாக இருக்கின்றார்களோ அவர்கள் தங்கள் இலக்கும் இலட்சியமும் பயணமும் ஒன்றாக இருந்தால் அவர்கள் பலவாறாக பிரிந்திருக்க முடியாது. கொள்கைவாதியின் போராட்டம் அல்லாஹ்வுக்காகவும் அவனது மார்க்கத்துக்காகவும், நபிவழிக்காகவும் உள்ளதாகும். நபிவழியிலிருந்து பிரிந்து போவதென்றால் போராடும் திசைகளும் வெவ்வேறாக பிரிந்து போய் விடும். அல்லாஹ் கூறிய பாதையிலிருந்து பிரிந்து போவதென்றால் அல்லாஹ்வின் பாதையிலிருந்து போவார்கள். 


குர் ஆன் சுன்னாஹ்வை பின்பற்றுவதென்பது வார்த்தைகளில் மட்டுமல்ல. அது எமது வாழ்க்கையிலும் நடைமுறையிலும் இருக்க வேண்டும். மனிதனின் குறைபாடுகளான தன்மையிலிருந்தும் பிடிவாதத்திலிருந்தும் தவிர்ந்து கொண்டு மனோ இச்சையைப் பின்பற்றுவதைத் தவிர்த்து சொத்துகளையும் பட்டங்களையும் வளர்க்க வேண்டுமென்ற லட்சியத்தைத் தவிர்ந்து கொண்டு, எமது கடமையாகவும் லட்சியமாகவும் சத்தியத்தை மக்களிடம் எடுத்து வைக்க வேண்டும். இதுவே கொள்கைவாதியின் தன்மையாக இருக்க வேண்டும். 


ஒரு மனிதன் என்ற வகையில் நாம் சத்தியமான கொள்கையை எடுத்து வைக்கும் போது அதற்குப் பல தடவைகள் வரலாம். அது குடும்பத்தினாலும் தோழர்களும் வரக் கூடும். அதே போன்று ஷைத்தானிடமிருந்தும் குழப்பங்கள் வரலாம். நடைமுறையில் செய்கையில் சமூகம் அதனை ஆட்சேபிக்க முடியும். எனினும் இத்தனையையும் தாண்டுபவன்தான் கொள்கையை உண்மையாகவே தன் உள்ளத்தில் பதிந்து அதனை நடைமுறை செய்பவனாவான். 


கொள்கை கொள்கைவாதிகள் சோதனைகளைச் சந்திக்க வேண்டியிருப்பதைப் பற்றி அல்லாஹ் சூரா அன்கபூத்தில் கூறுகிறான்.

        

மனிதர்கள் “நாங்கள் நம்பிக்கை கொண்டோம்” என்று கூறினால் (மட்டும் போதுமானது, அதனைப் பற்றி) அவர்கள் சோதிக்கப்படாமல் விட்டுவிடப் படுவார்கள் என்று எண்ணி கொண்டார்களா? இவர்களுக்கு முன்னிருந்தவர்களையும் நிச்சயமாக சோதித்தே இருக்கின்றோம்.

        சூரா அன்கபூத் (29: 2 )


எனவே, அல்லாஹூ த ஆலா குர் ஆனிலே எங்களுக்கு எடுத்து காட்டும் விஷயம் என்னவென்றால், நீ ஈமான் என்று சொன்னவுடனே உனக்கு சோதனைகள் தொடர்ந்து வர இருக்கிறது. முதலாவதாக இந்த சோதனைகளை அல்லாஹ் தனக்கு நெருக்கமான தன் அடியார்களுக்குக்கே கொடுத்தான். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் ஸஹீஹான ஹதீகளில் வருவதாவது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:

  

அதிகமாக சோதிக்கப்படுபவர்கள் நபிமார்களாகும் அவர்களை அடுத்து அதிகம் சோதிக்கப்படுபவர்கள். அந்த நபிமார்களின் அடிச்சுவடுகளைப் பின்பற்றுபவர்கள். அவர்களுக்குப் பின் அவ்வடிச் சுவடுகளைப் பின்பற்றுபவர்களைப் பின் தொடர்பவர்கள்.


எனவே, இந்த ஹதீஸில் ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கே சோதனையிலிருந்து தவிர்ந்து கொள்ள முடியாதென்றால் நானும் நீங்களும் ஈமான் கொண்டோம் என்று சொன்னவுடன் சோதனைகள் வராதென்று எதிர்ப்பார்க்க முடியுமா? கொள்கையை சொன்னவுடன் நிம்மதியானவனாக யாரிடமும் பெயர் வாங்காமல் இருக்க வேண்டுமென்று எதிர்ப்பார்ப்பது ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் தஃவத்தை குறைபாடுடைய தஃவத் என்று கூறுவது போன்றதாகும்.


ஏனென்றால் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய தஃவத் பெரும் பிரச்சனையானதொன்றாகவே இருந்தது. அதில் இரத்தம் சிந்தப்பட்டது. அது குடும்பங்களை பிரித்து வைத்தது. தம்மோடு வாழ்ந்த மக்களை விரட்டியடிக்க வைத்தது. பலர் தங்கள் உயிர்களைத் தியாகம் செய்யக் காரணமாக இருந்தது. இவைகளெல்லாம் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் தஃவத்தினால் ஏற்பட்ட பிரச்சனைகளும் விளைவுகளாகும். 


எனவே, ஒரு தஃவத் கஷ்டமும் பிரச்சனையும் தியாகமும் இல்லாமல் மக்களோடும் சமூகத்தோடும் சேர்ந்து நடந்து நிம்மதியாகச் செயல் பட வேண்டுமென்றால் அந்த தஃவத் ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் தஃவத் அல்ல. அது ஃபிர் அவ்னினதும், காரூனினதும், ஷைத்தானின் தஃவத் ஆகும். இவ்வாறான தஃவத்தில் அசத்தியத்தில் கருத்துகளே இருக்கின்றன. 


ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் தஃவத்தின் தன்மையை பற்றிக் குர் ஆன் கூறுகிறது.


“(நபியே!)கூறுவீராக, சத்தியம் வந்ததது அசத்தியம் அழிந்தது அசத்தியம் அழிந்ததே தீரும்.”


நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மக்கா வாழ்க்கையில் தனிமனிதனாகப் போராடியவராக இருந்தது. அதே போன்று மக்காவை விட்டு மதீனாவுக்கு ஹிஜ்ரத் செய்யும் போது மக்களை தன்னோடு சேர்த்து கொண்டு செல்ல வில்லை. அபூபக்கர் ரளியல்லாஹு அன்ஹு அவரை மட்டும் அழைத்து கொண்டு தனி ஹிஜ்ரத்தை மேற்கொண்டார்கள். மதீனாவின் எல்லையை அடையும் வரை அவ்விருவர் மட்டுமே ஹிஜ்ரத்தை மேற்கொண்டனர். 


ஆட்களையும் கூட்டங்களையும் சேர்த்து கொண்டு தியாகம் செய்வது என்பது நபிவழியல்ல. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தன்னை பின்பற்றியவர்களை தனக்கு முன்பாகவே ஹிஜ்ரத் செய்வதற்கு அனுப்பி விட்டு அல்லாஹ்வின் கட்டளையை எதிர்ப்பார்த்து கொண்டிருந்தார்கள். 


ஆனால் எமது ஹிஜ்ரத் அவ்வாறிருக்குமா? நாம் அவ்வாறானதொரு ஹிஜ்ரத்தை மேற்கொண்டால் நம்மோடு பலரையும் சேர்த்து கொள்ளவே முயற்சிப்போம். இது கொள்கை அல்ல இவைகளெல்லாம் வெறுமனே உலகத்து ஆசைகள். இந்த ஆசைகள் எல்லாம் சொத்தினாலும் செல்வத்தினாலும் அடிமைகளாகும். மார்க்கத்தினை பின்பற்றும் அடிமைகளின் தன்மை அல்ல. 


மார்க்கத்தை பின்பற்றும் அடிமைகள் தனிமனிதனாக வாழ்ந்தாலும் அந்த மார்க்கத்திலேயே இருந்து அதனை பின்பற்றி நடப்பான். அதற்காகவே குரல் கொடுப்பான், சத்தியத்தை சொல்வான், சத்தியத்தை பார்த்துவிட்டு வெறுமனே கவனமின்றி இருந்து விட மாட்டான். ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் காட்டிய வழியினை போன்று ஒன்றோ அவன் பிழைகளை காணும் போது அங்கே சென்று அதை தடுப்பான். அல்லது பிழையான இடத்திலிருந்து தவிர்ந்து அதை விட்டும் தூரமாகி இருப்பான். இந்த இரண்டில் ஒன்று தான் அவனது நிலைபாடாக இருக்கும். 


பிழைகளை கண்டும் அதனோடு சேர்ந்து கொண்டு அதன் பக்கமும் சாய்ந்து கொண்டு செல்வதென்பது சத்தியத்தோடு வாழும் மக்களின் பாதையாக ஒருபோதும் இருக்க முடியாது. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஏழு வானத்தின் மேலிருந்து இறக்கப்பட்ட வேதத்தை தனியொரு மனிதனாக சுமந்தவராக அன்றைய சமூகத்தில் அனைத்துக்கும் முகம் கொடுத்தார். அதே போன்று தன் தோழர்களான ஸஹாபாக்களுக்கும் இந்த தஃவத்தை எவ்வாறு எடுத்து வைக்க வேண்டும் என்றும் கற்று கொடுத்தார்.

        

ஒரு முறை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நபி தோழர் முஆத் இப்னு ஜபல் ரளியல்லாஹு அன்ஹு அவர்களை எமன் தேசத்தின் தலைவராக அனுப்பி வைக்கும் போது பின்வருமாறு கூறினார்கள். 


“நீர் வேதம் கொடுக்கப்பட்டவர்களிடம் செல்கிறீர், எனவே அவர்களை முதலில் அல்லாஹ்வை ஏகத்துவபடுத்துவதின் பால் அழைப்பீராக! அதுவே உனது அழைப்பின் முதலாவது அம்சமாக இருக்கட்டும்” என்று கூறினார்கள். 


முஸ்லிம்களிடம் பகைமையிலும் குரோதத்துடனும் இருக்கும் வேதக்காரர்களிடம் முஆத் இப்னு ஜபல் ரளியல்லாஹு அன்ஹு அவர்களை தனியாகவே அனுப்பி வைத்தார்கள். அதில் ஏகத்துவத்தை எத்தி வைப்பதையே முதல் கருமமாகவும் கற்று கொடுத்தார்கள். 


மாறாக மக்களிடத்தில் நன்மதிப்பை பெற்று கொள்வதற்கோ செல்வாக்கினை பெற்று கொள்வதற்கோ அந்த ஸஹாபிக்கு வழிகாட்டவில்லை. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் தஃவத்தின் இந்த அடிப்படையை நாம் அனைவரும் எம் மனதில் பதிய வைக்க வேண்டும். 


நிச்சயமாக யூதர்களையும் கிறிஸ்தவர்களையும் ஏகத்துவத்தின் பால் அழைப்பதென்பது அவர்களுக்கும் அவர்கள் வணங்கி வரும் சிலைகளுக்கும் அவர்களின் வாழ்க்கை முறைக்கும் முற்றிலும் எதிரானதொரு காரியமாகும்.

        

இந்நிலையிலும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் முஆத் ரளியல்லாஹு அன்ஹு அவர்களை பாதுகாப்பாக இருந்து கொள்ளுமாறு கூறுவதற்கு பதிலாக ஏகத்துவத்தை முதலில் எத்தி வைக்குமாறு கூறி அனுப்பினார்கள். இது தான் நபியின் வழி. இது தான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நமக்கு காட்டி தந்திருக்கும் வழிமுறையாகும்.

        

எனவே நாமும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழியில் தஃவத் செய்வதென்றால் உலகின் எந்தவொரு செல்வாக்கிற்கும்  இடம் அளிக்கக்கூடாது. இந்த வழிமுறைக்கு மாறான முறையில் அந்த தஃவத்தை செய்வதென்றால் அதனை அல்லாஹ்வின் மார்க்கத்தின் பெயரால் செய்வதற்கு தகுதியற்ற தாகும். 


ஏனெனில் அல்லாஹ்வின் மார்க்கம் எமது சொத்தினாலும் மதிப்பினாலும் இடத்தினாலும் வளர்வதில்லை. மாறாக அது அல்லாஹ்வின் நாட்டத்தினாலும் அவனை வணங்குவதாலும், அவனை நம்பிக்கை கொண்டு அவனுக்கு முற்றிலும் கீழ்ப்படிந்த அடிமையாக இருப்பதாலுமே வளர்கின்றது. இந்த அடிப்படையை தெரியாதவர்கள் தஃவத் செய்வதற்கு தகுதியானவர்கள் அல்ல; 


இந்த அடிப்படையை தெரியாமல் யாரெல்லாம் தஃவத் செய்வதற்கு முன் வருகிறார்களோ அவர்கள் அனைவரும் அல்லாஹ்வின் மார்க்கதின் பெயரில் அல்லாஹ்வின் அடிமைகளை ஏமாற்ற வந்தவர்களாகும். மார்க்கத்தின் பெயரை வைத்து மக்களின் மதிப்பை பெற்று கொள்வதும், சொத்துகளை சம்பாத்து கொள்வதிலும், மக்களை கட்டுபாட்டுக்குள் வைத்திருப்பதும், யூத கிறித்துவ மதகுருமார்களின் தன்மையாகும். இதே தன்மைகளையே நம் சமூகத்தில் உள்ள மார்க்கத்தை பிரச்சாரம் செய்பவர்களும் கொண்டிருந்தால், இவர்களுக்கும் அந்த மதகுருமார்களுக்கும் எவ்வித வேறுபாடும் இல்லை. 


இருசாராருக்கும் இடையில் பெயரிலும் அடையாளங்களிலும் இடத்திலும் வெறுபாடுகள் இருந்தாலும் வழிமுறையில்  இருசாராரது வழிமுறையும் ஒரே வழிமுறையாகும். யாரெல்லாம் நபியின் வழியில் இருந்து தஃவத் செய்யவில்லையோ அவர்கள் அனைவரும் ஷைத்தானின் வழிமுறைகளை வளர்ப்பவர் என்பதில் கடுகளவும் சந்தேகம் இல்லை.

        


நாம் அனைவரும் கொள்கையின் உண்மையை புரிந்து கொண்டவர்களாக இருந்தால் அதனோடு மனிதனின் தன்மைகள் என்னவென்பதையும் தெரிந்து இருக்க வேண்டும். மனிதன் என்ற ஒருவனுக்கு பட்டம் என்றும் பதவி என்றும் சொத்தென்றும் தகுதியென்றும் பல ஆசைகள் இருக்கின்றன. இதனை பெற வேண்டும் என்று அல்லாஹ்வின் மார்க்கத்தை இழந்து நிற்கிறான். அவனுடைய நபியின் பாதையை விட்டு விலகி விடுகிறான். 


இன்று ஒருவன் சமூகத்தில் ஒரு சத்தியத்தை சொல்வதற்கு முன் வராததன் காரணம் என்ன? அவனுடைய மதிப்பு இல்லாமல் ஆகிவிடும், மக்கள் தன்னை இழிவுபடுத்துவார்கள், உண்மையை சொன்னால் ஊருக்குள் பிளவு ஏற்பட்டு விடும் குடும்பங்கள் பிரிந்துவிடும், மக்கள் தன்னை குழப்பவாதிகள் என்று கூறுவார்கள் என்பவை தான் அவன் சத்தியத்தை வெளியே சொல்லாதிருப்பதற்கான காரணங்கள். 


இதனாலேயே சத்தியத்தை மறைக்கிறான். இவ்வாறானதொரு உறுதியற்ற தன்மையுள்ள மனிதன் தாஈ – இஸ்லாமிய அழைப்பாளன் என்று சொல்ல முடியுமா? இதற்கு அவன் தகுதியானவனா? அறிந்த மக்கள் இவர்களை போன்றவர்கள் தஃவத்தில் ஈடுபடுவதை தடுக்க வேண்டியது முக்கியமான ஒன்றாகும்.

        

எங்கு வாழ்ந்தாலும் கொள்கைவாதியாக வாழ்பவனிடமும் உண்மையான மார்க்கத்தை பின்பற்றுவனிடமும் இருக்க வேண்டிய தன்மையென்ன? அவன் அசத்தியத்திற்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும். அசத்தியத்தை எதிர்ப்பதென்பது விபச்சாரத்தையும், களவையும், கொலையும் மட்டும் எதிர்ப்பதல்ல. அசத்தியம என்பது இரட்சகனான் அல்லாஹ்க்கு எதிராக உள்ள போராட்டங்களாகும். அது ஷிர்க்கள், குஃப்ர்கள், பித் அத்கள் போன்றவைகளை பரப்பிவிடுவதற்கு நடத்தப்படும் போராட்டங்களாகும். மார்க்கத்தின் பெயரிலும், மத்ஹபுகளின் பெயரிலும், குர் ஆன் மற்றும் ஹதீஸ்களின் பெயரிலும், இவர்களின் விளக்கத்தின் பெயரிலும் வளரும் ஷிர்க்கள், குஃப்ர்கள் போன்றவையாகும்.

           

இவ்வாறான அசத்தியங்கள் சுமந்துள்ள ஜமாத் என்றும் தலைவர் என்றும் மவ்லவிகள் என்றும் பெயர்களாலும் கூட்டங்களாலும் பரப்பப்படுகின்றன. இவற்றை சார்ந்தவர்களிடம் ஆதாரங்கள் வேண்டப்பட்டால் தங்களின் வசதிக்கு ஏற்றவாறு இருக்கும் குர்ஆன் வசனங்களையும் காட்டுகின்றார்கள். இருப்பினும் இவர்களின் ஆதாரங்கள் அவர்களின் வழியை சரி காண்பதற்காகவே தவிர நபி வழியை உயிர் ஆக்குவதற்கல்ல.


ஏதேனும் நபிமொழிக்கு முரணான விஷயங்கள் தமது சமூகத்தில் இருக்கிறதென்றால் இவர்கள் அந்த நபி மொழியை வெளியே தெரியாமல் புதைத்து விட்டார்கள். சமூகத்தின் கண்களிலிருந்து அதை மறைத்து விட்டான். படித்தவர்களெல்லாம் சேர்ந்து அவர்களுக்காக என்று ஒரு மார்க்கத்தை அமைத்து விட்டார்கள். 


காரணம் மார்க்கத்தினால் அவர்கள் உலகில் பயனடைய வேண்டும், நிம்மதியுடன் வாழ வேண்டும் என்பதைத் தவிர வேறொன்றுமில்லை. இது இஸ்லாமிய அழைப்பு பணியாகுமா ? இது தஃவத்தாகுமா ? இது அல்லாஹ்வின் மார்க்கத்தைப் பரப்பும் வழிமுறையாகுமா? நிச்சயமாக இல்லை.


வஹியானது நிறுத்தப்பட்டு விட்டது. அதன் பின் வஹி வருவதில்லை. ஆனால் இரட்சகனான அல்லாஹ் அனைத்தையும் உற்று நோக்கியவனாக இருக்கின்றான். அன்று சத்தியத்தின் இரட்சகனான அல்லாஹ்வே இன்றும் எல்லா இடத்திலும் சத்தியத்தின் இரட்சகனாவான். எப்படி அவன் அன்று சத்தியத்துக்கு வெற்றி கொடுத்தானோ எப்போதுமே அவன் மட்டுமே அதற்கு வெற்றியை கொடுப்பான். அவனது மார்க்கத்தை அவன் பாதுகாப்பான்.


அல்லாஹு த ஆலா திருமறையிலே கூறுகின்றான்:


“நீங்கள் அல்லாஹ்வுக்கு உதவி செய்தால் அல்லாஹ் உங்களுக்கு உதவி செய்வான். இன்னும் உங்களை பூமியில் உறுதியாக ஆக்கிவிடுவான்.”


என்று அவன் கூறியது போன்றே அன்று அவனது தூதருக்கு வெற்றியை கொடுத்தான். அதே போன்று அந்த ஸஹாபாக்களுக்கும் வெற்றியை கொடுத்தான். இன்னும் அவர்கள் அனைவரையும் பூமியில் உறுதியாக்கி வைத்தான். அவர்களை பின்பற்றி வந்த தாபிஈன்கள், தபஉ தாபிஈன்கள், இமாம்கள் இன்னும் அந்த வழிமுறையில் இருக்கும் அனைவருக்கும் அல்லாஹ் வெற்றியை இன்று வரை கொடுத்துக் கொண்டிருக்கிறான். 


யாரெல்லாம், இந்த வழிமுறைக்கு முரணாகச் செல்கிறார்களோ இன்னும் இதற்கெதிராக திட்டம் தீட்டுகிறார்களோ அவர்களை பார்த்து தான் அல்லாஹு த ஆலா கூறுகின்றான்


“அவர்கள் சூழ்ச்சி செய்தார்கள்! அல்லாஹ்வும் சூழ்ச்சி செய்தான். சூழ்ச்சி செய்பவர்களிலெல்லாம் மிகப் பெரும் சூழ்ச்சி செய்பவனாக அல்லாஹ் இருக்கின்றான்.”

 

எனவே கொள்கைவாதி என்பவன்,

        

அவன் அல்லாஹ்வுக்கு இணைவைக்காதிருப்பது மட்டுமல்ல அவனது கண்களுக்கு முன்னால் இணைவைக்கப்படுவதையும் விரும்பமாட்டான். அதற்கெதிராக அல்லாஹ்வின் மார்க்கத்தை எடுத்து வைப்பான். அதே போன்று நபிவழியைப் பின்பற்றுவதற்கு அவன் முயற்சி செய்வான். இது கொள்கைவாதியின் உண்மையாகும். 


இதில் மனிதனின் தன்மைகள் என்னவென்றால் ஷிஎக், பித் அத், குஃப்ர் போன்றவை இருந்தாலும் இல்லாவிட்டாலும், மார்க்கம் இழிவுபடுத்தப்பட்டாலும் அவனுக்கு அதனால் எவ்விதத் தாக்கமும் ஏற்படுவதில்லை. இதுவே மனிதனின் தன்மையாகும்.

        

ஷஹாதத் கூறிய மக்களாக வாழ்வதன் அடிப்படை என்பது கொள்கைவாதியாக வாழ்வதாகும். அந்தக் கொள்கைவாதியானவன் முக்கியமாக அல்லாஹ்வின் மார்க்கத்தைப் பின்பற்றுபவனாக இருப்பான். அதனைப் பின்பற்றுவதில் வரக்கூடிய கஷ்டங்களைப் பொறுமையுடன் சகித்துக் கொள்வான். தானும் அதனைப் பின்பற்றுவதுடன் தன் குடும்பத்தையும் தன் சமூகத்தையும் அதனை பின்பற்ற வைத்து அசத்தியங்களைத் தன்னிலிருந்தும் தன் குடும்பத்திலிருந்தும் சமூகத்திலிருந்தும் பிரித்தெடுப்பதில் ஒத்துழைப்பை கொடுப்பது கொள்கைவாதியின் கடமையாகும்.


அல்லாஹ் கூறுகின்றான்


“நன்மையான காரியத்திலும் இறையச்சத்திற்குரிய காரியத்திலும் நீங்கள் ஒருவருக்கொருவர் உதவியாக இருங்கள். பாவமானதாகவும் வரம்பு கடந்ததாகவும் உள்ள விஷயத்தில் நீங்கள் உதவியாக இருக்க வேண்டும்.”


மார்க்க விஷயத்தில் மார்க்கம் இறக்கப்பட்ட விதத்திலேயே அதனை உறுதியாகப் பின்பற்றுவதுதான் கொள்கைவாதியின் அடையாளமாகும்.


சகோதரர்களே! உங்களுக்கு முன்மாதிரியான சமூகமான ஸஹாபாக்களின் வாழ்க்கையைத் திரும்பி பாருங்கள். அவர்கள் பணத்துக்காகவும் சொத்துக்காகவும் போராட வில்லை. அவர்களில் மிகப் பெரும் செல்வந்தர்களாக நபிதோழர்கள் இருந்தாலும் தங்களின் செல்வங்களை மார்க்கத்துக்கென செலவு செய்தார்கள். அவர்களின் அத்தனை தியாகங்களும் அல்லாஹ்வுக்காகவும் அவனது மார்க்கத்துக்காகவுமே இருந்தன. 


அந்த உத்தமர்கள் தியாகங்களின் அடையாளங்கள். அந்த தியாகங்களின் அடையாளங்களை இன்றும் அவர்கள் வாழ்ந்த இடங்களில் காணமுடிகிறது. அவர்கள் வாழ்ந்த இடங்கள் இன்றும் சத்தியத்தை அடையாளம் காட்டும் இடமாக இருக்கிறது. சத்தியத்தை தேடுபவர்கள். அதைத் தேடி அத்திசையை நோக்கி செல்கிறார்கள். மக்கள் எல்லோரும் அந்த ஸஹாபாக்களை முன்மாதிரியாகவும் அவர்கள் வாழ்ந்த இடத்தை சத்தியத்தின் திசையாகவும் காண்பது அந்த நபிதோழர்கள் பெற்றிருக்கும்  பெரும் பாக்கியமாகும்.


அதே போன்ற பாக்கியங்களை நாமும் பெற வேண்டுமென்றால் நாமும் அவர்களை போன்று வாழ்பவர்களாக இருக்க வேண்டும். எந்த விஷயங்கள் எல்லாம் அல்லாஹ்வின் மார்க்கத்திற்கு முரணானவையாக புரிந்து கொண்டோமோ அந்த விஷயங்களிலிருந்து தவிர்ந்து கொள்வதில் நாம் முந்திக் கொள்ள வேண்டும். அதே போன்று எவையெல்லாம் அல்லாஹ்வின் மார்க்கமாக இருக்கிறதோ அதை பின்பற்றுவதிலும் முந்தி கொள்ள வேண்டும். இதுவே கொள்கைவாதியின் நிலைப்பாடாக இருக்க வேண்டும். 


அல்லாஹ் அல்லாத வேறொன்றின் திருப்திக்காக மார்க்கத்தை பின்பற்றும் விஷயத்திலிருந்து பின் வாங்குவது கொள்கைவாதியின் அடையாளமாக இருக்க முடியாது. மாறாக, அவ்வாறு செய்வது அல்லாஹ்வின் மீதான நம்பிக்கை உள்ளத்தில் உறுதியாகவில்லை என்பதன் அடையாளமாகும். கஷ்டங்களுக்கும் எதிர்ப்புகளுக்கும் முகம் கொடுக்க அஞ்சியவனாக ஒருவன் அல்லாஹ்வின் மார்க்கத்தை மாற்றுகிறானென்றால் அவன் அல்லாஹ்வின் அடிமையல்ல. சமூகத்தின் அடிமையாவான்.


நாம் எமது எல்லா விஷயங்களிலும் மார்க்கத்தைப் பின்பற்றுவோம். குர் ஆன் சுன்னாஹ்வை பின்பற்றுவதில் உறுதியாக இருப்போம். தெரியாதவைகளை தெரிந்து கொள்வோம். தெரிந்த விடயத்தை பின்பற்றுவோம். பின்பற்றுகையில் எழுகின்ற சர்ச்சைகளுக்குப் பொறுமையுடன் முகம் கொடுப்போம். ஒரு கொள்கைவாதியாக அல்லாஹ்வுக்காக மட்டுமே வாழ்வோம். அல்லாஹ்வின் திருப்தியைத் தவிர வேரெதற்கும் ஆசைப்படாதிருப்போம்.


ஒரு கொள்கைவாதி அல்லாஹ் அவனுக்குத் தந்தவற்றை பெற்றுக் கொண்டு அவனது நிலைப்பாட்டில் உறுதியாக இருக்க வேண்டும். அல்லாஹ் தராதவற்றுக்காக அவன் அல்லாஹ்வின் மீது திருப்தியடைந்தவனாக இருக்க வேண்டும். இவ்வாறு மார்க்கத்தைப் பின்பற்றுவதானது,


“எப்போது எமது உள்ளங்களில் ஷஹாதத்து அல்லாயிலாஹ இல்லல்லாஹ்” 


என்பது உறுதியாகப் பதியுமோ அப்போதுதான் சாத்தியமாகும்.


அல்லாஹ்வே மிகவும் அறிந்தவன்.