[அகீதாவும் அது சம்பந்தமான ஆக்கங்களும்]

பிரிவுகளை தவிர்ந்திருப்பதும் அல் ஜமாத்தோடு இணைந்திருப்பதும்

இன்று எமது முஸ்லிம் சமூகம் – பிரிவுகள் என்றால் என்னவென்பதையும் அல் ஜமாஅத் என்றால் என்னவென்பதையும் தெளிவாக விளங்காத சமூகமாக இருக்கின்றது. பிரிவு என்பதற்கும், அல் ஜமாஅத் என்பதற்கும் இஸ்லாம் என்ன வரை விலக்கணத்தைக் கொடுத்திருக்கிறது என்பதை நாம் அறிந்து கொள்வது நமக்கு பயனளிக்கக்கூடிய ஒன்றாக அமையும். அதனையே நான் உங்கள் முன் தெளிவுப்படுத்த ஆசைப் படுகிறேன்.

    நாம் எது பிரிவு என்பதையும் எது பிரிவு இல்லையென்பதையும் எவ்வாறு அடையாளம் கண்டு கொள்வது? யார் பிரிவிலே சேர்ந்தவர்கள், இன்னும் யார் அல் ஜமாஅத்தில் உள்ளவர்கள் என்பதையும் நாம் புரிந்து கொள்ள சில அடிப்படைகளை முன் வைக்கலாம் என நினைக்கிறேன்.

    பிரிவு என்ற விடயத்தினை அல்லாஹூ த ஆலா குர் ஆனிலே தெளிவாக “ஹிஸ்புல்லாஹ் – அல்லாஹ்வுடைய கூட்டம்” என்றும், “ஹிஸ்புஷ் ஷைத்தான் – ஷைத்தானுடைய கூட்டம்” என்றும் கூறிவிட்டான். எனவே கூட்டம் எனும் பொழுது அனைவருக்கும் ஒரு கூட்டம் இருப்பது உண்மையான ஒன்றாகும்.அது அல்லாஹ்வுடைய கூட்டமாக இருக்கலாம் அல்லது ஏனைய பாதைகளில் செல்லும் கூட்டங்களாகவும் இருக்கலாம். இங்கு இரு சாராரும் தங்களுக்கென்று ஒரு கூட்ட்த்தை சார்ந்தவர்களாகவே இருக்கின்றார்கள். இந்த விடயத்தை ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லாம் அவர்கள் கூறும் போது :

  • ”ஃப(F)அததில் தில்க ஃபி(F)ரக குல்லஹா ”

  • ”அனைத்து பிரிவுகளையும் தவிர்ந்து கொள்ளுங்கள்.”

என்று தானும் தனது தோழர்களும் தவிர்ந்த மற்ற ஏனைய பிரிவுகளையும் தவிர்ந்திருக்கும் படி ஏவினார்கள். எனவே தவிர்ந்திருப்பது என்பது ரஸூலுல்லாஹ்வும் ஸஹாபாக்களும் இருந்த அந்த கூட்டத்தை தவிர உள்ள ஏனைய அனைத்து கூட்டங்களையும் தவிர்ந்திருப்பதே தவிர நாம் ஒரு கூட்டமாக இல்லாமல் இருக்க முடியாது. நாம் ஹிஸ்புல்லாஹ் எனும் அல்லாஹ்வின் கூட்டமாக இருக்க வேண்டியிருப்பது ஒரு எதார்த்தமான உண்மையாகும். எனவே அனைத்து பிரிவுகளுக்கும் முரணான கூட்டமான நபித் தோழர்கள் எனும் கூட்டத்தின் அடிச்சுவடுகளோடு செயல்ப்படுகின்ற கூட்டத்திற்கென்று அடிப்படையான நூல்கள் இருக்கின்றன. அவர்களுக்கென்று உலமாக்களும் , பாதையும் இருக்கின்றன. இந்த பாதையில் சென்றவர்களுகென்று ஒரு வரலாறு இருக்கின்றது. வரலாற்றிலே அஹ்லுஸ் ஸுன்னத்தி வல் ஜமாஅத், ஸலஃபு ஸாலிஹீன், அஹ்லுல் ஹதீஸ், அஹ்லுல் கிதாபி வஸ் ஸூன்னஹ் என்ற பல பெயர்களோடு வந்திருக்கும் அந்த ஒரே பாதையில் வந்த உலமாக்கள் அனைவரையும் கவனிக்கையில் ஃபிக்ஹின் அடிப்படையிலும், ஹதீஸின் அடிப்படையிலும், அவர்களின் இஃதிகாதின் அடிப்படையிலும் அவர்களுக்கென்று ஒரு மன்ஹஜ்(வழிமுறை) இருப்பதை நீங்கள் காணலாம். அதே பொன்று அவர்களுக்கென்று நூல்கள் இருக்கின்றன. அவர்களுக்கென்று ஒரு குறிப்பிட்ட பாதை உள்ளது. யாரெல்லாம் அவர்களுடைய நூல்களையும் அவர்களது பாதைகளையும் அவர்களின் வழிமுறைகளையும் தவிர்ந்து கொண்டு மார்க்கத்திலே விளக்கங்களை எடுக்க வந்தார்களோ அவர்கள் அனைவருக்கும் அவர்கள் அல் ஜமாஅத்தின் பாதையை தவிர்ந்து கொண்டதன் அடையாளமாக அவர்களுக்கென்று ஒரு பட்டத்தை உலமாக்கள் கொடுத்து விட்டார்கள். இதனடிப்படையில் தான் அபுல் ஹஸன் அஷ்அரி உருவாக்கிய வழிமுறைகளைக் கையாண்டவர்களுக்கு அஷ்அரிய்யா என்று பட்டம் கிடைத்தது. அபுல் ஹஸன் அஷ் அரி கொடுத்த விளக்கத்தைச் சுமந்தவர்கள் அஷ் அரிய்யா என்று அழைக்கப் பட்டார்கள்.

    அதே போன்று அபூ மன்சூர் அல் மாத்ரூதி என்பவரது விளக்கத்தைச் சுமந்த விடயங்கள் மாத்ரூதி என்ற பட்டத்துடன் அழைக்கப் பட்டது. அகீதா விடயங்களாக இருந்தாலும் மாத்ரூதி அகீதா என்றுதான் பிரித்துக்காட்டப் பட்டது. ஜஹம் இப்னு ஸஃப்வான் என்பவர் கொண்டு வந்த விளக்கம் ஜஹ்மிய்யா என்று அழைக்கப் பட்டது. அதே வழியில் தான் இன்று வாழ்ந்து கொண்டிருக்கும் முஹம்மது இப்னு ஸுரூர் என்பவர் தவ்ஹீதின் பெயரிலும் குர் ஆன் சுன்னா பெயரிலும் ஸலபுகளின் பெயரிலும் மக்களை மயக்கி ஸலபுகளின் வழிமுறைகளையும், ஸலபுகளின் நூல்களையும், அடிப்படைகளையும், உலமாக்களையும் தவிர்ந்துக் கொண்டு தனக்கென்று ஒரு பாதையையும் விளக்கத்தையும் உருவாக்கியதால் உலமாக்கள் இதற்கு ஸுரூரிய்யா என்று பட்டம் கொடுத்து விட்டார்கள். ஸஹாபாக்களின் வழிமுறையைத் தவிர்ந்து நடந்ததால் ஸுருரிய்யா என்ற பட்டம் கிடைத்துவிட்டது. எனவே பிரிவு என்று கூறப்படுவது என்னவெனில், அதுதான் ஸிராத்துல் முஸ்தகீம் என்ற பாதையை தவிர்ந்துள்ள மற்ற ஏனைய பாதைகளாகும். ஸிராத்துல் முஸ்தகீம் என்பது ஸஹாபாக்கள், தாபிஈன்கள், தப உ தாபிஈன்கள் அதனைப் பின் தொடர்ந்த அஇம்மத்துல் முஸ்லிமீன்கள் (முஸ்லிம் இமாம்கள்) இன்னும் அதே பாதையில் அன்றிலிருந்து இன்றுவரை இன்னும் கியாமத் நாள் வரை இருக்கும் அஹ்லுஸ் ஸுன்னத்தி வல் ஜமாஅத்தின் பாதையாகும். இங்கு உசூல் ஆகட்டும், பிக்ஹ் ஆகட்டும், மன்ஹஜ் ஆகட்டும், அகீதா ஆகட்டும், நூல்களாகட்டும், வரலாறாகட்டும், உலமாக்களாகட்டும் இவையனைத்திலும் அஹ்லுஸ் ஸுன்னத்தி வல் ஜமாஅத் அதற்கென்ற ஒரு தனித் தன்மையுடைய கூட்டமாக இருக்கின்றது. இதனை தவிர்ந்துள்ள ஏனைய நூல்களையும், அகீதாவையும், உசூலையும் எடுத்தவர்கள் அந்தந்த கூட்டங்களின் தகுதிக்கு சாத்தியமான பட்டத்தை கொடுக்கப் பெற்றார்கள். இவ்வாறு பட்டம் கொடுப்பது அன்று முதல் இன்று வரை உலமாக்களுடைய வழிமுறையாகவே இருந்து வருகிறது. குறிப்பாக அகீதாவிலும் மன்ஹஜிலும் வேறு பாதையில் இருந்தால் அவர்களுக்கு உலமாக்கள் அஹ்லுல் பித் அத் என்றே பட்டம் கொடுத்து விடுவார்கள். ஆனால் இதனை தவிர்ந்துள்ள ஏனைய ஃபிக்ஹ் விடயங்களில் அல்லது ஏனைய ஆராய்ச்சி விடயங்களில் முரண்பட்டால் அந்தந்த விடயத்தில் மட்டுமே தவறிழைத்தவர்களாக உலமாக்கள் குறிப்பிடுவார்கள். ஒரு குறிப்பிட்ட விடயத்தில் ஒருவர் தவறிழைத்தால் அது விடயத்தில் இது இன்னின்ன மத்ஹப் அடிப்படையில் கொடுக்கப்பட்ட தீர்ப்பாக இருக்கலாம். அல்லது இன்னின்ன மத்ஹப்களின் விளக்கத்திலிருந்து இவர் எடுத்து இருக்கிறார். எனவே இது ஆதாரத்தின் அடிப்படையில் தவறானது என்று தான் உலமாக்கள் தீர்ப்பளிப்பார்களே தவிர சரியான பாதையில் செல்லும் ஒருவரின் விடயத்தில் அவர் ஒரு பித் அத்வாதி என்று தீர்ப்பளிக்க மாட்டார்கள். இதற்கு உதாரணமாக, இமாம் இப்னு தைமிய்யாவின் நூல்களை கூறலாம். இமாம் இப்னு தைமிய்யா(ரஹ்மத்துல்லாஹி அலைஹி) ஒரு விடயத்தில் தீர்ப்பை கொடுத்துவிட்டுக் கூறுவார்:

“இன்னின்ன விடயத்தில் முஃதஸிலாவைச் சேர்ந்தவர்கள் இன்னின்ன கருத்தை கூறுகிறார்கள். இன்னார் இன்னாரெல்லாம் இந்த கருத்தில் உள்ளார்கள். இன்னின்னார் இந்த கருத்தை மறுக்கின்றனர். அஷாயிராவின் கருத்தில் இன்னின்ன ஃபுக்கஹாக்கள், முஃதஸீன்கள் இருக்கிறார்கள்.”

என்றவாறு ஒவ்வொருவரது கருத்துக்கும் அவரவர் தராதரத்தை அவரின் சரியான மற்றும் தவறான நிலைக்கேற்ப பிரித்துக் காட்டுகிறார் இமாம் இப்னு தைமிய்யா(ரஹ்மத்துல்லாஹி அலைஹி). இவ்வாறு காட்டுவதன் காரணம் சிலர் சில விடயங்களில் வழிகேட்டின் கருத்தில் இருந்தாலும் வேறு சில விடயங்களில் அஹ்லுஸ் ஸுன்னத்தி வல் ஜமாஅத்துடன் சேர்ந்தவர்களாக இருக்கின்றார்கள். உலமாக்களின் இந்த வழிமுறையானது அவர்கள் ஒருவரின் விடயத்தில் தீர்ப்பளிப்பதில் அகீதாவையும் மன்ஹஜையும் அளவு கோளாக் கொண்டு மிகவும் கவனமாக அவதானித்த பின்பு  தீர்ப்பளிப்பதை காட்டுகின்றது.

    இதன் அடிப்படையில் பிரிந்து போவதென்பதன் பொருள் என்னவென்றால், அதுதான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் காட்டித் தந்த பாதையிலிருந்தும் பிரிந்து போவதாகும். இவ்வாறு பிரிந்து போவதென்பது ஒருவரின் ஆராய்ச்சி செய்யும் அணுகுமுறையினால் அவர் நேரான பாதையை விட்டு பிரிந்து விடக் கூடும். அல்லது கண்மூடித்தனமான பின்பற்றுதலினால் அல் ஜமாத்தின் பாதையை விட்டும் பிரிந்து செல்லலாம். அதே போன்று அறியாமையினாலும் அந்தப் பாதையை விட்டும் விலகிச் செல்லலாம். இன்னும், பெருமையினாலும், உலக லாபங்களினாலும், ஏனைய பல காரணங்களினாலும் கூட பிரிந்து போவதென்பது சாத்தியமானதாகும்.  எவ்வாறிருப்பினும் நேரான பாதையிலிருந்து பிரிந்து போய்விட்டால் அவர்கள் பல பிரிவுகளாக பிரிந்து விடுவார்கள். அதே போன்று நேரான பாதையின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி அதனோடு சேர்ந்திருப்பவர்கள் அல் ஜமாத்தோடு சேர்ந்திருப்பார்கள். இதுதான் பிரிவு என்பதற்கு அல்லது பிரிந்து போதல் என்பதற்கு இஸ்லாம் கூறும் வரைவிலக்கணம் ஆகும்.

    பிரிவு என்னும் விடயத்தை நன்கு ஆழமாக விளங்கிக் கொள்ளுங்கள். ஸலபு ஸாலிஹீன்கள் (நேரான வழியில் சென்ற முன்னோர்கள்) என்பவர்கள் ஒரு பிரிவை சேர்ந்தவர்களல்ல என்று சொல்ல முடியாது. நிச்சயமாக அவர்களும் அவர்களின் பாதையில் வாழ்க்கூடியவர்களும் ஒரு பிரிவு தான். அதுதான் உம்மத்தின் 73 பிரிவுகளில் ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உருவாக்கிய பிரிவான இந்த உம்மத்தில் முதல் பிரிவாகும்.அதுதான் ஹிஸ்புல்லாஹ் என்னும் அல்லாஹ்வின் கூட்டம். இந்த உம்மத்தின் முதல் பிரிவான அல்லது முதல் கூட்டமான ரஸுல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் உருவாக்கிய நபித்தோழர்கள் எனும் கூட்டத்தின் அடிச்சுவடுகளில் அவர்கள் பாதையில் இயங்கும் அனைவரும் ஹிஸ்புல்லாஹ் எனும் அல்லாஹ்வின் கூட்டத்தை சேர்ந்தவர்களே! நாம் அவர்களின் அடிப்படையோடு, உஸுலோடு செயற்படுகின்ற காலமெல்லாம் நாமும் அந்த கூட்டத்தோடு சேர்ந்தவர்களாக இருப்போம். அந்த உஸுலை விட்டும் நாம் வேறுத் திசைக்கு திரும்பிவிட்டால் எம்மை அந்த கூட்டத்திலிருந்து பிரித்து கொள்வோம்.

எமது முஸ்லிம் சமூகம் அல் ஜமாஅத் என்றால் என்னவென்பதை விளங்கியிருப்பது ஜமாஅதுன் என்ற பொருளிலாகும். அல் ஜமாஅத் என்பதும் ஜமாஅதுன் என்பதும் கருத்தளவில் வேறுப்பட்டதாகும். எனவே அல் ஜமாஅத் என்பதை ஜமாஅதுன் என்ற பொருளில் விளங்கியதன் காரணத்தினால் இச்சமூகம் பாதையில் தெளிவற்ற திசையில் சென்று கொண்டிருக்கிறது. இந்நிலை எமது சமூகத்தில் தோன்றியிருக்கும் ஒரு பலஹீனமான தன்மையாகும். இந்த தவறான விளக்கத்தினால் யாரேனும் ஒரு கூட்டத்தை சேர்த்துக் கொண்டு அதுவும் ஒரு ஜமாஅத் என்று கூறிக் கொண்டு தாங்களும் ஒரு ஜமாஅத்தோடு சேர்ந்திருப்பதாக கூறித் தங்களின் வழிமுறைகளைச் சரிக் காணுகிறார்கள். ஆனால் இதற்கு மாறாக ரசூல்லுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களோ அல் ஜமாஅத்துடன் சேர்ந்து கொள்ளுமாறு தான் உருவாக்கி விட்டு சென்ற அந்தக் குறிப்பிட்ட ஜமாஅத்தான நபித்தோழர்களின் பாதையுடன் சேர்ந்திருக்குமாறு தான் வழிக்காட்டி சென்றார்கள். அரபியில் ஜமாஅதுன் என்ற பொருள் பொதுவாக “கூட்டம் ” என்று பொருள்படும். ஆகவேதான் நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தான் உருவாக்கிய அந்த ஜமாஅத்தோடு சேர்ந்திருக்குமாறும் அதனை விட்டும் பிரிந்து விட வேண்டாமென்றும்  ஏவினார்கள். அதன் பொருள் என்னவென்றால், நபியும் நபித்தோழர்களும் எந்தப் பாதையில் சென்றார்களோ அந்தப் பாதையின் அடிச்சுவட்டுடன் செல்வதும் அதுவல்லாத அதற்கு முரண்படும் ஏனைய பாதைகளையும் அதன் அடிச்சுவடுகளையும் பின்பற்றாது தவிர்ந்திருப்பதும் ஆகும்.

    ரசூல்லுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் காட்டிய பாதையை அறிந்து கொண்டால் இன்னார் அன்னாரெல்லாம் உருவாக்கிய ஜமாஅத்களெல்லாம் அல் ஜமாஅத்தாக இருப்பதற்கு சாத்தியமோ தகுதியோ இல்லை என்பதை விளங்கி விடலாம். இதன் அடிப்படையில் அல் ஜமாஅத் என்பதற்கு இருக்கும் சிறப்புகளும் அதன் பாதையில் இருப்பவர்களுக்கு(அஹ்லுஸ் ஸுன்னத்தி வல் ஜமாஅத்ச் சேர்ந்தவர்களுக்கு)  இருக்கும் சிறப்புகளும் ஏனைய அனைத்து ஜமாஅத்களுக்கும் இருப்பது தகுதியற்றதும் சாத்தியமற்றதுமாகும். அவ்வாறு கருதுவது சரியான விளக்கத்தின் எல்லைக்கு வெளியே சென்று பெற்றுக் கொள்ளப் பட்டிருக்கும் விளக்கமாகும். இவ்வாறு எல்லையின் வெளியே விளக்கத்தை பெற்றவர்கள் அல் ஜமாஅத்தின் பாதையை பின்பற்றுவதை ஏற்றுக் கொள்ளாதவர்களாக நபிகளாரின் ஹதீஸின் வார்த்தை பலஹீனமானதென வாதிடுகிறார்கள்.

அந்த நபிகளாரின் வார்த்தைகளாவது:

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:

    எனது உம்மத் 73 கூட்டங்களாக பிரியும். அதில் அனைத்தும் நரகம் செல்லும். ஒரு கூட்டத்தை தவிர!

இதனை கேட்ட நபித்தோழர்கள் சுவனம் செல்லும் அந்த ஒரு கூட்டம் யார் என வினவினார்கள். அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் “அது தான் அல் ஜமாஅத்” என்று கூறினார்கள்.இன்னுமொரு அறிவிப்பில் “யார் இன்று நானும் என் தோழர்களும் இருக்கும் நிலைப்பாட்டில் இருக்கின்றார்களோ அவர்கள்” என்று கூறினார்கள்.

இந்த ஹதீஸில் வந்துள்ள வார்த்தையான ”அல் ஜமாஅத்” என்பதை தவறான கருத்தில் விளக்கம் கொடுத்து ஒவ்வொருவரும் தாங்கள் சார்ந்திருக்கும் ஜமாஅத்களுக்கு சார்பாக ரசூல்லுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அல் ஜமாஅத்தோடு சேர்ந்திருக்குமாறு ஏவியிருப்பதை ஆதாரம் காட்டி ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு ஜமாஅத்தோடு நேர்வழியின் பாதையாக எடுத்துக் கொண்டார்கள். அது மட்டுமல்லாது நபிகளாரின் ஹதீஸில் இன்னுமோரு வழியில் வந்துள்ள அறிவிப்பான “யார் இன்று நானும் எனது தோழர்களும் இருக்கும் நிலைப்பாட்டில் இருக்கிறார்களோ அவர்கள்” என்ற அறிவிப்பை பலஹீனமான அறிவிப்பு எனக் கூறி நபித்தோழர்களின் பாதையை பின்பற்றாமல் தங்களுக்கென ஒரு பாதையை ஜமாஅத்களின் பெயரில் உருவாக்கி கொண்டார்கள்.

    இன்றைய காலத்தில் பலஹீனமான கல்வியைச் சுமந்தவர்களும் தரமான கல்வியைச் சுமக்காதவர்களும் “மா அன அலைஹி வ அஸ்ஹாபில் யவ்ம்” என்ற ஹதீஸை ழயீஃபான ஹதீஸ் ஆக்குவதற்கு போராடுகிறார்கள். இதனை கூறுபவர்களில் இன்று முக்கியமான ஒருவர்தான் யூசுஃப் அல் கர்ளாவி என்பவர். இவரை போன்றவர்கள் ஏற்படுத்திவிட்ட ஃபித்னாவை பற்றி 1997-இல் இந்தோனேசியாவில் அஹ்லுல் ஹதீஸின் நிலைப்பாடு பற்றிப் பேசப்பட்ட ஒரு ஒன்றுகூடல் நிகழ்ச்சியில் எனக்கு சந்தர்ப்பம் கிடைத்தப்போது   நான் அந்த மக்களுக்கு அரபி மொழியில் எத்திவைத்தேன். அது என்னவென்றால் “மா அன அலைஹி வ அஸ்ஹாபில் யவ்ம்(இன்று நானும் எனது தோழர்களும் இருந்த நிலைப்பாட்டில் இருந்தவர்கள்)” என்று வருகின்ற ஹதீஸின் அறிவிப்பாளர் தொடரில் அப்துர் ரஹ்மான் பின் ஸியாத் பின் அன்அம் அல் அப்ரிகி என்ற அறிவிப்பாளர் வருகிறார். இமாம் லாலகாயீ(ரஹ்மத்துல்லாஹி அலைஹி) மற்றும் இமாம் அஹ்மது (ரஹ்மத்துல்லாஹி அலைஹி) ஆகியோர் தங்களின் நூல்களில் இந்த அறிவிப்பாளரின் அறிவிப்புடன் பதிவு செய்து இருக்கிறார்கள். இந்த ராவியிடம் காணப்பட்ட பலஹீனமானத் தன்மையை காட்டி அந்த ஹதீஸை பலஹீனமானதென கூறி தட்டி விட்டார்கள்.

    இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் தொடரில் வருகின்ற அப்துர் ரஹ்மான் இப்னு ஸியாத் இப்னு அன் அம் அல் அப்ரீகி என்பவர் முஃஹத்திஸீன்களின் கணிப்பில் (ஸூதூகுன் யஹ்திப் கதீர்) அதாவது, உண்மையானவர் ஆனாலும் தவறிழைப்பவர். சில முஃஹத்திஸீன்கள் இவரது இந்த பலவீனத்தைக் கவனித்து இவரின் அறிவிப்பை ழயீஃப் – பலஹீனமானதென்று முடிவு செய்திருக்கிறார்கள். இருப்பினும் இமாம் அஹமத் இப்னு ஹம்பல், இமாம் இப்னு ஹஜர் அஸ்கலானி, இமாம் இப்னு தைமிய்யா, இமாம் தஹபி, இமாம் ஆஜுரி, இமாம் இப்னு பத்தல் அலி அக்பரி, இமாம் இப்னு ஹல்லால், இமாம் அபுல் காஸிம் அல் லாலகாயி இன்னும் பல முஹத்திஸீன்கள் அந்த அறிவிப்பாளர் அறிவித்த மேற்சொன்ன ஹதீஸ் ஸஹீஹானதென்று நிருபித்துவிட்டார்கள். எந்த அளவுக்கெனில் இமாம் ஸன் ஆனி (ரஹ்மத்துல்லாஹி அலைஹி) ’ஷரஹ் ஹதீஸ் இப்திராகுல் உம்மாஹ்’ என்ற பெயரில் இந்த ஹதீஸை ஸஹீஹ் என்று நிருபிப்பதற்காக ஒரு தனி நூலையே எழுதிவிட்டார்கள். இந்நூலில் இமாம் ஸன் ஆனி (ரஹ்மத்துல்லாஹி அலைஹி) இந்த ஹதீஸுடைய அறிவிப்பாளர் தொடர் ஸஹீஹானதென்று நிருபித்துவிட்டார்.

    ”ஹதீஸ் இப்திராகுல் உம்மாஹ்”  என்ற ஹதீஸை பலஹீனப்படுத்துவதற்கு யூஸுப் அல் கர்ளாவி போன்றவர்கள் இன்னும் ஒரு ஆதாரமாக இமாம் முஹம்மத் இப்னு இப்ராஹிம் இப்னுல் வஸீர் (ரஹ்மத்துல்லாஹி அலைஹி) அவர்கள் தனது ”அல் அவாஸிம் மினல் கவாஸிம் ஃபி தப்இ ஸுன்னத்தி அபில் காஸிம்” என்ற நூலில் மேற்கண்ட ஹதீஸ் பலஹீனமாதென்று கூறியிருக்கிறார் என ஆதாரம் காட்டுகிறார்கள். இந்த வாதம் கல்வியை தரமாக பெற்று கொள்ளாதவர்கள், நூல்களின் மீதும் செய்யும் அநியாயமாகும். இந்த விடயத்தை விளக்கமாக கூறினால், இமாம் முஹம்மத் இப்னு இப்ராஹிம்  இப்னுல் வஸீர் (ரஹ்மத்துல்லாஹி அலைஹி) அவர்கள் யமன் நாட்டில் ஒரு காலத்தில் ஸைதி மத்ஹபில் ஒரு தரமான இமாமாக இருந்தவர். அவருடைய கல்வியின் தரத்தினைக் கூறுவதாயின் இமாம் இப்னு வஸீர் வாலிபராக இருக்கும்போதே அன்று யமனில் வாழ்ந்த உலமாக்கள் இவரிடமிருந்து மார்க்கத் தீர்ப்புகள் பெற்றுச் செல்வதற்காக வருபவர்களாக இருந்தார்கள். அன்று ஸைதி மத்ஹபின் தலைச்சிறந்த ஒரு அறிஞராக இமாம் இப்னு வஸீர் இருந்தார்கள். இவருடைய மார்க்க வகுப்புகள் வாரத்தில் இரு தடவைகள் பள்ளிவாசலில் நடந்தது. இந்நிலையில் திடீரென்று இமாம் இப்னு வஸீர் (ரஹ்மத்துல்லாஹி அலைஹி) அவர்கள் தான் நடத்தி வந்த வகுப்புகளை நிறுத்தி விட்டார். அவர் நிகழ்த்தி வந்த உபதேசங்களை நிறுத்திக் கொண்டார். சில காலம் தனது வீட்டிலேயே தனது நாட்களை கழித்தார். பின்னர் ஒரு புதிய கொள்கையோடு வெளியே வந்தார். அதுதான் ஸைத்திய்யா, ஷாஃபிஈ என்கின்ற மத்ஹப்களெல்லாம் பிழையான பாதைகள். இவைகளெல்லாம் சரியான பாதையல்ல. சரியான பாதையென்பது குர் ஆனும் சுன்னாவும் ஸஹாபாக்கள் பின்பற்றிய வழிமுறையில் பின்பற்றப்பட வேண்டும். ஸஹாபாக்கள் மார்க்கத்தை விளங்கிய முறையில் தான் நாமும் விளங்க வேண்டும்                  [அல்  குர் ஆன் வஸ்ஸுன்னா பிமா காண அலைஹிஸ் ஸஹாபா] என்ற கொள்கையோடு இமாம் முஹம்மத் இப்னு இப்ராஹிம் இப்னு அல் வஸீர் (ரஹ்மத்துல்லாஹி அலைஹி) அவர்கள் ஒரு மாற்றத்துடன் வெளியே வந்தார். அவர் இந்தப் பாதையை இமாம் இப்னு தைமிய்யா உடைய நூல்களின் மூலமும், இமாம் இப்னுல் கைய்யும் (ரஹ்மத்துல்லாஹி அலைஹி) உடைய நூல்களின் மூலமும் பெற்றுக் கொண்டார். இவ்வாறு இமாம் இப்னுல் வஸீர் (ரஹ்மத்துல்லாஹி அலைஹி) மாறியவுடன் இதுவரை அவரை மதித்து வந்த உலமாக்களெல்லாம் அவருக்கு எதிரிகளாக மாறினார்கள். இமாம் இப்னுல் வஸீருக்கு எதிராக குற்றச்சாட்டுகளும் குறைகளும் இழிவுபடுத்துதலும் அனைத்து திசைகளாலும் வந்து சேர்ந்தன. இவைகளை கவிதைகளாகவும் நூல்களாகவும் எழுதிக் குவித்தார்கள். இந்தக் குற்றச் சாட்டுகளுக்கெல்லாம் பதிலாக இமாம் இப்னுல் வஸீர் ஒரு நூலை எழுதினார். அதுதான் ”அல் அவாஸிம் மினல் கவாஸிம் ஃபி தப்இ ஸுன்னத்தி அபில் காஸிம்” என்ற தலைப்பிலான நூல். இந்நூலின் தலைப்பின் பொருளாவது : ”அபுல் காஸிம் (முஹம்மத் ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) ஸுன்னத்திற்கு நடக்கும் பேரழிவிலிருந்து தடுப்பது” என்ற 9 பாகங்களில் இந்த நூலை எழுதி முடித்தார்.

இந்நூலில் கவிதைகளாக வந்த குற்றச் சாட்டுகளுக்கு கவிதைகளினால் பதில் கொடுத்தார். உஸுல் விடயத்தை உஸுலினால், ஃபிக்ஹ் விடயத்தை ஃபிக்ஹினால் என அவ்வடிப்படையில் பதில் கொடுத்தார். இவ்வாறு பதில் கொடுக்கையில் (மா அன அலைஹி வ அஸ்ஹாபிலஹி) “எதிலே நானும் எனது தோழர்களும் இருக்கின்றோமோ...” என்று வந்திருக்கும் ஹதீஸை இமாம் இப்னுல் வஸீர் ஆராய்கையில் இந்த ஹதீஸின் அறிவிப்பாளர்கள் தொடர்பில் பலஹீனம் காணப்படுகின்றது என்பதைக் குறிப்பிட்டு காட்டுகிறார். இதனை கூறிவிட்டு அந்த ஹதீஸில் கூறப்பட்ட விடயமான ‘ஸஹாபாக்களின் பாதையே நேரான பாதை’  என்கின்ற விடயத்தை தான் தனது 9 பாகங்களாக அமைத்த நூலில் நிருபிக்கின்றார். மேற்சொன்ன ஹதீஸின் அறிவிப்பாளர் தொடரில் பலஹீனம் இருப்பினும் ஹதீஸில் வந்துள்ள விடயம் ஏனைய ஹதீஸ்களின் அறிவித்தல் ரீதியாக ஸஹீஹானதென்று காட்டுகின்றார். இதனை தங்களுக்கு சார்பாக பிடித்துக் கொண்ட யூசுஃப் அல் கர்ளாவி, ஸலஃபி இமாமான இப்னுல் வஸீர் அவர்களே இந்த ஹதீஸை பலஹீனம் ஆக்கியிருக்கின்றார் என ஆதாரம் காட்டுகிறார். இமாம் முஹம்மத் இப்னு இப்ராஹிம் இப்னுல் வஸீர் (ரஹ்மத்துல்லாஹி அலைஹி)  அந்த நூலை எழுதியதன் நோக்கமே ஸஹாபாக்களின் பாதையே சரியானது என்பதை நிரூபிப்பதற்காகத்தான். இதனை கவனிக்காத அறிவிலிகள் நூல்களின் பெயரிலேயே பொய்களைக் கூறி ஸஹாபாக்களின் வழிமுறையைக் குறைக்காண போராடுகின்றனர். யூசுஃப் அல் கர்ளாவி 1985-1986 காலப்பகுதியில் வெளிவந்த முஜ்தமா என்கின்ற இஹ்வானுல் முஸ்லிமீன் இயக்கத்தின் சஞ்சிகையில் “மா அன அலைஹி வ அஸ்ஹாபிஹி” என்ற ஹதீஸை பலஹீனமானதென நிரூபிக்கப் போராடினார். இது உலமாக்களின் பெயரிலும் நூல்களின் பெயரிலும் செய்யப்படுகின்ற அநியாயமாகும்.

    இமாம் இப்னுல் வஸீர் (ரஹ்மத்துல்லாஹி அலைஹி) பற்றிக் குறிப்படுவதென்றால், இமாம் ஸன் ஆனியும் இமாம் ஷவ்கானியும் மன்ஹஜிலே (பின்பற்றும் வழிமுறையிலே) ஸலபுஸ் ஸாலிஹீன்களுடைய பாதையைப் பெற்றுக் கொண்டதற்கு  இமாம் இப்னு வஸீருடைய நூல்கள் முக்கிய இடம் வகிக்கின்றன. இப்படிப்பட்டதொரு இமாமின் பெயரில் ஸலபுஸ்ஸாலிஹீன்களுக்கு எதிரான பாதையில் செல்கின்ற இயக்க வெறி சுமந்தவர்கள் இமாம் இப்னுல் வஸீர் கூறியதாக கூறி ஹதீஸை பலஹீனம் காண்கின்றார்கள். இந்த வாதத்தை இலங்கை, இந்தியா, மலேசியா, இந்தொனேசியா போன்ற நாடுகளில் ஜமாஅத்தே இஸ்லாமி என்ற பெயரில் பிரச்சாரம் செய்கின்ற வெறியை தூண்டுகின்ற கூட்டங்கள் பரப்பி வருகின்றன. இந்தக் கூட்டங்கள் யூசுஃப் அல் கர்ளாவியின் பேச்சை ஒரு சிறப்பான ஆராய்ச்சியாகச் சுமந்து கொண்டு அதனைப் பிரச்சாரம் செய்கிறார்கள். இந்தப் பிரச்சாரம் 1996,97 காலப்பகுதியில் இந்தோனேசியாவில் ஒரு ஃபித்னாவாக பரவியிருந்த போது அன்றே அந்நாட்டில் அதற்கு நான் பதில் கொடுத்து விட்டேன்.

’ஹதீஸ் இப்திராகுல் உம்மாஹ்’ – உம்மத் பிரிந்து போவது பற்றிய ஹதீஸை யூசுஃப் அல் கர்ளாவி பலஹீனமாக்க முயற்சி எடுத்த வழிமுறைகளை நாம் இரண்டு முறைகளில் கூறலாம்.

  1. ஹதீஸின் ஸனதில்(அறிவிப்பாளர் தொடரில்) அப்துர் ரஹ்மான் இப்னு ஸியாத் இப்னு அன்அம் அல் அப்ரீகி என்ற பலஹீனமான தன்மை கொண்ட அறிவிப்பாளர் வருவதினால் அது ழயீஃப் ஆகும் என்ற வாதம்

  2. முஹம்மத் இப்னு இப்ராஹிம் இப்னுல் வஸீர் (ரஹ்மத்துல்லாஹி அலைஹி) இந்த ஹதீஸை ஆராய்ந்ததில் ஸனதில் உள்ள பலஹீனத்தைச் சுட்டிக் காட்டியிருப்பதன் மூலமும் அந்த ஸலபி இமாமே இந்த ஹதீஸின் ஸனதை ழயீஃப் என காண்கின்றார் என்ற வாதம்.

இங்கு நாம் முக்கியமாக விளங்க வேண்டிய விடயம் என்னவென்றால், யூசுஃப் அல் கர்ளாவி இமாம் இப்னுல் வஸீருடைய நூலில் உள்ள வாசகத்தில் ஒரு பகுதியை மட்டும் சுமந்து கொண்டு இமாம் இப்னு வஸீர் அந்த நூலை எதற்காக எழுதினாரோ அதனை மறைத்துவிட்டு ஸஹாபாக்களின் வழிமுறையை தட்டுவதிலேயே கண்ணும் கருத்துமாக இருக்கிறார். உண்மை என்னவென்றால் இமாம் இப்னு வஸீர் (ரஹ்மத்துல்லாஹி அலைஹி) தனது நூலிலே ஸஹாபாக்களின் வழிமுறையிலே மார்க்கத்தை பின்பற்ற வேண்டும், ஏனைய அனைத்து வழிமுறைகளும் தவறான பாதைகள் என்பதை நிரூபிப்பதற்கு ஆதாரங்களாக உள்ள ஹதீஸ்களை முன் வைக்கின்றார். அவ்வாறு முன்வைக்கையில் தான் ”நானும் எனது தோழர்களும்” என்ற வாசகத்தையுடைய ஹதீஸையும் குறிப்பிடுகின்றார். அவ்வாறு குறிப்பிடும் சந்தர்ப்பத்தில் அந்த ஹதீஸின் அறிவிப்பாளர் தொடரில் காணப்படும் பலஹீனத்தை தனது கல்வி ரீதியான ஆராய்ச்சியில் காணுகின்ற போது அந்த பலஹீனத்தை குறிப்பிட்டு காட்டினாலும் அந்த ஹதீஸீல் வந்துள்ள விடயம் ஏனைய ஹதீஸ்களுடன் ஒப்பிடுகையில் ஸஹீஹ் ஆகுவதாகவே இப்னு வஸீர்(ரஹ்மத்துல்லாஹி அலைஹி) காட்டிச் செல்கிறார்.

    இமாம் இப்னு வஸீர்(ரஹ்மத்துல்லாஹி அலைஹி) அந்த ஹதீஸை ஸஹீஹ் என்று காட்டுவதை நான் ஹதீஸ் கல்வியான ‘இல்முல் ஹதீஸ்’ உடைய அடிப்படையில் தெளிவுப்படுத்தலாம் எனக் கருதுகின்றேன்.

ஹதீஸ் கல்வியிலே

  • ஸஹீஹ் லி தாத்திஹி என்றும்

  • ஸஹீஹ் லி கைரிஹி என்றும்

இரு அடிப்படை வழிமுறைகள் கையாளப்படுகின்றன.

அதில், ஸஹீஹ் லி தாத்திஹி என்றால் “தன்னளவிலே ஸஹீஹானது” என்று பொருள் படும். அதாவது ஒரு ஹதீஸ் அது சுமந்திருக்கும் அறிவிப்பாளர் தொடரில் வரக்கூடிய அனைத்து அறிவிப்பாளர்களும், அதில் ஒவ்வொருவரும் ஸஹீஹ் என்பதற்கான நிபந்தனையில் குறைப்பாடில்லாமல் வந்துவிட்டால் அந்த ஹதீஸ் தன்னளவிலே எந்தக் குறையும் இல்லாத ஹதீஸாக ஆகிவிடும். இதனையே ஸஹீஹ் லி தாத்திஹி என்று ஹதீஸ் கல்வியில் வரைவிலக்கணப் படுத்தலாம். இதனை எவ்வாறு உலமாக்கள் வரைவிலக்கணம் கூறுகிறார்களெனச் சொன்னால், ஸஹீஹான ஹதீஸ் என்பது முஸ்னதாக அமைய வேண்டும். அது, நீதியான, மனப்பாடத்தில் தகுதியான மனிதரிடமிருந்து சுமக்கப்பட்டு அந்த நீதி, மனப்பாடம் ஆகியவற்றில் தகுதியான அறிவிப்பாளர்களால் தொடர்ச்சியாக சுமக்கப்பட்டு, அதே போன்ற ஏனைய நீதியான மனப்பாடத்தில் தகுதியான அறிவிப்பாளர்களுடன் முரண்படாத அறிவிப்பாளர்களை கொண்டிருந்தால், இன்னும் இந்த மேற்சொன்ன நிபந்தனைகளைக் கொண்டதும் எந்த குறைபாடுளுமின்றி அமைந்துமான அறிவிப்பை உலமாக்கள் “ஸஹீஹ் லி தாத்திஹி” என்று வரைவிலக்கணம் கூறுகிறார்கள்.

மாறாக, அறிவிப்பாளர் தொடரில் வரக்கூடியவர் ஏனைய நீதியான, மனப்பாடத்தில் தகுதியுள்ள  அறிவிப்பாளருடன் முரண்படுவதாக அறிவித்துவிட்டால் அந்த அறிவிப்பை ஷாத் என்று சொல்லப்படும். எனவே ஷாத் என்கின்ற பலஹீனமோ அல்லது ஏனைய குறைப்பாடுகள் காணப்பட்டால் அந்த ஹதீஸ் ஸஹீஹ் லி தாத்திஹி என்று கொள்ளப்பட மாட்டாது. எனவே அந்த ஹதீஸ் ஒரு பலவீனமான ஹதீஸாகவே கருதப்படும். ஸஹீஹ் லி தாத்திஹி எனும் போது அந்த ஹதீஸின் ஒவ்வொரு தனிப்பட்ட அறிவிப்பாளரும் அதன் நிபந்தனையில் குறையில்லாதவர்களாக இருப்பது அவசியம். ஆனாலும், ஒரு ஹதீஸின் அறிவிப்பாளர் தொடரில் வரக்கூடிய அறிவிப்பாளர்களில் ஒருவர் ஸஹீஹின் நிபந்தனைகளில் ஏதேனும் ஒரு நிபந்தனையில் குறையுடையவராக இருந்தால் அந்த ஹதீஸ் ஒரு பலஹீனமான அறிவிப்பாளர் தொடரைக் கொண்டதாக தனிமைப்படுத்தி வைக்கப்படும். அத்துடன் இந்த ஹதீஸில் கூறப்பட்டுள்ள அறிவிப்பை ஏனைய ஏதேனும் அறிவிப்பாளர் தொடர்களில் இன்னுமொரு வழிமுறையில் அறிவிக்கப்பட்டுள்ளதா என்பதை உலமாக்கள் ஆராய்வார்கள். இதற்கு ஷவாஹித் மற்றும் முதாபிஃ என்பன கையாளப்படும்.

ஹதீஸ் கலையில் ஷவாஹித் என்றால், ஒரு ஸஹாபி அறிவித்த ஹதீஸை அல்லது அறிவித்த விடயத்தை ஏனைய ஸஹாபிகளும் அறிவித்திருந்தால் ஒன்று மற்றையதற்கு சான்றுப் பகரக்கூடியதாக, ஒன்று மற்றொன்றை உறுதிப்படுத்தக்கூடியதான சாட்சிகளாக(ஷவாஹித்களாக) அமையும். அதேபோன்று முதாபிஃ என்றால் ஒரு ஸஹாபியிடமிருந்து ஒருவர் ஒரு செய்தியை அறிவிக்கின்றார். அதே செய்தியை அதே ஸஹாபியிடமிருந்து இன்னுமொருவர் அறிவிப்பு செய்கின்றார். உதாரணமாக, இப்னு மஸ்வூத் (ரளியல்லாஹு அன்ஹு) அவர்களிடமிருந்து ஒருவர் செய்தியை பெற்று அறிவிக்கின்றார். அதே செய்தியை இப்னு மஸ்வூத் (ரளியல்லாஹு அன்ஹு) அவர்களுடைய இன்னுமோர் மாணவரும் அறிவித்தால் அதனை முதாபிஃ என்று சொல்லப்படும். உலமாஉல் முஸ்லிமீன் ஹதீஸை ஆராய்கையில் ஷவாஹித், முதாபிஃ ஆகியவற்றை கையாள்வதை ஒரு தொடரான வழிமுறையாக கொள்கிறார்கள். ஒரு ஹதீஸுடைய தனிப்பட்டதொரு அறிவிப்பாளர் தொடர் பலஹீனமாக இருந்த காரணத்தினால் முஹத்திஸீன்கள் யாரும் அதன் அறிவிப்பாளர் தொடரின் ஷவாஹித், முதாபிஃ ஆகியவற்றை ஆராயாமல் விட்டுவிடுவதில்லை. இதன் அடிப்படையில் தான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக அறிவிக்கப்பட்ட வார்த்தையான “யார் நானும் எனது தோழர்களும் இன்று இருக்கும் நிலைப்பாட்டில் இருப்பார்களோ அவர்கள்” என்று ஹதீஸை அ இம்மத்துல் முஸ்லிமீன்களான இமாம் தஹபி, இமாம் இப்னு ஹஜர் அஸ்கலானி, இமாம் இப்னு தைமிய்யா, இமாம் ஷவ்கானி, இமாம் ஸன் ஆனி, இமாம் ஆஜுரி, இமாம் இப்னு பத்தல் அக்பரி, இமாம் லால்காயி போன்ற இன்னும் பல முஹத்திஸீன்கள் ஸஹீஹ் ஆக்கியதாக இருக்கின்றது. ஏனென்றால் இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் தொடரில் ஒரு இடத்தில் குறைப்பாடு காணப்பட்ட போதும், அந்த ஹதீஸுக்கு தரமான ஷவாஹித்கள் காணப்படுகின்றன. எனவே ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறிய வார்த்தையான “அல் ஜமாஆ” என்பதும் ”மா அன அலைஹி வ அஸ்ஹாபில் யவ்ம்(நானும் எனது தோழர்களும் இருக்கும் நிலை)” என்பதும் ஒன்றுக் கொன்று உறுதிப்பாடாகவும் சாட்சியாகவும் அமைகின்றதே தவிர முரண்பாடாக அமையவில்லை. ஏனென்றால் “அல் ஜமாஆ” என்பது ஒரு குறிப்பிட்ட கூட்டம் என்று பொருளாகும். இங்கு ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ”கூட்டம்” (அல் ஜமாஆ) என்று எந்தக் கூட்டத்தை கூறினார்கள் ? அன்றிருந்த அந்தக் கூட்டத்தில் இருந்தவர்கள் ரஸூலுல்லாஹ்வும் ஸஹாபாக்களும் தான். எனவே வெவ்வேறான அறிவித்தல்களில்  வந்துள்ள - “நானும் எனது தோழர்களும்” என்பது “அல் ஜமாஆ” என்ற வார்த்தைக்கு விளக்கமானதாகவே அமைந்திருக்கின்றது. எனவேதான் ”அல் ஜமாஆ” என்பதற்கு “நானும் எனது தோழர்களும்” என்ற வார்த்தை ஒரு பொருத்தமான, தரமான ஷவாஹித்தாகும். இதன் காரணமாகவே உலமாஉல் முஸ்லிமீன் இந்த ஹதீஸை ஸஹீஹ் என்ற தரத்தில் அமைத்தார்கள்.

உஸூலுல் ஹதீஸ் விடயத்தில் ஒரு ஹதீஸை ஸஹீஹாக்கும் போக்கை கையாளத் தெரியாததன் காரணமாக யூசுஃப் அல் கர்ளாவி முந்திக் கொண்டு ஹதீஸைப் பலஹீனமாக்கிவிட்டார். இந்த ஹதீஸைத் தனது நூலில் குறித்து காட்டிய முஹம்மத் இப்னு இப்ராஹிம் இப்னுல் வஸீர் (ரஹ்மத்துல்லாஹி அலைஹி) இந்த ஹதீஸின் ஸனதிலே பலஹீனத்தைச் சுட்டிக் காட்டிய பின்பும் ஹதீஸை பலஹீனமென்று கூறவில்லை. காரணம், இந்த இமாம் உஸுலுல் ஹதீஸீன் அடிப்படையில் இந்த ஹதீஸுக்கு சார்ப்பாகச் ஷவாஹித்கள் அமைவதால் அவர் ஹதீஸில் குறைக் காணவில்லை. அறிவிப்பாளருடைய குறையை எடுத்துக்காட்டிவிட்டு சென்றார். இந்த அடிப்படையும் வழிமுறையும் தெரியாத யூசூஃப் அல் கர்ளாவி இமாம் இப்னு வஸீர் (ரஹ்மத்துல்லாஹி அலைஹி) ஸனதில் பலஹீனத்தை சுட்டிக் காட்டியது ஒரு பெரும் ஆதாரமாக ஆகிவிட்டது. இதனை யூசுஃப் அல் கர்ளாவி வெளிட்டதனால் இன்று அவரைப் போன்றே கல்வியை தரமாக கையாளாத பலஹீனமான தரத்தில் உள்ளவர்களும், அதே போன்று இயக்கவெறி சுமந்த ஜமாஅதே இஸ்லாமி, இஹ்வானுல் முஸ்லிமீன் போன்ற கூட்டங்களும் யூசுஃப் அல் கர்ளாவியின் இந்தக் கருத்தை சுமந்து கொண்டு ஸலபு ஸாலிஹீன்களுடைய வழிமுறையை குறைக்காண்பதற்கும் ஸஹாபாக்களின் வழிமுறையை எதிர்ப்பதற்கும் போராடுகிறார்கள். அதனால் தான் “நானும் எனது தோழர்களும் இன்று எந்த நிலைப்பாட்டில் இருக்கின்றோமோ அதில் இருப்பவர்கள்தான்” என்று வருகின்ற ஹதீஸை தட்டிவிட முயற்சிக்கின்றார்கள். இதே முயற்சியில் தான், அந்த யூசுஃப் அல் கர்ளாவியின் ஆராய்ச்சியையும் கருத்தையும் நமது நாட்டில் ஜமாஅத்தே இஸ்லாமி என்கின்ற இயக்க வெறியைச் சுமந்த அகார் முஹம்மத் போன்றவர்கள் தங்கள் போராட்டமாகவும் பிரச்சாரமாகவும் ஆக்கியிருக்கிறார்கள். இவர் முன்வைக்கக் கூடிய விடயங்கள் இவருடைய ஆராய்ச்சியல்ல. இவர் சுமந்திருப்பது யூசுஃப் அல் கர்ளாவியுடைய கருத்தேயன்றி வேறில்லை.

இந்த ஹதீஸ் விடயத்திலும் ஸலஃபு ஸாலிஹீன்களுடைய பாதையிலும் குறைக்காண்பவர்களுக்கு நான் கொடுக்கும் பதிலாக இது இருக்கும். இன்னும் ஸஹாபாக்களுடைய நிலைப்பாட்டில் குறைக்காண்பவர்களுக்கு இதுவே எமது பதிலாகும்.