[அல்குர் ஆன் அல்லாஹ்வின் பேச்சா ? படைப்பா ? ]

அல்குர் ஆன் அல்லாஹ்வின் பேச்சா ? படைப்பா ? 

الحمدلله رب العالمين والصلاة والسلام على من لا نبي بعده 
أما بعد


ஏழு வானங்களின் மேலிருந்து இறக்கப்பட்ட குர்ஆனை விளங்குவதில் மிக அடிப்படையானதொரு பகுதிதான் அதன் வரைவிலக்கணத்தை அறிந்து கொள்வதாகும். அல் குர்ஆன் ஒரு வேதமாகும். இது ஏனைய நூல்களைப் போன்று ஒரு சாதாரணமான நூல் அல்ல . இவ்வாறு இது ஒரு சாதாரண நூல் 
இல்லை என்பதை தனியாக பிரித்துக் காட்டுவதற்கு அஹ்லுஸ்ஸுன்னதி வல் ஜமாஅத்தின் கொள்கையைச் சுமந்த இமாம்கள் அல்குர் ஆனின் வரைவிலக்கணத்தைக் விளக்கி கூறி இருக்கிறார்கள். அதாவது 
  •  அல் குர்ஆன் அல்லாஹ்வின் பேச்சாகும். 
  •  அது ஒரு படைப்பல்ல. 
  •  அது அவனிடமிருந்தே ஆரம்பமானது. 
  •  இன்னும் அவனிடமே திரும்பும் என்பதாகும். 
அல் குர்ஆன் அல்லாஹ்வின் பேச்சு என்று குறிப்பிட்டுக் காட்டுவதன் காரணம், முஃதஸிலா என்ற வழிகேடான கொள்கையைச் சுமந்தவர்கள் அல்லாஹ்வின் பெயர்களுக்கும் பண்புகளுக்கும் முரண்பட்ட கருத்துகளைக் கூறினார்கள். இவர்கள் தர்க்கம்

 منطق, 

தத்துவக் கல்வி

 فلسفة, 

போன்ற கிறிஸ்தவர்களினதும் யூதர்களினதும் மார்க்கங்களின் அடிப்படைகளாக இருக்கும் விடயங்களை இஸ்லாத்தினுள் புகுத்தினார்கள். 
இந்த விடயங்கள் எங்கள் மார்க்கத்தினுள் புகுந்தவுடன் அதன் பாதிப்பினால் முஃதஸிலா போன்ற கூட்டத்தினர் அல்லாஹ்வின் பெயர்களையும் பண்புகளையும் விளங்குவதற்கு தர்க்கத்தினை வழிமுறையாக ஆக்கிக் கொண்டனர். இதன் விளைவாக அவர்களின் புத்திக்கு எதுவெல்லாம் முரணாகத் தோன்றியதோ அதனையெல்லாம் தட்டிவிட / புறக்கணித்து விட ஆரம்பித்தனர். 


இதனால் ஏற்பட்ட மிக மோசமான பாதிப்புகளில் ஒன்றுதான் இவர்கள் றப்புல் ஆலமீனான அல்லாஹ்வை தங்களின் புத்தியினாலும் தமது சுய யூகமான விளக்கங்களாலும் தெரிந்து கொள்வதற்கு முயற்சி செய்தார்கள். 
அல்லாஹு ஸு ப்ஹானஹுவ தஆலா அவனுடைய பண்புகளை கொண்டு அவனைப் பற்றிக் கூறியிருப்பவற்றை முஃதஸிலாக்கள் மறுத்துக் கூறியதுடன் 
முஃதஸிலா கொள்கை சுமந்த அவர்களின் அறிஞர்கள் ஒவ்வொருவரும் எவ்வாறு அல்லாஹ்வை விளங்க வேண்டுமென்று பல யூகமான விளக்கங்களையும் கொடுத்தார்கள்.

இதன் விளைவாக நாம் வணங்கும் அல்லாஹ்வை இவர்கள் தங்களின் யூகமான விளக்கங்களைக் கூறி வேறொரு கடவுளாக உருவாக்கி விட்டார்கள். எந்த றப்புல் ஆலமீனை நாம் வணங்கின்றோமோ அந்த றப்புல் ஆலமீனை இவர்கள் இல்லாமலாக்கி விட்டார்கள். இவர்கள் தங்கள் யூகமான விளக்கத்தினால் ஒன்றை உருவாக்கி, அதற்கு அல்லாஹ் என்று பெயரைக் கொடுத்து விட்டார்கள். இதனைத்தான் இமாம் இப்னுல் கைய்யிம் (ரஹிமஹுல்லாஹ்) கஸீததுந் நூனிய்யா என்ற நூலில் பின்வருமாறு கூறினார்கள்.

முஷ்ரிக்குகள் சிலைகளை வணங்கினார்கள். ஆனால் 

تاويل தஃவீல்) 


மாற்றுக் கருத்தைக் கொடுக்கும் முஅவ்விலூன்கள் இல்லாத ஒன்றை வணங்குகிறார்கள். 

எனவே, இவர்கள் அவர்களுடைய சொந்தக் கணிப்பினால் கடவுளை உருவாக்குவதற்கு முயற்சி செய்த காரணத்தினால் தாங்கள் உருவாக்கியதற்கு அல்லாஹ் என்று பெயரைச் சொன்னாலும் அது அல்லாஹ்வாக முடியாது. 

ஏனெனில் , இஸ்லாத்திற்கும் குப்ருக்கும் இடையிலுள்ள ஒரு அடிப்படை வேறுபாடு என்னவெனில், “இஸ்லாத்தில் மாத்திரம்தான் இறைவனைப் பற்றி இறைவனே எமக்குச் சொல்லித் தருகிறான்”. அதன் மூலமே நாம் இறைவனை தெரிந்து கொள்கிறோம். ஆனால் ஏனைய மதங்களில் அவர்கள் வணங்கும் கடவுள்களைப் பற்றி அவர்களே ஒரு விளக்கத்தைக் கொடுத்து இதுதான் எங்கள் கடவுளென்று கூறுகிறார்கள். இவர்கள் இவ்வாறு தாங்களே தங்களின் கடவுளுக்கென்று ஒரு விளக்கத்தை அமைத்து விடுகின்றார்கள். 


எனவே, இவர்களுக்கு இஸ்லாம் தரும் பதில் என்னவெனில், ஒரு மனிதன் கடவுளைப் பற்றிய ரகசியங்கள் அனைத்தையும் தெரிந்து கொள்ள முடியுமென்றால் அந்த மனிதன் கடவுளை விட சக்தியுடையவனாக இருக்க வேண்டும். ஒரு மனிதனால் கடவுளின் ரகசியங்களை அறிய முடியுமென்றால் அந்தக் கடவுள் கடவுளாக இருப்பதற்குத் தகுதியற்றதாகும். 


இவ்வாறு மற்ற மதத்தவர்கள் கூறும் அதே அடிப்படையில் நாமும் எமது புத்தியினால் இதுதான் எங்கள் இறைவனின் தன்மைகளென்றும், ரகசியங்களென்றும் கூற முடியுமென்றிருந்தால் அந்த இறைவனை விடவும் நாம் அனைத்தையும் அறிந்தவர்களென்றுதான் சொல்ல வேண்டும். அவ்வாறு சொன்னால் அதனை விடவும் ஒரு பெரும் குப்ர் இருக்க முடியாது.

அல்லாஹு ஸுப்ஹானஹுவ தஆலா அவனே அவன் யாரென்று அல் குர்ஆனில் கூறியிருப்பதையும் இன்னும் நபி சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஸஹீஹான ஹதீஸ்களில் அல்லாஹ்வைப் பற்றிக் கூறியிருப்பதையும் விட்டு விட்டு யாரெல்லாம் தங்களின் தனி வழிமுறையினால் அல்லாஹ்வை உருவாக்க / வர்ணிக்க முயற்சி செய்கிறார்களோ அவர்கள் நிச்சயமாக அல்லாஹ்வை இல்லாமலாக்கி விட்டார்கள். வெறுமனே இவர்கள் அல்லாஹ் என்ற பெயரை மட்டுமே உச்சரிப்பார்கள். 


இதனால் அவர்களின் திசை மாறி அவர்கள் அல்லாஹ்வின் பெயரில் வேரொன்றை வணங்கிக் கொண்டிருப்பார்கள். அதன் காரணமாக அவர்களுடைய பயமும் கீழ்படிதலும் அல்லாஹ்வின் மீது இருக்கவில்லை. அவர்களுடைய செயற்பாடுகளில் அல்லாஹ்வை அஞ்சி நடக்கும் தன்மையை அவர்களின் உள்ளம் உருவாக்குவதில்லை. ஏனென்றால் அவர்கள் வணங்குவது அவர்களின் யூகமான விளக்கத்தினால் உருவாக்கியதொரு கடவுளையே தவிர ரப்புல் ஆலமீனான அல்லாஹ் அல்ல . 

இந்த பித்னா இஸ்லாமிய உம்மத்தில் எப்போது தோற்றம் பெற்றதோ அப்போதிருந்தே இஸ்லாமிய கல்வி ஒரு விளையாட்டான கல்வியாக மாறிவிட்டது. 


எனவேதான் அவ்வாறு விளையாடுபவன் முஸ்லிமாக இருந்தும் குர்ஆனின் விடயத்தில் அல்லாஹ்வின் மீது அச்சமின்றிப் பேசுகிறான். நபிமொழிகளோடு விளையாடுகிறான். முந்திக் அடித்துக் கொண்டு மார்க்கத் தீர்ப்புக் கொடுக்கிறான். அவனுடைய இஷ்டப் பிரகாரம் ஹராமை ஹலாலாக்குகிறான். ஹலாலை ஹராமாக்குகிறான். ஷிர்க்கை தவ்ஹீத் என்று சொல்கிறான். பித்அத்தை சுன்னா என்று சொல்கிறான். இதற்கான காரணம் அல்லாஹ்வை பற்றி மார்க்கம் சொல்லித் தந்த வரைவிலக்கணம் அவனுடைய வரைவிலக்கணமாக அமையவில்லை. அல்லாஹ்வின் பெயர்களையும் பண்புகளையும் அவனது சுய புத்தியினால் புறக்கணித்த பின்னால் அல்லாஹ்வின் சட்டங்களுக்குக் கீழ்படிவது அவனுக்குக் கடமையாகத் தோன்றாது. 


இந்த பித்னாவில்தான் முஃதஸிலா என்ற கூட்டம் மாட்டிக் கொண்டது. அதாவது அல்லாஹ் தன் பண்புகளாகவும் பெயர்களாகவும் கூறியிருக்கின்றவற்றை முஃதஸிலாக்கள் மறுத்தார்கள். உதாரணமாக கோபப்படுகிறான்; சூழ்ச்சி செய்கிறான், பேசுகிறான், இறங்குகிறான், உயர்ந்தான் போன்ற அவனது பண்புகளை முஃதஸிலாக்கள் மறுத்து அதற்குரிய காரணத்தையும் சொல்லிக் கொண்டார்கள். 


அதாவது , அல்லாஹ்வின் இப்பண்புகளெல்லாம் பலஹீனமான படைப்பினங்களுக்குள்ள பண்புகளென்று சாட்டுகளை கூறி அல்லாஹ்வுக்கு இப் பண்புகள் இருப்பது சாத்தியமில்லை என மறுத்தார்கள்.

மனிதர்களைப் பொருத்த வரை பேச்சு என்பது ஒருவன் தன் அறிவைப் பயன்படுத்தி சிந்தித்து நாவைப் பிரயோகித்து உச்சரிப்பதைத்தான் பேச்சு என்று சொல்கிறோம். அவ்வாறே, பேச்சு என்பது அல்லாஹ்வின் பண்புகளில் ஒன்றாகும். 


எனவே, அல் குர்ஆனிலும் ஹதீஸிலும் அல்லாஹ் பேசினான் என்று வந்துள்ளவற்றுக்கு முஃதஸிலாக்கள் ஒரு விளக்கத்தைக் கொடுத்தார்கள். அதாவது , அல்லாஹ் பேசுகிறானென்றால் அவனுக்கு நாவிருக்கிறதா? அவனும் அறிவினால் சிந்தித்து நாவைப் பிரயோகித்து உச்சரிக்கிறானா? போன்ற கேள்விகளைப் எழுப்பி , படைப்பினங்களின் இந்தப் பண்புகள் அல்லாஹ்வுக்கு இருக்க முடியாதென்று கூறி, அல்லாஹ் பேச மாட்டான் என மறுத்தார்கள். 


எனவே அல் குர்ஆன் அல்லாஹ்வின் பேச்சல்ல என்று கூறினார்கள். இந்த வழிகேட்டுக்கு அடிப்படைக் காரணம் அவர்கள் அல்லாஹ்வின் பண்பையும் படைப்பினங்களின் பண்பையும் சமமாகக் கருதியதுதான். அல்லாஹு ஸுப்ஹானஹுவ தஆலா அஷ்ஷுறா என்ற அத்தியாயத்தில் 11 வது வசனத்தில் பின்வருமாறு கூறுகிறான்அவனைப் போன்று எப்பொருளுமில்லை. அவன் அனைத்தையும் செவியேற்பவனும் அனைத்தையும் காண்பவனுமாவான். 

அவனைப் போன்று எதுவுமில்லையென்றால், நாம் எவ்வாறு எமது செயலையும் அல்லாஹ்வின் செயலையும் ஒரே தன்மையுடைதாகக் கருத முடியும்? அல்லாஹ்வுக்குள்ள பெயர்களும் பண்புகளும் அவனுக்கு மாத்திரமே தனித்துவமானவையாகும். 


முஃதஸிலாக்களினால் உருவாக்கப்பட்ட இந்த பித்னாவில் தென்னிந்தியாவைச் சேர்ந்த பி. ஜே. என்பவரும் மாட்டிக் கொண்டார். அல்லாஹ்வின் பண்புகளை மறுக்கும் போக்கு இவரிடமும் இருக்கிறது. தவ்ஹீதைப் பிரச்சாரம் செய்கிறேன் என்று முன்வந்து இறுதியில் அல்லாஹ்வின் பண்புகளுக்கு மாற்றுக் கருத்தைக் கூறி மறுக்கும் போக்கைக் கையாண்டு தவ்ஹீதை நிலைநாட்ட வந்தவர் குப்ரைப் பிரச்சாரம் செய்கிறார்.

இவ்வாறு , அல்லாஹ்வின் மீதான நம்பிக்கையில் வழிகேடான கருத்துகளைப் புகுத்தி நம்பிக்கையைக் குழப்பிவிட்ட முஃதஸிலாக்களின் நோயினால் இந்த இஸ்லாமிய உம்மத் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. 

முஃதஸிலாக்கள் அல்லாஹ்வின் பண்புகளை மறுத்தார்கள். அதனால்தான் அல்லாஹ்வின் பேச்சு என்ற பண்பையும் மறுத்தார்கள். இதன் காரணமாக அல் குர்ஆன் அல்லாஹ்வின் பேச்சல்ல என்றும் அதனை அல்லாஹ் ஒரு படைப்பாகவே அவனது தூதருக்கு அனுப்பினான் என்றும் இவர்கள் தங்களின் விளக்கத்தைக் கொடுத்தார்கள். 


இந்த வழிகேடான கருத்து வெளிவந்த போது உடனே உலமா உல் முஸ்லிமீன் இதற்கு மறுப்பாக பதில் கொடுத்தார்கள். அல் குர்ஆன் படைப்பல்ல என்றும் அது அல்லாஹ்வின் பேச்சென்றும் அவ்வறிஞர்கள் கூறினார்கள். இதன் அடிப்படை விடயமான அல்லாஹ்வின் பெயர்களையும் பண்புகளையும் விளங்குவது எப்படி என்பதை விளக்கினார்கள். அல்லாஹ்வின் பெயர்களிலும் பண்புகளை விளங்குவதில் கையாளக் கூடாத வழிமுறைகளை விளக்கமாக ஆதாரங்களுடன் சுட்டிக் காட்டினார்கள். அல்லாஹ்வுக்குள்ள பெயர்களும் பண்புகளும் அவனுக்கு மாத்திரமே தனித்துவமானவையாகும் என்பதை நிறுபித்தார்கள் .


Taken from Nabi Wali Nam Wali April Magazine.